சம்ஸ்கிருதம் படிக்கவேண்டும் என்கிற ஆசை எனக்கு எழுந்த நேரத்தில், கடந்த புத்தகக் கண்காட்சியில் விஜயபாரதம் ஸ்டாலில் ‘பத்து நாளில் சம்ஸ்கிருதம் பேசும்’ ஒரு கோர்ஸைப் பற்றிய பிட் நோட்டிஸ் பார்த்தேன். பத்து நாளில் சம்ஸ்கிருதம் எப்படி பேசமுடியும் என்கிற எண்ணம் வந்தாலும், சேர்ந்துவிட்டேன்.
தி.நகர் சாரதா வித்யாலயாவில் நடந்த வகுப்புக்கு முதல்நாள் சென்றபோது என்னுடன் வந்த நண்பனிடம் ‘பத்து பேர் இருந்தா அதிகம்’ என்று சொல்லிக்கொண்டு போனேன். அங்கு இனிய அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டு வகுப்புகள். ஒவ்வொரு வகுப்பிலும் நாற்பது மாணவர்களுக்கும் மேல். நடக்கமுடியாமல் தள்ளாடி நடந்துவந்த வயதான மனிதரிலிருந்து, தமிழே இன்னும் சரியாகப் பேசத் தெரியாத சிறுவர் வரை. ‘படத சம்ஸ்கிருதம்’ என்று பாடலோடு தொடங்கிய வகுப்பில், ஆசிரியர் எடுத்த எடுப்பில் ‘பவத: நாம கிம்?’ என்று தொடங்கினார். ஆசிரியர் என்றால், வயதாகி குடுமி போட்டுக்கொண்டு நாமத்தோடு வெற்றிலை குதப்பிக்கொண்டு வாயில் எச்சிலோடு பேசும் ஓர் உருவத்தை சட்டெனக் கலைத்தார் முரளி. கணினி மென்பொருள் வல்லுநரான முரளியின் வயது 24. குடுமி இல்லை. ஆனால் நீண்ட கூந்தலுடன், தமிழையோ ஆங்கிலத்தையோ உதவிக்கு அழைக்காமல், எடுத்த எடுப்பில் ‘பவத: நாம கிம்?’ என்றார்.
நாம் பேசிக்கொண்டிருக்கும் ஒரு மொழியின் உதவியின்றி, இன்னொரு புதிய மொழியை கற்றுவிடமுடியும் என்று நான் நம்பியிருக்கவில்லை. ஆனால் ஸ்ம்ஸ்க்ருத பாரதியின் அடிப்படையே, சம்ஸ்கிருதத்தை அம்மொழியின் வாயிலாகவே கற்றுத்தருவதே அன்றி, வேறொரு மொழியின் வாயிலாக அதைக் கற்றுத் தருவது அன்று என்பதை அந்த முதல் நாளிலேயே புரிந்துகொண்டேன். நாம் நம் தாய்மொழியை வேறு எந்த ஒரு மொழியின் உதவியின்றித்தான் படித்திருக்கிறோம் என்று யோசித்துப் பார்த்தேன். அப்படி ஒரு உள்ளார்ந்த மொழியாக சம்ஸ்கிருதத்தை நிறுவவே இப்படி ஒரு முயற்சி என்பது புரிந்தது. ஹிந்தி தெரியாமல் இருந்தால் நல்லது என்று ஏற்கெனவே முரளி சொல்லியிருந்தார். அதன் காரணமும் அங்கே விளங்கத் தொடங்கியது. பத்து நாள்களும் அங்கே பயன்படுத்தப்பட்ட ஆங்கில, தமிழ் வார்த்தைகள் பத்தைத் தாண்டியிருந்தால் அதிசயம். பத்தாவது நாளில் எல்லோரும் சம்ஸ்கிருதத்தில் பேச முயற்சித்தார்கள்.
சம்ஸ்கிருதத்தில் பேசுவது என்றால், சம்ஸ்கிருத விற்பன்னராகப் பேசுவது அல்ல. இதன் அடிப்படையையும் மிகத் தெளிவாக திட்டமிட்டிருந்தது சம்ஸ்கிருத பாரதி. ஒரே விகுதியோடு முடியும் வார்த்தைகள் (கஜ:, வ்ருக்ஷ:, புத்ர:, ராம: என்பது போல) என்று எடுத்துக்கொண்டு, அவற்றோடு வேற்றுமை உருபுகள் சேரும்போது அவை எப்படி மாறுகின்றன என்பதை அடிப்படையாகக்கொண்டு (ராமன் + இன் = ராமனின் ராம: + அஸ்ய = ராமஸ்ய என்பதைப் போல) எளிமையாக நடத்தினார்கள். Present tense, Past tense, Future tense மட்டுமே சொல்லித்தந்தார்கள். இதை வைத்துக்கொண்டு கதை சொன்னார்கள். இதை அடிப்படையாக வைத்து எளிமையான வாக்கியங்கள் சொல்லச் சொன்னார்கள். இதை வைத்துக்கொண்டு எளிமையான பேச்சை நிகழ்த்தினார்கள். இதன் வழியே, சம்ஸ்கிருதம் கற்பது கடினமானதல்ல என்கிற எண்ணத்தை மெல்ல வளர்த்தெடுத்தார்கள்.
சிறுவர்களின் வேகம் பிரமிக்கத்தக்கதாய் இருந்தது. பதினைந்து வயது சிறுவனின் நினைவாற்றலை எட்டிப்பிடிப்பது எனக்கு சற்று சிரமமாகத்தான் இருந்தது. காரணம், நான் எந்த ஒரு சம்ஸ்கிருத வார்த்தையையும் அதோடு தொடர்புடைய பொருளின் வழியாகவே அடைய முயன்றேன். ஆனால் சிறுவர்களோ சம்ஸ்கிருத வார்த்தையை அவ்வார்த்தை மட்டுமானதாகவே கண்டடைந்தார்கள்.
சம்ஸ்கிருதம் படிப்பதைத் தவிர்த்து இவ்வகுப்புகள் பல நல்ல நினைவுளைக் கொண்டுவந்து சேர்த்தன. கிட்டத்தட்ட பதினோரு வருடங்களுக்குப் பிறகு ஒரு மாணவனாக வகுப்பில் அமர்வது என்பதே பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. நியூ ஹொரைசன் மீடியாவின் ப்ராடிஜி பதிப்பகத்தின் சார்பாக, பள்ளிகளில் சூடாகும் பூமி (Global warming) பற்றிய வினாடி வினா எழுத்துத் தேர்வு நடத்தியபோது பல பள்ளிகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. வகுப்புகளில் மாணவர்கள் அமர்ந்திருப்பதையும், எவ்வித தன்முனைப்பும் இன்றி, ஆசிரியரே எல்லாமும் என்கிற எண்ணத்தோடு அவர்களோடு பேசியதையும் பெரும் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் ஒரு பகுதி இந்த சம்ஸ்கிருத வகுப்பில் அடித்துச்செல்லப்பட்டதாக உணர்ந்தேன்.
இவை போக, சக ‘மாணவ நண்பர்கள்’ தந்த அனுபவங்கள். என் பக்கத்து நண்பருக்கு வயது 60தான் இருக்கும். ‘வாக்கிங்க்குக்கு வாக்கிங்கும் ஆச்சு, சம்ஸ்கிருதமும் ஆச்சு பாருங்க’ என்றார். இன்னொருவர், ‘இப்படி தமிழும் சொல்லாம இங்லீஷும் சொல்லாம சொல்லித் தந்தா என்ன புரியறதுன்றீங்க? நான் சொல்லிட்டேன். நேரா சொல்லிட்டேன். கேப்பாங்களான்னு தெரியலை’ என்றார்.
பத்தாம் நாள் நிறைவு நாளில் இரண்டு சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். அவர்கள் பேசியதில் எனக்கு பல கருத்துகள் உடன்பாடில்லாதவை. ஆனால் இதுபோன்ற வகுப்புகளில் இவற்றைத் தவிர்க்கமுடியாது என்று நினைத்துக்கொண்டேன். பல மாணவர்கள் சம்ஸ்கிருதத்தில் நகைச்சுவை கதைகள் சொன்னார்கள். அனுபவக் கதைகள் சொன்னார்கள். சிறிய நாடகங்கள் நடத்தினார்கள். எல்லாமே சிறந்தவை என்று சொல்லமுடியாது. ஆனால் ஒரு எல்கேஜி, யூகேஜி மாணவர்களாக அவர்களைக் கற்பனை செய்துகொண்டால், அவர்களின் நிகழ்ச்சிகள் அற்புதமானவை என்றே சொல்லவேண்டும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், அஹம் ஏகம் ஹாஸ்ய கதாம் உக்தவான்! (நான் ஒரு நகைச்சுவைக் கதை சொன்னேன்!)
சம்ஸ்கிருதத்தின் பெருமைகளையும், அது எவ்வாறு இந்தியாவோடு தொடர்புகொண்டுள்ளது என்பதையும் ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு நாளும் விளக்கிச் சொன்னார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு குட்டிக் கதை சம்ஸ்கிருதத்தில் சொன்னார்கள். இந்தக் கதைகளின் போது அங்கிருந்த அனைத்து மாணவர்களும் அடைந்த குதூகுலம் இப்போதும் நினைவிலிருக்கிறது. இதன் வழியே கொஞ்சம் யோசித்தால் எப்படி ரஜினி, ஜாக்கிசான் போன்றவர்கள் குழந்தைகளைப் போலவே பெரியவர்களையும் கவர்கிறார்கள் என்பதைக் கண்டடையலாம் என நினைத்துக்கொண்டேன்.
ஒரு பதினைந்து வயது மாணவன் இதுபோன்ற வகுப்பினால், இந்தியப் பற்றையும், புராணக் கதைகளின் பரீட்சியத்தையும் பெறமுடியும். பின்னாளில் இவற்றை அவன் கைவிட நேர்ந்தாலும், இதைத் தெரிந்துகொண்டு புறக்கணிப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும். புராணக் கதைகள் சொல்லப்பட்டபோது, பல கதைகளை என்றோ கேட்ட நினைப்பிலேயே கேட்டுக்கொண்டிருந்தேன். இனி இக்கதைகள் எல்லாம் எப்படி நம் அடுத்த தலைமுறைக்குச் செல்லும் என்கிற சோகம் எழுந்தது. கதை சொல்லும் நேரத்தை நம் தொலைக்காட்சிகள் எந்த அளவு திருடிக்கொண்டுவிட்டன என்பதும் புரிந்தது. நான் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும், என் கணிசமான நேரத்தை என் மகனோடு செலவழிக்கவே விரும்புவேன். அதில் கதை சொல்லலும் அடங்கும். கதை என்றால் நானாக உருவாக்கிய கதைகள். புலியும் ஆடும் மாடும் மயிலும் குரங்கும் டைனசோரும் உலவும் கதைகள். இந்த சம்ஸ்கிருத வகுப்புகள் விளைவாக, இனி என் மகனுக்கு புராணக் கதைகளையும், மரியாதை ராமன், தெனாலி ராமன் கதைகளையும் கண்ணன் கதைகளையும் சொல்லலாம் என்றிருக்கிறேன். இவ்வகுப்பில் சொல்லப்பட்ட இரண்டு கண்ணன் கதைகளை என் மகனுக்குச் சொன்னபோது, அவன் அடைந்த குதூகலம் வார்த்தையில் சொல்லமுடியாதது. முதல்வேலையாக எனி இந்தியனில் சில புத்தகங்களை ஆர்டர் செய்தேன்.
சம்ஸ்கிருதம் சொல்லித்தந்த ஆசிரியர் ஒருவர் இப்படிச் சொன்னார். “உங்கள் தாய் மொழி என்ன? சம்ஸ்கிருதமா? இல்லை. தமிழ். உங்கள் தாய்மொழி? மலையாளம். உங்களது? துளு. ஒரு சம்ஸ்கிருதம் சொல்லித்தரும் ஆசிரியர் எப்படி சம்ஸ்கிருதத்தை தாய்மொழியல்ல என்று சொல்லமுடியும் என்று யோசிக்கிறீர்களா? இப்போது சொல்கிறேன். சம்ஸ்கிருதமும் உங்கள் தாய்மொழிதான். உங்கள் தாய் உங்களுக்குச் சொல்லித் தரும் தாய்மொழி தமிழாகவோ, மலையாளமாகவோ இருக்கட்டும். உங்கள் இன்னொரு தாய் பாரதத் தாய். அவளின் மொழி சம்ஸ்கிருதம்.” எந்த ஒரு மொழியையும் புறக்கணிக்காத இந்த அணுகுமுறையே நிச்சயத் தேவை. என் தாய்மொழி தமிழ். என் தாய்நாட்டின் மொழி சம்ஸ்கிருதம் என்று இருப்பதில்தான் என்ன தவறு இருந்துவிடமுடியும்?
ஸம்ஸ்க்ருத பாரதியின் தொலைபேசி எண்: 044-28272632. மின்னஞ்சல் முகவரி: samskritabharatichn@yahoo.com. இதைத் தொடர்புகொள்வதன் மூலம் அடுத்த சம்ஸ்கிருத வகுப்புகளைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளமுடியும்.
நன்றி: தமிழ் ஹிந்து வலைத்தளம் (தமிழ் ஹிந்துவில் வந்த இந்தக் கட்டுரையை விஜயபாரதம் தனது இதழில் பிரசுரித்திருந்தது.)