காந்தி புத்தகங்கள்

 

எதிர்பாராத ஒரு தருணத்தில் வ.உ.சியைப் பற்றியும் ராஜாஜியைப் பற்றியும் இரு புத்தகங்கள் எனக்குக் கிடைத்தன. நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். பொதுவாகவே, சென்னை புத்தகக் கண்காட்சியில் மட்டுமே புத்தகங்கள் வாங்குவேன். பாழாய்ப் போன வரலாற்று ஆர்வம், இந்தமுறை பெரிய அளவில் வேட்டு வைத்துவிட்டது.  ராஜாஜி வாழ்க்கை வரலாறு புத்தகத்தில், ராஜாஜியைவிட அதிகமாக காந்தியைப் பற்றிப் பேசப்படுகிறதோ என்ற எண்ணம் தோன்றுமளவுக்கு காந்தியைப் பற்றிய பதிவுகள் இருந்தன. வ.உ.சி வரலாற்றில், வ.உ.சியின் அந்திம காலத்தில்தான் காந்தியைப் பற்றிய பதிவுகள் வருகின்றன.

அப்போதுதான் ’அண்ணா ஹசாரே – ஊழலுக்கெதிரான காந்தியப் போராட்டம்’ படித்தேன். இதில் ஹசாரேவைப் பற்றிய ஒவ்வொரு விவரிப்பிலும் காந்தியைப் பற்றிய விவாதமும் இருந்தது. ’இன்றைய காந்தி’ புத்தகம் – தமிழில் நிகழ்ந்த ஒரு சாதனை என்றே சொல்லவேண்டும். ஓராண்டுக்கு முன்பு இதைப் படித்தேன். இலங்கை சென்றிருந்தபோது இந்தப் புத்தகத்தைப் பற்றி நிறைய விவாதித்துக்கொண்டிருந்தது இன்னும் பசுமையாக மனத்தில் இருக்கிறது. இப்புத்தகம் தந்த அனுபவம் மறக்கமுடியாதது. ஒருவரது வாழ்க்கை வரலாற்றை, பிறப்பு தொடங்கி இறப்பு வரை படிப்பதற்குப் பதிலாக, இப்படிக் கேள்வி பதில் மூலம், அத்தலைவர் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்கள், அந்தத் தலைவர் எடுத்த முடிவுகள், அதன் விளைவுகள் எனப் படிப்பது எளிதானதாகவும், குழப்பமில்லாமலும் இருந்தது. பகவத் கீதையே கேள்வி பதில் வடிவில் அமைந்ததுதான். எனவே கேள்வி பதில் மூலம் படிப்பது ஒருவகையில் பழக்கமானதே என்ற முடிவை மூளை எடுத்துவிடுகிறதோ என்னவோ. அண்ணா ஹசாரேவின் புத்தகத்தைப் படித்ததும் தொடர்ந்து காந்தியைப் பற்றிப் படிக்க முடிவெடுத்தேன். ஏற்கெனவே, ஜெயஸ்ரீ வாங்கிக் கொடுத்து மூலையில் தூங்கிக் கிடந்த ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’யை எடுத்தேன்.

அப்போது நடந்த சில ஃபேஸ்புக் விவாதங்களுக்காக வேறு சில புத்தகங்களைப் படிக்கவேண்டியிருந்தது. ஜெயமோகனின் குழுமத்தில் நடக்கும் விவாதங்களில் காந்தி பற்றிய சில புத்தகங்களைச் சொன்னார்கள். முக்கியமானது, பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டிருக்கும் ‘காந்தி வாழ்க்கை’ என்னும் புத்தகம். லூயி ஃபிஷர் எழுதி, திஜர தமிழில் மொழிபெயர்த்திருக்கும் புத்தகம். அதையும் வாங்கினேன். (நான் மேம்போக்காக வாசித்துப் பார்த்த வகையில் மொழிபெயர்ப்பு அட்டகாசம்.) ஆனந்தவிகடன் வெளியிட்டிருக்கும் ’தண்டியாத்திரை, புத்தகமும் வாங்கினேன். இது நேரடியான தமிழ் நூல். ’நவகாளி யாத்திரை’ (சாவி எழுதியது, நர்மதா வெளியீடு) புத்தகம் கிடைக்கவில்லை. அதையும் வாங்கவேண்டும். இது ஒரு சிறந்த வரலாற்றுப் புத்தகமாக இருக்கும் எனத் தோன்றவில்லை. காந்தியைப் பற்றிய சாவியின் பக்தி வெளிப்பாடாகத்தான் இருக்கும். இருந்தாலும், நேரடியாக நவகாளி சென்று, காந்தியுடன் 2 நாள்கள் தங்கியிருந்து எழுதிய புத்தகம் என்பதால், வாசிக்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன். (நவகாளி யாத்திரை பற்றித் தெரிந்துகொள்ள இணையத்தில் மேய்ந்தபோது, மலர்மன்னன் எழுதிய அட்டகாசமான கட்டுரை கண்ணில்பட்டது.)

இப்படி புத்தகங்களைப் படித்தால் காந்தி பற்றிய ஒரு பெரிய தெளிவு கிடைக்கும் எனத் தோன்றுகிறது. காந்தியைப் படிக்க படிக்க அப்படியே அவர் என்னை ஹைஜாக் செய்வதும் புரிகிறது. கல்லூரியில் காந்தியன் ஸ்டடீஸ் என்ற சர்டிஃபிகேட் கோர்ஸ் படித்துத் தேர்ச்சி பெற்றேன். அப்போதே அந்தக் கல்லூரி ஆசிரியர் ஒழுங்காக காந்தியைப் பற்றிச் சொல்லித் தந்திருந்தால், இந்நேரம் காந்தியைப் பற்றிப் பல புத்தகங்களை வாசித்து முடித்திருந்திருக்கலாம். அப்போது தானே கிளம்பும் உத்வேகம் வராததால், காந்தியைப் பற்றி ஒழுங்காகப் படிக்காமல் விட்டது இப்போது வருத்தம் தருகிறது.

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு (கிழக்கு வெளியீடு) இரண்டு பாகங்கள். முதல் பாகத்தை பாதி படித்தேன். இரண்டாம் பாகத்தில் தேவையான சில பகுதிகளைப் படித்தேன். இந்தப் புத்தகத்தையும் முழுமையாகப் படிக்கவேண்டியுள்ளது. இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது ஓர் எண்ணம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இந்தப் புத்தகமும் தமிழில் ஒரு சாதனைதான். ராமசந்திர குஹா எழுதி தமிழில் ஆர்.பி.சாரதியால் (பா.ராகவனின் தந்தை) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இன்னும் 20 வருடங்களுக்காவது இப்புத்தகம் தமிழில் நிலைத்து நிற்கும். தொடர்ந்து பேசப்படும். இந்த அரிய சாதனையை செய்திருப்பது கிழக்கு பதிப்பகம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட வகையில் மகிழ்ச்சி. இந்த முக்கியமான புத்தகத்தைப் பற்றி சில விமர்சனங்களும் வந்துள்ளன. குஹா ஒரு மார்க்சியர் என்பதால் அச்சார்புடன் புத்தகம் உள்ளது என்பது ஒரு குற்றச்சாட்டு. சார்பு இதுதான் எனத் தெரிந்துகொண்டு புத்தகத்தைப் படிப்பதில் ஒரு பிரச்சினையுமில்லை. நடுநிலை என்ற அறிவிப்போடு வரும் புத்தகத்தை வாசிக்கும்போதுதான் மனம் அலைபாயத் தொடங்கிவிடுகிறது! மேலும், சார்பை மீறி பல விஷயங்களைத் தெளிவாகவே குஹா குறிப்பிட்டிருக்கிறார். இன்னொரு குற்றச்சாட்டு, வலதுசாரிகளின் பங்களிப்பை சரியாக குஹா பதிவு செய்யவில்லை என்பது. இப்புத்தகத்தை முழுமையாகப் படித்தால், இக்குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்பது தெரியும். இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருந்தாலும், அதை வைத்து இப்புத்தகத்தைப் புறந்தள்ளமுடியாது. 10 ஆண்டுகாலம் உழைத்து, ஒரு பெரிய கண்ணோட்டத்தில், விரிவான பார்வையில் எழுதும்போது இதுபோல நிகழ்வது சகஜமே. தேவை என்றால், வலதுசாரிகள்தான் அவர்கள் கண்ணோட்டத்தில் வரலாற்றைப் பதிவு செய்யவேண்டும். அத்வானியின் தன்வரலாற்று நூலான ‘என் தேசம் என் வாழ்க்கை’ இந்த வகையில் ஒரு முக்கியமான புத்தகமே. அதை ஏற்கெனவே படித்துமுடித்துவிட்டேன். அது பற்றிப் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் – தேவைப்படுமானால் எழுதுவேன்.

இப்போது நான் படிக்கவேண்டிய புத்தகங்கள்:

01. காந்தி வாழ்க்கை

02. இன்றைய காந்தி (மீண்டும் ஒருமுறை படிக்கவேண்டும்)

03. தென்னாப்பிரிக்காவில் காந்தி

04. தண்டி யாத்திரை

05. இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு

06. நவகாளி யாத்திரை

இத்தனை புத்தகங்களைப் படிப்பதற்காகத்தான் டிவிட்டரிலிருந்தும், ஃபேஸ்புக்கிலிருந்தும் வெளியேறினேன். நேரம் நிறையவே கிடைக்கிறது!

இன்னும் ஒரு புத்தகமும் வாங்கவேண்டியிருக்கிறது. ராஜாஜியைப் பற்றி ராஜ்மோகன் காந்தி எழுதி, கல்கி ராஜேந்திரனால் மொழிபெயர்க்கப்பட்டு வானதி வெளியீடாக வந்திருக்கும் புத்தகம், ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு. இதையும் வாங்கிப் படிக்கவேண்டும்.

புத்தகங்களை ஃபோன் மூலம் வாங்க: Dial For Books – 94459 01234 | 9445 97 97 97

Share

Comments Closed