நன்றி: சொல்வனம்
காத்திருப்பு
வலையில் சிக்கி நெளியும்
மனதை விடுவிக்க நேரம் பார்த்து
காத்திருந்தாள் வேலையில்லாத பெண்ணொருத்தி
சிலந்தியின் எச்சில்தடத்தின் மையத்தில்
நிலைகொண்டிருந்தது சிலந்தியின் கர்வம்
சிலந்திக்கும் பெண்ணுக்குமான போட்டியில்
கடந்துவிடுகிறது ஓர் யுகம்
காற்றடிக்கத் தொடங்குகிறது
இருவரும் இன்னும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்
அன்றொருவன் வந்திருந்தான்
அவனைக் கடவுள் என்றேன்
அன்று தெருவழியே ஒரு பிணம் சென்றது
சில மனிதர்கள் சென்றிருந்தார்கள்
நசுக்கப்பட்டுக் கிடந்தன சில மலர்கள்
மீன் கொண்டு வந்தவனை
கத்திக்கொண்டிருந்தது பூனை
மழையை எதிர்த்தன குடைகள்
அன்றுதான் அவன் வந்திருந்தான்
இத்தனையையும் அவன் கவனிக்கவில்லை
எல்லோருக்கும் ஒரே புன்னகை
மழையின் நீர்
எதிர்ப்பற்ற ஒரு மனிதன்
கிடைத்துவிட்ட வெறியில்
கலந்து தீர்த்தது மிக வேகமாய்
யாருமில்லாத தோரணையில்
அவனருகே கிடந்து
மீனைத் தின்றது பூனை
சட்டகம்
பதின்ம வயதிலிருந்து
சட்டகம் செய்துகொண்டிருக்கிறேன்
அளவு கச்சிதம் தப்பியதே இல்லை
அதன் உள்முனைகளில்
சிக்கிக் கொண்டுவிடும் மனிதர்கள்
பின் மீறி வெளியே சென்றதே இல்லை
அதை எப்படிச் சிறிதாக்கினாலும்
விரும்பி வந்து புன்னகையுடன்
தன்னை அடைத்துக்கொண்டார்கள் அவர்கள்
சுற்றித் திரியும் மனிதர்கள்
கழுத்தெல்லாம் என் தயாரிப்புப் பொருள்
அலுத்துப் போகிறது எனக்கு.
இதோ இப்போது சொல்கிறேன்,
நான் இனி சட்டகம் செய்யப்போவதில்லை
உங்களுக்கான ஒன்றை
நீங்களே கொண்டு வந்துவிடுங்கள் ப்ளீஸ்.
தேடல்
தெரியாமல் ஒரு பாம்புக்குட்டியை
விழுங்கிவிட்டால் எப்படி இருக்கும்?
யாரோ சொன்னதாகத்தான் நினைவு
யார் சொன்னதென நினைவில்லை
எப்போது என்பதும் நினைவில்லை
ஆனால் சொல்லின் காலத்தெளிவும்
சொல்லியின் தொனியும்
இன்னும் பசுமையாக
நானேதான் நினைத்தேனா
என் மனசுக்குள் இருந்துகொண்டு
நானேதான் பேசிக்கொண்டேனா
தெரியாமல் விழுங்கமுடியுமா
குழப்பமே எஞ்சுகிறது
தெளிவாக வரிசையாக
யோசிக்கலாம் என்றால் எங்கிருந்து?
நிச்சயம் கனவில்லை
யார் சொல்லியிருந்தாலும்
இப்போது யாரிடமிருந்தாலும்
அச்சொல் என்சொல்