குதலைக் குறிப்புகள் – 2

நடிகர் நாகேஷ் காலமான செய்தி வருத்தத்தைத் தந்தது. நல்ல நடிகர். தலை சிறந்த உலக நடிகர்களுள் ஒருவர் என்றெல்லாம் சொல்லமுடியாவிட்டாலும், தமிழின் மிக முக்கியமான நடிகர்களுள் ஒருவர் என்று உறுதியாகச் சொல்லலாம். அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த நடிகர்களுக்கே உரிய அதீத நடிப்பு இவரிடமும் இருந்தது என்றாலும், இவரது டைமிங்கும் உடல் மொழியும் ஒரு தேர்ந்த நகைச்சுவை நடிகனிடம் மட்டுமே காணக் கிடைப்பவை. சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து தனது முக சேஷ்டைகளால் எரிச்சல் ஏற்படுத்தியிருக்கிறார் என்பதையும் மறுக்கமுடியாது. அபூர்வ சகோதரர்கள் படத்தில் வில்லனாக அவர் நடித்தது கமல் செய்த கொடுமை. ஆனால் மகளிர் மட்டும் படத்தில் அவர் பிணமாக நடித்தது, அவர் நடித்த படங்களில் முக்கியமான ஒன்று. சந்திரோதயம், சாது மிரண்டால், திருவிளையாடல், காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, நான், இரு கோடுகள், மிஸ்டர் சந்திரகாந்த் ஆகிய படங்கள் சட்டென நினைவுக்கு வருகின்றன. நாகேஷின் ஆத்மா சாந்தியடையட்டும்.

-oOo-

விவேக்கிற்கு பத்மஸ்ரீ விருது கொடுத்திருக்கிறார்கள். உதித் நாராயண் பத்மஸ்ரீ ஆகியிருக்கிறார். கூடவே ஜெயகாந்தனுக்கு பத்ம பூஷண் கொடுத்திருக்கிறார்கள். இப்போது ஜெயகாந்தனைப் பாராட்டினால் அவரைக் கிண்டல் செய்வது போல ஆகிவிடும். யார் யாருக்கு விருது கொடுத்திருக்கிறார்கள் என்று பார்த்து, அதில் சரியானவரை நாமே தேர்வு செய்து அவரை மட்டும் பாராட்டவேண்டும். யாரையும் உடனே பாராட்டிவிடமுடியாது என்று உறுதியாகச் சொல்கிறது இந்திய அரசு. ஜெயகாந்தன் விருதுக்காக அலைபவர் அல்ல. விருதுகள் அவரைத் தேடி வருகின்றன. சமீப கால வீழ்ச்சியைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், ஜெயகாந்தனை தமிழ் இலக்கிய உலகின் ஒரு நிகழ்வாகக் கருதலாம். யாரும் பேசத் தயங்கும் கருத்துகளை எவ்விதத் தயக்கமும் இன்றி, எல்லோரும் உணரும் வண்ணம் உரக்கப் பேசியவர் அவர். அவரது படைப்புகளும் அவரைப் போலவே வெளிப்படையானவை. இந்த பத்ம பூஷன் விருதுக்கு யாரின் சிபாரிசின் பேரில் அவருக்குக் கிடைத்திருந்தாலும், அவர் இந்த விருதுக்கு முற்றிலும் தகுதியுடையவரே. விவேக்கிற்கு வரலாம். ஜெயகாந்தனை சிபாரிசு செய்தவர்களே விவேக்கையும் சிபாரிசு செய்திருப்பார்களோ என்ற எண்ணத்தைத்தான் ஜீரணிக்கமுடியவில்லை. நல்லவேளை நாகேஷுக்கு பத்மஸ்ரீ விருது கிடைக்கவில்லை.

ராமாபுரம், சென்னை-89லிருந்து ஒரு ரசிகரும் கிட்டத்தட்ட இப்படி புலம்பியிருந்தார்.

’சிலுக்குக்கும் நமீதாவுக்கும் பத்மஸ்ரீ தராததை வன்மையாகக் கண்டிக்கிறேன். சிலுக்கின் சேவை மொழிகளைக் கடந்தது. அவர் திரையில் தோன்றி தன் மேலாடையைக் கழற்றிய நேரத்தில் கைதட்டாத ரசிகர்களே கிடையாது. இதில் கன்னடக்காரன், தமிழன், தெலுங்கன் என்கிற பேதமே இல்லை. அப்படிப்பட்ட சிலுக்குக்கு மரியாதை செய்யாத இத்தேசம் என்ன தேசமோ?’

திருநெல்வேலியில் திரையிடப்பட்ட ஒரு மேற்படி திரைப்படத்தில் சிலுக்கு நடித்திருந்தார். அவர் தனது மேலங்கியைக் கழட்டும் ஒரு காட்சிக்கு, திரை முழுவதும் சீரியல் செட் லைட்டுகளை ஓடவிட்டு குஷிப்படுத்தியது தியேட்டர் நிர்வாகம். திருநெல்வேலியில் ஒரு முக்கியமான காட்சியில் திரையைச் சுற்றி சீரியல் செட் லைட்டைப் போடும் கலாசாரம் வெகுவாக வேரூன்றியிருந்தது. செம்பருத்தி திரைப்படத்தில் பிரசாந்த் ஓடிவந்து பைக்கைத் தாண்டும்போது, குணா படத்தில் ‘இது அப்பன் கொடுத்த மூஞ்சி’ என கமல் சுற்றிச் சுற்றிப் பேசும்போது, ராக்கம்மா கையத் தட்டு பாடலின் துவக்கத்தின் போது என சீரியல் செட்டு சுற்றியடிக்க படம் பார்த்த நினைவுகள் வருகின்றன. கடைசியாக திருநெல்வேலியில் படம் பார்த்து 3 வருடங்கள் இருக்கலாம். அப்போதும் இந்த சீரியல் செட் கலாசாரம் இருந்தது. இப்போதும் இருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன். நிறைய ஊர்க்காரர்கள் இது பற்றிக் கிண்டல் செய்திருக்கிறார்கள். இந்தப் புகழை அடைந்த ஒரே நடிகை சிலுக்காகத்தான் இருக்கமுடியும். அவருக்கு பத்மஸ்ரீ கொடுத்துவிடவேண்டியதுதான். சாரு நிவேதிதா ‘நேநோ’ புத்தகத்தை சிலுக்குவிற்கு சமர்ப்பணம் செய்திருப்பது கூடுதல் தகுதி.

-oOo-

முத்துக்குமாரின் மரணம் முட்டாள்தனமானது என்று சொன்னாலே ஈழத்தமிழர்களின் எதிரணி என்று ஒரேடியாக முடிவு கட்டிவிடக்கூடிய சூழலில்தான் இதை எழுதுகிறேன், முத்துக்குமாரின் மரணம் முட்டாள்தனமானது. வருத்தம் தரக்கூடியது. ஈழத் தமிழர்களின் வாழ்வும் பாதுகாப்பும் நிச்சயம் உறுதி செய்யப்படவேண்டியதுதான். போர் நிறுத்தம் என்கிற குரல் ஓங்கி ஒலிக்கும் சமயம் புலிகளின் கை கீழிறங்கிய சமயமாக இருப்பதுதான் பல்வேறு சந்தேகங்களை வரவைக்கிறது. இலங்கை அரசைப் போர் நிறுத்தம் செய்யச் சொல்லி வற்புறுத்தும் எந்தத் தமிழுணர்வுத் தலைவரும் புலிகளைப் போர் நிறுத்தம் செய்யச் சொல்வதில்லை. கடந்த காலங்களில் புலிகள் அறிவித்திருந்த போர் நிறுத்தங்களும், அவர்கள் மீண்டும் போராடுவதற்குத் தேவையான இடைவெளிக் காலமாகத்தான் இருந்திருக்கின்றன. இப்படி புலிகள், இலங்கை அரசு, தமிழுணர்வுத் தலைவர்கள் மத்தியில் இறந்துகொண்டிருப்பது அப்பாவித் தமிழர்கள் என்பதுதான் சோகம். இந்தச் சூழலில் முத்துக்குமாரின் மரணம். தமிழுணர்வுத் தலைவர்கள் எல்லாம் இதைத் தியாகம் என்று முடிவு செய்து அறிவித்துவிட்டார்கள். இந்தத் தியாகத்தைத் தொடர்ந்து பல தியாகங்கள் வந்துவிடக்கூடாது என்றுதான் பதறத் தோன்றியது. ஏதேனும் ஒரு கட்சியின் ஏதேனும் ஒரு தலைவனாவது தீக்குளிக்கும்வரை, எந்த ஒரு தொண்டனும் இனி தீக்குளிக்கக்கூடாது என்று முடிவு செய்துகொண்டால் நன்றாக இருக்கும். முத்துக்குமாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

புலிகள் – இலங்கை அரசு பிரச்சினையை ஒட்டி, தமிழ்நாடெங்கும் தமிழுணர்வு கொளுந்துவிட்டு எரிவதாக ஒரு பாவனை வலைப்பதிவுகளில் மட்டுமே காணக் கிடைக்கிறது. எனக்குத் தெரிந்து பெரிய அளவில் இந்த உணர்வு நாடெங்கும், தெருவெங்கும் கனன்று கொண்டிருக்கிறது என்பதை ஏற்கமுடியவில்லை. ஊடகங்கள் இவற்றைப் பற்றி அதிகம் எழுதவில்லை. வலைப்பதிவுகளில் தமிழுணர்வு நிறைந்தவர்கள் அதிகம் இருப்பதால் இப்படி நிகழ்ந்திருக்கலாம். தமிழ்நாடெங்கும் இந்த உணர்வு ஆழமாகப் பரவியிருக்கிறது என்றுதான் நிறைய பதிவர்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இது உண்மையா, அவர்களது ஆவலா என்பது தெரியவில்லை. இன்னும் சில தினங்களில் தெரியலாம். சில கட்சிகள் அறிவித்திருந்த கடையடைப்பிற்கு கிடைக்காத ஆதரவை வைத்துப் பார்க்கும்போது, இந்த உணர்வு வலைப்பதிவுகளில் அதீதமாகக் காட்டப்படுகிறது என்றுதான் தோன்றுகிறது.

-oOo-

பா. திருச்செந்தாழையின் ‘வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம்’ புத்தகத்தில் சில சிறுகதைகளை வாசிக்க முயன்றேன். எல்லாம் தலைக்கு மேலே ஓடுகின்றன.

‘அவநம்பிக்கை கொண்டவனாகவும் துல்லிய முடிவெடுக்கவியலாதவனாகவும் என்னை அறிந்துகொண்ட பிறகு குற்ற உணர்வுகளையும் கழிவிரக்க முனகல்களையும் எழுத்தாக்கத் துவங்கிய ஆரம்பித்தில் முதல் உரையாடல்காரரான ஹவியிடமிருந்து நான் எடுத்துக்கொண்டு பதியனிட்ட தானியச்சொற்களில் பச்சையம் பூக்கும் பருவத்தில் எங்களின் நடுவே காலம் அமர்ந்தபடியிருக்கிறது.’

முன்னுரையில் இருந்த வரிகள் இவை. இவற்றைப் போன்ற வரிகள் நிறைய வருகின்றன. கோணங்கியின் இடத்தை இலகுவாக அடையலாம் திருச்செந்தாழை என்று தோன்றியது. ஆனாலும் இச்சிறுகதைத் தொகுப்பை படித்துவிடவேண்டும் என நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.

-oOo-

மு. ஹரி கிருஷ்ணன் ஆசிரியராக இருக்கும் மணல் வீடு சிற்றிதழ் வாசித்தேன். ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ என்கிற பத்தியைப் பார்த்தேன். காளமேகப் புலவர் அல்குலுக்கும் ஓடத்திற்கும் பாடிய சிலேடைப் பாடலைப் பற்றிய விவாதம் இருந்தது. தொடர்ந்து சதவிகரம் என்னும் வார்த்தை பற்றிய ஆராய்ச்சி இருந்தது. அந்த இரண்டு பாடல்கள்.

பலகை யடுமுள்ளே பருமாணி தைக்கும்
சலமிறைக்கும் ஆளேறித் தள்ளும் – உலகறிய
ஓடமும் ஒன்றே உலகநாதன் பெண்டீர்
மாடமும் ஒன்றே மதி.

வாலி மடிந்ததுவும் வல்லரக்கர் பட்டதுவும்
கோலமுடி மன்னர் குறைந்ததுவும் – சால
மதியுடைய நூற்றொருவர் மாண்டதுவும் ஐயோ
சதவிகரத் தால்வந்த தாழ்வு.

மற்ற விஷயங்களை மணல் வீடு புத்தகத்தில் வாசிக்கவும்.

-oOo-

Share

Comments Closed