இரண்டு கவிதைகள்

பதிவு வகை: கவிதை

தெரு

அதிகாலையின் நிசப்தத்தில்
நீண்டும் சிறுத்தும்
இருவழி திறந்தும் ஒருவழி மூடியும்
அலைந்து நெளியும் என் தெருவில்
பரவி நிலைத்துக் கிடக்கும்
இருளில்; ஒளிவெள்ளத்தில்
விரவியிருந்தன பல வீடுகளின் குரல்கள்
கடையைத் திறக்கும் கதவுச் சத்தத்தில்
கலைந்தோடும் நினைவுகளைச் சுமந்தபடி
புலரும் பொழுதின் நினைவுக் குமிழ்களில்
என்னைத் தேடிக்கொண்டு கடந்தபோது
அடுத்த தெரு வந்துவிட்டிருந்தது.

ஒரு தற்கொலையும் கொலையும்

ஒரு குரல் என்னை எழுப்பியது
அக்குரல் என்னை தூண்டியது
யோசனையைக் கைவிடச் சொல்லி
சில முடிவுகளைச் சொல்லிச் சென்றது
ஒவ்வொன்றையும் செய்துமுடிக்க முடிக்க
அடுத்தடுத்த குரல்கள் எழுந்துகொண்டே இருந்தன
யோசிக்கத் திராணியற்ற,
ஆனால் என்றேனும் ஒருநாள் எழந்தே தீரும்
என் குரல்
உங்களைத் தூண்டும்போது
குற்றசசாட்டுக் குறிப்புகளோடு வந்து நிற்பவர்களுக்கு
சமர்ப்பிக்கிறேன் என்னை எழுதிச் செல்லும் இக்குரலை.

Share

Comments Closed