காலப்பெட்டகம் – புத்தக விமர்சனம்

75 ஆண்டுகாலம் என்பது எந்த ஒரு வகையிலும் மிகப் பெரிய கால அளவுதான். இத்தனை பெரிய கால அளவுகளில் நாடுகள் பிரிந்து போயிருக்கின்றன. நதிகள் காணாமல் போயிருக்கின்றன. மனிதர்கள் மறக்கப்பட்டிருக்கிறார்கள். கட்சிகள் நீர்த்துப் போயிருக்கின்றன. உலகமே ஒட்டுமொத்தமாக மாறிப் போயிருக்கிறது. இந்தப் பின்னணியில் ஒரு தமிழ்ப் பத்திரிகை தொடர்ந்து 75 வருடம் வந்துகொண்டிருக்கிறது என்பது அதனளவிலேயே மிகப் பெரிய சாதனைதான். இந்தச் சாதனையை முரசு கொட்டிச் சொல்கிறது ஆனந்தவிகடன் வெளியிட்டிருக்கும் ‘காலப்பெட்டகம்’ புத்தகம்.

வாரா வாரம் தோராயமாக 100 பக்கங்களுக்கு மேல் வந்திருக்கும் பத்திரிகை ஒன்றின் 75 கால சித்திரத்தை 368 பக்கங்களுக்குள் அடக்குவது மிகவும் சிரமமான காரியமே. இப்படி 'காலப்பெட்டகம்' நூலை மட்டுமே முன்வைத்து ஆனந்தவிகடனை அணுகினால் நாம் எத்தனையோ நுண்மையான விஷயங்களை இழக்கவேண்டியிருக்கும். அதேசமயம் ‘காலப்பெட்டகம்’ வழியாக நாம் காணும் பிம்பமே ஆனந்தவிகடனின் பிம்பமாக பெரும்பாலும் இருக்கும் என்பதுவும் உண்மையே. இந்த இரண்டுக்கும் இடையில்தான் நாம் ‘காலப்பெட்டகம்’ புத்தகத்தை வாசிக்க இயலும்.

ஆரம்பகால இதழ்களில் ஆனந்தவிகடனின் எழுத்து நடை அந்தக் காலத்துக்கே உரிய மணிப்பிரவாள நடையில் இருக்கிறது.உதாரணத்துக்கு ஒரு தலைப்பு: ‘வியாசம் அனுப்புவோருக்கு விஞ்ஞாபனம்.' ஆண்டுகள் போகப் போக அதன் நடையும் மாறுகிறது. இப்படித்தான் அரசியலில், திரையுலகில், ஆனந்த விகடனில் இடம்பெற்ற கார்ட்டூன்களில் நடந்த மாற்றங்களை நாம் பார்த்துக்கொண்டே போகமுடிகிறது. பொதுவாகவே நாம் ‘அந்தக் காலம்’ என்று சொல்லும் காலத்துக்கும் இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலத்துக்கும் இடையேயான காலத்தில் ஒரு தார்மிக வீழ்ச்சியைப் பார்க்கமுடியும். இதற்கு ஆனந்தவிகடனும் தப்பவில்லை. செய்திகளின் தரத்திலிருந்து, எந்த மாதிரியான செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும்என்பதுவரையில் இந்த மாற்றத்தைப் பார்க்கமுடிகிறது. ஒரு சில சமயங்கள் தவிர, மாற்றம் பெரும்பாலும் வீழ்ச்சியாகவே இருக்கிறது.

அரசியல் என்று எடுத்துக்கொண்டால் ஆரம்பகால ஆனந்தவிகடன் இதழ்களை இந்திய தேசியத்தை மையமாக் கொண்ட தமிழ் இதழ்களாக வரையறுக்கலாம். (1930ம் வருடத்திய இதழ்கள் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறது விகடன். ஆழ்ந்த தேசபக்தி, அதிரடி நகைச்சுவை இரண்டும் விகடனுக்கு இரண்டு கண்கள் போல்.) ஆனால் இன்றோ ஆனந்தவிகடன் இடதுசாரி சித்தாந்தவாதிகளின் இந்திய வெறுப்பைப் பின்னணியாகக் கொண்ட கட்டுரைகளை முன்வைக்கும் இதழாக் காட்சியளிக்கிறது. இந்த இந்திய வெறுப்பு மிகவும் திறமையாக, நடுநிலைமை என்ற போர்வையில் கட்டுரையாளர்களால் எழுதப்படுகின்றது என்பதுதான் அதில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது. வெளிப்படையாக ஆனந்தவிகடன் இந்திய தேசியத்தைக் கைவிட்தாக அறிவிக்கவில்லை என்றாலும், தொடர்ந்து ஆனந்தவிகடனை வாசிக்கும் எவரும் விகடன் கட்டுரைகளில் தெரியும் பின்-தொனியையும், மாற்றங்களையும் தெளிவாக உணரமுடியும். எது சரி, எது தவறு என்பதல்ல, எப்படி ஆனந்தவிகடன் மாறியிருக்கிறது என்பதுதான் இதிலுள்ள செய்தி. சில காலம் ஆனந்தவிகடனின் இதழ்கள் பாரத மாதா லோகோவாகத் தாங்கி வந்திருக்கின்றன என்பதை நம்பமுடிகிறதா உங்களால்.

கார்ட்டூன்கள் என்று எடுத்துக்கொண்டால், ஆண்டுகள் போகப் போக, கார்ட்டூன்களில் வரும் வார்த்தைகள் மிக் கூர்மையாகியிருக்கின்றன. நீண்ட வரிகளைக் கொண்டுவரும் ஆரம்பகால இதழ்களின் கார்ட்டூன்களிலிருந்து, மிகக் குறைந்த வார்த்தைகள் அல்லது வார்த்தைகளே இல்லாமல் வெறும் குறிப்புகளை மட்டும் கொண்டு வெளிவரும் இன்றைய இதழ்களின் கார்ட்டூன்கள் வரை இந்த மாற்றத்தை நாம் ஓரளவுக்கு இந்நூலில் நாம் காணமுடியும்.

இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால், இதனை இரண்டு வகைகளில் அணுகவேண்டும். வணிக இதழ்களில் வரும் தொடர்கதைகளை தீவிர இலக்கியமாக் கருத இயலாது. வெகுஜன வாசகர்களை ஈர்க்கும் பல்வேறு கதைகள் தொடக்ககால ஆனந்தவிகடனிலிருந்து தொடர்ச்சியாக வெளியாகியிருக்கின்றன. ஆனந்தவிகடனில் முத்திரைக் கதை வருவது என்பது தனிப்பட்ட தகுதியாகவே இருந்திருக்கிறது. தொடர்கதைகளைத் தொடர்ந்து எழுதுபவர்கள் ஹீரோக்களாகவே அறியப்பட்டார்கள். ஆனால் தீவிர இலக்கியவாதிகளின் பங்களிப்பைத் தொடக்க கால இதழ்களில் அதிகம் பார்க்கமுடியவில்லை. பிற்கால இதழ்களில் மிக முக்கியமான இலக்கியவாதிகள் ஆனந்தவிகடனில் பங்கெடுத்திருக்கிறார்கள். இந்தவகையில் இந்த மாற்றம் ஒரு நேர்மறையான மாற்றமே.

பொதுவாகவே தொடர்கதை வாசிப்பில் நேர்ந்த தொய்வு ஆனந்தவிகடனிலும் பிரதிபலித்திருப்பதைப் பார்க்கமுடிகிறது. அதனால்தானோ என்னவோ ஆனந்தவிகடன் உருவாக்கும் ‘நாவல்’ ஆசிரியர்களின் எண்ணிக்கையும் குறைந்து போயிருக்கிறது. நாவல் என்பது தொடர்கதை அல்ல என்பது முக்கியமான விஷயம். இப்படி ஒரு விஷயம் பெரும்பான்மை மக்களுக்குத் தெரியாமல் போனதற்கு ஆனந்தவிகடனின் வீச்சும், அதன் தொடர்கதைகள் தந்த மயக்கமும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

காலப்பெட்டகம்’ இதழ் வருட வாரியாக ஆனந்த விகடனில் வந்த முக்கியமான நிக்ழ்வுகளை வைத்துத் தொகுக்கப்பட்டிருக்கிறது. இதனால்தானோ என்னவோ, ஒட்டுமொத்தமாக வரிசையாக அஞ்சலிகளாகப் படிக்கிறோம். அலுப்பை ஏற்படுத்தும் அளவுக்குதொடர்ச்சியாக அஞ்சலிக் குறிப்புகளாக வருவதைத் தவிர்த்திருந்திருக்கலாம். அதிலும் இசையோடு தொடர்புடையவர்கள் பலரின் அஞ்சலிக் குறிப்புகள் வெளியாகியிருக்கின்றன. தொகுத்தவர் இசைப்பிரியராக இருந்திருக்கவேண்டும்.

தொகுப்பின் மற்றொரு குறை என்னவென்று பார்த்தால், பல விஷயங்கள் தேவையற்றதாக இருக்கின்றன. பல தேவையான விஷயங்கள் தொகுக்கப்படவில்லையோ என்ற எண்ணமும் தோன்றுகிறது. ரஜினிகாந்த் ராகவேந்திரா மண்டபத்தைத் தொடங்கி வைத்து இலவச திருமணம் நட்த்தப் போவதாகப் பேட்டி தந்திருப்பது (1989), 75 ஆண்டுகால ஆனந்தவிகடன் இதழ் வரலாற்றில் எப்படி முக்கியமானதாக மாறுகிறது என்பது புரிவதில்லை. அதே சமயத்தில், 76ல் தமிழ்நாட்டின் முகத்தையே மாற்றியமைத்த இளையராஜாவைப் பற்றியோ, 91ல் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஏ.ஆர். ரஹ்மான் பற்றியோ குறிப்புகளைப் பார்க்கமுடியவில்லை.

பாரதியார் பற்றிய குறிப்புகள் முதலிலிருந்தே ‘காலப்பெட்டகம்’ நூலில் இடம்பெறுகின்றன. பாரதியார் பற்றியும் காந்தி பற்றியும் தொடர்ந்து கல்கியும் ராஜாஜியும் எழுதியிருக்கிறார்கள். ஜெயேந்திரர் உபதேசம் ஏற்றது (1954), விஜயேந்திரர் உபதேசம் ஏற்றது (1983)எல்லாம் ‘காலப்பெட்டகம்’ நூலில் வருகின்றன.

இத்தனையையும் மீறி நம்மை ரசிக்க வைப்பது, ஆனந்தவிடனின் நகைச்சுவைத் துணுக்குகளே. வார இதழ்களில் கைச்சுவையில் என்றுமே முதலிடம் ஆனந்தவிகடனுக்குத்தான் என்பது என் கருத்து. ‘காலப்பெட்டகம்’ அதனை உறுதி செய்கிறது. ஆரம்பம் முதலே அட்டகாசமான நகைச்சுவைத் துணுக்குகள். (1927ல் வெளியான ஒரு துணுக்கு. ‘அகஸ்மாத்தாய் லக்ஷாதிபதியான ஒருவர் கீழ்வருமாறு ஒரு புஸ்தக வியாபாரிக்குக் கடிதம் எழுதினார்:- அன்பர்ந்த ஐயா, வால்மீகி ராமாயணம், வில்லிபுத்தூரார் பாரதம் முதலிய புத்தகங்கள் கிடைக்கப் பெற்றேன். அவைகள் மிகவும் நன்றாக இருக்கின்றன. இந்த ஆசாமிகள் புதியதாக எதாவது புஸ்தகங்கள் எழுதினால், உடனே எனக்கு வி.பி – யில் அனுப்பி வையுங்கள்.’) அவற்றுடன் போட்டி போடும் கார்ட்டூன்கள். இன்றுவரை ஆனந்த விகடன் இதில் முதலிடத்தில் உள்ளது என்றே சொல்லவேண்டும்.

திரைப்படங்களின் விமர்சனங்கள் அதிக அளவில் ‘காலப்பெட்டகம்’ இதழில் இடம்பெறவில்லை. குறைந்தபட்சம், அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 20 படங்களின் பட்டியலோடு அவற்றின் விமர்சங்களை மட்டுமாவது தந்திருக்கலாம். அதேபோல் ஆரம்பகால ஆனந்தவிகடன் இதழ்களின் கட்டுரைகளை அக்காலத் தமிழ் எழுத்துகளிலேயே பதிப்பித்திருக்கலாம். என்னவோ தெரியவில்லை, சீர்திருத்த எழுத்துகளையே பயன்படுத்திவிட்டார்கள். ஐம்பது ஆண்டுகால ‘காலபெட்டகம்’ இதழ் 1979ல் (1928 முதல் 1978 வரையிலான ஐம்பதாண்டு காலத் தொகுப்பு) வெளிவந்தபோது, அதில் அக்கால நடைமுறையான, சீர்திருத்தத்துக்கு முந்தைய எழுத்துகளே இடம்பெற்றிருந்தன. அதில் இருந்த இயல்புத் தன்மை இந்த 75 ஆண்டுகால ‘காலப்பெட்டகம்’ நூலில் இல்லை. இப்போதைய காலப்பெட்டகத்தைவிட, அது அதிகம் விவரங்கள் கொண்டதாகவும், சிறப்பாகத் தொகுக்கப்பட்டதாகவும் தோன்றுகிறது. இத்தனைக்கும் ஒவ்வொரு வருடத்தையும் ஒவ்வொரு பிரபலம் தொகுத்திருந்தார்கள்.

காலப்பெட்டகம்’ நூலில் அக்காலத்தில் இடம்பெற்ற சில விளம்பரங்களையும் கொடுத்திருக்கிறார்கள். ஆரம்ப கால விளம்பரங்கள் எப்படி இருக்கின்றன என்று பார்ப்பதே பெரிய சுவாரஸ்யமாக இருக்கிறது. (பக்கம் 14)

 சில விஷயங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. தில்லானா மோகனாம்பாள் கதை வந்தபோது, எந்த எந்த கதாபாத்திரத்துக்கு எந்த எந்த நடிகர்கள் நடிக்கவேண்டும் என்று ஒரு வாசகர் மடல் (1956) அனுப்பியிருக்கிறார். கிட்டத்தட்ட அதே நடிகர்கள் நடித்து படம் வருகிறது. அண்ணா மேம்பாலத்துக்குக் கீழே உள்ள குதிரை வீரன் சிலை வருவதற்கு முன்பே அதைப் பற்றி ஒரு நகைச்சுவைத் துணுக்கு வருகிறது. அதில் ‘கிண்டி ரேஸை ஒழிச்சதுக்கு குதிரைச் சின்னம்’ (1974) என்று நகைச்சுவையாக எழுதுப்பட்டுள்ளது. எட்டு மாதங்கள் கழித்து (1975) ‘வந்தியத்தேவன்’ குதிரை சிலைக்குக் கீழே அதே வாக்கியங்கள். இப்படிப் பல சுவாரஸ்யங்கள் புத்தகம் நெடுகிலும்.

சுபாஸ் சந்திர போஸுக்கு ஆதரவளிக்கும் விகடன் காந்தியை எதிர்க்கிறான். காந்தியின் தோல்வி (1939) என்றே அதனைச் சொல்கிறான். ஓட்டுப் போடுவதற்கு பணம் தருவது பற்றிய துணுக்குகள் அப்போதே வந்துள்ளன. வேட்பாளர்கள் (அபேட்சகர்கள்!)திருடர்கள் என்று சொல்லும் விகடம் 1934ல் விகடனில் வந்துள்ளது. விகடன் தாத்தாவுக்கு 35ல் கொம்பு முளைக்கிறது. ஹரிஜன ஆலயப் பிரவேசத்தை முழுமையாக ஆனந்த விகடன் ஆதரித்திருக்கிறது. எஸ் எஸ் வாசனின் தாயார் மறைந்தபோது அதற்கு ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறது விகடன் – 1949ல்! 1950ல் வாசனின் மகள் கல்யாணம் பற்றிச் செய்தியும் வெளியிடப்பட்டிருக்கிறது!! காங்கிரஸின் தீவிர ஆதரவு இதழான விகடன் அண்ணாத்துரையை வரவேற்று (1957) கட்டுரை தீட்டுகிறது. அண்ணாத்துரை 1958ல் விகடனில் தனது சட்டசபை அனுபவங்களை எழுதுகிறார்.

நடிகர்கள் எவ்வப்போது புயல் நிவாரண நிதிகள் கொடுத்தார்கள் என்பது காலப்பெட்டகத்தில் பதிவு செய்யப்படுகிறது! கிட்டத்தட்ட சிவாஜி கணேசனின் ரசிகனாகவே விகடன் செயல்பட்டதாக ‘காலப்பெட்டகம்’ நூலைப் படிக்கும்போது எனக்குத் தோன்றியது. வாஷிங்டனில் திருமணம் தொடரின் கடைசி பாகத்தில்தான் அதை எழுதியவர் பெயர் (1963) சாவி என்று வெளியிடப்படுகிறது. கிட்டத்தட்ட உண்மை போன்ற திருமணப் பத்திரிகையும் அக்கதைக்கு ஏற்றவாறு இடம்பெறுகிறது!

திமுகவின் வெற்றியை விசித்திரம் என்று சொல்லும் (1967) விகடன், திமுகவின் வெற்றியை வாழ்த்துகிறது. முத்தக் காட்சியில் நடித்தேனா என்று ஜெயலலிதா 1970ல் விளக்கம் அளிக்கிறார். ஜெயலலிதாவின் விளக்கத்தை ஒப்புக்கொள்ளும் விகடன், அதற்கு ஒரு சால்ஜாப்பு சொல்கிறது. அப்போதே ஜெயலலிதா அதிரடிதான். இவரது இந்த அதிரடி பின்னர் ஸ்ரீதருடன் ஏற்படும் கருத்துவேறுபாடு (1996) வரையில் தொடர்கிறது. ஸ்ரீதருக்கு ஜெயலலிதா எழுதியிருக்கும் பதில் – அட்டகாசம். நான் ஏன் பிறந்தேன் தொடரை எழுதுகிறார் எம்ஜியார் (1970) விகடனில் எழுதுகிறார்.

சோவும் சுரதாவும் 1971ல் கம்பாஸிடர் கவிதையில் மோதிக்கொள்கிறார்கள். சோ இந்திராவைக் கிண்டல் செய்து 1974 பொங்கலன்று துக்ளக் விழாவில் பேசிய, டெல்லியில் புதைக்கப்பட்ட டைம் காப்ஸ்யூல் பற்றிய அட்டகாசமான குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. பாசிப்பயறு ஒன்றின் புதிய வகைக்கு அஞ்சுகம் என்ற பெயர் (கருணாநிதியின் அம்மாவின் பெயர்) வைக்கப்படுவதைப் பற்றிய ஒரு குறிப்பு உள்ளது. ஜெயலலிதாவின் முதல் மேடைப்பேச்சு பற்றிய (1982) குறிப்பு உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஜெயேந்திரர் தண்டம் விட்டுச் சென்றது பற்றிய அவரது பேட்டி (1987)ல் வெளிவந்துள்ளது.

1993ல் முதன்முதலாக ஒரு சினிமா ஸ்டில் அட்டைப்படமாக வெளியாகியிருக்கிறது. குமரியில் வைக்கப்பட்ட வள்ளுவர் ஏன் வளைந்து நிற்கிறார் என்று கருணாநிதி கேட்டதற்கு உப்புச்சப்பில்லாமல் ஒரு பதில் சொல்லியிருக்கிறார் (2000) கண்பதி ஸ்தபதி. (நாங்கள் எங்கள் உள்வட்டத்தில் இதனை சிம்ரன் சிலை என்றே சொல்லுவோம்.) மொத்தத்தில் இந்த ஒட்டுமொத்த ‘காலப்பெட்டகம்’ புத்தகத்தை சிவாஜி கணேசனுக்கு சமர்ப்பணம் செய்யலாம் ஆனந்தவிகடன். அடுத்ததாக கருணாநிதிக்கு!

பொதுவாக ஓர் இதழின் இலக்கிய மதிப்பு, அதன் தார்மிக நெறிகள் – இப்படி எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது அதன் மீது வெகுஜன மக்கள் காட்டும் ஆர்வம். அதுவும் 75 வருடங்களுக்குத் தொடர்ந்து மக்கள் ஓர் இதழைக் கொண்டாடுகிறார்கள் என்றால், அது நிச்சயம் அதிர்ஷ்டத்தால் வாய்த்த ஒன்றோ அல்லது புறந்தள்ளத்தக்க ஒன்றோ அல்ல. அப்பத்திரிகையின் வெற்றிதான் அது. காலம் மாற மாற காலத்துக்கேற்ப ஓர் இதழ் மாறவேண்டியது கட்டாயம். அந்த மாற்றம் இல்லையென்றால் அப்பத்திரிகை நிச்சயம் அழியும். இதைப் புரிந்துகொண்டிருப்பதே அனந்த விகடனின் பலம். மக்கள் திரைப்படத்தைத்தான் கொண்டாடுகிறார்கள் என்பதற்காக, ஓர் இதழும் அதனையே கொண்டாடிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. மாற்றம் என்பது வீழ்ச்சியுடன் மட்டுமே சாத்தியமாகும் என்பது உண்மையல்ல. இப்போது ஆனந்த விகடன் புரிந்துகொள்ளவேண்டியது இது மட்டுமே.

(காலப்பெட்டகம் – 1924 முதல் 2000 வரை, விகடன் பிரசுரம், பக்கம் 368, விலை 180 ரூ)

புத்தகத்தை ஃபோன் மூலம் வாங்க: Dial for books – 94459 01234 | 9445 97 97 97

நன்றி: ஆழம் மாத இதழ்.

Share

Comments Closed