சிறுமை கண்டு சீறுவாய் – தகவல் அறியும் உரிமைச் சட்டம் (கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம்)

அ.கி. வேங்கட சுப்ரமணியன் (ஐ.ஏ.எஸ். ஓய்வு) தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிப் பேசினார். எவ்வித தடங்கலுமின்றி எளிமையான தமிழிலும், ஆங்கிலத்திலும் கலந்து பேசினார். இந்தியாவில் சட்டங்களுக்குக் குறைவே இல்லை என்றும், ஆனால் பெரும்பாலான சட்டங்கள் பயன்படுத்தப்படாமலும், செயல்படுத்தப்படாமலும் வெறுமனே கிடக்கின்றன என்றும், ஒரு சட்டத்தை உயிரோடு வைத்திருக்கும் பொறுப்பு மக்களுக்கே உள்ளது என்றும் தெரிவித்தார். அ.கி. வேங்கிட சுப்ரமணியனின் பேச்சு வெறும் ’பேச்சு வகை’ சார்ந்ததல்ல. களப்பணியில் இருக்கும், பாஸிட்டிவ் திங்கிங்க் உள்ள, நாட்டை நம்மால் திருத்தவும் நேராக்கவும் முடியும் என்ற நம்பிக்கை கொண்ட மனிதன் ஒருவனின் உள்ளப் பேச்சு.

”சமூக சம்ச்சீரின்மைக்கும், சமூகக் குறைபாடுகளுக்கும் பொறுப்பேற்கவேண்டிய அரசு, தனது செயல்களை வெளிப்படையாகச் செய்யவும், செய்த செயல்களுக்குப் பொறுப்பேற்கவும் இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் கட்டாயப்படுத்துகிறது. கேள்வி கேட்டால் நாளை நம்மை என்ன செய்வார்களோ என்கிற பயம் இருந்தால், நம்மால் ஒன்றுமே செய்யமுடியாமல் போய்விடும். ஆனால் இந்த பயம் அவசியமற்றது. நாம் தொடர்ந்து கேள்விகளைக் கேட்பதன் மூலம், பல்வேறு செயல்களை வெளிக்கொண்டுவர முடியும். கேள்விகள் கேட்பது செய்திகளை அறிந்துகொள்ள மட்டுமே என்ற அளவில் நின்றுவிடாமல், அடுத்த அந்த பதில்களை வைத்துக்கொண்டு என்ன செயலைச் செய்யப் போகிறோம் என்று முடிவெடுத்துக்கொள்வது நல்லது.

“நாம் நம் பகுதியில் உள்ள மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகளுக்குச் சென்றிருக்கிறோமா? நாம் செலுத்தும் வரியில் ஒரு பகுதி இப்பள்ளிகளுக்குச் செல்லுகிறது. அப்படியிருக்கும்போது நம் பகுதியில் உள்ள பள்ளிகள் எப்படிச் செயல்படுகின்றன என்று நாம் ஒருபோதும் சிந்திப்பதில்லை? திருநெல்வேலியில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி அறிந்த ஒரு செய்தி இது. கிட்டத்தட்ட 9 கோடி ரூபாய் பணம், மக்கள் பணிக்காக ஒதுக்கப்பட்டது, செலவழிக்கப்படவே இல்லை. ஆனால் அந்த ஊரில் அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகள் பல இருக்கின்றன. அதேபோல், திருநெல்வேலியில் வசூலிக்கப்படாத தொகை 12 கோடி ரூபாய். இதுவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட செய்தி. இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து, அந்தப் பணத்தை எப்படி திறம்பட செயல்படுத்துவது என்று சில யோசனைகளைச் சொன்னோம்.

“திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ஒரு நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு 2002லிருந்து சம்பளமே வழங்கப்படவில்லை. இதுவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து பெறப்பட்ட செய்திதான். அப்படியானால் எப்படி அவர்கள் தொடர்ந்து வேலை செய்கிறார்கள்? தூத்துக்குடி வேப்பலோடை பகுதியில் தொடர்ந்து லாரிகள் மணல் அள்ளிக்கொண்டிருந்தன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, லாரி அள்ளுவதற்கான முறைமைகள் பெறப்பட்டன. அந்த ஊர் மக்கள் அடுத்தமுறை லாரி வந்தபோது அதை தடுத்து நிறுத்தினார்கள். முறைமையின்படி அந்த லாரி மணல் அள்ள முடியாது என்று போராடினார்கள். இதனால் மணல் அள்ளுவது தடுக்கப்பட்டது. ஆனால், வேறு ஊரின் வழியாகச் சென்று மணல் அள்ளத் தொடங்கினார்கள். இப்போது அந்த ஊரையும் நாம் விழிக்கச் செய்யவேண்டியிருக்கிறது. ஒருவர் பெறும் தகவல் என்பது அவருக்கு மட்டுமானது என்று நின்றுவிடாமல், அதனை எல்லோருக்குமானதாக மாற்றுவதற்கான விழிப்புணர்வு வரவேண்டும்.

“தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது சர்வ ரோக நிவாரணி அல்ல. இது உங்களுக்குத் தகவலை மட்டுமே வழங்கும். பெரிய பெரிய விஷயங்களை எல்லாம் நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறுகிறேன் என்பதைவிட, நம் வாழிடத்தில் இருக்கும் பள்ளிகள், நியாய விலைக்கடைகள், மருத்துவமனைகளில் என்ன நடக்கிறது என்பதற்கான தகவல்களைப் பெறத் தொடங்கினாலே போதும், ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தமுடியும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பொது ஆர்வலர்கள், சமூகப் பணியாளர்கள் இன்னும் கையிலெடுத்துக்கொள்ளவில்லை. தனிமனிதர்களைவிட இவர்கள் கையில் இச்சட்டம் செல்வது அதிகப் பயனைத் தரும். இச்சட்டம் அரசியல்வாதிகளால் கொண்டுவரப்படவில்லை. மாறாக, சமூக நல ஆர்வலர்களால் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தை தொடர்ந்து உயிரோடு வைத்திருப்பது நம் கையில் உள்ளது.”

பின்பு கேள்வி நேரம் துவங்கியது. முதல் கேள்வியைக் கேட்டவர், பயமின்மை என்பது யதார்த்ததில் சரியாக வராது என்று கூறினார். ஆனால் அதை அகிவே ஏற்கவில்லை. கேட்கப்படும் கேள்விகள் சிலவற்றிற்கு தகவல் இல்லை என்று அரசு பதில் சொல்லமுடியுமா என்று கேட்டேன். உண்மையில் தகவல் இல்லை என்றால் இல்லை என்று கூறலாம் என்று சொன்னார். அவர் பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேஷனில் சில கேள்விகளைக் கேட்டிருக்கிறார். சேது சமுத்திரத் திட்டத்தால் எத்தனை கிலோமீட்டர் பயணம் குறையும், அதனால் பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேஷன் அடையும் லாபம் எவ்வளவு போன்ற கேள்விகள் என நினைக்கிறேன். அவற்றிற்குத் தங்களிடம் பதில் இல்லை என்று பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேஷன் தெரிவித்துவிட்டதாகச் சொன்னார். இன்னும் நிறைய பேர் கேள்விகளைக் கேட்டார்கள்.

அகிவே குடிமக்கள் முரசு என்றொரு மாத இதழை நடத்திவருகிறார். அவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறும் தகவல்களை அவற்றில் வெளியிடவும் செய்கிறார். குடிமக்கள் முரசு-வில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பை (வேறு பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளும் அடங்கிய தொகுப்பு) கிழக்கு பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. அவர் எழுதிய மக்களாகிய நாம், கட்சி ஆட்சி மீட்சி புத்தகங்களை nhm.in/shopல் ஆன்லைனில் வாங்கலாம். நான் குடிமக்கள் முரசுவுக்கு சந்தாதாரராக நினைத்துள்ளேன். அதன் முகவரி: உந்துநர் அறக்கட்டளை, எண் 8, 4-வது தெரு, வெங்கடேஸ்வரா நகர், அடையாறு, சென்னை 600 020, தொலைபேசி: 2446-5601. விருப்பப்பட்டவர்கள் நேரடியாக சந்தா செலுத்திக்கொள்ளலாம்.

இந்தக் கூட்டம் சொன்னது என்ன? மக்கள் செயல்படவேண்டும் என்பதே. அரசியல்வாதிகளின் எல்லா ஊழலுக்கும் நாம் பழகிப்போய்விட்டோம். ஒரு செயலுக்கான முறைமைகளைக் கண்டறிந்து, அதன்படி செயல்பட நாம் நம்மை வழக்கப்படுத்திக்கொள்வதும், நம் அரசை செயல்பட வைக்க இயன்றவரை முயல்வதுமான விழிப்புணர்வே இன்றையத் தேவை. ஒரு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் செய்தியைப் பெற்றுப் போராடுவதைவிட, எப்பகுதியில் பிரச்சினை உள்ளதோ, அப்பகுதி மக்கள் தத்தம் கோரிக்கைகளுக்காகப் போராடுவது நல்ல பலனளிக்கிறது என்று அனுபவத்தில் கண்டதைப் பதிவு செய்கிறார் அகிவே. இதுவே இக்கூட்டம் சொல்லும் செய்தி.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மக்கள் பயன்படுத்துவது என்கிற நோக்கிலேயே இதுவரை இச்சட்டமும் அதன் பயன்பாடுகளும் அணுகப்பட்டிருக்கின்றன. இச்சட்டத்தை வரைவு செய்யுமுன்பு, இதனைச் செயல்படுத்த போதுமான பணியாளர்கள் நம்மிடம் உள்ளார்களா என்பது பற்றிய ஆய்வு செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை. அரசு பணியாளர்கள் பெரும்பாலானவர்கள் லஞ்சம் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதால், அவர்களைக் கஷ்டத்துக்குள்ளாக்கும் எந்த ஒரு செயலும் நம்மை மகிழ்விக்கவே செய்கிறது. இச்சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவந்த பின்பு, அரசு அலுவலர்கள் அடையும் இன்னல்கள் பற்றியும் யோசிக்கவேண்டும். நிச்சயம் இச்சட்டம் பயனுள்ளது என்பது பற்றி சந்தேகம் இல்லை. ஆனால் இச்சட்டத்தின்படி எக்கேள்விகளையும் கேட்கலாம் என்பதும், 30 நாள்களுக்குள் பதில் சொல்லவேண்டும் என்பதும், எத்தனை கேள்விகளை வேண்டுமானாலும் கேட்கலாம் என்பதும், அரசு அலுவலர்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. இச்சட்டத்தின் அடிப்படையில் கேட்கப்பட்ட நிறைய கேள்விகள் கிறுக்குத்தனமானவை என்று ஓர் அரசு ஊழியர் சொன்னார். தகவல் இல்லை என்று பதில் சொன்னால், இதற்கான ஆணையம் அந்த பதிலை ஏற்பதில்லை என்றும், அது தொடர்ந்து மக்கள் பிரதிநிதியாகவே செயல்பட்டு, அரசு ஊழியர்களுக்கு மேலும் மேலும் ஆணைகளை வழங்கிக்கொண்டிருக்கிறது என்றும் அவர் வருத்தப்பட்டார். கேள்விகளுக்கான வரைமுறைகளை உருவாக்கவேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார். திருநெல்வேலியில் எத்தனை வீடுகள் இத்தனை சதுர அடிக்கு மேற்பட்டவை என்று ஒருவர் பொத்தாம் பொதுவாகக் கேள்வி கேட்டால், அதற்கு 30 நாள்களுக்குள் எப்படி பதில் சொல்லமுடியும்? கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களாகக் கணினி மயமாக்கப்பட்டிருக்கலாம். அதற்கு முன்பு உள்ள தகவல்களைத் தேடித்தான் தரமுடியும். அந்த வேலைகளை யார் செய்யப்போகிறார்கள்? இந்தச் சட்டத்தின் தேவை கருதி எத்தனை பேர் புதியதாக வேலைக்குச் சேர்க்கப்பட்டார்கள்? – இவையெல்லாம் அரசு ஊழியர்களின் கேள்விகள். நமக்கு அரசு ஊழியர்களைப் பிடிக்காது என்பதாலேயே அவர்களின் கேள்விகள் நியாயமற்றவை என்று சொல்லிவிடமுடியாது. அரசு ஊழியர் ஒருவரின் துணையோடு சில கேள்விகளை, இச்சட்டத்தின் அடிப்படையில், தகவல் ஆணையரிடம் கேட்டுள்ளேன். 30 நாள்களுக்குள் என்ன பதில் கிடைக்கிறது என்று பார்க்கலாம். இதேபோல் இன்னும் நிறையக் கேள்விகள் கேட்கப்படவேண்டியிருக்கின்றன. அவற்றைப் பொதுவில் வைப்பதே முதல் நோக்கம்.

பின்குறிப்பு: சீமான், விவேக், தா.பாண்டியன், கருணாநிதி உள்ளிட்ட பலரின் இயற்பெயர், தாய்மொழி என்ன, சோனியா கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தாரா, அர்ஜூன் சம்பத் ஏன் பாஜகவில் இருந்து ஏன் விலகினார் என்றெல்லாம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்போகிறேன் என்று சொல்லி, என்னை அசரச் செய்த நண்பரின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன!

Share

Comments Closed