ஆப்புக்கு ஆப்பு

திடீரென்று ஞாநி என்னிடம் நடிக்க வர்றீங்களா என்றார். வழக்கம்போன்ற உரையாடல்கள் நடந்தேறின. நடிக்கத் தெரியாதே, அதெல்லாம் நடிச்சிடலாம், நம்பிக்கை இருந்தா போதும் போன்றவை. ரிகர்சலுக்கு குத்தம்பாக்கம் சமத்துவபுரத்துக்குப் போனோம். கிட்டத்தட்ட 24 பேர் பங்கேற்றார்கள். நல்லவேளை எனக்கு வசனம் இல்லை.

அம்மா ஐயா ஆதரவாளர்களாக நீங்களே பிரிந்துகொள்ளுங்கள் என்றார். நான் உடனே அம்மா பக்கம் வந்து நின்றுகொண்டேன். ஞாநி இங்கயுமா என்றார். நடிப்பில் கூட கருணாநிதியைப் புகழமுடியாது என்றேன்.

முக்கியக் கதாபாத்திரம் அஞ்சலைதான் என்பது முதல் பார்வையிலேயே தெரிந்துவிட்டது. அஞ்சலையாக நடிப்பது கிறிஸ்டினா என்னும் பெண். அன்றைக்குத்தான் எல்லாரையுமே நான் முதன்முதலாகப் பார்க்கிறேன். கிறிஸ்டினா ஸ்கிரிப்டைக் கையில் எடுத்து, எழுத்து கூட்டி வாசிக்க ஆரம்பித்தார். திக்கித் திக்கி வாசித்தார். இதில் நுனி நாக்கு ஆங்கிலம் வேறு. ஸ்கிரிப்ட்டில் பக்கா சென்னைத் தமிழ்! கிழிஞ்சது கிருஷ்ணகிரி என நினைத்துக்கொண்டேன்.

இரண்டு தடவை வசனம் சொல்லிக் கொடுத்ததும் கிறிஸ்டினாவின் வசன வெளிப்பாடு என்னை அசரடித்துவிட்டது. இந்தப் பெண் இந்த நாடகத்தையே எங்கோ கொண்டு போய்விடுவார் என்ற நம்பிக்கை வந்தது. நாடக அரங்கேற்றத்திலும் அதுவே நடந்தது.

ஞாநி, சாய் கிருபா (ஆப்பம்மா), அஞ்சலை – இந்த மூவரை ஒட்டியே ஒட்டுமொத்த நாடகமும். நாங்களெல்லாம் இவர்களின் பாத்திரங்களை மெருகேற்ற மட்டுமே. அதனைச் செய்தோம்.

நீல்சன் கட்டியக்காரனாக நடித்தார். பக்கம் பக்கமாக வசனம். அநாயசமாகப் பேசினார். எனக்கு வசனங்கள் தராத ஞாநிக்கு மானசீகமாக நன்றி சொல்லவேண்டிய தருணம் இது.

ஞாநி முதல்தடவை பேசும்போது, ரிகர்சலுக்கு வாங்க, நீங்க வருத்தபடற மாதிரி இருக்காது என்றார். எனக்கு என்ன வருத்தம்? அப்படியே இருந்தாலும் பரீக்ஷாவை நினைத்துத்தான் இருந்திருக்கும். எப்படியோ தப்பித்தது பரீக்ஷா குழு.

நாடகத்தை யூ டியூபில் பார்க்க: (நல்ல பிரதி வந்ததும் மீண்டும் வலையேற்றி, நல்ல லிங்க் தருகிறேன்!) இதனை பதிவு செய்து வலையேற்றிய பத்ரிக்கு நன்றி. இப்படி ஒரு பொம்பளை கால்ல விழுந்து நடிக்கிறீங்களே, சே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் எங்க வீட்டு ஜெயலலிதா!

Share

Comments Closed