குதலையில் தெரு நாய்களைப் பற்றி எழுதாவிட்டால் எப்படி என்று முன்பே நினைத்திருக்கிறேன். ஆனால் நாய்களைப் பற்றி நினைத்தவுடனே எழுதிவிடமுடியாது என்பதை உணர்த்தினார் ஒரு நண்பர். காஞ்சிப் பெரியவர் நாய்களைப் பற்றி (நாயர் என்று மரியாதையாகத்தான் சொல்லவேண்டும். ஆனால் ஜாதிப்பிரச்சினையாகிவிடும் என்பதால் இப்போதைக்கு நாய்கள் என்றே இருக்கட்டும் என விட்டுவைக்கிறேன்) ‘அவை வேதஸ்வரூபம்’ என்று சொல்லியுள்ளார் என்று எடுத்துச்சொல்லி என் ஊனக் கண்ணைத் திறந்து வைத்தார் அந்நண்பர். இருந்தாலும் மீண்டும் ஊனக் கண் தோன்றாமலில்லை. போதாக்குறைக்கு என் இன்னொரு நண்பரும் இப்படி ஒரு மடல் அனுப்பி என்னை உசுப்பிவிட்டார்.
“தனித்து ஒரே ஒரு ஆளாகப் பார்க்கும்போது சோகம் ததும்பும், கருணை பொங்கும் இரக்கமே வடிவான உயிரினமாகத் தென்படும் வேதஸ்வரூபம், இரவில் ஒரு பத்துப்
பதினைந்து இதர வேதஸ்வரூபங்களைத் துணைக்கழைத்துக் கொண்டுவந்தவுடன், மெயின் கெம்ப் ஸ்வரூபமாக ஸ்வரூப மாற்றம் பெற்றுவிடுகிறது.சென்ற வருடத்தில் ஒரே வாரத்தில் நான்கு குழந்தைகள் பகல் நேரத்திலேயே வேதஸ்வரூபங்களுக்கு பலியாகிவிட, ஊர் முழுவதும் வேதஸ்வரூபங்கள் வேட்டையாடப்பட்டன. இத்தனைக்கும் இந்த நான்கு குழந்தைகளில் இரண்டே இரண்டு
குழந்தைகள்தான் பாதுகாப்பற்ற சேரிக்குழந்தைகள். ஒரு குழந்தை நல்ல பாதுகாப்பான குடியிருப்புப் பகுதியில் வசித்த மத்திய வர்க்கத்துக் குடும்பத்துக் குழந்தை. தெருவில் விளையாடிக்கொண்டிருந்தபோது பத்து வேதஸ்வரூபங்கள் தூக்கிச்சென்றுவிட்டன. வே.ஸ்வ-க்கு பலியான இன்னொரு குழந்தை கட்டடத்தொழிலாளியின் குழந்தை. நான்கு தொழிலாளிகளின் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது வேட்டையாடப்பட்டவை.இதற்கு நாம் வேதஸ்வரூபங்களை மட்டும் குற்றம் சொல்லக்கூடாது. உண்மையில் குற்றமே சொல்லக்கூடாது. அந்தந்த பகுதி மக்கள் வேதஸ்வரூபங்களை அன்போடு நடத்தாமல், அதேசமயம் மோசமாகவும் நடத்தாமல் விட்டேத்தியாக எல்லாம் பிரம்மம் என்றிருந்து விட்டார்கள். சில இறைச்சிக்கடைக்காரார்கள் இறைச்சி மிச்சங்களை அருகிலிருந்த குப்பைக்குழியில் மலை போல் குவித்து வைக்க,அவற்றை ருசி பார்த்துவிட்ட வேதஸ்வரூபங்களுக்கு இரத்தவாடை பிடித்துப்போய் குழந்தைகளை வேட்டையாடியதாகவும் காரணம் சொன்னார்கள்.
ஆனந்தவிகடன், நக்கீரன் இதெல்லாம் வே.ஸ்வரூபங்களும் படிக்கின்றனவா என்று தெரியாது. அவர்களுக்கும் இரவு நேரத்தில் வீடு திரும்பும் சாஃப்ட்வேர் மக்களை மிகவும் பிடிக்கும். பைக்கில் வீடு திரும்பும் ஆட்களை பத்துப்பதினைந்து வேதஸ்வரூபங்கள் ஒன்றாக சேர்ந்துகொண்டு கொலை வெறியோடு துரத்தும். எல்லாம் பிரம்மமே என்று வண்டியோட்டிகளும் எந்தப் பதற்றமும் அடையாமல் ஆக்ஸிலரேட்டரை முறுக்கினால் மட்டுமே தப்பிக்க முடியும். அதிலும் இரு சக்கர வாகனங்களுக்கு நடுவே விழுந்து வண்டியோட்டியை தலைகுப்புற விழச்செய்வது இந்த ஸ்வரூபங்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. அப்படி இவர்கள் வண்டியில் அடிபட்டு விட்டாலும், உடம்பைப் பந்து போலாக்கித் தப்பித்துப் போவதில் ஸ்வரூபங்கள் கில்லாடிகள்.
நான் வேலைக்குச் சேர்ந்து ஒருவருடமிருக்கும். இருட்டுக்குப் பழகுவது போல அப்போதுதான் எனக்கு அந்த ஊர் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக ஆரம்பித்திருந்தது. மேலும் இப்போது போலில்லாமல் அப்போது நிறைய நண்பர்கள் ஒன்றாக இருப்போம். கல்லூரியின் மிச்ச சொச்ச சந்தோஷமான நீட்சி நாட்கள் அவை. எனக்கு நிறைய வடஇந்திய நண்பர்களும் கிடைத்தார்கள். என் நண்பனின் நண்பன் ஒரு பிஹாரி. நண்பர்களுடனான பார்ட்டியில் அறிமுகமானவன். எனக்கும் நண்பனாகிப்போனான்.
அவன் புதிதாக வாங்கிய More smiles per hour டிவிஎஸ் விக்டரில் ஒரு நாள் பின்னிரவு அவனும், அவன் நண்பனும் வேலையிலிருந்து லேட்டாக வீடு திரும்பினார்கள். மெயின் ரோடிலிருந்து திரும்பியதும் பல வேதஸ்வரூபங்கள் அவனைத் துரத்தத் தொடங்கின. அவைகளிடமிருந்து தப்பித்த்டு வேகமாக ஓட்டிய அவன் ஒரு கல் தடுக்கி வண்டி தாறுமாறாக ஓடி நிலைதடுமாறி பைக்கிலிருந்து விழுந்து கழுத்தில் பலத்த அடிபட்டு ஸ்பாட்டிலேயே பிரம்மத்துடன் கலந்துவிட்டான். பின்னிருக்கையில் அமர்ந்திருந்த நண்பன் முகமெல்லாம் சிராய்க்கப்பட்டு, ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் குழியில் மயங்கிய நிலையில் அடுத்தநாள் கண்டெடுக்கப்பட்டான்.
பிஹாரிகளைப் பற்றிய ஒரு நட்பான உருவத்தை எனக்குள் உருவாக்கியவன் அந்த நண்பன். வார்த்தைக்கு வார்த்தை சாலா என அழைத்து செளத் இண்டியன் உணவு வகைகளைப் பற்றிய அபத்த சந்தேகங்களை எழுப்பிய அவன் எனக்கு சொல்லித்தந்த BSDK என்ற கெட்ட வார்த்தைய அநிச்சையாக இன்று காலை உச்சரித்தேன்.
சொல்ல மறந்துவிட்டேன். வேத ஸ்வரூபங்கள் பிரம்மத்துக்கு அனுப்பி வைத்த அவனுடைய பெற்றோருக்கு ஒரே பையன். அவர்கள் கதறிய கதறலைக் கேட்ட நண்பர்கள் நாங்கள் ஒருமாதம் வரை ஒரு வித சோகநிலையுடனே வழக்கமான உற்சாகங்கள் இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்தோம்.”
’இதைப் போல, நகைச்சுவை கலந்த சோகத்துடன், என் போல சிறப்பாக இல்லாவிட்டாலும் சுமாராகவாவது நீங்கள் வேதஸ்வரூபங்களைப் பற்றி எழுதவேண்டாமா’ என்று கேட்டதும், எனது ஞானக்கண் மறைந்து, ஊனக் கண் திறந்துகொண்ட நேரத்தில், இன்னொரு நண்பர் நமது பாரம்பரியம், கலாசாரம், பெருமை எல்லாவற்றையும் எடுத்துக்காட்டி, மகாபாரதமே நாயில் தொடங்கி நாயில் முடிகிறது என்கிற ரேஞ்சுக்கு மிரட்டவும், எனது ஞானக்கண்ணை மீண்டும் திறந்துவைத்துக்கொண்டேன். இனி இந்நாய்களைப் பற்றி வாயே திறப்பதில்லை என்றெல்லாம் சபதம் எடுத்திருந்தேன். இருந்தாலும், வசூல்ராஜா எம் பி பி எஸ்ஸில் யாருக்கும் கண்ணடித்துவிட்டு கண்மூடிக்கொள்ளும் ஒரு நோயாளி போல, என்னுள் இந்த வேதஸ்வரூபம் பற்றிய கண் சிமிட்டல் இல்லாமல் இல்லை.
வேதஸ்வரூபங்களைப் பற்றி இலேசாகவும் நினைத்துவிடமுடியாது என்பது எனக்குத் தெரியும். நான் TACல் வேலை பார்க்கும்போது, தூத்துக்குடியில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தேன். அங்கு செல்லும் வழியில் ஒரு நாய் (வேதஸ்வரூபியை சிறிது நேரத்துக்கு நாய் என்று அழைக்கவேண்டியிருக்கிறது. பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் என்னை மன்னிக்கவேண்டும்!) என் வழியில் அடிக்கடி குறுக்கிட்டது. என்னைப் பார்த்து முன்னே வரும். சும்மா வந்தால் பரவாயில்லை. மிக மெல்லிய அடிக்குரலில் ஓர் உறுமல் கேட்டுக்கொண்டே இருக்கும். வாய் திறந்து, பற்கள் தெரிய, இரண்டு கடவாய்களிலும் நீர் வழிய கோபக் கண்களோடே எப்போதும் பார்க்கும். ஒவ்வொருமுறை செல்லும்போதும் பயந்து பயந்தே செல்வேன். இதிலிருந்து மீளும் வழியே தெரியவில்லை. எனக்கு மட்டுமில்லை, என்னுடன் இருந்த நண்பனுக்கும் இதே பிரச்சினை. அந்தவகையில் அந்த நாய் மீது எனக்கு மரியாதை இருந்தது. என்னை மட்டுமில்லாமல், எல்லோரையும் ஒரே மாதிரி நடத்தும் நாயைப் பாராட்டாமல் இருக்கமுடியுமா என்ன? கிட்டத்தட்ட ஆறுமாதங்களாக இப்படியே மிரட்டல். ஆனால் என்னையும் என் நண்பனையும் கடிக்கவில்லை. ஒருதடவை என் கால் வரையில் வந்து முகர்ந்துபார்த்துவிட்டு, வாடை பிடித்துவிட்டதோ என்னவோ, கடிக்காமல் விட்டுவிட்டது. பிஸ்கெட் எல்லாம் போட்டுப் பார்த்தேன். தின்றுவிட்டு கொஞ்சம் தெம்புடன் குலைத்தது.
பின்பொருநாள் வெளியில் சாப்பிட்டுவிட்டு ஒரு பாட்டில் தண்ணீர் குடித்துவிட்டு வெறும் பாட்டிலைத் தட்டிக்கொண்டே வந்தேன். அது ஒரு ப்ளாஸ்டிக் பாட்டில். இப்போது அக்வாஃபினா வரும் பாட்டிலை ஒத்தது. லேசாகத் தட்டினாலே நல்ல சத்தம் கேட்கும். தட்டிக்கொண்டே வந்து என் வீட்டுப்பக்கம் திரும்பினேன். திடீரென்று ஒரு புதருக்குள் இருந்து அந்த நாய் பயந்து அலறி ஓடியது. ஏன் ஓடியது என்று தேடித் தேடிப் பார்த்தேன். நான் தட்டிய பாட்டில் எழுப்பிய ஒலிக்குப் பயந்துதான் ஓடியிருக்கிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. மீண்டும் தட்டினேன். அது மீண்டும் ஓடியது. தூரத்தில் இருந்தே குலைத்தது. அட, இத்தனை பயந்தாங்கொள்ளி நாய்க்கா நாம் இவ்வளவு பயந்தோம் என்றே எனக்கு வெட்கமாகிவிட்டது. பின்பு அந்த நாயை விரட்டி லேசாக சத்தம் போட்டால் போதும் என்றாகிவிட்டது.
ஒருவகையில் எல்லா தெரு தேவஸ்வரூபங்களும் இப்படித்தான் இருக்கின்றன. ஒரு மிரட்டு லேசாக மிரட்டினால் ஓடிவிடுகின்றன. ஆனால் ஒரு தெருவில் இரவில் நடந்துவரும்போது இருபது முப்பது ஸ்வரூபிகள் இருப்பதைப் பார்த்தால் உண்மையிலேயே பயம் வந்துவிடுகிறது. நாம் விரட்டக்கூட முடியவில்லை. அத்தனை ஸ்வரூபிகள். இந்த நாய்களை விரட்டினால் ஓடிவிடும் என்று பெண்களுக்கோ, குழந்தைகளுக்கோ தெரிவதில்லை. ஒருவித பயத்தோடு நடக்கும்போது ஏழறிவு கொண்ட வேதஸ்வரூபங்கள் கண்டுகொண்டுவிடுகின்றன, ‘இவன் நமக்கு அடிமைடா’ என்று. துரத்தத் தொடங்கிவிடுகின்றன. இந்த வேதஸ்வரூபங்களுக்கு நடப்பவரை விட, பைக்கில் வருபவர்களைக் கண்டால் மிகவும் பிடித்துவிடுகிறது. ஒரே விரட்டுதான்.
நேற்று காலையில் என் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பையனை ஒரு வேதஸ்வரூபி கடித்துவிட்டார். தெருவே அல்லோகலப்பட்டது. அந்தப் பையனைத் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள். கிட்டத்தட்ட மதியம்தான் அந்தப் பையனைக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். தெருவே கூடி நிற்க, ஒரு வாளியில் நீரை வைத்து திருஷ்டி கழித்துக்கொண்டிருந்தார் அந்தப் பையனின் தாய். தூரத்தில் அவனைக் கடித்த ஸ்வரூபி, மேலே என் நண்பர் சொல்லியிருப்பது போல, அத்தனை சாதுவாக, பாவமான கண்களுடன், ‘என்னைப் பாத்தா கடிக்கிற மாதிரியா இருக்கு சொல்லுங்க’ என்று வாலாட்டிக்கொண்டு சாந்தஸ்வரூபியாக உட்கார்ந்திருந்தார்.
அந்தப் பையனைப் பார்த்தேன். நடு உச்சந்தலையில் ஒரு கடி. கழுத்தில் ஒரு கடி. கழுத்தைச் சுற்றிக் கட்டு. அது அப்படியே நீண்டு தலைவரையில் சென்றது. என் உடம்பில் ஓர் உதறல். என் ஞானக்கண் மறைந்து ஊனக்கண் ஒன்று திறந்துகொண்டது. ஓர் இலக்கியவாதி என்றால் அறச்சீற்றம் வேண்டாமா? சாரு – சிவரமான் சண்டையில்தான் கருத்துச் சொல்ல வக்கில்லை என்றாலும், இந்த ஸ்வரூபியின் அத்துமீறலைக் கண்டிக்கக்கூடவா தைரியம் கிடையாது?
அந்தப் பையனைப் பார்க்கவே பாவமாக இருந்தது. ‘லீவு அன்னைக்கு ஏன் பையனை வெளியில் விட்ட’ என்று சிலர் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கேட்பதும் சரிதான். ஞாயிறு லீவு என்று வேதஸ்வரூபிகளுக்கு யாராவது சொல்லித் தந்தார்களா? இப்படி சமூக அக்கறையில்லாமல் வேதஸ்வரூபிகளைப் புறக்கணித்திருப்பது சமூகக் குற்றமல்லவா?
இந்த வேதஸ்வரூபிகள் கூட்டமாகச் சேர்ந்து செய்யும் தொல்லையும் கொஞ்சநஞ்சமல்ல. ஒரு மாதத்துக்கு முன்னால் இரண்டு வேதஸ்வரூபிகள் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். இரண்டு ஸ்வரூபிகளின் உடலெங்கும் இரத்தம் வழிந்து ஓட, கம்யூனிஸ்டுகள் போல கடும் சண்டை போட்டுக்கொண்டிருந்தன. சுற்றிலும் ஒரு பெரிய கூட்டமே பயந்து நடுங்கிக்கொண்டிருந்தது என்பதனை அறிந்துகொண்டு சண்டை போட்டார்களோ என்னவோ தெரியாது, சண்டை என்றால் உங்கவீட்டுச் சண்டை எங்க வீட்டுச் சண்டை இல்லை. கடுமையான சண்டை. கல்லைக் கொண்டு எறிந்தாலும் வேதஸ்வரூபிகள் சண்டை போடுவதை நிறுத்துவதில்லை. ‘நரி இடம் போனா என்ன வலம் போனா என்ன மேல விழுந்து பிடுங்காம இருந்தா சரி’ என்ற பழமொழியெல்லாம் தெரிந்த மக்கள் ஓடிப்போய்விட்டார்கள். உண்மையில் இந்த வேதஸ்வரூபிகள் தங்கள் சண்டை வேகத்தில் நம்மைக் கடித்துவைத்தால் என்ன செய்வது என்று எனக்கும் திகிலாகத்தான் இருந்தது. அதான் கம்யூனிஸ்டுகள் போன்ற சண்டை என்றேனே, ஆழமான விவாதம்தான்.
எங்கள் வீட்டைச் சுற்றி எப்போதும் ஒரு வேதஸ்வரூபி திரிந்துகொண்டிருப்பார். ஓர் எலி ஓடும் சத்தம் கேட்டாலும் அரண்டு போய் எங்காவது ஒளிந்துகொள்வார். நான் கையைத் தூக்கினாலே அடங்கி ஒடுங்கி ஈனஸ்வரத்தில் கத்துவார். அப்படிப்பட்ட பயந்த சுபாவமுடைய அவரும் ஒருநாள் ஒரு குழந்தையைக் கடிக்க இருந்தார். மயிரிழையில் தப்பித்தது அக்குழந்தை. இப்படி பயந்த சுபாவமுடைய வேதஸ்வரூபிகளே இப்படி என்றால், மற்ற விரமிகு வேதஸ்வரூபிகளைப் பற்றி என்ன சொல்ல?
எங்கள் பகுதி கவுன்சிலர் ரொம்ப நல்லவர். வேதஸ்வரூபிகள் என்று பெரியவர் சொன்னது அவருக்கும் தெரியுமோ என்னவோ, எத்தனை முறை சொல்லியும் அவர் இந்த வேதஸ்வரூபிகளை இல்லாமலாக்க எதையுமே செய்யவில்லை. ‘ஒரு மாசத்துல பெருகிடுதுங்க சார்’ என்பார்.
தினமும் பத்திரிகையில் அங்கொன்றுமாக இங்கொன்றுமாக ஒரு பையனையாவது ஒரு நாய் கடித்துவிடுவதைப் படிக்கிறோம். ஆனால் இதுகுறித்த கடுமையான நடவடிக்கையை எந்த ஓர் அரசும் எடுப்பதில்லை. மேனகா காந்தி கண்மூடித்தனமாக எல்லா உயிர்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்கிறார். இப்படிப்பட்ட நாய்களை என்ன செய்வது? இவற்றுக்கெல்லாம் குடும்பக் கட்டுப்பாடு செய்யவேண்டும் என்பது ஒரு குரல். இந்த நாய்களை என்ன செய்வது என்பது பற்றி ஏதும் பேசில்லை. எல்லா நாய்களையும் பாதுகாத்துப் போஷிக்கவும் முடியாது. கொன்றுவிடவேண்டியதுதான். இந்த நாய்களால் ஏற்படும் தொல்லைகளையும், உயிரிழப்பையும் பார்க்கும்போது, இவற்றைக் கொல்வதில் தப்பே இல்லை என்றுதான் தோன்றுகிறது.
இப்படி நாய்களைக் கொல்லலாம் என்று எழுதியதைக் கண்டு என் மீது ‘மனிதாபிமானற்றவன்’ என்கிற கண்டனங்கள் பாயக்கூடும். இருந்தாலும் என்ன செய்வது, வேறு வழியே இல்லை, இந்த வேதஸ்வரூபிகளைக் கொன்றுவிடவேண்டியதுதான்.
நான் முன்பு சொன்னதுபோல இன்றும் என் ஊனக்கண் திறந்துகொண்டுவிட்டதை உணர்கிறேன். இதை போஸ்ட் செய்துவிட்டு, பெரியவர் புகைப்படத்துக்கு நேராக சாஷ்டாங்கமாக காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுவிடவேண்டியதுதான். வேதஸ்வரூபிகளைக் கொல்லச் சொன்னதற்கு அவர் மன்னிப்பாரா என்று தெரியவில்லை. ஆனால் கொன்றுவிடுவதைத் தவிர வேறு வழியிருக்குமா என எனக்கும் தெரியவில்லை. ஒருதடவைக் கொன்றுவிட்டு, பின்பு அவை பெருகாமல் பார்த்துக்கொண்டுவிட்டால் பிரச்சினை கட்டுக்குள் வந்துவிடும். மனுக் கொடுக்கப் போகலாம் என்றால், அந்தத் தெரு முழுவதும் இதே பிரச்சினைதான் என்கிறார் கௌன்சிலர்.