உலகப் புத்தகக் கண்காட்சி : டெல்லி 2010 (பாகம் 1)

பாகம் 1 என்று சொல்வது எனக்கே கொஞ்சம் ஓவராகத்தான் தெரிகிறது. இந்த பந்தாவெல்லாம் தானாகவே வந்துவிடுகிறது!

டெல்லி புத்தகக் கண்காட்சி 2010

முதன்முறையாக நான் டெல்லி புத்தகக் கண்காட்சி சென்றேன். டெல்லி புத்தகக் கண்காட்சி தந்த அனுபவங்கள் மிகவும் முக்கியமானவை. தமிழ்ப் பதிப்புலகம் செல்லவேண்டிய நெடிய தூரத்தையும், தமிழ்ப் பதிப்பாளர்கள் அமைப்பான பபாஸி அடையவேண்டிய பெரும் மாற்றத்தையும் மிகத் தெளிவாக உணர்த்தியது டெல்லி உலகப் புத்தகக் கண்காட்சி.

கிட்டத்தட்ட 13 நாள்கள் டெல்லியில் தங்கினேன். ஒவ்வொன்றையும் பற்றித் தனித்தனியாக எழுதுவதை விட மொத்தமாக அங்கங்கே கண்டவற்றைத் தொகுத்தால் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும் என நினைத்து என் எண்ணங்களை எழுதுகிறேன்.

இங்கிருந்து போகும்போதே டெல்லியின் குளிர் குறித்த மிரட்டல்கள் இங்கேயே உறைய வைப்பதாய் இருந்தன. சிறுநீர் கழிக்க நீங்கள் ‘தேடவேண்டியிருக்கும்’ என்னும் மிரட்டலே அதில் என்னை குலை நடுங்கச் செய்தது. நல்ல குளிர் காற்று வீச மிதமான ஒரு கால நிலையில் இந்திரா காந்தி விமான நிலையத்தில் இறங்கினேன். டப்ஸக் கண்ணாவிடம் வடிவேலு சொல்வது போல் பங்குனி வெயில் பட்டையைக் கிளப்பியது என்றுதான் சொல்லவேண்டும். வெயிலுக்கிடையில் மிதமான குளிரும், மிதமான குளிருக்கிடையில் இதமான வெயிலும் என மிக ரம்மியமான கால நிலையாக இருந்தது. தங்குமிடத்துக்கு சென்று தயாராகி பிரகதி மைதான் சென்றோம்.

பிரகதி மைதான் என்பது மிகப்பெரிய ஒரு மைதானம். அங்கே ஒவ்வொரு மாநிலத்தின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் கூடங்கள், நாடக திரைப்பட அரங்கங்கள், இது போன்ற கண்காட்சிகள் நடத்த முப்பதுக்கும் மேற்பட்ட தனிப்பட்ட சிறிய பெரிய அரங்குகள் உள்ளன. அங்கேதான் 8 அரங்குகளில் உலகப் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. ஓர் ஒப்பீட்டுக்குச் சொல்வதென்றால் சென்னை புத்தகக் கண்காட்சியைவிட கிட்டத்தட்ட பத்து மடங்கு பெரியது என்று சொல்லலாம்.

நிரந்தர கட்டடங்கள் இருப்பதால் தூசி போன்ற பிரச்சினைகள் இல்லை. உள்ளரங்கக் கட்டமைப்பு என்பது மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. டெல்லி புத்தகக் கண்காட்சி பதிப்பாளர்கள் விற்பனையாளர்களுக்கு இடையேயான வணிக நோக்கத்துக்காக அமைக்கப்பட்டது. அதனால் புத்தகம் வாங்கும் வாசகர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்றார்கள். ஆனால் அந்நிலையும் இப்போது மாறிவிட்டது. நிறைய மக்கள் வந்து புத்தகம் வாங்கினார்கள்.

ஒவ்வொரு பதிப்பாளரக்கும் ஒரு அரங்குதான் என்கிற நிலையெல்லாம் இல்லை. நீங்கள் தேவையான அரங்குகளைப் பெறலாம். ஒரு சிலர் கிட்டத்தட்ட 30 அரங்குகளை இணைத்து ஒரே பெரிய அரங்காக வெளியிட்டிருந்தார்கள். இடப்பிரச்சினை இல்லை என்பதால் தங்கள் எண்ணம் போல வடிவமைத்திருந்தார்கள். சில பதிப்பங்களுக்கு இதற்காகவே கலை நிபுணர்கள் வந்து கடையை வடிவமைத்துக் கொடுத்திருந்தார்கள். சென்னையில் இதுபோன்ற ஒரு நிலை வரும்போது கிழக்கு பதிப்பகம் பல்வேறு சாதனைகளை நிச்சயம் செய்யும். ஒருவித பொறாமையோடுதான் டெல்லி புத்தகக் கண்காட்சியில் வலம் வந்தேன் என்று சொல்லவேண்டும்.

அரங்குகளைப் பற்றிப் பார்ப்போம். ஒவ்வொரு அரங்கும் ஒரு சென்னை புத்தகக் கண்காட்சியைப் போன்ற அளவுக்குப் பெரியது. இது போன்ற 8 அரங்குகள். உண்மையில் எட்டு அரங்குகள் என்பது தவறு. சிறிய பெரிய பல அரங்குகள். ஏழாம் அரங்கில் ஏழு ஏ எனத் தொடங்கி ஏழு எச் வரை பல அரங்குகள். இப்படி அரங்குகள் அரங்குகள் அரங்குகள் எங்கு பார்த்தாலும் அரங்குகள்தான். ஒரு அரங்கிலிருந்து இன்னொரு அரங்குக்குக் செல்ல அரை கிமீ நடக்கவேண்டும். பதினான்காம் அரங்கிலிருந்து ஒன்றாம் அரங்குக்குச் செல்ல கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீட்டர் நடக்கவேண்டும். அத்தனை பெரிய மைதானம்.

ப்ரகதி மைதான் அரசால் நிர்வகிக்கப்படும் ஒரு பொது இடம். இந்திய அரசோடு தொடர்புடைய எந்த ஒரு மாநில அரசும் எப்படி கேவலமாக ஓர் இடத்தை வைத்திருக்குமோ அப்படித்தான் வைத்திருந்தார்கள் இதனையும். டெல்லியில் பொதுவில் எச்சிலை உமிழாதவர்கள் கலாசாரச் சுரணையற்றவர்கள். எல்லோரும் துப்பினார்கள். எங்கு வேண்டுமானாலும் நீங்கள் துப்பலாம். எச்சில் காவி நிறத்தில் இருக்கவேண்டும் என்பதுதான் கட்டுப்பாடு. டெல்லி காவியின் நகரம். இந்தக் காவியில் இருந்து எப்படியோ மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தை மட்டும் காப்பாற்றி வைத்திருக்கிறார்கள்.

பிரகதி மைதான் உணவகப் பகுதியிலும் இதே நிலைதான். நான் முதல் நாள் மட்டும் மதியம் அங்கு உண்டேன். மற்றபடி அங்கே நான் செல்லவே இல்லை. வெளியில் கிடைத்த பிஸ்ஸா, வேக வைத்த மக்காச் சோளம் போன்றவற்றைத் தின்றே மதியப் பொழுதைக் கழித்தேன். புத்தகக் கண்காட்சிகள் நடைபெறும் உள்ளரங்க அமைப்பையும், வெளியில் நிலவும் இத்தகைய மோசமான அமைப்பையும் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது.

டெல்லி முழுமைக்குமே – நான் பார்த்த இடங்கள் வரை – தூசியும் எச்சிலுமாகத்தான் இருந்தது. டெல்லி தொடர்வண்டி நிலையம் காணச் சகியாததாக இருந்தது என்று நண்பர்கள் சொன்னார்கள். டெல்லி எங்கும் தூசி வியாபித்திருந்தது. பச்சை நிற மர இலைகள் எல்லாம் தூசிப் படலத்தைப் போர்த்திக்கொண்டிருந்தன. ஐந்து நிமிடங்கள் ஆட்டோவில் செல்லும்போது என் மூக்கு அரிக்கத் தொடங்கிவிடும். அப்படி தூசி. திராவிட ஆட்சியை இங்கே திட்டிக்கொண்டிருக்கிறோம். டெல்லியைப் பார்த்தால் திராவிட ஆட்சியைக் கைக்கூப்பித் தொழவேண்டும். டெல்லியில் இருக்கும் பேருந்துகளைப் பார்க்கவே பயமாக இருந்தது. பேருந்தின் முன்னே தலையில் இரண்டு கொம்புகளை வைத்து விட்டால் போதும். எருமையின் மீது அமர்ந்து செல்வது போலவே இருக்கும்.

இப்படியான அதிர்ச்சியில் என் முதல் நாள் தொடங்கியது. டெல்லியின் இதமான குளிரில் இதமாக வியர்த்தது. நான் நடக்கவேண்டும் என்று நினைக்கும்போதே எனக்கு வியர்க்க ஆரம்பித்துவிடும் என்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். டெல்லி தமிழ்ச்சங்கத்தைத் தேடிப் போனோம். கே.எஸ்.ரவிக்குமார் ராணுவத்தில் இருந்து திரும்பி வந்தவர் என்பதை ‘ஏ கைஸா ஹை’ என்ற வசனத்தின் மூலம் சொல்லிவிடுவார். அதே போல் எனக்குத் தெரிந்த ஹிந்தியில் ஆட்டோக்காரரிடம் என்னவோ சொன்னேன். அவர் பதிலுக்கு எனன்வோ சொன்னார். கூட வந்தவர்கள் என்னிடம் அவர் என்ன சொன்னார் என்று கேட்டார்கள். இரண்டுக்கும் சம்பதமில்லாத மூன்றாவது ஒன்றை அவர்களிடம் சொல்லி வைத்தேன். ஆட்டோக்காரர் டெல்லி தமிழ்ச்சங்கத்தை டெல்லி முழுக்கத் தேடினார். ஒரு வழியாக டெல்லி தமிழ்ச் சங்கம் சென்று சேர்ந்தோம்.

எங்கள் எண்ணம். அங்கிருப்பவர் டெல்லி தமிழ்ச் சங்க உறுப்பினர்களை கண்காட்சிக்கு அனுப்பி வைக்க உதவுவார் என்பது. அதாவது ஓர் அறிவிப்பு மட்டும். டெல்லி தமிழ்ச் சங்க வாசலில் எஸ். வி. சேகர் நாடக அறிவிப்பு இருந்தது. உள்ளே சென்று அங்கிருந்த ஒருவரைச் சந்தித்தேன். நான் கிழக்கு பதிப்பகம் பற்றியும் அதன் சாதனைகள் பற்றியும் விலாவாரியாகச் சொன்னேன். அவர் பாலசந்தரின் சௌகார் ஜானகி மாதிரி அச்சா என்றார். தமிழ் சரியாகத் தெரியாதோ என்று மீண்டும் ஆங்கிலத்தில் சொன்னேன். அதற்கும் அச்சா என்றார். தன் மேஜை மீதிருந்த மணியை அழுத்தினார். என்னவோ நமக்கு சாதகமாகச் சொல்லப் போகிறார் என நினைத்தேன். வெளியில் இருந்து இன்னொருவர் வெந்நீர் கொண்டுவந்து அவருக்குக் கொடுத்தார். தனது கோட்டில் இருந்து ஒரு சில மாத்திரையை எடுத்துக்கொண்டே, சொல்லுங்க என்றார். நல்லவேளை தமிழ் தெரிந்திருக்கிறது. இது போன்ற அமைப்புக்களுக்காகவே செய்துகொண்டு எடுத்துப் போயிருந்த மிக அழகான விலைப் பட்டியலை அவர் முன் வைத்து கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் ஆயிருந்தது. அவர் அதைப் புரட்டிக்கூடப் பார்க்கவில்லை. மாத்திரையை சாப்பிட்டார். மீண்டும் சொன்னேன். அவர் ஒரே வரியில் முத்தாய்ப்பாக ‘இங்க யாரும் புத்தகம் வாங்கமாட்டாங்க, இதெல்லாம் நடக்காது. மார்க்கெட்டிங் எல்லாம் இங்க பண்ண முடியாது. வேஸ்ட்’ என்று சொல்லி எங்களை அனுப்பி வைத்தார். டெல்லி தமிழ்ச்சங்கத்தின் புத்தக அரங்குகளில் அடக்கி ஒடுக்கி திருவள்ளுவரும் திருநாவுக்கரசரும் படுத்துக் கிடந்தார்கள்.

அங்கேயேதான் இந்திய வார நாளிதழ்களைப் பதிவு செய்யும் Registrar of Newspaper for India இருக்கிறது. நேராகச் சென்றால் ஐந்து நிமிடத்தில் செல்லவேண்டிய இடத்தை சுற்றிச் சுற்றி அரை மணி நேரத்தில் சென்றடைந்தோம். தமிழ்ச் சங்கம் தந்த சோர்வை அங்கிருந்த பணியாளர்கள் நீக்கி வைத்தார்கள். மிகச் சிறப்பாக உதவி செய்தார்கள். எனது கேள்விக்கு என்ன என்ன பதிலோ அவற்றை எல்லாம் சொல்லி, அவற்றை எப்படி எப்படி செய்யவேண்டும் என்றெல்லாம் சொல்லி அனுப்பி வைத்தார்கள். தமிழ்நாட்டில் இதுபோன்ற ஓர் அனுபவத்தை இதுவரை நான் எந்த அரசு அலுவலகத்திலும் பெற்றதில்லை. இது ஒரு அபாயமான ஒப்பீடாக இருக்கலாம். நான் சென்ற ஒரே ஒரு அலுவலகத்தில் எல்லாமே நன்றாக நடந்துவிட்டது ஒரு தற்செயலாகக்கூட இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டு அலுவலகங்களில் இதுபோன்ற தற்செயல்கள் ஒருதடவைகூட நடந்ததில்லை.

மறுநாள் புத்தகக் கண்காட்சி தொடங்கியது. இந்திய மொழிகளுக்கான அரங்கில் தமிழ் அரங்குகள் மூன்றே மூன்று இருந்தன. கிழக்கு, காலச்சுவடு, என் சி பி எச். சென்னை புத்தகக் கண்காட்சியில் மூச்சு விட நேரம் இருக்காது. அங்கே எப்போதாவதுதான் தமிழர்கள் வருவார்கள். இதனால் ஒவ்வொரு வாசகரும் நண்பர்கள் போல பேச ஆரம்பித்து பழகத் தொடங்கிவிட்டார்கள். சென்னை புத்தகக் கண்காட்சியைப் போலவே, அங்கு வந்த ஒவ்வொருவரும் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களைப் பார்த்து, காணக் கிடைக்காத பொக்கிஷம் போல வாங்கிக்கொண்டு போனார்கள்.

குழந்தைகளுக்கான பிரத்யேக அரங்கில் பிராடிஜி அரங்கு அமைந்திருந்தது. 25 ரூபாய்க்கு நல்ல தரமான புத்தகங்கள் என்பதை அங்கு வந்த வாசகர்களால் நம்பவே முடியவில்லை. மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டார்கள். எப்படி 25 ரூபாய்க்குத் தரமுடியும் என்று. புத்தகங்கள் மளமளவென விற்றுத் தீர்ந்தன. இதே வேகத்தில் போனால் கடைசி இரண்டு நாள்கள் புத்தகங்கள் இல்லாமல் போய்விடும் என்று பயம் வந்துவிட்டது. பத்ரி கண்காட்சியின் 6ம்நாள்தான் வருவதாக இருந்தது. அவர் வரும்போது சில புத்தகங்களைக் கொண்டுவர கேட்டுக்கொண்டபின்புதான் நிம்மதியானது.

பிராடிஜி அரங்கில்தான் ஆக்ஸிஜன், இண்டியன் ரைட்டிங் புத்தகங்க்ளையும் வைத்திருந்தோம். ஆகிஸிஜன் வெளியிட்டிருந்த பிரபாகரன் வாழ்க்கை பற்றிய ஆங்கிலப் புத்தகத்தைப் பற்றிப் பலர் பேசிக்கொண்டு சென்றார்கள். எல்லாருமே அவரை ஒரு ஹீரோ என்றார்கள். வான்படை அமைத்தது மிகப்பெரிய சாதனை என்று ஒவ்வொருவரும் சொல்வதைக் கேட்கமுடிந்தது. இந்திய அரசு அவரைக் கொன்றுவிட்டது என்றார் ஒருவர். தமிழ்நாட்டில் என்ன என்னவிதமான குரல்களைக் கேட்க முடியுமோ அத்தனையையும் அங்கேயும் கேட்கமுடிந்தது.

(டெல்லி பெண்கள் பற்றியும், தாஜ்மஹால் பதேபூர் சிக்ரி, மதுரா பற்றியும், டெல்லி உணவுகள் பற்றியும், கொஞ்சம் புத்தகக் கண்காட்சி பற்றியும், புத்தகங்கள் பற்றிக் கொஞ்சமும் (பாரா பற்றி எழுதாமல் எப்படி முடிக்கமுடியும்?) எனக்குத் தோன்றும்போதெல்லாம் தொடரும்!)

(டெல்லி புத்தகக் கண்காட்சி ஜனவரி 29 முதல் பிப்ரவரி 7 வரை நடைபெற்றது.)

புகைப்படங்கள். (சில புகைப்படங்கள் சரியாக விழவில்லை. கேமரா சொதப்பிவிட்டது!)

Share

Comments Closed