முகம் – சிறுகதை

எனது முகம் சிறுகதை வடக்கு வாசல் ஏப்ரல் 2010 இதழில் வெளியாகியுள்ளது. படிக்க இங்கே சொடுக்கவும்.

நன்றி: வடக்குவாசல்

நீண்டுகிடக்கும்
தாழ்வாரத்துக்கு வெளியே
ஓடும் தெருவில் திரியும்
பல்வேறு நினைவுகளைக் கடந்து
புகையில் தெரியும் நிலவென
தூரத்தில் தெரியும் முகம்
என் கைகள் ஜில்லிட
-நான் எழுதியிருக்க வேண்டிய கவிதை இது.

* * * *

பத்து அடிக்கும் மேலான உயரமுள்ள தகரச் சுவரில் இருக்கும் துளையின் வழியே கண்களை வைத்துப் பார்த்தேன். மிகுந்த பிரயத்தனப்பட்டுப் பார்த்ததில் அப்புறத்தில் மெல்ல நடந்து செல்லும் மனிதர்கள் தெரிந்தார்கள். எனக்கெனத் தனியாகத் திரையிடப்படும் ஒரு திரைப்படம் போன்றகாட்சி அது. நான் எதிர்பாராத ஒரு தருணத்தில் அப்புறத்தில் இருந்து ஒருவர் மிக அருகில் வந்து, நான் பார்த்துக் கொண்டிருந்த துளையின் வழியே தன் கண்ணை வைத்துப் பார்த்தார்.

நெருங்கி வந்த நிழல் மெல்ல மூடி முழு இருட்டு ஆகிவிடுவது போல் அப்புறத்தில் ஒன்றும் தெரியாமல் மறைந்து போனது. மனிதர்களின் சத்தம் மட்டும் லேசாகக் கேட்டது. மிக அருகில் நெருங்கி வந்த அந்த மனிதனின் முகம் என்னுடைய கண்ணுக்குள் நுழைந்து என்னுள்ளே இறங்கிக் கொண்டது போலிருந்தது; பரவி வரும் நிழல் கீழே உள்ள சகலத்தையும் போர்த்திக் கொண்டுவிடுவது போல.

அந்த முகம் யாரோ ஒருவருடையது போலிருந்தது. மிகத் தனித்துவமான முகமாகவும் தோன்றியது. மூக்கின் மேலே லேசான ரோமங்கள் இருந்தன. இரண்டு புருவங்களுக்கு மத்தியில் லேசான புடைப்பு இருந்தது. மீசை மெல்லக் காற்றில் ஆடியது. யாரோ அப்பக்கம் இருந்து பார்க்கிறார்கள் என்கிற யோசனையுடன் அம்முகம் அத்துளையைப் பார்த்திருக்க வேண்டும்.

அன்றிலிருந்துதான் நான் முகங்களை உற்று நோக்குவதாக நினைத்துக் கொண்டேன். அப்படி நினைத்துக் கொள்வது என் பழக்கத்துக்கு ஒரு வயதை நிர்ணயித்தது. ஆனால் நான் மிகச் சிறிய வயதில் எப்போதோ பார்த்த முகங்கள் கூட புதுத் தெளிவு பெற்று வலம் வரத் தொடங்கின என்பதும் உண்மைதான்.

இரவில் மெல்ல நகரும் பேருந்தில் ஏறிக்கொண்டபோது இந்த முகங்களைப் பற்றி யோசிக்கவே கூடாது என நினைத்துக் கொண்டேன். முதலில் கண்ணில் பட்டது கண்டக்டரின் முகம். அதிவேகத்தில் சுவற்றில் எறியப்பட்ட பந்துபோல் அதே வேகத்தில் திரும்ப வந்து ஒட்டிக் கொண்டன முகங்கள் பற்றிய நினைவுகள்.

ஒவ்வொரு மனிதனின் முகமும் ஒவ்வொன்றாகக் காட்சி தருவதை நினைக்கும் போதெல்லாம், ஒருவிதக் கிளர்ச்சி மனதுக்குள் வியாபிப்பதைப் பார்த்தபோது எனக்கே கொஞ்சம் அசிங்கமாக இருந்தது. நான் இப்படி மிக அந்தரங்கமாக யோசித்துக் கொண்டிருந்தபோது, தலையில் எஞ்சியிருந்த ஒன்றிரண்டு முடியை கண்டக்டர் சீவிக் கொண்டிருந்தான். அவனுடைய கண்ணுக்குக் கீழே கருவளையம் ஒன்று உருவாகி வந்திருந்தது. மீசையில்லா முகங்களைக் காணும்போது ஏற்படும் ஒருவித எரிச்சல். அவனது முகத்தைப் பார்த்த மாத்திரத்தில் ஏதோ ஓர் உள்ளுணர்வு சொன்னது, இவன் எதையாவது பேசிக் கொண்டே இருக்கப் போகிறான் என.

தூங்கிக் கொண்டிருக்கும் பயணிகளில் ஒருவரை எழுப்பி அந்த மனிதர் ஐந்து ரூபாய் குறைவாகக் கொடுத்துவிட்டதாக அரை மணி நேரம் சண்டையிட்டதைப் பின்பு பார்த்தேன்.

மனிதர்களின் முகங்கள் நிச்சயம் வெவ்வேறானவை. ஆனால் தொடர்ந்து முகங்களைப் பார்ப்பதன் மூலம் அவற்றையாரும் மெல்ல வாசித்துவிடமுடியும் என்கிற நம்பிக்கை எனக்குள் வளர்ந்திருந்தது. அந்தப் பயணி ஐந்து ரூபாய் தரமுடியாது என்று உறுதியாக மறுத்துவிட்டார். கண்டக்டர் கோபத்துடன் தனக்குள், “அவனப் பாத்தா ஏமாத்தறஆளு மாதிரியா இருக்கு,’ என்று சொல்லிக்கொண்டே போனார். “ஜன்னல சாத்துயா, காத்து பலமா அடிக்குதுல்ல,’ என்று முன்னாலிருந்த வேறொரு பயணியை நோக்கிப் போனார். அந்த இரண்டு பயணிகளையும் பார்க்க எழுந்த ஆவலை அடக்கிக் கொள்ள முயற்சித்தபோது, உடலுக்குள்ளே லேசான கிளர்ச்சியை உணர்ந்தேன்.

தூக்கத்தில் என் மேல் வழிந்து விழுந்துகொண்டிருந்தான் பக்கத்திலிருந்தவன். தோராயமாக இருபது வயதிருக்கலாம். சவரம் செய்யவேண்டிய தேவை இல்லாத மாதிரியாக லேசாக ஒன்றிரண்டு ரோமங்கள் தாடைக்குக் கீழே வளர்ந்திருந்தன. எனக்கெல்லாம் இருபது வயதிலேயே கன்னமெங்கும் கருகருவென ரோமங்கள் வளர்ந்துவிட்டன. அதுவே ஒருவித ஆண் தன்மையை எனக்குத் தந்தது என்று என் நண்பர்கள் சொல்வார்கள். பக்கத்தில் இருந்த பையன் முகத்தில் எவ்விதச் சலனமுமில்லை. மெல்லிய மீசையுடன் தூக்கமே சிறந்த யோகம் என்பதாகத் தூங்கிக் கொண்டிருந்தான். மெல்ல என் கண் வழியே அவனது முகம் நுழைவதைப் பார்த்தேன். சிலரின் முகங்கள் இப்படி சில நிமிடங்களில் நுழைந்துவிடுகின்றன; இரு புருவங்களுக்கு மத்தியில் மெல்லிய புடைப்பைக் கொண்ட ஒருவனது முகம் தகரச் சுவற்றில் இருந்த சிறு துளையின் வழியே என்னுள்ளே நுழைந்ததைப் போல.

அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். மூடியிருந்த இமைக்குள் கருவிழி புடைத்து வெளியில் தெரிந்தது. அவனது தொண்டைக் குழியும் அப்படியே புடைத்திருந்தது. அவனது கேராவின் வழியே வியர்வை வழிந்து ஒரு கோடாகக் காட்சி தந்தது. பலமான காற்று என்று சொன்ன கண்டக்டர் என்ன செய்கிறார் என்று பார்த்தேன். டிரைவரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். அவரது முகம் என் கண்ணுக்குள்ளே ஏன் நுழையவில்லை என்பது குறித்து தனியே யோசிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

அவன் இன்னும் என் மேல் நன்றாகச் சாய்ந்தான். அவனது வயதில் நான் இத்தனை கவலைகள் இல்லாமல் இருந்தேனா என்பது எனக்குச் சந்தேகமாக இருந்தது. என் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கும்போது வெறும் குழப்பமே மிஞ்சுகிறது. இன்றைய என் முகம் கூட சட்டென நினைவுக்கு வர மறுப்பது விநோதம்தான். நான் சிறுவயதில் எப்படி இருப்பேன் என்று பார்க்க என் பர்ஸில் இருந்த என் பழைய புகைப்படம் ஒன்றைஎடுத்துப் பார்த்தேன்.

இன்றைய என் முகத்தோடு ஒப்பிடும்போது அது நிச்சயம் பால்வடியும் முகம்தான். நான் திருடிய ஒரு புத்தகம் பற்றிய விசாரணை வந்தபோது, என் ஆசிரியர் நிச்சயம் நான் திருடியிருக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்து என்னை எதுவும் கேட்காமலேயே அனுப்பியதை நினைத்துக் கொண்டேன். அந்த ஆசிரியரின் முகம் ஓர் ஏமாளியின் முகம்தான். ஒருவித சப்பட்டையான முகம். கண், மூக்கு, தாடை எல்லாமே உள்ளடங்கிப் போய்க் கிடக்கும் முகம். அவரது மனைவியைப் பார்த்தாலே அவர் நடுங்குவார் என்று நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் மனைவியின் முகம் பருத்த முகமாகவும், விகாரமானதாகவும் இருந்தே தீரும் என்று நினைத்தேன். அந்த வருட ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு அந்த ஆசிரியர் தன் மனைவியை அழைத்து வந்திருந்தார். நான் வரைந்து வைத்திருந்த முகத்தைத் தன் கழுத்தில் தாங்கிக் கொண்டு அவள் வந்திருந்தாள்.

தகரச் சுவற்றின் துளைகளின் வழியே நுழைந்த மனித முகத்திலிருந்து இன்று வரை இந்த பதினெட்டு வருடங்களில் இப்படி எத்தனை முகங்கள் என்னை ஆக்கிரமித்தன என யோசிக்கத் தொடங்கினேன்.

ஒரு பாடலைக் கேட்டதும் அப்பாடலின் சூழலுக்குள் நம்மை அறியாமலேயே அமிழும் மனம் போல், என்னை அறியாமல் பலவித முகங்களும், சூழலும் என்னை அலைக்கழித்தன.

பலாக்கொட்டையைப் போன்ற மொழு மொழு முகத்தைக் கொண்ட ஒரு பெண்ணைப் பார்த்தேன். அன்றே அவள் என்னுள் என் எதிர்ப்பையெல்லாம் மீறி இறங்கினாள். இது சாதாரண முகம் பார்த்தல் அல்ல என்று தோன்றியது. மெல்லிய வெண்ணிலா வெளிச்சத்தில் என் மாமா வீட்டு மொட்டை மாடியில் நான் அவளை வெறியுடன் கலைத்தேன். இவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியிருக்குமோ என்று நினைத்த நேரத்தில் மின்னலென காயத்ரியின் முகம் தோன்றி மறைந்தது.

காயத்ரியைத் தான் கல்யாணம் செய்து கொண்டேன். என் மாமனாரின் முகமும் மாமியாரின் முகமும் ஏதோ ஒரு தருணத்தில் எரிச்சல் தருவதாக என்னுள்ளே பதிந்துபோனது. அன்றிலிருந்து இறுவரை நாங்கள் பரஸ்பரம் மரியாதையாகப் பேசிக் கொண்டு, உள்ளுக்குள்ளே பெரிய எரிச்சலைப் பொத்தி வைத்துக் கொண்டிருக்கிறோம்.

இப்படி எத்தனை எத்தனை முகங்கள். ராங் சைடில் வந்து என் காலில் மோதிவிட்டு, என்னைப் பார்த்துச் சிரித்து, “சாரி பிரதர்” என்று சொன்னவனின் முகம். அவனுக்குப் பின்னே மரணம் செல்கிறதோ என்று தோன்றியது. அவனுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.

“இதெல்லாம் என்ன நோட்டுன்னு குடுக்குறீங்க?!” என்று என்னை அதட்டிக் கேட்ட பேங்க் மேனேஜரின் முகம். அந்த ஆள் நிச்சயம் கடுமையானவர் அல்ல என்று நினைத்தேன். அடுத்த ஐந்து நிமிடத்தில், “எதுக்குச் சொல்றேன்னா” என்று ஆரம்பித்தார்.

இப்படி முகங்கள் என்னைக் கடந்து கொண்டே இருக்கின்றன. நான் அவற்றைச் சாதாரணமாக மீறிப் போகமுடியாமல் ஏதோ ஒரு நோய்க்குள் விழுந்து கொண்டிருக்கிறேன் என்பது உறுதியாகத் தெரிந்தது. ஒருநாள் ஒரு டாக்டரைச் சென்று பார்த்தேன். அவர் ஏதேதோ சொன்னார். இதெல்லாம் உங்க கற்பனை என்று அவர் சொன்ன தருணத்தில் அவர் அறையை விட்டு வெளியே வந்தேன். கடைசி வரியைத் தவிர அவர் என்னவெல்லாம் சொன்னார் என்பதே நினைவில் இல்லை. அவரது முகம்தான் அப்படியே பதிந்து போயிருந்தது. அவரது மனைவி நிச்சயம் அமைதியானவளாகவும் அழகானவளாகவும் இருக்க வேண்டும் என ஓர் எண்ணம் ஓடியது. சென்று கேக்கலாமா என்று ஒரு கணம் நினைத்து, அந்த முடிவை மாற்றிக் கொண்டேன். அக்கேள்வியின் வழியே நிச்சயம் என் முகம் அவருக்குள் ஆழ இறங்கிப் போவதை நான் விரும்பவில்லை.

என் மேலே சாய்ந்திருந்த பையனின் வாய் ஓரத்திலிருந்து நீர் வடிந்தது. பொறாமை என்னை உந்த அவனைப் பார்த்தேன். எவ்விதச் சங்கடங்களும் இல்லாமல் அவன் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அவனது முகத்தில் சீராக மூச்சு ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவனுக்கு அடுத்து தாடி வைத்த மனிதர் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்தார். மீசையும் தாடியும் ஒன்றோடு ஒன்றாக இணைந்திருந்தது. ஏதோ சங்கடத்தில் தூங்குபவர் போலத் தோன்றியது. மேற்கொண்டு எண்ணங்களைத் தவிர்த்துவிட்டு என் அருகில் தூங்கிக் கொண்டிருந்த பையனைப் பார்க்கத் தொடங்கினேன். இப்படி கவலைகள் இல்லாமல் உறங்கி எத்தனை நாளாகியிருக்கும்.

பஸ் திடீரென நின்றது. தூக்கத்தில் இருந்த அனைவரும் உலுக்கி எழுப்பப்பட்டார்கள். பக்கத்தில் இருந்த பையன் எழுந்து கண்களைக் கசக்கிக் கொண்டான். என்னைப் பார்த்துக் கேட்டான். “அருப்புக் கோட்டையா?’

“இல்லயே, மதுரை.”
“அருப்புக் கோட்டை போயிடுச்சா…”
“ஆமா, அங்கதான் இறங்கணுமா?”

“ஆமா’ என்றான் எவ்விதப் பதட்டமும் இல்லாமல். அவனது முகம் அமைதிக்கான முகம்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எதிரே நேராக முட்டிக் கொள்வது போல வந்த பஸ் கொஞ்சம் வழிவிடவும், எங்கள் பஸ் மீண்டும் கிளம்பியது. என் பக்கத்தில் இருந்த பையன் எழுந்து, தாடிக்காரரைத் தாண்டி கண்டக்டரை நோக்கிப் போனான். கீழே இறங்குவதற்கு வண்டியை நிறுத்தச் சொல்லிக் கேட்கப் போகிறான் என நினைத்த நேரத்தில், வேகமாக ஓடும் பஸ்ஸிலிருந்து தாவிக் குதித்தான். பக்கத்தில் எங்களை முந்திக் கொண்டிருந்த பேருந்து அவனை மோதித் தூக்கி எறிந்தது. ஒன்றிரண்டு பேர் ஐயோ என்று கத்தினார்கள். என் வயிற்றுக்குள் ஒரு கத்தி இறங்கியது. அடுத்தடுத்து எல்லாப் பேருந்துகளும் அங்கே நிறுத்தப்பட்டன. எங்கள் பேருந்தின் டிரைவர் வண்டியை மெல்ல ஓரம் கட்டினார். அவரது முகத்தில் கோபம் கொப்பளித்தது.

ஜன்னல் வழியே எட்டி சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவனது முகத்தைப் பார்த்தேன். அமைதியான முகத்துடன் ஆயிரம் கேள்விகளுடன் அவனது முகம் மட்டும் என்னுள்ளே ஆவேசமாக மீண்டும் இறங்கியது. அதுவரை என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த அமைதியான முகத்தைக் கலைத்துப் போட்டது. இரண்டு நெற்றிப் புருவங்களிடையே புடைப்பைக் கொண்ட மனிதன் சிரித்துக் கொண்டே மெல்ல விலகிக் கொள்ள, ரத்தத்தில் தோய்ந்த முகத்துடன், வேறொரு பேருந்துக்காகத் தெருவில் காத்துக் கொண்டு நிற்கிறேன்.

Share

Comments Closed