சென்னைப் பல்கலைக் கழக துணை வேந்தர் தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே பவுண்டரி அடித்திருக்கிறார். நடப்பட்ட மரத்துக்கு நீரூற்றலா அல்லது புதிய தென்னங்காலா என்பது போகப் போகத்தான் தெரியும். திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்னும் பழமொழியின் நுண்ணர்த்தம் கருணாநிதிக்கும் இந்நேரம் விளங்கியிருக்கும். எம். ஏ. – கலைஞர் எண்ணங்கள். இதை ஏற்படுத்தும் கையோடு, எம். ஏ. காந்திய எண்ணங்களை நீக்கவும் துணை வேந்தர் அவர்கள் பெருமனது செய்து முயற்சி எடுக்கவேண்டும்.
கருணாநிதியையும் காந்தியையும் ஒரே இடத்தில் வைக்கும் எண்ணத்தை கருணாநிதி பெருமனம் செய்து பொறுத்துக்கொண்டாலும், அவரது தொண்டரடிகள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதையும் நாம் பொறுத்துக்கொண்டாலும், கருணாநிதி எண்ணங்களையும் காந்தி எண்ணங்களையும் படிக்கும் மாணவர்கள் ஒரு சேர சந்திக்கும்போது, இந்த காந்தி என்ன செய்தார் என்று இவரைப் பற்றிய எண்ணங்களைப் படித்து பட்டம் வாங்க வேண்டி கிடக்கிறது என்று கலைஞர் எண்ணக்காரர்கள் கேட்டால், காந்திய மாணவர்கள் திருதிருவென்று முழிக்க நேரிடும். இதே கதியே காந்திய எண்ணங்களைக் கற்பிக்கும் பேராசிரியர்களுக்கும் ஏற்படும். இத்தகைய அவமானங்களைக் காந்திய மாணவர்கள் பெறக்கூடாது என்ற பொதுநல நோக்கை மனதில் கொண்டு, துணைவேந்தர் அவர்கள் காந்திய எண்ணங்களை நீக்கிவிட்டால் நல்லது. பிழைத்துப் போகட்டும் காந்தி.
சோ தனது கருத்தை டிவியில் இப்படி சொன்னார். எம்.ஏ. ஸ்டாலின் எண்ணங்கள், எம்.ஏ. அழகிரி எண்ணங்கள், எம்.ஏ. கனிமொழி எண்ணங்கள் என்றெல்லாம் ஏற்படுத்தவேண்டும் என்றார்.
கூடவே எம்.ஏ. மொக்கை எண்ணங்களையும் ஏற்படுத்தலாம். என்னைப் போன்ற வலைப்பதிவாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். ஜோக்கர்களின் பூமியான நம் தமிழ்நாட்டில் எம்.ஏ. மொக்கை எண்ணங்கள் என்கிற படிப்பு இத்தனை நாள் இல்லாததே தவறு என்பதை திருவாசகம் அவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இதற்கு முன்பு இருந்த துணை வேந்தர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் செய்யவேண்டிய எல்லா வேலைகளையும் முடித்துவிட்டார்கள் என்பதில் ஐயமில்லை. உலகின் முன்மாதிரி பல்கலைக்கழகங்களில் சென்னையே முதலிடம் வகிக்கிறது. இத்தனை நடந்த பிறகு திருவாசகம் அவர்கள் இப்பதவிக்கு வந்திருப்பதால், எல்லா வகையிலும் தன்னிறைவுக்கும் மேலாக நிறைவு பெற்றுவிட்ட சென்னைப் பல்கலைக்கழகத்துக்கென, புதிய ஒன்றை யோசித்துச் செய்யவேண்டிய கடும்பணி அவருக்கு இருக்கிறது. அதற்காகவே யோசித்து இந்த அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார். எம்.ஏ. கலைஞர் எண்ணங்கள் என்று ஓர் அறிவிப்பைக் கண்டபின்பு கருணாநிதியின் பொறுப்புணர்வும் கூடியிருக்கும். திருவாசகம் அவர்களின் புதிய முயற்சிகள் இப்படி தமிழக அரசியலைப் பாதித்து, அதன் வழியாக இந்திய அரசியலையும், அதனால் உலக அரசியலையும் கருணாநிதியின் வழியாகப் பாதிக்கவிருக்கிறது என்பதைத் துணைவேந்தரே அறிந்திருக்கமாட்டார்.
எம்.ஏ. களையெடுப்பு என்ற ஓர் பட்டப்படிப்பையும் திருவாசகம் அவர்கள் யோசிக்கவேண்டும். பிற்காலத்தில் இதுவே அதிகம் பயன்படும் என்பதால் இதனை உடனடியாகக் கொண்டுவருவதில் திருவாசகம் அவர்கள் சிறிது நேரம் செலவிட்டால் தேவலை.