கடந்த 13, 14, 15 ஆகிய நாள்களில் பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் கலந்துகொண்டேன். 2007க்குப் பின் 2009ல் பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகம் கலந்துகொண்டது. சென்ற வருடம் கலந்துகொள்ளவில்லை. அப்போதே பலர் கிழக்கு பதிப்பகம் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் கேட்டனர். இந்த முறை கலந்துகொண்டோம்.
இம்முறை மொத்தமே 9 தமிழ் அரங்குகள்தான். அதிலும் பதிப்பாளர்கள் என்று பார்த்தால் மொத்தமே 5 பேர்தான். கிழக்கு, விகடன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், காலச்சுவடு, திருமகள் நிலையம். இது போக 5 விற்பனையாளர்கள் கலந்துகொண்டார்கள். நாதம் கீதம் பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்களை வாங்கி வைத்து விற்பனை செய்தது. கண்ணப்பன் பதிப்பகம் சில புத்தகங்களையும், கிரி டிரேடர்ஸும் கீதம் பப்ளிஷர்ஸும் கலந்துகொண்டன.
தமிழ்ப் புத்தகங்கள் படிக்கும் மக்கள் பெங்களூருவில் குறைந்துகொண்டே வருகின்றனர் என்பதால், புத்தக விற்பனையும் குறைந்துகொண்டே வருவதாகத்தான் தோன்றுகிறது. கிழக்கு பதிப்பகத்தில் புத்தகம் வாங்க வந்த பலரின் பிள்ளைகளுக்குத் தமிழ் படிக்கத் தெரியவில்லை. திக்கித் திணறித் தமிழ் பேசுகிறார்கள். இப்படியே செல்லும்போது போகப் போக பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் தமிழ் புத்தகங்களின் விற்பனை குறையத்தான் செய்யும் எனத் தோன்றுகிறது. தற்போது பெங்ளூருவில் செட்டில் ஆகியிருக்கும் ஐடி இளைஞர்கள் தமிழ்ப் புத்தகங்களைப் படிக்கிறார்களா என்பதே தெரியவில்லை. ஆங்கிலப் புத்தகம் படிக்கும் பழக்கமாவது இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.
பெங்களூரு தமிழ்ச் சங்கம் சென்றிருந்தேன். நான் சென்ற நாள் வைரமுத்து தமிழ்ச்சங்கத்துக்கு வருவதாக இருந்தது. சிறிது நேரம் காத்திருந்து பார்த்தேன். அவர் வந்த விமானம் தாமதமானதால், கிளம்பிவிட்டேன். தமிழ்ச்சங்கத்தில் உள்ள நூலகத்தில் நல்ல நூல்கள் பல இருப்பதாக அறிந்தேன். அன்று பார்க்கமுடியவில்லை. வைரமுத்து வருவதாக இருந்த கூட்டத்துக்குக்கூட 100 பேர்கூட வரவில்லை. முன்பைப் போல தமிழ்க்கூட்டங்களில் கலந்துகொள்ளும் ஆர்வம் மக்களுக்கு இல்லை என்றார் பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் தலைவர். பெங்களூரு தமிழ்ச்சங்கம் வாராவாரம் கவிதைப் பட்டறை போன்ற ஒன்றை நடத்துகிறது. கவிதை சொல்லும் கவிஞருக்குப் பல்வேறு பட்டங்கள் எல்லாம் கொடுத்து அவர் கவிதை சொல்லுவார் என்ற அறிவிப்பு ஒன்றைக் கண்டேன். மக்களை ஓட வைக்க இது ஒன்று போதாதா என நினைத்துக்கொண்டேன். இன்னமும் திருக்குறள், வளையாபதி, குண்டலகேசியில் உலகம் முடிந்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழ்ச்சங்கத்துத் தமிழர்கள் என்றுதான் தெரிகிறது. தமிழ்ச்சங்கத்தின் சார்பாக நடத்தப்படும் யோகா வகுப்புகள், தமிழ் கன்னட வகுப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகக் கூறிக்கொண்டிருந்தார்கள் சிலர். இத்தகைய அமைப்பை வைத்துக்கொண்டே எத்தனையோ செய்யலாம். இத்தகைய அமைப்பை நடத்தும்போது, அதிலிருக்கும் பிரச்சினைகளையும் நான் அறிந்தே இருக்கிறேன் என்றாலும் நிறையவே செய்யலாம் என்பது மட்டும் நிச்சயம்.
பெங்களூருவில் தமிழ்ப்புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று கிட்டத்தட்ட யாருக்குமே தெரியவில்லை. உண்மையில் உருப்படியான தமிழ்ப்புத்தகங்கள் விற்கும் கடை எதுவுமே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். தமிழ்ச்சங்கத்தில் கேட்டபோது இரண்டு கடைப்பெயர்கள் சொன்னார்கள். ஒன்று, நல்வாழ்வகம். அல்சூர் மார்க்கெட்டில் காளியம்மன் கோவில் தெருவில் காளியம்மன் கோவிலுக்குப் பின்னே இருக்கிறது. அங்கு சென்று பார்த்தபோது, கடையில் மு.வரதராசனாரும் சிவவாக்கியரும் இருந்தார்கள். ’அங்கேயே தங்கிவிட்ட’ தமிழ்ப்புலவர்களால் பதிப்பிக்கப்பட்ட சில கவிதைப் புத்தகங்களும், தமிழீழம் போன்ற சில புத்தகங்களும், ஆயுர்வேதம், சித்த மருந்துகள் பற்றிய புத்தகங்களும் இருந்தன. அது புத்தகக் கடையாக மட்டுமின்றி, ஒரு நாட்டுமருந்துக் கடையாகவும் செயல்பட்டு வருகிறது. அக்கடையின் உரிமையாளர் நல்ல புத்தகங்களை விற்பதில் ஆர்வம் உள்ளவர் என்றும் தெரிந்தது. பெங்களூருவில் புத்தகங்களை விற்பனை செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல், விற்பனைக்குப் புத்தகங்களைத் தருவிப்பதில் உள்ள பிரச்சினை பற்றியெல்லாம் சொன்னார். இப்போது தமிழர்கள் கன்னடர்கள் பிரச்சினை அதிகம் இல்லை என்றாலும், எப்போதேனும் பிரச்சினை வந்தால், தமிழ்ப்புத்தகங்கள் விற்பது பெரிய ஆபத்தாக முடியலாம் என்கிற எண்ணம் பல்வேறு புத்தகக் கடைக்காரர்களுக்கும் இருக்கிறது. நல்வாழ்வகம் புத்தக உரிமையாளர் கிழக்கு பதிப்பகத்தின் பல்வேறு புத்தகங்களை வாங்கி விற்பனைக்கு வைத்துள்ளார். இனி பெங்களூருவில் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களை வாங்க விரும்புகிறவர்கள், நல்வாழ்வகம் விற்பனையகத்தைத் தொடர்புகொள்ளலாம்.
இன்னொரு புத்தகக் கடை ஸ்ரீராம்புராவில் இருக்கிறது என்றார்கள். எனக்குத் தெரிந்த கன்னடத்தில் நான் பேசியபோதெல்லாம் மிரண்டு போன கன்னடர்கள் என்னுடன் தமிழிலேயே பேச ஆரம்பித்தார்கள். ஆட்டோகாரர் எங்களை சரியாக அந்த தமிழ்ப்புத்தக்கடையில் கொண்டு போய்ச் சேர்த்தார். அங்கே தமிழ் வார இதழ்கள்தான் கிடைத்தன. புத்தகங்கள் இல்லை. கடையிலும் யாரும் இல்லை. கடைக்காரருக்காகக் காத்திருந்தோம். அவர் புத்தகங்கள் விற்பனை செய்யும் ஆர்வத்துடன் இல்லாததாலும், அக்கடையில் புத்தகங்கள் விற்க இடமில்லாததாலும், அங்கிருந்து கிளம்பி பெங்களூரு புத்தகக் கண்காட்சிக்கு வந்து சேர்ந்தோம்.
பெங்களூரு புத்தகக் கண்காட்சி பெங்களூருவின் மையமான இடத்தில் நடக்காமல், கொஞ்சம் தள்ளி இருக்கும் இடத்தில் நடக்கிறது. மேக்ரி சர்க்கிளுக்கு வருவது கடினம் என்றுதான், பெங்களூரு புத்தகக் கண்காட்சிக்கு வந்த பலரும் சொன்னார்கள். ஆட்டோவில் மீட்டர் போட்டு, மீட்டரில் வரும் காசை மட்டும் வாங்கிக்கொள்கிறவர்களைப் பார்க்கும்போது, வேற்றுக் கிரக வாசிகள் போன்று தோன்றியது. இதில் ஆட்டோக்கள் தூரமான இடங்களுக்கு வருவதில்லை. பக்கத்தில் இருக்கும் இடமென்றால் வருகிறோம், இல்லையென்றால் வரமாட்டோம் என்கிறார்கள். ஒருவழியாக பெங்களூரு புத்தகக் கண்காட்சியை வந்தடைந்தோம். ரமேஷ் அரவிந்த் புத்தகங்களை கையில் வைத்துக்கொண்டு எங்களை அரங்குக்குள் வரவேற்றார்.
பெங்களூரு புத்தகக் கண்காட்சியை எல்லா வகையிலும் சென்னை புத்தகக் கண்காட்சியுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன்.
பெங்களூரு புத்தகக் கண்காட்சியின் உள்ளரங்க அமைப்பு அட்டகாசமாக உள்ளது. மக்கள் நடந்து செல்லும் பாதை குறுகலாக அமைக்கப்பட்டுவிட்டதுதான் ஒரு குறை. மற்றபடி, மிகச் சிறப்பாகப் பலகைகள் அமைத்து, அரங்குகள் உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு தூசி கிடையாது, குப்பை கிடையாது. ஒவ்வொரு அரங்குக்கும் குப்பையைப் போட டஸ்ட் பின் வைத்திருக்கிறார்கள். தினமும் காலை நான்குபேர் ஒரு வலையை இழுத்து வருகிறார்கள். எல்லாரும் குப்பையை அதில் கொட்டிவிடுகிறார்கள். ஆனால் சென்னை புத்தகக் கண்காட்சியில் குப்பையை நடு சாலையில் கொட்டவேண்டும். மறுநாள் அதை துப்புரவு செய்வார்கள்.
பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் ஒவ்வொரு அரங்குக்கும் தினமும் இரண்டு லிட்டர் குடிதண்ணீர் பாட்டில் தருகிறார்கள். சென்னை புத்தகக் கண்காட்சியில், பொதுவில் தண்ணீர் வைத்திருப்பார்கள். அதனை நாம் பிடித்துக்கொள்ளவேண்டும். இதில் என்ன பிரச்சினை என்றால், தண்ணீரைப் பொதுவில் வைத்ததும், ஒரே அரங்கத்தைச் சேர்ந்தவர்களே நிறையப் பிடித்துவைத்துவிட்டால், மற்றவர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் போய்விடும். பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் அந்தப் பிரச்சினை அல்ல.
ஏதேனும் ஒரு குறை என்றால், பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் அதனை உடனே சரி செய்கிறார்கள். சென்னை புத்தகக் கண்காட்சியில் பலமுறை அலைந்துதான் அதனை சரி செய்யமுடியும்.
கேண்டீன் செயல்படும் இடம் பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் மிகப் பிரம்மாண்டமாக பெரியதாக இருக்கிறது. அங்கு வரும் அனைவரும் உட்கார்ந்து சாப்பிட இருக்கைகள் கிடைக்கின்றன. சென்னை புத்தகக் கண்காட்சியில் இது சாத்தியமே இல்லை.
பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் டாய்லட் வசதி பாராட்டத்தக்க வகையில் உள்ளது. இத்தனை பேர் கூடும் இடத்திலும் இத்தனை சிறப்பாக டாய்லெட்டை வைத்திருந்தது அதிசயிக்க வைத்தது. டாய்லெட் விஷயத்தில் சென்னை புத்தகக் கண்காட்சி மகா மட்டம் என்றே சொல்லவேண்டும்.
பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் ஏடிஎம் வசதி உள்ளது. இதுவ்ரை சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த வசதி வரவில்லை. உடனே செய்யவேண்டிய வசதி இது.
இதற்கெல்லாம் முக்கியக் காரணம், கூட்டம். பெங்களூரு புத்தகக் கண்காட்சியைப் போல கிட்டத்தட்ட பத்து மடங்கு கூட்டமாவது சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வரும். அதனால் பெங்களூரு புத்தகக் கண்காட்சிக்கு இத்தனை பிரச்சினைகளைச் சமாளிப்பது எளிமையாகவும், சென்னை புத்தகக் கண்காட்சிக்குக் கடினமாகவும் உள்ளது.
பெங்களூரு புத்தகக் கண்காட்சி பற்றிய விளம்பரங்கள் மிகக் குறைவு. ஆனால் சென்னை புத்தகக் கண்காட்சி, ஒப்பீட்டளவில் நிறைய விளம்பரங்களைச் செய்கிறது என்றே சொல்லவேண்டும்.
பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் நுழைவுக் கட்டணம் 20 ரூபாய். இது மிக மிக அதிகம். சென்னையில் ஐந்து ரூபாய் மட்டுமே. கார் நிறுத்தவும் பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் 20 ரூபாய் வசூலிக்கிறார்கள். சென்னையில் எவ்வளவு என்று நினைவில்லை.
சென்னை புத்தகக் கண்காட்சி தொடர்ந்து பல வருடங்களாக நடைபெறுவதால், புத்தகம் வாங்குவதை, புத்தகங்களைப் பார்ப்பதை ஒரு கல்ச்சராகவே மாற்றிவிட்டார்கள் இங்கே. ஐந்தாவது வருடமாக நடக்கும் பெங்களூரு புத்தகக் கண்காட்சியில், இந்த பழக்கம் இனிமேல்தான் வளரவேண்டும். புத்தகக் கடைக்குள் சென்று பார்க்காமல், கடையில் புத்தகங்கள் வாங்குவது போல வெளியில் நின்றே பலர் பார்க்கிறார்கள். நாம்தான் உள்ளே வந்து பாருங்க என்று சொல்லவேண்டியிருக்கிறது.
சென்னை புத்தகக் கண்காட்சியில் பழைய புத்தகங்களை எங்கேயும் பார்க்கமுடியாது. பெங்களூருவில் பழைய புத்தக விற்பனையாளர்களே கொடிகட்டிப் பறக்கிறார்கள். எங்குப் பார்த்தாலும் எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் 50 ரூபாய் என்பது போன்ற தட்டிகளைப் பார்க்கலாம். ஆங்கில நூல்களை அடுக்கி வைத்து விற்கிறார்கள். இதனைத் தடுக்காவிட்டால், புதிய புத்தகங்களின் விற்பனை காலப்போக்கில் பாதிக்கப்படும் என்றுதான் நினைக்கிறேன்.
அரங்குகள் ஒதுக்கும் விஷயத்தில் பெங்களூரு புத்தகக் கண்காட்சி நிர்வாகம் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் என எல்லாருக்கும் அவர்கள் கேட்பது போல அரங்குகள் அமைத்துத் தருகிறார்கள். குலுக்கலில் இடம் கிடைப்பது மட்டும்தான் அதிர்ஷ்டம். மற்றபடி, நான்கு அரங்குகளைச் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். சேர்த்து எடுத்த நான்கு அரங்குகளுக்கு நான்கு பெயர்கள் வைத்துக்கொள்ளலாம் என இப்படி எதையும் செய்து தருகிறார்கள். பதிப்பகங்கள் குறைந்த அளவிலும், விற்பனையாளர்கள் அதிக அளவிலும் அரங்குகள் எடுத்திருக்கிறார்கள்.
கர்நாடக பதிப்புலகம் பற்றிச் சிலருடன் பேசிக்கொண்டிருந்தோம்.
ஒரு பெரிய கர்நாடக பதிப்பாளர்கூட, மூன்று லட்சம் மொத்த விற்பனையை பெரிய விற்பனையாகவும், வெற்றியாகவும் கருதுகிறார். நடுத்தர விற்பனையாளர் 1.5 லட்சம் மொத்த விற்பனைக்கே அசந்துபோகிறார். கர்நாடக பதிப்புலகம் மிகச் சிறப்பாக இருப்பதாக இவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். தமிழ்ப் பதிப்புலகம் இவர்களைவிட முன்னணியில் நிற்கிறது. இதைவிட எப்படி அதிகம் விற்பனை செய்யமுடியும், வாய்ப்பே இல்லை என்கிற நம்பிக்கை கர்நாடக பதிப்பாளர்களுக்கு உள்ளதாகத் தோன்றுகிறது. கர்நாடகப் பதிப்புலகம் என்றாலே இலக்கியம் சார்ந்தது என்று நம்புகிறார்கள். இலக்கியத்தைத் தவிர எதுவும் அதிகம் விற்பனையாகாது என்றெல்லாம் நினைக்கிறார்கள். இலக்கியத்தின் விற்பனையும் அத்தனை சிறப்பாக இல்லை என்பதைக்கூட இவர்கள் இன்னும் உணரவில்லை.
சென்னை புத்தகக் கண்காட்சியை இதுவரை எந்த கர்நாடக பதிப்பாளரும் பார்த்ததில்லை. பபாசியின் உறுப்பினர்கள் எத்தனை பேர் இதுவரை பெங்களூரு புத்தகக் கண்காட்சியைப் பார்த்திருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. டெல்லி, திருவனந்தபுரம், பெங்களூரு, சென்னை புத்தகக் கண்காட்சி அமைப்பாளர்கள் தங்களுக்குள் பரிமாற்றம் செய்துகொள்ளாதவரை, ஒட்டுமொத்த கண்காட்சி முன்னேற்றத்தை ஏற்படுத்தமுடியாது.
கன்னட பதிப்பகமான வசந்த பிரகாஷனாவின் உரிமையாளர் முரளி பேசுவதை இந்த ஒளித்துண்டில் காணலாம்.
கிழக்கு அரங்கில் தமிழர்கள் பலர் வந்து புத்தகங்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள். கன்னட பதிப்பகங்கள் சிலவற்றைத் தவிர, பெரும்பாலான கன்னட பதிப்பகங்களின் அரங்குகளில் இருந்த கூட்டத்தைவிட்ட கிழக்கு பதிப்பக அரங்கில் கூட்டம் அதிகம் இருந்தது. 40 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம் புத்தகங்களை வாங்கியவர்கள் எனலாம். துப்பறியும் சாம்பு உள்ளிட்ட தேவனின் புத்தகங்கள், இந்திரா பார்த்தசாரதியின் நூல்கள் ஆகியவற்றை வாங்கிப் போனவர்களும் அதிகம். ஆனாலும், எப்போதும் போல சுய முன்னேற்ற நூல்களும், தலைவர்கள் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல்களுமே அதிகம் விற்பனையாயின. சமையல் புத்தகங்களின் விலை ரூபாய் 25 மட்டுமே என்பதால், அவை சக்கைப்போடு போட்டன.
ஒரு பெண்மணிக்குத் தமிழில் சுமாராகப் பேசத் தெரிந்திருந்தது. தமிழர்தான். அவர் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணுக்குப் புத்தகம் வாங்க வந்திருந்தார். என்ன வாங்க என்று தெரியவில்லை. சுயமுன்னேற்ற நூல்களெல்லாம் வேண்டாம், ஹ்யூமரசான நாவல் எதாவது வேண்டும் என்றார். நான் அந்த வேலைக்காரப் பெண்ணிடம் பேசினேன். துப்பறியும் சாம்பு வேண்டுமென்றார். இப்படி வேலைக்காரப் பெண்ணுக்காகத் தமிழ்ப் புத்தகம் வாங்குபவரைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. சிறிது நேரத்தில் அவரது கணவர் வந்து, அதேபோல் வீட்டில் வேலைக்காரப் பெண்ணுக்குப் புத்தகம் வேண்டும் என்றார். அவரது மனைவி வாங்கிவிட்டதாகச் சொன்னதும், நன்றி சொல்ல்விட்டுப் போனார்.
ஒரு முதியவர் அரங்குக்குள் வந்தார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஸ்டாலைப் பார்த்தார். அவருக்கு புத்தகம் வாங்க வேண்டும் என்கிற ஆர்வமும், எதற்குச் செலவும் என்ற எண்ணமும் ஒரு சேர இருந்தது போல. பேரன் வெளியில் நின்று கொண்டு எதையாவது வாங்கு என்று சொல்லிக்கொண்டிருந்தான். அவர் ஒன்றும் வாங்காமல் வெளியே வந்துவிட்டார். பேரன் ஒண்ணும் வாங்கலையா என்றதற்கு, இவர் கூலாக அவ்வளவா கலெக்ஷன் இல்லை என்று சொல்லிவிட்டார். பேரன் இதைவிடவா என்று சொல்லிக்கொண்டே அவரைக் கூட்டிப் போனான்.
இன்னொருவர் கிழக்கு அரங்கில் பல புத்தகங்களைப் பார்த்தார். அவர் கண்ணில் பட்டதெல்லாம் அரசியல், தீவிரவாத இயக்கங்கள் பற்றிய புத்தகங்கள் போல. வெளியே வரும்போது தவம் வெளியீட்டில் உள்ள வேதாந்த தேசிகர் புத்தகத்தைப் பார்த்ததும் முகம் மலர்ந்து எடுத்தார். தன் பையனை அழைத்து ‘செம புத்தகம் இது தெரியுமா’ என்றார்.
பலர் மருதன் எழுதிய புத்தகத்தைத் தொடர்ந்து படிப்பதாகச் சொன்னார்கள். பலர் பா.ராகவனின் தொலைபேசி எண்ணைக் கேட்டு நச்சரித்தார்கள். 1857, இந்தியப் பிரிவினை, இரண்டாம் உலகப் போர் போன்ற வரலாற்றுப் புத்தகங்கள் சிறப்பாக விற்பனை ஆயின. முதல் உலகப்போர் போடாமல் ஏன் முதலில் இரண்டாம் உலகப் போர் போட்டீர்கள் என்று சிலர் கேட்டனர்.
சிலர் என்னிடம் வந்து, ஒரே ஒரு புத்தகம் மட்டும் வாங்கவேண்டும், உங்கள் சஜஷன் என்ன என்றார்கள். சீனா -விலகும் திரை புத்தகத்தைச் சொன்னேன். ஏழெட்டு பேராவது என்னை நம்பி இதனை வாங்கியிருப்பார்கள். பிடிக்கவில்லை என்றால் என்னைத் தொடர்புகொள்வதாகச் சொல்லி என் விசிட்டிங் கார்டையும் வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.
பெரும்பாலான தமிழ் வாசகர்கள் கேட்ட கேள்வி – பெங்களூருவில் எங்கே தமிழ்ப்புத்தகம் கிடைக்கும் என்பதுதான். க்டைசி மூன்று நாளில் கேட்டவர்களுக்கு நல்வாழ்வகம் முகவரியைச் சொன்னோம். அதுபோக ரிலயன்ஸ் டைம் அவுட்டிலும், லேண்ட் மார்க்கிலும் புத்தகங்கள் கிடைக்கும் என்றும் சொன்னோம். இப்படியாக பெங்களூரு புத்தகக் கண்காட்சி இனிதே முடிவடைந்தது.
இந்தப் புத்தகக் கண்காட்சியில் நடந்த இன்னொரு சுவாரஸ்யமான விஷயத்தையும் சொல்லவேண்டும். அரங்கத்தில் தினமும் ஒரு சிறுவனோ சிறுமியோ காணாமல் போய்க்கொண்டிருந்தார்கள். இரண்டு முறை அறிவிப்பு வரும். பின்னர் கிடைத்துவிடுவார்கள். ஒருதடவை பவன் என்ற பையன் காணாமல் போனான். அறிவிப்பு வந்துகொண்டே இருந்தது. பையன் கிடைக்கவே இல்லை. அவனது தங்கையோ அக்காவோ தெலுங்கில் ரா ரா என்று விசும்பலோடு அழைத்தாள். மனதுக்கு மிகவும் சங்கடமாகிவிட்டது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த புத்தகக் கண்காட்சியும் பச்சை நிற முக்கால் பேண்ட்டும், ஆரஞ்சு நிற டீ ஷர்ட்டும் போட்ட ஆறு வயது பையனைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இரண்டு நாள் என் பையனைப் பார்க்காமல் இருந்த எனக்கு, இந்த பவன் தொலைந்து போனது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டது. கடைசியில் அந்தப் பையன் கிடைத்தானா கிடைக்கவில்லையா என்பது தெரியாமல் அன்றைய தினம் முடிந்துவிட்டது. மறுநாள் வந்ததும், அறிவிப்பாளர்கள் பகுதிக்குச் சென்று அந்தப் பையன் என்ன ஆனான் எனக் கேட்டேன். அந்த ஆறுவயது பையன், தன் அம்மா அப்பாவைக் கண்டுபிடிக்கமுடியாமல், கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் நடந்தே தன் வீட்டுக்குச் சென்றுவிட்டானாம். அங்கிருந்தவர்கள் தகவல் சொல்லி, அவனது அம்மாவும் அப்பாவும் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்த தருணமது.
இனி நான் கன்னடத்தால் அனைவரையும் கதிகலங்க வைத்த கதை. எனக்குத் தெரிந்த கன்னடத்தில், நான் தங்கியிருந்த ரூம் பையனிடன் பேச, அவன் கதிகலங்கிப் போய்விட்டான். என்னுடன் வந்திருந்த மணி, தயவு செய்து கன்னடத்தில் மட்டும் பேசாதீங்க என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ஆட்டோவில் போகும்போது, ஆட்டோவின் கண்ணாடியில் ஒட்டியிருந்த ஒரு நடிகரைக் காண்பித்து அவர் பெயர் என்ன என்றேன். அதுவும் கன்னடத்தில் கேட்டேன். அந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமாராம். ஆட்டோகாரர் கடுப்பாகியிருப்பார் என நினைக்கிறேன்.
ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டபோது பட்ட துயரம் தனிக்கதை. கர்நாடகாவில் வெல்லத்தை உடனடியாகத் தடை செய்வது நல்லது. விவஸ்தை இல்லாமல் எல்லாவற்றிலும் வெல்லம் போட்டு வைக்கிறார்கள். சாம்பார் தின்றால் இனிப்பு. கூட்டு தின்றாலும் இனிப்பு. ரசத்திலும் இனிப்பு. ஒரு மனிதன் எப்படித்தான் உயிரோடு இருப்பது? சாம்ராட் என்ற ஹோட்டலில் சாப்பிடும்போது, ஏன் இப்படி எல்லாத்துலயும் வெல்லம் போட்டு வைக்கிறீங்க என்று கேட்கவும், அவர் மிளகாய்ச் சட்னி கொண்டு வந்து கொடுத்தார். கொஞ்சம் நாக்குக்குத் தெம்பு வந்தது.
எப்படியும் ஒரு கன்னடப் படமாவது அங்கே பார்த்துவிடவேண்டும் என நினைத்தேன். புத்தகக் கண்காட்சியிலேயே மிகவும் களைத்துப் போய்விட்டதால், படம் பார்க்கச் செல்லமுடியவில்லை. இல்லையென்றால், சிவராஜ் குமார் பயமுறுத்திக்கொண்டிருந்த அந்த கன்னடப் படத்துக்கு ஒரு விமர்சனமும் எழுதியிருப்பேன்.
பின்குறிப்பு: பா.ராகவன் இஸ்கான் அரங்கில் கிருஷ்ணனின் அழகான படத்துக்கு அருகிலேயே பழியாய்த் தவம் கிடந்ததையும், இஸ்கான் அரங்கு கிழக்கு அரங்குக்கு நேர் எதிரே அமைந்து எப்போதும் கிருஷ்ணன் அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார் என்று நான் சொன்னபோது ஓர் ஆன்மிகச் சிரிப்பில் அதை அங்கீகரித்ததையும், அன்றே அப்போதே அங்கேயே சன்னியாசம் வாங்கி கிருஷ்ணனுக்கு சேவை செய்ய ஒற்றைக் காலில் நின்றதையும், அவர் மனதை மாற்றி இஸ்கானையும் கிருஷ்ணனையும் நான் காப்பாற்றியதையும் வெளியில் சொல்லமாட்டேன் என்று அவரிடம் சத்தியம் செய்திருக்கிறேன்.
மல்லேஸ்வரத்தில் உள்ள பெட்டிக்கடை
புத்தகக் கண்காட்சிக்கு அழைக்கும் ரமேஷ் அரவிந்த்!
குப்பையைச் சேகரிக்கும் முறை
இஸ்கான் அரங்கில் ஆன்மிகத்தில் மூழ்கியிருக்கும் பா.ராகவன்