பாலுமகேந்திரா – நிசப்தத்தில் மிதந்துவந்த குரல்

நேற்றைய கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் பாலுமகேந்திரா கலந்துகொண்டார். மிக மின்பு ஞாநி கலந்துகொண்ட மொட்டைமாடிக் கூட்டத்தில் அனல் பறந்தது. அன்று எல்லோருமே ஞாநி என்ன பேசுகிறார் என்பதைக் கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதன் பிறகு, நேற்று நடந்த மொட்டைமாடிக் கூட்டத்தில்தான் மீண்டும் அது நடந்தது என நினைக்கிறேன். வந்திருந்த அனைவரும் அத்தனை பெரிய நிசப்தத்தில் மிதந்துவரும் பாலுமகேந்திராவின் குரலை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். எங்கேயிருந்தும் அனாவசிய சத்தங்கள் இல்லை. பாலுமேந்திராவின், அவரே தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்ளும், ஹார்ஷ்நெஸ்ஸும் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

எழுத்திலிருந்து திரைக்கு என்பதுதான் பாலுமகேந்திரா பேச எடுத்துக்கொண்ட தலைப்பு. அந்தத் தலைப்பிலிருந்து சிறிதும் விலகாமல் பேசினார். எழுத்து திரைக்கு மாறும்போது ஒரு கலைஞன் எதிர்கொள்ளவேண்டிய முக்கியமான சவால்கள் குறித்து விளக்கினார். உருவமும் உள்ளடக்கமும்தான் ஒரு படைப்பின் சாராசம்ங்கள். அதைத் திரைக்கு மாற்றும்போது அதன் உள்ளடக்கம்தான் முக்கியமே ஒழிய, அதன் உருவம் இரண்டாம்பட்சம்தான் என்று சொன்னார். ஒரு படைப்பிலிருந்து எதனைத் திரைக்கு மாற்றவேண்டும் என்று அவர் கருதுவதாக நினைக்கிறாரோ அதுவே திரையில் மையப்படுத்தப்படுகிறது என்றார். இதன் அர்த்தமாக நான் புரிந்துகொண்டது, எழுத்தாளரின் கவனம் இரண்டாம் இடம் பெற்றுவிடுகிறது என்பதுதான். இதனை சில எழுத்தாளர்கள் முற்றிலுமாக மறுக்கக்கூடும். ஆனால் பாலுமகேந்திரா ஒரு திரைப்படம் எடுக்க முயலும்போது அதில் தனது பங்கை மிகத் தெளிவாகத் திட்டமிட்டுவிட்டே தொடங்குகிறார். ஓர் எழுத்தாளரின் படைப்பில் அவர் விட்டுவிட்ட பகுதிக்கு, அவருக்கான காரணங்கள் அவரளவில் தெளிவாகவே இருக்கின்றன.

இங்கேதான் எழுத்தாளர்கள் கடுமையாக முரண்படும் புள்ளியும் தொடங்குகிறது. பாலுமகேந்திராவின் கதை நேரக் கதைகளில், படைப்பாளியின் பெயர் என்பது எழுத்தாளர்தான் என்பதால், அதில் தங்கள் உரிமைதான் என்ன என்று அதனை எழுதிய எழுத்தாளர்கள் கேட்கக்கூடும். பாலுமகேந்திராவின் பதில் ஒன்றும் இல்லை என்பதுதான். நீங்கள் எழுதிய ஒரு கதையின் படைப்பாற்றலுக்கு என் படைப்போடு யாதொரு தொடர்பும் இல்லை என்கிறார். படைப்பாற்றலும் படைப்பும் இந்த இடத்தில் அடைந்த விலக்கம் என்ன அசர வைத்தது என்றே சொல்லவேண்டும். பாலுமகேந்திரா எழுத்தாளரின் படைப்பிலிருந்து எடுப்பது அதன் உள்ளடக்கத்தை மட்டுமே அன்றி அதன் படைப்பாற்றலை அல்ல. அவரளவில் இது தெளிவான பார்வையே. மட்டுமன்றி, ஒரு திரைமொழிக் கலைஞனுக்குத் தேவையானதும்கூட.

ஓர் எழுத்தாளர் ஒரு வரியில் எழுதிச் செல்லும் ஒரு காட்சிக்கு நான்கைந்து காட்சிகள் வைக்கவேண்டியிருக்கும் என்று சொல்லி, அதற்கு எடுத்துக்காட்டாக மாலனின் தப்புக்கணக்கு கதையை படமாக்கியவிதத்தை விளக்கினார். ஓர் எழுத்தாளர் ஆயிரம் பக்கங்கள் எழுதிச் செல்லும் ஒரு விஷயத்தை ஒரு திரைக்கலைஞன் ஒரு சட்டகத்தில் காண்பிக்கமுடியும் என்றார். உண்மைதான். ஆனால் அதேபோல் இதன் மறுபக்கமான, ஓர் எழுத்தாளன் உருவாக்கும் உன்னதத் தருணங்களை அதற்கு இணையான ஒரு தருணமாக எல்லா சமயங்களில் திரைக்கலைஞன் மாற்றிவிடமுடியாது என்பதும் உண்மையே. இதனால்தான் ஒரு கதையைத் தேர்ந்தெடுக்க பாலுமகேந்திரா ஐம்பது கதைகளைப் படிக்கவேண்டியிருந்திருக்கிறது.

எழுத்திலிருந்து திரைக்கு படைப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தால்தான் திரைமொழியின் அடிப்படை பலமாகவும் தீவிரமாகவும் அமையும் என்று நான் நினைக்கிறேன். அதற்கு பாலுமகேந்திரா போன்றவர்கள் இலக்கியத்துக்கும் திரைக்கும் இடையேயான தூரத்தைக் குறைப்பதில் காட்டிவரும் அக்கறை மிகவும் முக்கியமானது. கதை நேரம் போன்ற வரவேற்கப்படவேண்டிய முயற்சிகளை எழுத்தாளர்கள் எந்த ஓர் ஊடகத்திலும் பதிவு செய்யவில்லை என்கிற பாலுமகேந்திராவின் வருத்தமும் கோபமும் இங்கே இருந்துதான் தொடங்குகிறது. தொடர்ந்து அலுத்துக்கொள்ளும் எழுத்தாளர்கள், அவர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வு அரங்கேறும்போது ஏன் அதனைப் பதிவு செய்யாமல் இருக்கிறார்கள் என்கிறார். அதோடு மட்டுமின்றி எழுத்தாளர்கள், திரைத்துறையைப் பற்றி வானளாவ பேசவும் செய்கிறார்கள் என்பது அவரது கோபம். தங்கள் நல்ல முயற்சிகளை அங்கீகரிக்காத எழுத்தாளர்கள் எவருக்கும் தங்களைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை என்பது பாலுமகேந்திராவின் கோபம். எழுத்தாளர் சுஜாதா கதை நேரம் பற்றி எங்கேயோ குறிப்பிட்டிருக்கிறார் என நினைக்கிறேன். கற்றதும் பெற்றதும் பத்திகளிலா, எங்கே என்று தெரியவில்லை. ஒருவேளை இது பாலுமகேந்திராவுக்குத் தெரியாதா அல்லது அதெல்லாம் ஒரு சிறிய எடுத்துக்காட்டுத்தானே ஒழிய, அதை மட்டும் வைத்துக்கொண்டு எழுத்தாளர்கள் அங்கீகரித்துவிட்டார்கள் என்று எடுத்துக்கொள்ளமுடியாது என நினைக்கிறாரா என்று தெரியவில்லை. இரண்டாம் வகையாக பாலுமகேந்திரா எடுத்துக்கொண்டாலும் அதில் நியாயம் இருக்கவே செய்கிறது.

மொத்தத்தில் பாலுமகேந்திரா சிறப்பாகப் பேசினார். உரையாடல் தொடங்கியது. பின்னர் அவரது தப்புக் கணக்கு திரையிடப்பட்டது. மீண்டும் பாலுமகேந்திரா பேசினார்.

விமலாதித்த மாமல்லன் சார்பாகச் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பாலுமகேந்திரா அவரது பதிலைச் சொன்னார். கேள்வியின் சாரம், விமலாதித்த மாமல்லனின் கதையை பாலுமகேந்திரா மோசமாகப் படம் எடுத்தார் என்பதுதான் என நினைக்கிறேன். அதற்கு பாலுமகேந்திரா ஏற்கெனவே தான் சொன்ன பதில்களிலிருந்தே மேற்கோள் காட்டிப் பதிலளித்தார். ஓர் எழுத்தாளரின் கதை என்பது, அதன் படைப்பாற்றலைத் துறந்துவிட்டால், தினத்தந்தியில் வரும் ஒரு சிறிய செய்தித் துணுக்கைப் போன்றதுதான் என்றார்.

தப்புக் கணக்கு திரையாக்கலில் உள்ள சில குறைகளைப் பற்றி விமலாதித்த மாமல்லன் கேள்வி கேட்ட நேரத்தில் லேசான வெப்பம் பரவியது. மாமல்லன் சொன்ன காட்சிக் குற்றங்கள் எனக்கு ஏற்க இயலாதவை. ஆனால், தப்புக் கணக்கு திரைக்கதையில் ஒரு குழந்தையை அசாதாரணக் குழந்தையாகக் காட்ட அக்குழந்தை கேட்பதாகக் காட்டப்படும் கேள்விகளின் தொடர்வரிசை குறித்த மாமல்லின் குற்றச்சாட்டான செயற்கைத்தன்மையில் உண்மை உள்ளது என்றுதான் நானும் நினைக்கிறேன். ஆனால், பள்ளி வெட்டவெளியில் செயல்பட்டால் இப்படி கேள்வி கேட்பார்களா, ஒரு குழந்தை வவுத்துலிங்கம் என்று தினமும் பார்க்கும் தன் தாத்தாவையே சொல்லுமா என்பன போன்ற லாஜிக் கேள்விகளையெல்லாம் நான் ஏற்கவில்லை. இதை ஒருவேளை மாமல்லன் படித்தால் அவருடைய தரப்பைச் சொல்லக்கூடும்.

மொத்தத்தில் ஒரு நல்ல மாலை.இதனை சாத்தியப்படுத்திய தோழர்கள் மருதன், பாலு சத்யாவுக்கு நன்றி சொல்லவேண்டும். நேற்று பாலுமகேந்திரா ஒருவித தத்துவ மூடில் பேசிக்கொண்டிருந்தபோது எனக்குள் தோன்றிய தத்துவ நெறி இது. இது இங்கே தேவையில்லைதான். ஆனால் பாலுமகேந்திராவின் அவரது படைப்பு போல, இது எனது படைப்பு. என்னவேண்டுமானாலும் எழுதலாமே! எனவே… தோழர்கள் என்பதே தோளர்கள் என்பதன் மரூஉ. பிற்காலத்தில் மரபு, பாரம்பரியம் இத்யாதி என்கிற தத்துவங்கள் தங்கள் மீது ஏறிக்கொள்ள வசதியாக முற்போக்குக் காலத்தில் தோள் வளர்ப்பவர்களே தோளர்கள் என்றழைக்கப்பட்டார்கள் என்னும் கண்டடைதல்தான் அது. மீண்டும் தோளர்களுக்கு நன்றி.

Share

Comments Closed