ராஜிவ் காந்தி கொலை வழக்கு – The Human Bomb CD
மே 21, 1991ல் ராஜிவ் காந்தி கொலை செய்யப்படுகிறார். அதன் மறுநாள், இந்த வழக்கு, தமிழக அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுகிறது. சிறப்புப் புலனாய்வுக்குழு – சிபிஐ இந்த வழக்கை எடுத்துக்கொண்டதில் இருந்து, விசாரணை முடியும் வரை உள்ள முக்கியமான நிகழ்ச்சிகளை, ஆதாரங்களை மிகச் சுருக்கமாக ‘Human Bomb’ சிடியில் பார்த்தேன். சிறப்புப் புலனாய்வுக்குழுவின் தலைவர் ரஹோத்தமனின் தயாரிப்பில் வந்திருக்கும் இந்த குறுவட்டு, உலகத்தில் மிகவும் சிக்கலான வழக்கு இதுவே எனவும், மிக விரைவாக முடிக்கப்பட்ட வழக்கும் இதுவே என்றும், எவ்வித சந்தேகத்துக்கும் இடமின்றி குற்றவாளிகளை இனம்கண்ட வழக்கும் இதுவே என்றும், விடுதலைப் புலிகளே – விடுதலைப் புலிகள் மட்டுமே ராஜிவ் காந்தியின் கொலைக்குக் காரணம் என்றும் சொல்கிறது.
இந்த ஆவணப் படத்தின் தயாரிப்புத் தரத்தை அதிகம் பாராட்ட முடியாது. அதிலும் இரண்டு நாள்களுக்கு முன் Death of a President பார்த்துவிட்டு, இதனைப் பார்க்கும்போது, ஒரு திரைப்படத்துக்கும், நிஜ, அதிலும் இந்திய ஆவணப்படத்துக்குமான வேறுபாடு முகத்தில் அறைந்தது. என்றாலும், Death of a Presidentஐ ஒரு திரைப்படம் போலவே காஃபி சாப்பிட்டுக்கொண்டும் சமோசா சாப்பிட்டுக்கொண்டும் பார்க்க முடிந்தது. இந்தத் தரம் குறைந்த இந்திய ஆவணப் படத்தை அப்படிப் பார்க்க இயலவில்லை.
எந்த சூழ்நிலையில் ராஜிவ் காந்தி பிரதமாரானார் என்பது பற்றியும், ஏன் விடுதலைப் புலிகள் அவரைக் கொல்ல முடிவெடுத்தனர் என்பது பற்றியும் மிக மேலோட்டமான விவரணைக்குப் பின்னர், ராஜிவ் காந்தியின் கொலையைப் பற்றிய ஆராய்ச்சியின் போது சிக்கிய தகவல்கள், ஆதாரங்கள் என்ற ஆதார விஷயத்தை நோக்கிப் பயணிக்கிறது இந்தக் குறுவட்டு.
1987ல் பன்னிரண்டு கறும்புலிகள் (சயனைடு தின்று தற்கொலை செய்துகொள்ளும் புலிகள்) இறந்த சம்பவத்திலிருந்து, அவர்களின் இறுதி ஊர்வலம் வரை எல்லாவற்றையும் இந்த குறுவட்டில் பார்க்கமுடிகிறது. கறும்புலிகள் ஏன் சயனைடு தின்று இறக்கவேண்டும் என்று சொல்லும் பிரபாகரனின் பேட்டியும், (பிபிசிக்குக் கொடுத்தது என நினைக்கிறேன்), இரண்டு கறும்புலிகள் தாங்கள் எவ்வித நிர்ப்பந்தமும் இன்றி புனித போருக்காகத் தாங்களாகவே இணைந்ததாகச் சொல்லும் காட்சிகளும் இதில் உள்ளன.
கொலை செய்ய முக்கியமான நபராக இருந்து உதவிய சிவராசன், திலீபனின் இரண்டாவது நினைவுதினத்தில் பேசிய பேச்சின் வீடியோ வடிவம் இந்த குறுவட்டில் உள்ளது. குண்டு வெடிக்கச் செய்து, தானும் இறந்துபோன தனு, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பங்குகொண்டு, பெற்ற பயிற்சிகளின் காட்சிகள் இந்த வட்டில் உள்ளன.
அத்திரை, மற்ற பெண் விடுதலைப் புலிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் உள்ளது.
வேதாரண்யத்தில் அப்போது புலிகள் எப்படி மறைவிடத்தில் எல்லாவற்றையும் பதுக்கி வைத்தார்கள் என்பது பற்றிய காட்சிகளும், அதைத் தொடர்ந்தே எப்படி தமிழ்நாட்டை புலிகள் தங்கள் களமாகப் பயன்படுத்தினார்கள் என்று காவல்துறை உணர்ந்துகொண்ட செய்திகளும் உள்ளன.
ஹரி பாபு எடுத்த புகைப்படக் கருவி சிக்கியதுதான் வழக்கின் மிக முக்கியத் திருப்பம் என்று சொல்கிறார் ரஹோத்தமன். அதேபோல், முருகனும் நளினியும் கைது செய்யப்பட்டது இன்னொரு முக்கியத் திருப்பம் என்கிறார். புகைப்படக் கருவி தொடக்கத்தில் சிக்கியபோது, அதை அத்தனை முக்கியமான ஆதாரமாக கருத வேண்டிய நிலையில் காவல்துறை இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். ஆனால் அந்த புகைப்படக் கருவியின் வழியாக சிக்கிய படங்களே இன்றுவரை ராஜிவ் காந்தி வழக்கின் முக்கியத் தடயங்களாக நிற்கின்றன.
ராஜிவ் காந்தியைக் கொல்லும் முன்பாக, ஓர் ஒத்திகைக்காக, சென்னையில் விபி சிங்கின் ஒரு கூட்டத்தில் சிவராசன் பங்கேற்றதின் படக் காட்சியையும் இதில் பார்த்தேன்.
ஒரு வழக்கை எடுத்துக்கொண்டு அதன் வேர் வரை சென்று, எல்லா ஆதாரங்களையும் திரட்டிய காவல்துறையின் பணி அசர வைத்தது என்றே சொல்லவேண்டும். இன்று ஒரு வரியில் இதனைச் சொல்லமுடிந்தாலும், இதைச் செய்து முடிப்பதற்கு முன்பாக அவர்கள் எதிர்கொண்டிருக்கவேண்டிய சவால்கள், உயர் இடக் குறுக்கீடுகள், பத்திரிகைகளின் கேள்விகள் எல்லாம் எதிர்கொள்ள சாதாரணமானவையாக இருந்திருக்காது என்பது மட்டும் நிச்சயம்.
தனுவும் சுபாவும், அகிலாவும் விடுதலைப் புலித் தலைவர்களுள் ஒருவரான பொட்டு அம்மானுக்கு எழுதிய கடிதங்களின் நகல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் அவர்கள் இக்காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவோம் என்ற ரீதியிலும், இதே போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் சிங்கின் (விபி சிங்காக இருக்கவேண்டும்) அருகில் சென்றோம் என்கிற ரீதியிலும் எழுதியிருக்கிறார்கள். பாக்கியநாதன், பேபி சுப்பிரமணியத்துக்கு எழுதிய கடிதம் ஒன்றும், கொலைக்கு முன்பான கடிதங்களுள் முக்கியமான ஒன்று. திருச்சி சாந்தன் செப்டெம்பர் 1991ல் பிராபகரனுக்கு எழுதிய கடிதத்தில், சாந்தன் (சின்ன சாந்தனாக இருக்கலாம் என நினைக்கிறேன்) பிடிபட்டது பெரும் ஆபத்தாய் முடிந்துவிட்டது என்றும், சிபிஐ-யின் சித்திரவதைகள் வர்ணிக்க முடியாதவை என்றும், விசாரணைகளில் சிபிஐ தம்மைப் பற்றிய செய்திகளை முழுமையாகவே அறிந்துவிட்டனர் என்றும் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதமும் இக்குறுவட்டில் உள்ளது.
கோடியக்கரையில் 9 பேர் அடங்கிய குழு – இவர்களே ராஜிவ் காந்தி கொலைக்கு எல்லா வகையிலும் பங்காற்றியவர்கள் – வந்திறங்கிய நாள் முதல் அவர்களின் எல்லா செயல்படுகளையும் கிட்டத்தட்ட இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு ஆராய்ந்திருக்கின்றது.
மே 21, 1991ல் ராஜிவ் காந்தி சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியதிலிருந்து, அவர் கொடுத்த பேட்டிகள், வழியில் அவர் எதிர்கொண்ட பூமாலைகள், பூந்தமல்லி கூட்டம் என எல்லாவற்றையும் பார்த்தேன். ராஜிவ் காந்திக்கு பூமாலையும் செண்டும் கொடுக்க மூன்று பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று ஒரு குரல் மைக்கில் ஒலிக்கிறது. மற்றவர்களை மேடைக்கு இடது பக்கம் வரிசையில் நிற்கச் சொல்கிறது அக்குரல். அடுத்த சில நிமிடங்களில் ராஜிவ் காந்தி தனது இறுதிக் கணத்தின் புகைப்படமாகிறார்.
இத்தனை சவால்களை எதிர்கொண்டு இத்தனை விஷயங்களைக் கண்டுபிடித்திருக்கும் காவல்துறை, இந்த சாவல்கள், கடின செயல்பாடுகளைக் கணக்கில் கொள்ளும்போது ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிடக்கூடிய போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்திருந்தால் ஒரு இந்தியத் தலைகுனிவைத் தடுத்திருக்கலாம் என்னும் ஆற்றாமையைத் தவிர்க்கவே முடியவில்லை.
இந்தக் குறுவட்டில் ஒரு பேட்டியில் பிரபாகரன், ‘ராஜிவ் காந்தி கொலைக்கு நீங்கள்தான் பொறுப்பாளியா’ என்னும் கேள்விக்கு இப்படிச் சொல்கிறார்.
“நாங்கள் ஆரம்பத்திலேயே எங்கள் கருத்தைத் தெரிவித்திருக்கிறோம். எங்களைப் பொருத்த வரைக்கும் இந்தக் கொலை எங்கள் மீது சுமத்தப்பட்ட ஒரு அபாண்டமான குற்றச்சாட்டாகவே நாங்கள் கருதுகிறோம்.”
The Human Bomb,
Script, Compiled & Produced by: K. Raghothaman
Supdt. Of Police – CBI (Retd),
Consultant and Investigator,
214, 42nd Street, 8th Sector,
K.K. Nagar, Chennai – 600 078.
Email: krmmcoin2@gmail.com
விலை: 199 ரூபாய்.
ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/Human-Bomb-DVD.html