குதலைக் குறிப்புகள் – 5

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் குதலையோடு வருகிறேன். 🙂 தொடர்ந்து ஏகப்பட்ட விசாரிப்புகள் ஏன் எழுதவில்லை என்று. வேண்டாம், விஷயத்துக்கு வருவோம்.

Kraurya என்று ஒரு கன்னடத் திரைப்படம் பார்த்தேன். லோக் சபா டிவி புண்ணியத்தில். கிரீஷ் காசரவள்ளி இயக்கத்தில் இப்படம் என் மனதை பாதித்தது. ஒரு கதை சொல்லியின் கதை. கிழவியாக வரும் ரேணுகாம்மாவின் நடிப்பு உலகத் தரத்தில் இருந்தது. அவரது தூரத்து உறவினராக வரும் தத்தாத்ரேயாவின் நடிப்பும் மிக யதார்த்தமாக இருந்தது. தத்தாத்ரேயாவின் நடிப்பை இன்னும் சில படங்களில் பார்த்தேன். எல்லாமே லோக் சபா சானல் உபயம்தான். எல்லாப் படங்களிலுமே தத்தாத்ரேயா மிக எளிமையாக, மிக யதார்த்தமாக, அற்புதமாக நடித்திருக்கிறார். நான் பார்த்த தத்தாத்ரேயாவின் படங்களை மட்டும் வைத்துக்கொண்டு, நம்ம ஊர் டெல்லி கணேஷுடன் இவரை ஒப்பிடலாம் எனத் தோன்றுகிறது. டெல்லி கணேஷ் தனது எல்லை எதுவெனத் தெரிந்து நடிக்கும் ஒரு நடிகர். பிரகாஷ் ராஜ் போல எல்லா கதாபாத்திரங்களையும் ஒரே ரீதியில் அணுகும் நடிகர்களுக்கு மத்தியில், டெல்லி கணேஷ் போல, தத்தாத்ரேயா போல ஓரிருவரே எஞ்சுகிறார்கள். இதுபோன்ற திரைப்படங்கள் விஷயத்தில் லோக் சபா சானல் செய்து வரும் பணி மகத்தானது. காங்கிரஸ் கட்சியே உலகின் சிறந்த கட்சி என்று சுற்றி வளைத்து அறிவிக்கும் லோக்சபா சானலின் ஆகப் பெரிய குற்றத்தைக் கூட இது போன்ற திரைப்படங்களுக்காக மன்னிக்கலாம். மக்கள் தொலைக்காட்சி ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் ஞாயிறு மதியம் ரஷ்யத் திரைப்படங்களை ஒளிபரப்புகிறது. இதுவரை பார்த்த ஒன்றிரண்டு படங்கள் என்னைக் கவரவில்லை. அதனால் தொடர்ந்து பார்ப்பதில்லை. இப்படி ஒரே வகையான படங்கள் என்று ஒளிபரப்பாமல், மக்கள் தொலைக்காட்சி உலகத் திரைப்படங்களை ஒளிபரப்புவது நல்லது. இன்றைய நிலையில், மக்கள் தொலைக்காட்சியைத் தவிர, வேறெந்த சானலும் இதைச் செய்துவிடமுடியாது. வால்ட் டிஸ்னியின் திரைப்படங்களை சன் டிவி ஒளிபரப்பத் தொடங்கியிருக்கிறது. குழந்தைகல் குதூகலிக்கிறார்கள். படங்களின் தரமும் உச்சத்தில் இருப்பதால், யாரும் ரசிக்கத்தக்கவண்ணம் படங்கள் இருக்கின்றன. இந்தவாரம் தி வைல்டு படம் பார்த்தேன். சென்ற வாரத்தில் தி இன்கிரிடிபிள்ஸ். இரண்டுமே அசத்தலாக இருந்தன.

-oOo-

தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுவிட்டது. நான் அதிமுக+ 25 வெல்லும் என நினைத்திருந்தேன். மக்களோடு நெருங்கிப் பழங்குங்க பாஸ் என்ற அறிவுரை கிடைத்தது! இன்றைய நிலையில் ஊடகங்கள் மக்களிடமிருந்து முற்றிலும் விலகிவிட்டன என்கிறார் லக்கிலுக். மக்களோடு நெருங்கிப் பழகி, அடுத்த் தேர்தலில் பிஜேபி 240 இடங்களில் வெல்லும் எனச் சொல்ல இப்போதே முடிவெடுத்திருக்கிறேன். ஆசையைத்தானே சொல்லமுடியும்! நான் TACல் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். 1998 நாடாளுமன்றத் தேர்தல். 1996ல் நடந்த படுதோல்விக்குப் பின்பு ஜெயலலிதா சந்திக்கும் தேர்தல். கிட்டத்தட்ட ஜெயலலிதா குற்றவாளியாகவே எல்லாரும் கருதப்பட்டார். அத்தேர்தல் முடிவு குறித்த கணிப்புகள் எல்லாவற்றிலும் அதிமுகவுக்கு 0 இடமே கிடைக்கும் எனச் சொல்லப்பட்டிருந்தது. எங்கள் கம்பெனியிலும் ஒரு சர்வே நடத்தினார்கள். ஒரு சீட்டில் எந்தக் கூட்டணிக்கு எவ்வளவு என எழுதித் தரவேண்டும். நான் திமுகவுக்கு 40 எனவும், அதிமுகவுக்கு 0 எனவும் எழுதிக்கொடுத்தேன். கிட்டத்தட்ட 32 பேர் கலந்துகொண்ட அந்த கணிப்பில் 30 பேர் அதிமுகவுக்கு 0 எனச் சொல்லியிருந்தார்கள். ஒருவர் மட்டும் 1 இடம் அளித்திருந்தார். ஒருவர் மட்டும் அதிமுகவுக்கு 30, திமுகவுக்கு 10 என எழுதியிருந்தார். உடனே கண்டுபிடித்துவிட்டோம் அது யாராக இருக்கவேண்டுமென்று. கம்பெனியில் பிராமண ஆதரவாளர் என்றும், ஜெயலலிதா விசுவாசி என்றும் எல்லோராலும் கருதப்படும் கணேஷ் கார்த்திகேயனாகத்தான் இருக்கவேண்டும் என்று எல்லோருமே சொன்னோம். அவரும் ஒப்புக்கொண்டார். எல்லோரும் சிரித்தோம். முடிவு வந்தது. அவர் ஹீரோவாகிவிட்டார். அப்போது அவர் சொன்னார், ‘மக்கள் பல்ஸ் பிடிக்கத் தெரியணும் பிரசன்னா’ என்று. அன்றிலிருந்து இன்றுவரை இன்னும் பல்ஸ் பிடிக்கத் தெரியவில்லை. ஆனால் ஒன்றைக் கவனித்திருக்கிறேன். நான் என்ன சொல்கிறேனோ அது அச்சு அசலாக மாறி வருகிறது. சென்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு 170ம் திமுகவுக்கு 60ம் கிடைக்கும் எனச் சொன்னேன். இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு 27ம், திமுகவுக்கு 13 எனவும் சொன்னேன். அடுத்தமுறை முதலில் எந்த கூட்டணிக்கு எவ்வளவு என்று சொல்லிவிட்டு, கட்சிகளின் இடத்தை மாற்றிவிட உத்தேசித்திருக்கிறேன். வாங்க நெருங்கிப் பழகலாம் மக்களே.

-oOo-

பாஜக கூட்டணி தோல்வி அடைந்துவிட்டது. தோல்வி எதிர்பார்த்த ஒன்றே. ஆனால் இத்தனை மோசமாகத் தோற்கும் என எதிர்பார்க்கவில்லை. முக்கியக் காரணம், பாஜக மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடாமல், கொள்கை ரீதியான விஷயங்களுக்கு மட்டுமே போராடுகிறது. அயோத்தியில் கோயில், சேது சமுத்திரத் திட்டம், மதமாற்றம் – இப்படி போராடியிருக்கும் கட்சி, கடைநிலை மனிதனின் சோற்றுக்காக வீதியில் வந்து போராடியிருக்கிறதா என்று யோசித்தால், ஒன்றுமே இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அதிமுகவும், திமுகவும் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வந்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால் பாஜக எல்லாவற்றிலும் ஒரு ‘வெள்ளை காலர்’ அணுகுமுறையை மட்டுமே மேற்கொள்ளுகிறது. வெள்ளைக் காலர் அழுக்காகாமல் பதவி கிடைக்காது என்பதை பாஜக உணரவேண்டும். அத்வானியின் அரசியல் வாழ்க்கை பிரதமர் பதவியைக் காணாமலேயே முடியப்போகிறது. சர்தார் வல்லபா படேல் போல. சர்தார் வல்லபாய் படேலுக்கு நேரிடையான எதிரி இல்லை. அத்வானிக்கு திறமை குறைந்த ஒரு நேரிடையான எதிரி இருந்தும் அவரால் வெல்லமுடியவில்லை. தமிழக பிஜேபியைப் பற்றிப் பேசுவது நேர விரயம். இல கணேசன் யாருக்காகப் போட்டியிட்டார் என்பதே தெரியவில்லை. கோயமுத்தூரில் ஏன் ராதாகிருஷ்ணன் போட்டியிடவில்லை என்பதும் மர்மம். அத்வானி கன்னியாகுமரியிலும் திருச்சியிலும் பிரசாரம் செய்யாமல் ஏன் சென்னைக்கு வந்தார் என்பதெல்லாம் நல்ல காமெடியான விஷயங்கள். இவர்களின் அதிகபட்ச திறமையே இந்திய அளவில் நூறு இடங்களோடு திருப்தி பட்டுக்கொள்ளுவதுதான்.

-oOo-

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார். இன்னும் சில வலைத்தளங்கள், சில நண்பர்கள் அவர் சாகவில்லை என்று நம்புகிறார்கள். நான் நிச்சயம் பிரபாகரன் இறந்துவிட்டதாகவே நினைக்கிறேன். சரணடையச் சென்ற இடத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிற யூகமே எனக்கு ஏற்கத்தக்கதாக இருக்கிறது. இலங்கையில் இருக்கும் தமிழர்களின் வாழ்வில் இனியாவது அமைதி மலர இறைவன் அருளவேண்டும். நிறைய தமிழர்களின் உணர்வு சம்பந்தப்பட்ட இவ்விஷயத்தில் வேறொன்றும் எனக்குச் சொல்லத் தோன்றவில்லை.

-oOo-

FM நிகழ்ச்சிகளை சில சமயம் கேட்பதுண்டு. நான் கேட்டவரை எல்லா நிகழ்ச்சிகளுமே திரைப்படப்பாடல்களோடு சம்பந்தப்பட்டவையே. நேரலை நிகழ்ச்சிகளில் நேயர்கள் பங்குபெறும்போது கூட, இடையிடையே பாடல்களையே ஒலிபரப்புகிறார்கள். திரைப்படம் என்பதன் சுவடே இல்லாமல் ஒரு நிகழ்ச்சியாவது இருக்குமா என்பது சந்தேகமே. இங்கேயும் மக்கள் தொலைக்காட்சி போல மக்கள் பண்பலை என்ற ஒன்று வந்தால்தான் உண்டு. நிச்சயம் வரவேண்டும். திரைப்படப் பாடல்களைத் தவிர எதையும் மக்கள் கேட்கமாட்டார்கள் என்கிற முடிவு ஆபத்தானது. இதை நிச்சயம் உடைக்கவேண்டும். ஒரு பண்பலையில் குறைந்தது 10 சதவீதமாகவது திரைப்படம் சம்பந்தப்படாத நிகழ்ச்சிகள் இருக்கவேண்டும். இல்லையென்றால், அடுத்த தலைமுறை வெறும் திரைப்படப் பாடல்களால் நிரப்பப்பட்ட ஒரு பொதியாகவிடும். இப்போது நாம் இக்கட்டத்தை எட்டிவிட்டோம். அதுவே இதிலிருந்து மீளும் ஒரு உத்வேகத்தைத் தருமானால் அது மகிழ்ச்சியான விஷயமாகவே இருக்கும். மக்கள் பண்பலையைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன், அப்படி ஒன்று வருமா என்று!

-oOo-

கருணாநிதியைப் பற்றி ஒரு வார்த்தைகூட எழுதாமல் எப்படி குதலையை முடிப்பது. கருணாநிதிக்கு வெற்றிக்கனி கிடைத்த ஒரே நாளில், அவரது அரசு மைனாரிட்டி அரசுதான் என்னும் – அவருக்கு மட்டும் தெரியாத, உலகத்துக்கே தெரிந்த – உண்மையை அழுத்தம் திருத்தமாக உணர்த்தியிருக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் செய்திருக்கும் ஒன்றிரண்டு நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று. இனிமேல் மைனாரிட்டி அரசு என்றால் என்ன என்பது போன்ற கேள்விகளை ஜெயலலிதாவிடம் கருணாநிதி கேட்கமாட்டார் என நம்புவோம்.

Share

Comments Closed