எக்ஸைல் புத்தக வெளியீடு – மரபுகள் கலைக்கப்படும் தருணம்

எக்ஸைல் நாவலுக்கு விமர்சனங்கள், விவாதங்கள் வந்து ஓய வேண்டிய நேரத்தில் புத்தக வெளியீட்டு விழா பற்றிய கட்டுரையா என்ற ஜெர்க் ஆகவேண்டாம். இதை எழுதி மாதங்கள் ஆகின்றன.

கிழக்கு ‘ஆழம்’ என்று ஒரு மாத இதழைக் கொண்டு வர இருக்கிறது. 

அதற்காக எழுதப்பட்ட கட்டுரை இது. ஓர் இதழைத் தொடங்குவதற்கு முன்பாகச் செய்யவேண்டிய ஆயத்த வேலைகளில் ஏற்பட்ட எதிர்பாராத தாமத்தினால் இதழ் கொஞ்சம் தாமதமாக வெளிவந்திருக்கிறது. இந்த இதழ் எப்போதிலிருந்து வாசகர்கள் கைகளில் கிடைக்கும் என்பதைப் பற்றி பத்ரி தனியே எழுதுவார். இப்போதைக்கு ‘ஆழம்’ இதழில் வெளியான என் கட்டுரை இங்கே.

இக்கட்டுரை ‘ஆழம்’ இதழில் சில எடிட்டிங்குடன் வெளியானது.

என் கட்டுரையை வெளியிட்ட ‘ஆழம்’ பத்திரிகைக்கும், அதன் பதிப்பாளர்-ஆசிரியர் பத்ரிக்கும் பொறுப்பாசிரியர் மருதனுக்கும் என் நன்றி. 

மரபுகள் கலைக்கப்படும் தருணம்

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் சாரு நிவேதிதாவின் ‘எக்ஸைல்’ நாவல், டிசம்பர் 6 அன்று காமராஜர் அரங்கத்தில் வெளியிடப்பட்டது. சாருவின் நாவல்கள் எவ்விதக் கட்டமைப்புக்குள்ளும் சிக்காமல் வெளியேறத் துடிப்பவை. சாரு சிறப்புக் கவனம் எடுத்து இதனைச் செய்கிறாரா அல்லது அவரது இயல்பான நாவல் வடிவமே கட்டுக்குள் அடங்காமல் திமிறுவதுதானா என்ற விவாதம் எப்போதும் தமிழ் இலக்கிய உலகில் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

பொதுவாகவே இலக்கியக் கூட்டங்களும் நாவல் வெளியீடுகளும், காதும் காதும் வைத்தமாதிரி ரகசியக் கூட்டங்கள் நடைபெறுவது போல் நடந்தால்தான் இலக்கியத்தன்மையைப் பெறும். ஓர் இலக்கியக்கூட்டத்துக்கு மூன்று இலக்கங்களில் பார்வையாளர்கள் வந்துவிட்டால் உண்மையில் அது தீவிர இலக்கியக்  கூட்டமாக இருக்க வாய்ப்பில்லை என்பதே தீவிர இலக்கிய ஆர்வலர்களின் துணிபு. சாரு இதனையும் உடைக்கவேண்டியவராகிறார்.

இலக்கிய கூட்டத்தின் ஒலிபெருக்கிகள் ‘வொய் திஸ் கொலவெறி கொலவெறிடி’ என்று அலறுவதைக் கேட்க ஒரு ‘கொடுப்பினை’ வேண்டும். அராபியப் பாடல் ஒலிக்க வாலி பேச ஓர் இலக்கியக் கூட்டத்தின் மரபுகள் அத்தனையும் காமராஜர் அரங்கத்தில் கலைத்துப் போடப்பட்டன. ஜோல்னாப் பை இல்லாமல் கோட் சூட் போட்டு மேடையேறினார் சாரு. இதற்கும் ஒரு விளக்கம் சொன்னார். அது நமக்குத் தேவையற்றதே. விஷயம், சாரு மேடை மரபுகளைக் கலைக்கிறார் என்பதே. 

சாருவே நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். தனக்குக் கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிகழ்ச்சியின் ஆற்றொழுக்கைக் குலைத்து குலைத்து, இது ஒரு மரபுகளற்ற மேடை என்பதை நிறுவுவதில் குறியாக இருந்தார். இப்படி மரபுகள் கலைக்கப்படும்போதெல்லாம் சாருவின் ரசிகர்கள் கைதட்டி விசிலடித்துக் கொண்டாடினார்கள். வொய் திஸ் கொலைவெறி பாடல் ஒலிபரப்பட்ட நோக்கம் அந்தக் கூட்டத்தின் ஒவ்வொரு இடைவெளியிலும் சீழ்க்கையின் வழியே பரவிய தருணம் அது.

இலக்கியக் கூட்டத்தின் இன்னொரு புதுமையாக, எக்ஸைல் நாவலின் முதல் பிரதி 50,000 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. ஏலம் எடுத்தவர் மேடைக்கு வரவில்லை. மற்ற சில கொலைவெறித் தற்கொலைப் படை சாருவின் ரசிகர்களும் அவரவர்க்கு ஏற்ற சக்தியில் ஏலம் எடுத்திருந்தார்கள் என்னும் செய்தியும் சொல்லப்பட்டது. நெடுங்கால இலக்கிய மரம் விதையூன்றப்பட்ட நிமிடம் அது என உவப்பானார்கள் சாருவின் ரசிகர்கள்.

தான் ஏன் புத்தகத்தை வெளியிட வாலியை அழைத்தேன் என்பதற்கு சாரு வெளிப்படையாகச் சொன்ன காரணம், தன் இலக்கிய வாழ்வில் தன்னைப் புகழ்ந்த ஒரே வெகுஜன விஐபி வாலி மட்டும்தான் என்பதே. ஆனந்த விகடனில் வாலி எழுதிய ‘நினைவு நாடாக்கள்’ தொடரில் வாலி சாருவைப் பற்றிப் புகழ்ந்திருந்தார். வாலி இதுவரை தன் வாழ்நாளில் எதற்கும் சமரசமே செய்ததில்லை என்னும் வாலிக்கே தெரியாத ரகசியத்தைச் சொன்னார் சாரு. ஆனால் அதே ‘நினைவு நாடாக்கள்’ தொடரில், நியூ படத்தில் இடம்பெற்ற ‘காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தெய்வம் அம்மா’ என்று எழுதிய வரியை, ஏ.ஆர்.ரஹ்மானின் நிர்ப்பந்ததுக்கு இணங்க ‘கைதொழும் தேவதை அம்மா’ என்று மாற்றி எழுதியதை எரிச்சலுடன் பதிவு செய்திருந்தார் வாலி. புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய வாலியும் மேடையில் பேசும்போது தனக்கு சமரசம் செய்து பழக்கமில்லை என்ற அர்த்தத்தில் ‘எந்த இசையமைப்பாளரின் கருணையும் எனக்குத் தேவையில்லை’ என்றார். 80 வயதில் முழங்குவது எளிது. சாருவின் வெளிப்படைத் தன்மையைப் பற்றிப் பேசிய வாலி, தான் இந்த விழாவுக்கு வந்ததே சாருவின் புகழ் உலகறியவேண்டும் என்பதற்காகவே என்றார்.

அடுத்துப் பேசியவர் இந்திரா பார்த்தசாரதி. இந்திரா பார்த்தசாரதியும் சமரசம் செய்ததில்லை என்றார் சாரு. தன் புத்தகத்தை வெளியிட வரும் விருந்தினர்கள் சமரசமற்றவர்கள் என்று சொல்வதில் சாரு எடுத்துக்கொண்ட கவனம் ரசிக்கத்தக்கதாக இருந்தது. 

ஏன் செக்ஸைப் பற்றி எழுதக்கூடாது என்பதே இபாவின் ஒட்டுமொத்தப் பேச்சின் ஒருவரி சாராம்சமாக இருந்தது. டெல்லியில் வாழ்ந்த காலங்களில் என்றெல்லாம் எங்கெங்கோ அலைபாய்ந்து மீண்டும் சாருவின் எக்ஸைல் நாவலில் செக்ஸ் இருந்தால் என்ன தவறு என்ற புள்ளிக்கு வந்து சேர்ந்தார் இபா. இது சாஃப்ட் போர்னோ அல்ல, ஹார்ட் போர்னோ என்றார். செக்ஸைக் குற்றவுணர்ச்சியோடு அணுகுபவர்கள் படிக்கக்கூடாத நாவல் என்றார். என்ன தோன்றியதோ இபாவுக்கு, திடீரென்று, இப்படியெல்லாம் சொல்வதால் நான் இப்படித்தான் என்று அர்த்தமல்ல என்றார். இதேபோன்று தற்காப்புக் கலையை இரண்டு இடங்களில் பயன்படுத்தினார். இவருக்கும் 80 வயது. 80 வயது மூத்த எழுத்தாளர்கூட மேடையில் தான் இப்படி அல்ல என்கிற டிஸ்கிளெய்மரோடு பேசவேண்டியிருக்கிறது. அதுவும் சாருவின் கூட்டத்தில். என்னவொரு முரண்நகை!

விழாவுக்கு வந்திருந்த மதனைப் பேச அழைத்தார் சாரு. மதன் தன்னை நாவலில் பாதித்த விஷயங்கள் பற்றியும், தனக்குப் பிடித்திருக்கும் அம்சங்கள் பற்றியும் தெளிவாகப் பேசினார். உலக எழுத்துகளைப் படித்திருக்கும் தன்னால், சந்தேகமே இல்லாமல் இந்நாவல் ஓர் உலகத்தரமான நாவல் என்று சொல்லமுடியும் என்றார். இந்திரா பார்த்தசாரதியும் வாலியும் பேசியிருந்தாலும், மதனின் பேச்சே சாருவின் நாவலை மிகச் சரியாகத் தொட்டுப் பேசக்கூடியதாக அமைந்தது. 

சாரு தன் வலைத்தளத்தில், முகநூலில் தன் வாசகர் வட்டத்திலும் இந்நூலுக்கு தொடர்ந்து மார்க்கெட்டிங் செய்திருந்தார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. ஓர் எழுத்தாளன் தன்னை ஏன் இப்படி மார்க்கெட்டிங் செய்துகொள்ளவேண்டும் என்ற இலக்கியக் கேள்வி ஒருபுறம். ஓர் எழுத்தாளன் தனது புத்தகங்களை விற்க தன்னால் இயன்றதை ஏன் செய்யக்கூடாது என்னும் உலக நிர்ப்பந்தம் மறுபுறம். எப்போதும் மரபுகளைக் கலைத்துப்போட விரும்பும் சாரு இலக்கிய மரபின் பக்கம் நிற்காததே யதார்த்தம். இல்லையென்றால், எந்தவொரு இலக்கியக் கூட்டத்திலும் விசிலடிக்கும் ரசிகர்களையோ, விழாவுக்கு வருவதற்கு முன்பாகவே கர்ம சிரத்தையாக எக்ஸைலின் ஒரு பிரதியை வாங்குவதைக் கடமையாகக்கொண்ட வாசகர்களையோ நாம் பார்க்கவே முடியாது. 

சாருவின் ரசிகர்கள் இந்நாவலை வாங்கலாமா வேண்டாமா அல்லது ஏன் வாங்கவேண்டும் என்னும் உளச்சிக்கல்களுக்குள் இறங்குவதே இல்லை. சாருவின் நாவல் என்பதே தாங்கள் வாங்கத்தான் என்ற தோரணையில் சாருவின் ரசிகர்கள் நாவலை வாங்குவதைப் பார்க்கமுடிந்தது. இது இலக்கியத்தின் போக்குக்கு உகந்ததா அல்லது இலக்கியத்திலிருந்து முற்றிலும் பிரித்தறியப்படவேண்டியதா என்பது தனிக்கேள்வி. இக்கேள்விகூட இலக்கியவாதிகளுக்கு உரியதே அன்றி, அவரது ரசிகர்கள் ஒருபோதும் இக்கேள்வியை எண்ணிப் பார்க்கப்போவதுகூட இல்லை. ரசிகர்களின் உடனடிக் கேள்விகளெல்லாம், திருவிழாவுக்கு எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்று சாரு அறிவிக்கப்போகிறார் என்பதில் மட்டுமே.

ஆனால் சாருவைப் பற்றி நாம் நினைத்துப் பார்க்கவேண்டியது கட்டாயமாகிறது. இதுவரை சாரு என்பவர் தன் வழியை தன் கர்வத்தால் நிர்ணயிப்பவராகவும், அவரது வாசகர்கள் அவரது வழியை ஏற்றுக்கொள்பவர்களாகவுமே இருந்திருக்கிறார்கள். சாருவே தொடக்கப்புள்ளி. அவரது வாசகர்கள் தொடர்புள்ளிகளே. ஆனால் இப்போதைய சாருவிடத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள். இணையம் சாருவைப் பாதித்திருக்கும் விதம் ஆய்வுக்கு உரியது. சாரு தன் ரசிகர்களின் கட்டாயங்களுக்கேற்ப இயங்குவது போன்ற தோற்றம் வலுவடைகிறது. வாசகர்கள் என்பவர்கள் ரசிகர்களாகும் ரசவாதத்தை சாரு ரசிக்கிறாரோ என்கிற எண்ணம் வலுப்படுகிறது. சாரு என்னும் ஓர் முன்னாள் இலக்கியவாதியின் இந்தத் தடம்பெயர்வு ரசிக்கத்தக்கதல்ல. நீண்டகால நோக்கில் இலக்கியம் என்னும் ஆதார விழுமியத்துக்கு இது கேட்டையே விளைவிக்கும். சாரு தன் வாழ்நாள் முழுவதும் எதிர்கொள்ளப்போகும் கேள்விகளை டிசம்பர் 6ல் உருவாக்கி அமைதியானது காமராஜர் கலையரங்கம்.

எக்ஸைல் புத்தகத்தை ஃபோன் மூலம் வாங்க Dial For Books 94459 01234 | 9445 97 97 97

Share

Comments Closed