எந்திரன் – சன் டிவி – தொடரும் குமட்டல்

இந்தக் கட்டுரை தமிழ்ஹிந்து தளத்தில் வெளியாகியிருக்கிறது. வாசிக்க இங்கே சொடுக்கவும்.

http://www.tamilhindu.com/2010/10/suntv-n-enthiran-the-abominable-nexus/

நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் ‘யார் இந்தியாவின் நிஜமான சூப்பர் ஸ்டார்’ என்னும் நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. இந்தியாவெங்கும் இருந்து மக்கள் எஸ் எம் எஸ் அனுப்பியிருந்தார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. 88% பேர் ரஜினிதான் நிஜமான சூப்பர் ஸ்டார் என்று சொல்லியிருந்தார்கள். 3% பேர் அமிதாப், 3% பேர் ஷாருக், 3% பேர் சல்மான் – ஏறக்குறைய இப்படி இருந்தது மக்களின் தீர்ப்பு. ரஜினியின் திரைப்படங்களுக்கு ஏன் இந்த பிரபல்யம் என்று அலசத் தொடங்கினார்கள். அமிதாப், ஷாருக் போன்ற நடிகர்களிலிருந்து ரஜினி எப்படி மேலேறிச் செல்கிறார் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். 1970களில் அமிதாப் ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பது கிடையாதாம். தனது படங்கள் வெளியானபோதுகூட அதைப் பற்றிப் பேசமாட்டாராம். ஆனால் இப்போதெல்லாம் தனது படங்களுக்கு விளம்பரம் செய்ய வருவதும், ஏதேனும் தொலைக்காட்சித் தொடரில் (டாக் ஷோ) தோன்றினால் அதற்கான முன்னேற்ற நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதும் இயல்பாகிவிட்டது. தங்களது படங்கள் வெளியாகும்போது ஷாருக்கும் சல்மானும் பெரிய பெரிய பிரமோக்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் ரஜினி ஈடுபடுவதில்லை என்று சொன்னது அந்தத் தனியார்த் தொலைக்காட்சி சானல்.

ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. ஒருநாள் முழுக்க சன் டிவியில் ரஜினி தோன்றி கிளிமாஞ்சாரோ பாடலைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருந்தார். ரஜினி வாக்கு கொடுத்த கதை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இதனை ரஜினியே மேடையில் சொன்னார். எந்திரன் திரைப்படம் சன் பிக்சர்ஸின் கையில் வந்தபோது, இதற்கான பிரமோக்களில் தான் பங்கேற்பதாக ரஜினி வாக்குக் கொடுத்திருந்தாராம். ஆனால் படம் முடிந்ததும், அந்த பிரமோ என்பது தன் குணத்துக்குச் சற்றும் பொருந்துவல்ல என்பது ரஜினிக்கு உறைத்திருக்கிறது போல. அதிலிருந்து பின்வாங்கி விட்டார். ஆனால் அதனையும் கலாநிதி மாறன் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டாராம். ரஜினி ஒரு மேடையில் ஏறிவிட்டால் எப்படி உணர்ச்சிவசப்பட்டு விடுவார் என்பது நாம் அறிந்ததே. எந்திரன் வெளியீட்டு மேடைகளில் அவர் கலாநிதிமாறனைப் புகழ்ந்த விதமும் அப்படியே. அதற்கான வணிகக் காரணங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. வணிகக் காரணங்கள் மட்டுமே எப்போதுமே ரஜினியை நிர்ணயித்துவிடுவது வருத்தமளிக்கும் ஒன்றுதான்.

கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் என்னும் ஒற்றை கம்பெனியின் ராட்சதப் பிடிக்குள் தமிழ்த் திரையுலகம் சிக்கிக் கொண்டுவிட்டது. அதிலிருந்து வெளியேறும் வழி என்னவென்று பார்த்தால், அங்கே வரவேற்கக் காத்துக்கொண்டிருப்பவர்கள் கருணாநிதி குடும்பத்தின் வாரிசுகள். வங்குவத்தி வங்குவத்தின்னு கோவிலுக்குப் போனா அங்க ரெண்டு வங்குவத்தி திங்கு திங்குன்னு ஆடிச்சாம் கதைதான் இப்போது இங்கே நடந்துகொண்டிருக்கிறது. கருணாநிதி பேரன்கள் கையில் ரஜினி சிக்காமல் சன் பிக்சர்ஸில் அவர் மாட்டிக்கொண்டது ஒரு வகையில் அவருக்கு நல்லதுதான். ஆனால், மணிரத்னத்தின் வீட்டில் குண்டு விழுந்த பின்பு, தமிழ்நாட்டிலேயே குண்டு வெடிப்புகள் நடக்கின்றன என்பது சட்டென நினைவுக்கு வந்து, ஜெயலலிதாவைக் கேள்வி கேட்ட ரஜினி, ஒட்டுமொத்த திரையுலகத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துகொண்டிருக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றி ஏன் இன்னும் எதுவும் கேட்காமல் இருக்கிறார்? தன் வணிகம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவா?

இதில் போதாக் குறைக்கு சன் பிக்சர்ஸ் தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளை தனது கைப்பிடியில் வைத்துக்கொள்ள விரும்புவதாகவும், அதற்குப் போட்டியாக கருணாநிதியின் பேரன்களே களமிறங்கி இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. உழைப்பு, தொழில், முன்னேற்றம் என்றெல்லாம் காரணங்கள் சொன்னாலும், பதவியும் ஊடகமும் தரும் செல்வாக்கில்லாமல் இதுவெல்லாம் சாத்தியமில்லை என்பதை எந்த ஒரு பாமரனும் உணரமுடியும். ஒரு குடும்பத்தின் கைப்பிடிக்குள் தமிழ்த் திரையுலகம் இப்படி சிக்கிக்கொள்வது ஆரோக்கியமானதல்ல. இதுபோக, சன் டிவிக்கோ கலைஞர் டிவிக்கோ திரைப்படத்தை ஒளிபரப்புவதற்கான உரிமம் கொடுப்பதில் நடக்கும் கூத்துகள் தனி. இன்றைய கருணாநிதியின் அரசியல் புலத்துக்கு முன்னால், சன் பிக்சர்ஸின் ஊடகப் புலத்துக்கு முன்னால் எந்த இயக்குநரால், எந்த நடிகரால் எதிர்த்து நின்றுவிட முடியும் என நினைத்துப் பாருங்கள். ரஜினி போன்ற உச்ச நடிகரே இப்படி வீழ்ந்து கிடந்தால், மற்றவர்களின் பரிதாப நிலை நமக்குப் புரியும்.

suntv-endhiran

முன்பெல்லாம் ரஜினி படம் வெளியாகிறது என்றாலே சில படங்கள் அந்த சமயத்தில் வெளிவராது. இதன் காரணம் ரஜினி என்னும் உச்ச நடிகரின் படத்தோடு போட்டி போடுவது அவசியமற்ற வேலை என்பதுதான். இது தயாரிப்பாளர்களும், நடிகர்களும், இயக்குநர்களும் தாங்களாக எடுக்கும் ஒரு முடிவு. இன்று அப்படியல்ல. நீங்கள் போட்டி போட நினைத்தாலும், உங்களுக்கு தியேட்டர் கிடைக்காது. அதை மீறி வெளியிட்டால் உங்கள் திரைப்படம் சன் டிவியின் திரை விமர்சனம் (இப்போது இந்தப் பகுதி பெரும் நகைச்சுவைப் பகுதியாகிவிட்டது வேறு விஷயம். நேற்று வரை சன் பிக்சர்ஸ் தயாரித்த தில்லாலங்கடி திரைப்படம்தான் திரை விமர்சனம் பகுதியில் முதல் இடம் என்று கேள்விப்பட்டேன். நான் இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லை என்பதால், ஒரு நண்பர் சொல்லித்தான் இது எனக்குத் தெரியவந்தது) பகுதியில் குதறப்படலாம். தனது ஒரு படம் குதறப்பட்டதை எதிர்த்து பேசிய சத்யராஜ் இன்றெல்லாம் வாய் திறப்பாரா என்று கூடத் தெரியாது. ஏனென்றால் அன்று சன் டிவி ஒரு சானல் மட்டுமே. இன்று திரையுலகில் அது ஒரு சக்ரவர்த்தி. டிவி, திரைப்படம் என்பது போதாதென்று, தினமும் 10 லட்சம் பிரதிகள் விற்கும் ஒரு பத்திரிகை, இது போக வார இதழ்கள், இந்தியாவெங்கும் பண்பலை – இவர்களை எதிர்த்துப் பேச உண்மையான தைரியம் இருக்கவேண்டும் அல்லது முட்டாளாக இருக்கவேண்டும். இந்த நிலை இப்படியே நீடிப்பதைத்தான் ரஜினி விரும்புகிறாரா என்ன?

இதில் எந்திரன் வெளியீடு என்று சொல்லி சன் டிவி அடிக்கும் கும்மாளம் குமட்டலை வரவழைக்கிறது. முன்பும் எத்தனையோ ரஜினி படங்கள் வந்திருக்கின்றன. இதே ரசிகர்கள் பாலாபிஷேகம், பீராபிஷேகம் எல்லாம் செய்திருக்கிறார்கள். அது ஒரு குறிப்பிட்ட சிறிய எல்லைக்குள் அங்கங்கே நடந்த ஒரு விஷயமாக அமுங்கிவிடும். ஆனால், இன்று சன் டிவி அதற்குத் தரும் அங்கீகாரம் அதன் எல்லையை மிகவும் விரிவாக்கி, தமிழர்களே இப்படியெல்லாம் நடந்துகொள்ளும் முண்டங்கள்தான் என்னும் பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஒரு நடிகருக்கு இப்படி நடப்பதெல்லாம் பெரிய எரிச்சல் தரும் விஷயங்கள். இது ஒரு ரசிகரின் அல்லது சில ரசிகர்களின் தனிப்பட்ட விஷயமல்ல. சமூகம் எப்படி திரைப்படத்தினால் புரையோடிப் போயிருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இது. முன்பே இது குறித்துப் பலர் பேசியிருக்கிறார்கள். இந்த முறை இதனையும் சன் டிவி மார்க்கெட்டிங் உத்தியாக்கிவிட்டது. ரஜினி படத்துக்காக பால் குடம் எடுப்பதும், 1500 படிகள் கொண்ட கோவிலுக்கு முழங்காலில் நடந்து படியேறிப் போவதும், பாலாபிஷேகம் செய்வதும், தேர் இழுப்பதும், ரசிகர்கள் பச்சைக் குத்திக் கொள்வதும், அலகு குத்திக் கொள்வதும் – என்ன ஒரு சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? இதனைத் தொடர்ந்து ஒரு சாகசமாக ஒரு முக்கியமான சானல் தொடர்ந்து காட்டிக்கொண்டிருந்தால், வளரும் இளைஞர்கள் மனதில் இதெல்லாம் நல்ல விஷயம் என்பதாகப் பதிந்துவிடாதா? ஆனால் இதையெல்லாம் யோசிக்கும் நிலையில் இல்லை சன் பிகசர்ஸ். அதன் இலக்கு தான் போட்ட 150 கோடிக்கு நிகராக எத்தனை மடங்கு லாபம் சம்பாதிக்கமுடியும் என்பது மட்டுமே.

suntv-endhiran

ரஜினி போன்ற நடிகர்கள் இந்த குமட்டல்களையெல்லாம் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது இன்னொரு குமட்டல். படம் வெளி வந்த பின்பாவது ரஜினி இது குறித்துப் பேசுவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். தான் சொல்லியும் ரசிகர்கள் கேட்பதில்லை என்னும் சாக்கு போக்கெல்லாம் எடுபடாது. ஜெயலலிதா ரஃபி பெர்னாட்டுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இப்படித்தான் சொன்னார். தான் எத்தனை முறை சொல்லியும் தன் காலில் அமைச்சர்களும் தொண்டர்களும் விழுகிறார்கள் என. காலில் விழுந்த இரண்டு அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்பியிருந்தால், அடுத்த எந்த அமைச்சர் காலில் விழுந்திருப்பார்? ரஜினியும் தனக்கு பாலாபிஷேகம் செய்யும், தேர் இழுக்கும் ரசிகர்களை எல்லாம் சரியாகக் கண்டித்திருந்தால் அவர்களும் நிச்சயம் கேட்டிருப்பார்கள்.

தன் மகள் கல்யாணத்துக்கு நிச்சயம் வரக்கூடாது எனச் சொல்லி, அதனைச் செய்துகாட்டவும் தெரிந்த ரஜினிக்கு இது ஒன்றும் பிரமாதமான காரியமல்ல. ரஜினிக்கு இப்படி நடக்கும்போது, ரஜினியாக வரத் துடித்துக்கொண்டிருக்கும் இளைய தளபதிகளும், அல்டிமேட் ஸ்டார்களும் இதனையே நகலெடுக்கவே விரும்புவார்கள். அப்படி ரஜினி செய்யாவிட்டால், இன்றைக்கு ரஜினிக்கு அவர் ரசிகர்கள் செய்துகொண்டிருப்பது தமிழ்நாட்டின் திரை கலாசாரமாக மாறும். எனவே ரஜினியே இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும். அஜித் தனது பேருக்கு முன்பாக இனிமேல் அல்டிமேட் ஸ்டார் என்றெல்லாம் போடக்கூடாது என்று சொன்னார் சமீபத்தில். கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. இதேபோன்ற ஒரு சுய பரிசோதனையை ரஜினி செய்யவேண்டும்.

ரசிகர் மன்றங்களால் சில நற்பணிகள் அங்கங்கே நடக்கிறது என்றாலும், பெரிய அளவில் இந்த ரசிகர் மன்றங்கள் என்ன சாதித்தன என்பது தெரியவில்லை. எந்த ஒரு நடிகரும் ரசிகர் மன்றத்தை நம்பி இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. ஆனால் வெளியில் எந்த ஒரு நடிகரும் இதனைச் சொன்னதில்லை. ரஜினி தனது எல்லா ரசிகர் மன்றங்களையும் கலைத்துவிட்டு, அதில்கூட முன்மாதிரியாக இருக்கலாம் ரஜினி. நடிப்பு என்பது ஒரு தொழில். திரைப்படமும், நடிப்பும் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்றால், அதனைப் பாருங்கள், பாராட்டிவிட்டுச் செல்லுங்கள், அது போதும் என்று ரஜினி அறிவித்தால்தான் என்ன?

எந்திரன் வெளியீட்டை ஒட்டி மேடையில் பேசிய அத்தனை நடிகர்களும் தங்கள் ரசிகர்களையே நகலெடுத்தார்கள். ஒவ்வொரு நடிகரும் ஒரு விசிலடிச்சான் குஞ்சாக வந்துவிட்டுப் போனார்கள். இவர்களுக்கெல்லாம் தன்முனைப்பு என்ற ஒன்றே இல்லையோ என்றுதான் நினைக்கத் தோன்றியது. நடிகர்களின் வழியேதான் ரசிகர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்றும் நினைக்கத் தோன்றுகிறது. தன்மானமுள்ள நடிகர்களாகத் தங்களை முன்னிறுத்திக்கொண்டு முன்பு குரல் கொடுத்த நடிகர்கள் எல்லாம் ஓடிப் போன சுவடே தெரியவில்லை.

suntv-endhiran

ரஜினி முன்பெல்லாம் புகை பிடிப்பவராகப் பல படங்களில் தோன்றுவார். ஸ்டைல் என்பதே தன் அடையாளம் என்று ரசிகர்களை அவர் அடைந்த விதமே இந்த புகையின் வழியாகத்தான் எனலாம். திடீரென்று பாமக குரல் கொடுத்தது. ரஜினியால் பல இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்று. ஒரு படி மேலே போய் ரஜினியை அக்கட்சி மிரட்டியது என்றே சொல்லவேண்டும். ரஜினி புகை பிடிப்பது போன்ற படங்கள் வந்தால் அதனை வெளியிட விடமாட்டோம் என்றார்கள். உண்மையில் இது ஜனநாயகத்துக்கு எதிரானது. ரஜினி புகை பிடிக்கும் படங்களால் இளைஞர்கள் கெடுகிறார்கள் என்று நீங்கள் பிரசாரம் செய்யலாம். அமைதி வழியில் அதனை எதிர்த்துப் போராடலாம். தொடர்ந்து ரஜினியுடன் பேசலாம். ஆனால் அப்படி வரும் படத்தைத் திரையிட விடமாட்டோம் என்பது அராஜகம். ரஜினி இதற்குப் பணிந்து போனார். வணிகக் காரணங்கள். அடுத்த படத்தில் சுயிங்கம் மென்று கொண்டு வந்தார்.

புகை பிடிப்பதால் இளைஞர்கள் கெட்டுவிடுவார்கள் என்று போராட்டம் நடத்திய பாமக இன்று ஏன் விரல் சூப்பிக்கொண்டிருக்கிறது? ஒரு நடிகருக்கு நடக்கும் இத்தனை குமட்டல்களையும் ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது? சன் டிவியில் பரப்பல்களைப் பார்த்து வெறுமனே அமைதியாக இருப்பது ஏன்? எந்திரன் கருணாநிதியின் ஆசியையும் பெற்று விட்டது என்பதற்காகவா? ஒரு சமுதாயத்தையே சீரழிக்கும் விதமாக தொடர்ந்து சன் டிவி ரஜினி ரசிகர்களைக் காட்டிக்கொண்டிருப்பது குறித்து பாமக வாய் திறக்காதது ஏன்? நாளை கிடைக்கவிருக்கும் சீட்டும் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காகவா? இப்படி ரசிகர்கள் என்னும் போர்வையில் ஒரு சமுதாயத்தின் மக்களைக் கீழ்மைப்படுத்துவது தவறு என்று ரஜினிக்கு எதிராகப் பாமக இன்று எதுவும் பேசாமல் கள்ள மௌனத்துடன் இருப்பது, அது சன் பிக்சர்ஸைப் பாதித்து, அரசியலில் தன்னையும் பாதித்துவிடும் என்பதற்காகவா?

முதலில் ரஜினி ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். படத்துக்கான மார்க்கெடிங் போர்வையில் சன் டிவி நிகழ்த்திக்கொண்டிருப்பது ரஜினியின் சுயமரியாதையின் மீதான தாக்குதலே அன்றி வேறல்ல. தனது ரசிகர்களின் சர்க்கஸ்களைக் காட்டிக்கொண்டிருப்பதன் மூலம் தன்னைக் கேவலப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை ரஜினி உணரவில்லை என்றால், பொதுமக்களின் மத்தியில் ரஜினியின் இமேஜ் நிச்சயம் பாதிப்புக்குள்ளாகும். அது ஏற்கெனவே பாதிப்புக்குள்ளாகிவிட்டது என்பதும் ஓரளவு உண்மையே. ரஜினி என்னும் தனிமனிதரின் மனித இருப்புக்கும், இப்போது நடந்துகொண்டிருக்கும் அவலங்களுக்கும் தொடர்பே இல்லை என்பது பலருக்குத் தெரியும். அதை எல்லோருக்கும் தெரிந்ததாக ஆக்க ரஜினி முயல்வது அவருக்கு நல்லது. இல்லை என்றால் ஒரு தன்மானமற்ற கும்பலை நாளைய சந்ததியாக உருவாக்கி வைத்துவிட்டுப் போவதில், என்னதான் சன் டிவியின் எரிச்சலூட்டும் அதீத பரப்புரை காரணமாக இருந்தாலும், ரஜினிக்கு பெரும் பங்கு உண்டாகியிருக்கும். பின்பு அதனை நீக்குவது என்பது பெரும்பாடாகிவிடும். சன் டிவியின் கேவலப்படுத்தும் ப்ரமோக்களுக்கு ரஜினி உடனே ஒரு முற்றுப் புள்ளி வைப்பது நல்லது. 60 வயதுக்குப் பிறகு, ஒரு சூப்பர் ஹிட் எந்திரனுக்குப் பிறகு, இனி சன் பிக்சர்ஸில் ரஜினி நடிக்காமல் இருந்தால், அவருக்கோ நாட்டுக்கோ ரசிகர்களுக்கோ என்ன ஒரு பெரிய நஷ்டம் இருந்துவிடப் போகிறது?

நடிகராகத் தன் பலத்தை ரஜினி அறிந்துகொள்வது அவர் சார்ந்திருக்கும் திரையுலகத்துக்கும், அவரது ரசிகர்களான நாளைய தலைமுறைக்கும் நல்லது.

Share

Comments Closed