ரஞ்சிதாவுக்கும் நித்யானந்தாவுக்கும் இடையில் உள்ள உறவு எத்தகையது என்பது தேவையற்ற ஒன்று. பிரமச்சரியத்தை வலியுறுத்திய ஒருவர், தனியறையில் ஒரு நடிகையுடன் உல்லாசமாக இருந்தார் என்பது அவரது நேர்மையின்மையைப் பறைசாற்றுமே ஒழிய, அவர் சட்டப்படி தவறு செய்கிறார் என்றாகாது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஒருவரின் படுக்கை அறையில் என்ன நடந்தது என்பதை வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டது முதல் தவறு. அந்த ஆபாச சிடியை சன் டிவி மீண்டும் மீண்டும் தொடர்ந்து ஒளிபரப்பி, குழந்தைகள் பெண்களை அருவருப்படையச் செய்தது இரண்டாவது தவறு. நித்யானந்தா செய்த நேர்மையற்ற செயலைவிட இந்த இரண்டுமே பெரிய தவறுகள். இந்த இரண்டு தவறுகளின் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் அக்காட்சிகள் மார்ஃபிங் செய்யப்பட்டவை என்கிறார்கள். நான் அதனை நம்பவில்லை. ஆனால் அப்படி சொல்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. வயதுக்கு வந்த இரண்டு பேர் மனமொத்து தனியறையில் உறவு கொள்வதை சட்டம் தவறு என்று சொல்லவில்லை. ஏற்கெனவே மணமானவர்கள் வேறு (கள்ள) உறவை வைத்திருந்தாலும் அதை சட்டம் தவறு என்று சொல்லவில்லை என்றே நினைக்கிறேன். உறவுக்கு அழைத்தல் என்பதுதான் தவறு என்று நினைக்கிறேன். சட்டம் தெரிந்தவர்கள் மேற்கொண்டு சொல்லட்டும். (முன்பு மரத்தடி குழுவில் பிரபு ராஜதுரை இது பற்றி விரிவாக எழுதியிருந்தார்.)
ஊரெங்கும் தலைவன் என்றும் தலைவி என்று சொல்லிக்கொண்டு திரியும் பெரிய தலைகளின் படுக்கை அறைக் காட்சிகள் எல்லாம் இப்படி வீடியோவாகி முன்பே வெளியாகியிருந்தால், நித்யானந்தா இன்னும் பிரம்மசாரியாகத்தான் நமக்குத் தோன்றுவார்.
அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துல சனி.