தெய்வத் திருமகள் – காப்பி அண்ட் பேஸ்ட்

இந்தத் திரைப்படமே ஒரு மோசடி. ஐம் சாம் படத்தை அப்படியே உருவியிருக்கிறார்கள். இப்படி உருவிவிட்டு தனது பெயரை இயக்குநர் என்று போட்டுக்கொள்ள ஒரு மாதிரியான கல்நெஞ்சோடு பிறந்தால்தான் முடியும். விஜய் செய்த முதல் தவறு இது.

நான் இன்னும் ஐம் சாம் பார்கக்வில்லை. இந்தப் படம் பார்த்துவிட்டு வந்த இரவு யூ ட்யூபில் சும்மா அரை மணி நேரம் பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது, இந்தப் படத்துக்கு ஐம் சாம் இயக்குநர் எத்தகைய ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கிறார் என்பதும், தமிழில் இதனை விஜய் எப்படி சீரழித்திருக்கிறார் என்பதும். அரை மணி நேரம் பார்த்ததுக்கே இத்தனை கோபம் வந்துவிட்டது. எனவேதான் இது. 🙂

யோசனை என்பதே இல்லை. ஐம் சாமின் ஹீரோவின் ஹேர் ஸ்டைலைக்கூடவா காப்பி அடிப்பார்கள்? ஐம் சாம் படத்தின் ஹீரோ மெண்டல்லி ரிடார்ட்டாக இருந்தாலும், அதிலும் அவருக்கு ஒரு மெச்சூரிட்டி இருந்தது. இந்தக் குணமே அந்தப் படத்தின் பல கேள்விகளுக்கு லாஜிக்காக பதில் சொன்னது. ஆனால் தமிழ்ப்படத்தில் விக்ரமுக்கு கொஞ்சம்கூட மெச்சூரிட்டி இல்லை. இயக்குநருக்கு மெச்சூரிட்டி இருந்தால்தானே நடிகருக்கு வர! ஆனால் இதனை இயக்குநரின் தவறாகவே பார்க்கமுடியும்.

திரைக்கதை நன்றாக உள்ளது என்று சிலர் சொல்லியிருந்தார்கள். திரைக்கதை தமிழில் படு சொதப்பல். படத்தை ஓட்டத் தெரியாமல், விக்ரமுக்கும் தனது மனைவிக்கும் கள்ளத் தொடர்பு உள்ளதோ என்று பாஸ்கர் அலைகிறார். அதில் கொஞ்ச நேரம் காமெடி காட்சிகள். இதில் எதாவது லாஜிக் உள்ளதா? ஆனால் மக்களை சிரிக்க வைக்க வேண்டுமாம். சாட்சி சொல்லப் போகும் பாஸ்கரைக் கண்டுபிடிக்க இன்னொரு அரை மணி நேர அறுவை. இதுவே ஒரு கிரேஸி மோகன் படத்தில் வந்திருந்தால் அது வேறு. இந்தப் படம் அப்படிப்பட்ட படமா? விக்ரமுக்கு மெண்டல்லி ரிடார்ட். ஆனால் பாடத் தெரியும். குழந்தை பெற்றுக்கொள்ளத் தெரியும். இதற்கு ஒரு வசனமும் உண்டு, ஒரு சம்பவம் நடக்கும்போது அது என்னன்னு ஒருத்தருக்குத் தெரிஞ்சா போதாதான்னு. அவருக்குப் பிறக்கும் குழந்தை தன் அப்பாவை பைத்தியம் இல்லை என்று சொல்லும். ஐம் சாமில் ஒரு காட்சியில், ஒரு சிறுவன் கேட்கிறான், உங்க அப்பா மெண்டல்லி ரிடார்டா என்று. அவள் சொல்கிறாள், ஆமாம். அப்ப நீ என்கிறான் சிறுவன். அவள் இல்லை என்கிறாள். எத்தனை தெளிவான திரைக்கதை பாருங்கள். குழந்தை தன் அப்பா மெண்டல்லி ரிடர்ட் என்பதைப் புரிந்துகொண்டு, அதனை ஏற்றுக்கொண்டு பேசுகிறது. இத்தனை தெளிவு தமிழ்ப்படத்தில் இருக்கிறதா?

ஐம் சாமில் மெண்டல்லி ரிடார்டாக இருப்பவரை வெறும் பைத்தியமாகக் காட்டி நோகடிக்கவில்லை. அவர் தன் குழந்தையுடன் சேர்ந்து வீட்டில் பாடங்களைப் படிக்கப் பார்க்கிறார். ஆனால் தமிழில்? விக்ரம் பைத்தியமேதான். அவருக்குத் தெரிந்ததெல்லாம் கையைத் தூக்கி தூக்கிப் பேசுவதுதான். அதுவும் மிஸ்டர் பீன் மற்றும் சிப்பிக்குள் முத்து கமலின் உடல் மொழியே.

அடுத்து வரும் கோர்ட் காட்சிகள். அனுஷ்காவின் கேரக்ட்ரை இத்தனை கேணத்தனமாக யாரும் உருவாக்க முடியாது. கூடவே வரும் கிறுக்கன் கேரக்டராக சந்தானம். இன்னொரு கிறுக்கனாக வரும், உதவும் வக்கீல். அத்தனை பெரிய வக்கீல் நாசரிடம் இருக்கும் உதவியாளரை தனக்கு வேவு பார்க்கச் சொல்வார்களாம். அப்படியாவது அவன் வேவு பார்த்துச் சொன்னது என்ன என்றால், ஒன்றுமே இல்லை. இதை வைத்துக்கொண்டு அரை மணி நேரம் குட்டிக்கரணம்.

அடுத்து நாசர் கேரக்டர். மிகப் பெரிய வக்கீலாம். ஆனால் அவருக்கு விகரமை மனநிலை சரியில்லாதவர் என்று கோர்ட்டில் நிரூபிக்கத் தெரியாதாம். ஏனென்றால் அனுஷ்காதான் ஹீரோயின். இவர் என்ன செய்வார்! தலையெழுத்து. கடைசியில் விக்ரம் மெண்டல்லி ரிடார்ட் இல்லை என்று ஒப்புக்கொண்டு விடுவாராம். விக்ரமும் குழந்தையும் சந்திக்க ஒரு மணி நேர அவகாசமாம். அந்தக் காட்சியில்தான் எத்தனை குழப்படி! அதில் விக்ரம் ஓடி வந்து விழும் காட்சி அப்படியே ஐம் சாமில் உள்ளது. தமிழ்த்தனமாக விழக்கூடவா தமிழனுக்குச் சுயபுத்தி இல்லை?

கோர்ட்டில் இரண்டு பேர் லூசுத்தனமாகப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஒருவர் நாமம் போட்டிருக்கிறார், இன்னொருவர் பட்டை அடித்திருக்கிறார். ஏன், அங்கே சைவ வைணவ விவாதமா நடக்கிறது?

மெண்டல்லி ரிடார்ட் விக்ரம்தான் பாட்டுப் பாடி நம்மைக் கொல்கிறார் என்றால், வக்கீலும் விக்ரமுடன் டூயட் பாடுகிறது. இந்த தமிழ் சினிமா விளங்கவே விளங்காதா? எந்த ’நல்ல பட’ இயக்குநராவது இப்படி ஒரு டூயட் காட்சி வைப்பாரா? கேட்டால் சமரசம் என்பார்கள்.

கடைசி காட்சியில் விக்ரமே குழந்தையை ஒப்படைத்துவிடுவாராம். கொடுமை. யார் மெண்ட்டல்லி ரிடார்ட்? நாமா? விக்ரமா?

விக்ரமுக்கும் குழந்தைக்குமான அன்னியோன்யம் குழந்தையின் பார்வையில் சரியாகப் பதியப்படவே இல்லை. உண்மையில் அதுதான் நம்மை நெகிழ்ச்சியின் உச்சத்துக்கே அழைத்துச் சென்றிருக்கும். அது இல்லாததால் கிளைமாக்ஸில் ஆச்சரியம் மட்டுமே மிஞ்சுகிறது. (இதுதான் நடக்கும் என்று யூகம் செய்துவிடும் என்னைப் போன்றவர்களுக்கு அதுவும் மிஸ்ஸிங்!) மனதில் ஒரு பதற்றம் ஏற்படவில்லை.

படம் முழுக்க ஓவர் ஆக்ட்சிங் செய்தால் மக்களுக்குப் பிடித்துவிடும் என்பது நம் மரபு. அப்படியே செய்திருக்கிறார் விக்ரம். பைத்தியமாக நடிப்பது சும்மா அசட்டுத்தனமாக அலட்டுவது என்று நமக்குப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், நம்ம ஊர் மெண்டல்லி ரிடார்டுகளெல்லாம் அழகானவர்களாகவும் அப்சரஸ்களாகவும் உலவும் ரகசியமும் புரிபடுவதில்லை. கமல், ஸ்ரீதேவி, ராதிகா, அஞ்சலியில் வரும் குழந்தை – இப்படி மெண்டல்லி ரிடார்டுகள் அழகானவர்களாகவே இருந்துவிடுகிறார்கள். ஆனால் விக்ரமுக்கு நண்பர்களாக வரும் 3 மெண்டல்லி ரிடார்டுகளில் ஒருவர்கூட அழகில்லை. அது எப்படி அப்படி ‘அமைந்துவிடுகிறது’ எனத் தெரியவில்லை.

இந்தத் திரைக்கதை படத்தை மனத்தில் வைத்து எழுதப்படவில்லை. மக்களை மனத்தில் வைத்து எழுதப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தில் சுயம் இல்லை. தமிழில் வரும் பெரும்பாலான படங்களில் சுயம் இல்லை. குறைந்தபட்சம் உலகெங்கும் எடுக்கப்படும் கதையை இங்கே எடுக்கிறார்கள் என்றாவது அமைதிகொள்ள முடிந்தது. இப்படத்தில் ஒரு படத்தையே அப்படியே சுட்டிருக்கிறார்கள். இது நிச்சயம் ஏமாற்று வேலை. அத்திரைப்படத்துக்கான கிரெட்டிட்டைக் கொடுக்கவில்லை என்பது இது மோசடியே என்பதை நிரூபிக்கிறது.

மோசமான திரைப்படங்களுக்கு மத்தியில் சுமாரான படங்களை வரவேற்பதே நமது தலைவிதி ஆகிவிட்டது. அதனால்தான் அழகர்சாமியின் குதிரை, தெய்வத் திருமகள், மைனா எல்லாம் பெரிய வரவேற்பைப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுப் போகிறது. அழகர்சாமியின் குதிரை, மைனாவிலாவது மண் சார்ந்த சுயம் என்பது கதையளவில் இருந்தது. இதில் அதுவும் இல்லை.

இத்திரைப்படத்தின் சில ப்ளஸ்கள்: ஒரு முயற்சி என்ற அளவில் – மனதைக் கல்லாக்கிக்கொண்டு – வரவேற்பது. குழந்தையாக வரும் பெண்ணின் மாசு மருவற்ற முகமும் அதன் நடிப்பும். கிளைமாக்ஸ் கோர்ட் காட்சியில் விக்ரமின் நடிப்பு. ஆரிரோ ஆராரிரோ எனும் நெஞ்சை அள்ளும் பாடல். (இந்தப் படத்தில் இரண்டு பாடல்களைச் சுட்டிருக்கிறார் ஜி.வி. பிரகாஷ். இயக்குநர் ஜாடிக்கேத்த நல்ல ஜிவி பிரகாஷ் மூடி!) நல்ல ஒளிப்பதிவு. நாசர், அனுஷ்கா, அமலா பாலின் நடிப்பு. இவ்வளவுதான். இதை இவர்கள் எந்தப் படத்திலும் செய்துவிடுவார்கள்.

மனதைக் கல்லாக்கிக் கொண்டேயானாலும், தெய்வத் திருமகள் போன்ற ஓர் அப்பட்டமான காப்பியை நாம் வரவேற்பதுகூட நிச்சயம் தவறுதான். கலைக்கு செய்யும் அவமரியாதை.

Share

Comments Closed