ஒரு மோதிரம் இரு கொலைகள் – புத்தகப் பார்வை

சிறுவயதில் சில துப்பறியும் நாவல்கள் படித்திருக்கிறேன். எல்லா நாவல்களிலுமே ஏதேனும் ஒரு தவறை கொலையாளி செய்திருக்கவேண்டும் என்பதே விதி. அதை வைத்துக்கொண்டு ஆராய்வார் ஏதேனும் ஒரு துப்பறியும் ஆசாமி. பரத்-சுசிலா, விவேக்-ரூபலா போன்ற, ஒரே மாதிரியான துப்பறியும் ஆசாமிகள் என்னை துப்பறியும் கதைகளில் இருந்தே விரட்டினார்கள். சுஜாதாவின் கணேஷ் வசந்த் கொஞ்சம் மாடர்னாக துப்பறிந்தார்கள். பல அறிவியல் ரீதியான விஷயங்களைப் பற்றியெல்லாம் அவர்கள் வழியே சுஜாதா பேசிக்கொண்டிருப்பார். ஒரு கட்டத்தில் இந்தக் கதைகளும் எனக்கு போரடிக்க ஆரம்பித்தன. சுஜாதா போன்ற ஒருவர் இதுபோன்ற கதைகள் எழுதுவதில் நேரம் செலவழிப்பது தவறு என்ற முடிவுக்கு வந்தேன்.

ஒரு மோதிரம் இரு கொலைகள் என்னும் ஆர்தர் கோனன் டாயில் எழுதிய ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் கதை ஒன்றைப் படித்தேன். 1887ல் எழுதப்பட்ட இக்கதையைத் தமிழில் பத்ரி சேஷாத்ரி மொழிபெயர்த்திருக்கிறார்.

வழக்கம்போல ஒரு கொலை, அதில் விடப்படும் தடயங்கள், அதை காவல்துறை தவறாக ஆராய, ஷெர்லாக் ஹோம்ஸ் சரியாகத் துப்பறிந்து கொலையாளியைப் பிடிக்கிறார். கொலைக்கான காரணமும் கொலை செய்யப்படும் விதமும் மிகத் தெளிவாக விவரிக்கப்படுகின்றன.

ஆர்தர் கோனன் டாயில் எழுதிய முதல் துப்பறியும் கதை இது. இதில்தான் ஷெர்லாக் ஹோம்ஸ் முதன்முதலாகத் தோன்றுகிறார். எடுத்த எடுப்பிலேயே ஷெர்லாக் ஹோம்ஸை ஆகச் சிறந்த துப்பறியும் நிபுணராக டாயில் அறிமுகப்படுத்தும் விதம் அசர வைக்கிறது. வாட்சன் வாயிலாக, வாட்சனின் பிரமிப்போடு வாசகர்களின் பிரமிப்பையும் ஹோம்ஸ் மீது குவிப்பதில் டாயில் கவனமாகச் செயல்பட்டு வெற்றியும் பெற்றுவிடுகிறார். ஒரு கட்டத்தில் ஷெர்லாக் ஹோம்ஸை மறக்காத வாசகர்கள் அதனை உருவாக்கிய டாயிலை மறந்துவிடுவது பற்றி நினைத்துப் பார்த்தால், டாயிலின் கதாநாயக உருவாக்கம் நமக்குப் புரியும். புள்ளியியல் கணக்குகளின் வழியாகவும், பொது அறிவின் வழியாகவும் டாயில் இதைச் சாதிக்கிறார். பிற்காலத்தில் சுஜாதாவும் இதே போன்ற வகையிலேயே கணேஷ்-வசந்தையோ அல்லது தன் கதையின் நாயகன் நாயகியையோ உச்சத்துக்குக் கொண்டு செல்வதை நாம் பார்க்கமுடியும். செர்லாக் ஹோம்ஸ் தத்துவமும் பேசுகிறார். கொலையாளி கைது செய்யப்பட்டதும் தொடங்கும் இரண்டாவது பாகம், முதல் பாகத்தின் எழுத்தின் நடையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஆழமான விவரணைகளுடன் தொடங்குகிறது. சாதாரண காரணத்தைச் சொல்ல விரும்பாத ஹோம்ஸ், மார்மோன்களின் கலாசாரம் தொடங்கி, அதில் நடக்கும் விஷயங்களைக் கொலையின் முக்கியக் காரணமாக்குகிறார்.

முதல் நாவலிலேயே மிகத் தெளிவான திரைக்கதையை வைத்திருக்கிறார் டாயில். குறிப்பாக கொலையாளியை ஒரு ஹீரோவாக அவர் உருவாக்கும் விதம் முக்கியமானது. கொலையாளி கொலையை உடனே செய்துவிடவில்லை. அங்கேயும் ஒரு வாய்ப்பு தருகிறார். இரண்டு மாத்திரைகளில் ஒன்று விஷம் தோய்ந்தது. இன்னொன்று விஷமற்றது. கொலை செய்யப்படப்போகிறவர் முன்பாக நீட்டுகிறார் கொலையாளி. இன்றைய திரைப்படங்கள் வரை இந்த உத்தி நீண்டு வருவதை நாம் கவனிக்கலாம். நாயகனோ எதிர் நாயகனோ உடனே கொலை செய்வதையோ செய்யப்படுவதையோவிட ஒருவித ஹீரோயிசத்தைச் செய்வதை அன்றே தொடங்கி வைத்திருக்கிறார் டாயில். கொஞ்சம் தர்க்கம் கொண்டு பார்த்தால், பல காலமாக கொலைவெறியோடு அலையும் ஒரு மனிதன் இப்படி செய்வானா என்கிற சந்தேகம் வருகிறது. வாசகர்களுக்கு வரும் இந்த நம்பிக்கையின்மையின் விலை கதையின் சுவாரஸ்யமாக மாறுகிறது.

ஆங்கிலத்தில் படித்துப் பார்த்தேன். ஒப்பிட்டுப் படித்துப் பார்த்தேன். ஆங்கில நடை மிகக் கடுமையாக இருக்கிறது. 1890களில், கிட்டத்தட்ட நூற்றியிருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஆங்கில நாவலின் நடை எப்படி இருக்கும் என்பதை நாம் யூகித்துவிடலாம். தமிழில் அது மிகச் சிறப்பாகவே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. கேண்டீட் நாவலை சிறப்பாக மொழிபெயர்த்திருந்த பத்ரி, இந்நாவலையும் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். இன்னும் சீர்ப்படுத்தவும், திருத்தவும் சில இடங்கள் உள்ளன. அவையெல்லாம் அடுத்த பதிப்புகளில் களையப்படலாம்.

சுஜாதாவை நேரில் சந்தித்தபோது ‘இனியும் நீங்கள் கணேஷ்-வசந்த் நாவலையெல்லாம் எழுதவேண்டுமா’ என்று கேட்டேன். அதே போன்ற கேள்வி ஒன்று இப்போதும் ஓங்கி நிற்கிறது. சிறப்பாக மொழிமாற்றம் செய்யும் பத்ரி, இதுபோன்ற நாவல்களை மொழிபெயர்ப்பதைவிட, தமிழுக்கு மிகத் தேவையான நூல்களை மொழிபெயர்ப்பது நல்லது. ஆழமான கற்பனையையும், பொழுது போக்கையும் மையமாகக் கொண்ட இக்கதைகளைக் காட்டிலும், வாழ்க்கையை விசாரணை செய்யும் நூல்களையும், மிக முக்கிய வரலாற்று நூல்களையும் மொழிபெயர்ப்பு செய்வதில் பத்ரி கவனம் செலுத்துவது தமிழுக்கு நல்லது. இதுபோன்ற மொழிபெயர்ப்புக் கதைகள் தமிழில் இருப்பது தேவையில்லை என்று கூறமுடியாது என்றாலும், இவற்றைவிட முக்கியமான நூல்களின் தேவை இருக்கும்போது, இவற்றில் செலுத்தப்படும் கவனம் ஒரு வகையில் அவசியமற்றது என்பது என் எண்ணம்.

ஒரு மோதிரம் இரு கொலைகள்,
ஆர்தர் கோனன் டாயில்,
தமிழில்: பத்ரி சேஷாத்ரி,
விலை: 120
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
புத்தகத்தை வாங்க: http://nhm.in/shop/978-81-8493-142-6.html

Share

Comments Closed