ஆடுகளம் – கதையின்மை என்னும் பொய்

நன்றி: தமிழ் பேப்பர்

வெற்றிமாறனின் ஆடுகளம். அப்படித்தான் சொல்லவேண்டியிருக்கிறது. கதையில்லை என்னும் புலம்பல்களுக்கு மத்தியில், எல்லாக் கதைகளுமே எடுக்கப்பட்டுவிட்டன என்னும் தப்பித்தல்களுக்கு மத்தியில் ‘ஆடுகளம்’ மிகச்சிறப்பான கதையைக் கொண்டிருக்கிறது. இப்படத்துக்குச் சரியான பெயர் ‘சண்டைக்கோழி’ என்பதாகவோ ‘ஆடுகளம்’ என்பதாகவோதான் இருக்கமுடியும். அந்த வகையில் ஆடுகளம் என்ற பெயரை இதுவரை யாரும் வைக்காததற்கு வெற்றிமாறன் ஒட்டுமொத்த திரைப்பட இயக்குநர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார். 🙂

முதலிலேயே ‘சேவற்சண்டை’ மனிதர்களைக் கொல்லும் வரை செல்லும் என்று சொல்லி, படம் பார்ப்பவர்களைத் தயார் செய்துவிடுகிறார். மேலும் படம் முழுக்க அதுவே கதை என்பதையும் தெளிவாக உணர்த்திவிடுவதால், தேவையற்ற எதிர்பார்ப்புகள் குறைந்து, நேரடியான கதைக்களம் ஒன்றுக்குத் தயாராகிவிடுகிறோம். இடைவேளை வரை படத்தின் வேகம் சண்டைச்சேவல் வேகம்தான். ஒன்றிணைந்து கிடக்கும் துருவங்கள், மெல்ல மெல்ல எதிரெதிராக விலகிப் போவதையும், அதனுள்ளே மனிதனின் ஆதிகுணமான பொறாமையும் வன்மமும் குடிபுகுவதையும், பார்ப்பவர்கள் நம்பிக்கை கொள்ளும்வண்ணம் காட்டியிருப்பது முக்கியமானது.

இடைவேளை வரை நேரடியாகப் பங்குபெறும் சேவற்சண்டை, இடைவேளைக்குப் பிறகு, திரைக்கதையின் பின்புலமாகிப் போகிறது. ஓர் உன்னதத் திரைப்படத்துக்கு, சுவாரஸ்யத்தைவிட அனுபவம்தான் முக்கியம் என்றாலும், இடைவேளைக்குப் பிறகு வராத சேவற்சண்டையை நினைத்து ஏங்க வைத்துவிடுகிறார் வெற்றிமாறன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இதனால் படம் இடைவேளை வரை படுவேகமாகவும், இடைவேளைக்குப் பின்னர் கொஞ்சம் மெல்லச் செல்வதாகவும் ஒரு தோற்றம் ஏற்பட்டுவிடுகிறது.

இப்போதிருக்கும் நடிகர்களில் மட்டுமல்லாது, தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான நடிகர்களுள் தனுஷும் ஒருவர் என்பதை இப்படம் நிரூபிக்கிறது. எந்த ஒரு இடத்திலும் இம்மி பிசகாத மதுரை சண்டியர் தோரணை. திறமைத் திமிர். சோகம் வரும்போது அடையும் முகக்கலக்கம். தனுஷ் கலக்குகிறார். பேட்டைக்காரராக வரும் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் – வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு முதிர்ச்சி, நடிப்பில் யதார்த்தம். அவரே பின்னணிக் குரலும் என்றால், அதற்கும் ஒரு பாராட்டு. தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது கிடைக்க வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது. சிறந்த புதுமுக நடிகர் என்று சொல்லி, வ.ஐ.ச.ஜெயபாலனைக் குறைக்காமல், சிறந்த குணச்சித்திர நடிகராக அவரும் தேர்ந்தெடுக்கப்படுவாரானால் மகிழ்ச்சியே.

ஹீரோயினுக்கு அதிக வேலை இல்லை. அழகாக வந்து போகிறார். ஒளிப்பதிவு அட்டகாசம். இசையில் பாட்டுகள் ஏற்கெனவே பிரபலமாகிவிட்டன. இதுபோன்ற வித்தியாசமான படங்களுக்கு இசையமைக்க இளையராஜா உச்சத்தில் இல்லையே என்பதை நினைக்காமல் இருக்கமுடியவில்லை. ஜி வி பிரகாஷ் திணறுகிறார். இளையராஜா உச்சத்தில் இருந்தபோது இசையமைத்த படங்களில் பெரும்பாலானவை குப்பை. ஆதாரக் கதையோ திரைக்கதையோ இல்லாதவை. பாடல்களும் பின்னணி இசையும் மட்டும் ஒட்டாத உயரத்தில் நிற்கும். இன்று பல புதிய இயக்குநர்கள் பல புதிய கனவுகளோடு வருகிறார்கள். அவர்களது திரைப்படங்கள், இளையராஜாவின் பின்னணி இசையில் பெறவேண்டிய அடுத்தகட்ட நகர்வைப் பெறாமலேயே போயிவிடுகின்றன. இது மிகப்பெரிய துரதிஷ்டம். எப்படியோ பாலா மட்டும் தப்பித்துக்கொண்டு விடுகிறார்.

இப்படத்தின் ஒரே ஒரு சின்ன குறையாகச் சொல்லவேண்டியது – இதைக் குறை என்ற வார்த்தையால் குறுக்கமுடியாது என்றாலும் – இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகள், முக்கியமாக நம்பிக்கைத் துரோகம் என்பது குருதிப்புனலை நினைவுபடுத்துகிறது. இது குருதிப்புனலின் அளவுக்கதிகமான தாக்கத்தால் இருக்கலாம். அதிலும் குறிப்பாக, பேட்டைக்காரரைப் பார்க்க தனுஷ் வரும் இடம்.

ஒரு படத்தின் முடிவு என்பதில் கட்டிப் போடப்பட்டிருக்கும் பொதுப்புத்தி இந்தப் படத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதில் நிச்சயம் சிக்கல் இருக்கும். அதுவே இப்படத்தின் கமர்ஷியல் பலவீனமாகவும் அமையலாம். ஆனால், நல்ல படங்களைச் சிந்திக்கும்போதே, கமர்ஷியலாகவும் வெற்றி பெற நினைக்கும் புதிய இயக்குநர்களின் வரவும், அவர்களின் ஆக்கங்களின் தரமும் தமிழ்த்திரைப்படங்கள் மீது பெரும் நம்பிக்கைக் கொள்ள வைக்கின்றன. அந்தவகையில் வெற்றிமாறன் மிக முக்கியமான இயக்குநராக உருவெடுக்கிறார்.

தமிழ்த்திரைப்படங்கள் தமிழ் வாழ்வைப் பேசாமல், எதையோ ஒன்றை, உலகத்தரம் என்னும் முலாமில் முக்கிப் பேசிவிட்டுத் தப்பிவிடுகின்றன. அக்குறையை நீக்க வந்திருக்கும் இத்திரைப்படம், தமிழ்த் திரைப்படங்களில் முக்கியமானது.

Share

Comments Closed