சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (இறுதி நாள்)

பதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009

சென்னை புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளான நேற்று மிக நல்ல கூட்டம் இருந்தது. நல்ல விற்பனையும் இருந்தது. இரவு 8.30க்கு முடியும் புத்தகக் கண்காட்சியை 9.30 வரை நீட்டித்தார்கள்.

கிழக்கு அரங்கில் பில் போட்டுக்கொண்டிருக்கும்போது ஞாநி வந்தார். புக் வேணுமா சார் என்றதும், ‘தினமும் உங்களைப் பார்த்தா உங்க ப்ளாக்ல என்னைப் பத்தி எழுதுவீங்கன்னு தெரியாம போயிடுச்சு. இன்னைக்கு பார்த்துட்டேன். எழுதிடுங்க’ என்றார். ‘சார், நீங்க வேற சார்’ என்றேன். ‘ரெண்டு நாள் வராம விட்டுட்டேன்’ என்றார் ஞாநி. இரவு புத்தகக் கண்காட்சி முடிந்து கிளம்பும்போது மீண்டும், ’பார்த்துட்டேன், மறந்துடாதீங்க’ என்றார். 🙂

கவிஞர் மதுமிதா வந்திருந்தார். கவிதைகளோடு வரவில்லை என்பது மிகப்பெரிய ஆசுவாசம். வாழ்க அவரது நல்லுள்ளம். இரண்டு நாள்களுக்கு முன்பு கவிஞர் நிர்மலா வந்திருந்தார். அவரும் கவிதைகளோடு வரவில்லை என்பது கவனத்திற்குரியது.

வார்த்தை இதழில் ‘எதைப்பற்றியும் அல்லது இது மாதிரியும் தெரிகிறது’ என்ற தொடரை எழுதும் வ.ஸ்ரீநிவாசன் வந்திருந்தார். பெரியார் புத்தகத்தைப் பார்த்துவிட்டு ‘ராஜாஜி புத்தகம் இருக்கிறதா’ என்று கேட்டார். அவரிடம் ராஜாஜி எழுதிய கடிதங்களின் தகவல்கள் உட்பட பல்வேறு தொகுப்புகள் இருக்கின்றன என்றறிகிறேன்.

நிறைய வாசகர்கள் திடீரென்று சில பெயர்களைச் சொல்லி அப்புத்தகங்கள் இருக்கிறதா எனக் கேட்டார்கள். முக்கியமாகக் கேட்கப்பட்டவை. பிளாட்டோ, அரிஸ்டாட்டில், மார்கோ போலோ, உலகப் போர், இலங்கை பற்றிய புத்தகம், ராஜிவ் காந்தி, அம்பேத்கர் போன்றவை. முன்பொருதடவை இப்படி வசந்தகுமாரிடம் ‘நிறைய பேர் காடு புத்தகம் கேக்கறாங்க, ஏன் ரீபிரிண்ட் போடலை’ என்று கேட்டதற்கு:

‘எத்தனை பேர் கேட்டிருப்பாங்க?’

‘ஒரு இருபது முப்பது பேர் கேட்டிருப்பாங்க.’

‘ஆயிரம் காப்பி அடிச்சிட்டு மீதி 970ஐ என்ன பண்றது?’

தோழர் செல்லரித்துப்போன, பழுப்பேறிய புத்தகங்களை ஒரு கட்டாகக் கட்டி எடுத்துக்கொண்டு வந்தார். மிகவும் பத்திரமாக யாரும் எடுக்கமுடியாத இடத்தில் வைத்துவிட்டு, ‘பாத்துக்கோங்க’ என்று சொல்லிவிட்டுப் போனார். ‘இதை புத்தகக் கண்காட்சி வளாகத்தோட நடுவில வெச்சாலும் ஒருத்தனும் எடுக்கமாட்டான்’ என்றேன்.

இப்படி பல நண்பர்களின் சந்திப்பினூடாக பதிப்பாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புத்தகக் கண்காட்சி நிறைவுக்கு வந்தது. சென்ற புத்தகக் கண்காட்சியைவிட ஒரு லட்சம் வாசகர்கள் அதிகம் வந்தார்கள் என்ற பேட்டியை காந்தி கண்ணதாசன் கொடுத்துக்கொண்டிருக்க, எனது ஒட்டுமொத்த அப்சர்வேஷன் இங்கே.

* சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி நிச்சயம் மந்தம். கூட்டத்திலும் சரி, விற்பனையிலும் சரி, சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைவாகவே இருந்தது.

* புத்தகக் கண்காட்சி நடக்கும் இடத்திற்கு சரியான பேருந்து வசதி இல்லை என்பது மிகப்பெரிய குறை. இதை நீக்காதவரை இந்த இடம் இதுபோன்ற பிரச்சினைகளையே தந்துகொண்டிருக்கும்.

* அரங்க உள்கட்ட அமைப்பைப் பொருத்தவரை, ஒவ்வொரு ஆண்டும் பபாஸி மிகச் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறது, மேம்படுத்திக்கொண்டே இருக்கிறது. உள்ளே வரும் எந்த ஒரு வாசகரும் இதை உணரமுடியும். நிறைய கூட்டம் வந்தாலும் நடப்பதற்கு ஏற்ற, அகலமான நடைபாதை, சிவப்புக் கம்பளங்கள் விரித்த பாதை, எல்லாமே சரியாகச் செய்யப்பட்டிருக்கின்றன.

* புத்தகக் கண்காட்சி வளாகத்திற்குள்ளே உணவு அரங்கங்கள் வைப்பதை தவிர்க்கவேண்டும்.

* சென்ற ஆண்டுவரை மல்டிமீடியா வரிசை எனத் தனியாகக் கொடுத்திருந்தார்கள். அது இந்தமுறை இல்லை. அடுத்தமுறை மல்டிமீடியா அரங்க வரிசையைத் தனியாக வைக்கவேண்டும்.

* சென்ற ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி பற்றிய விளம்பரங்கள் மிகக்குறைவு. சன், ஜெயா, கலைஞர் எனப் பல்வேறு சானல்கள் இருக்கும் நிலையில், அவர்களுடன் பேசி, குறைந்த விலையில் விளம்பரங்களைப் பெற்று, அவற்றில் ஒளிபரப்பாதவரை, கூட்டம் இப்படி குறைந்துகொண்டுதான் போகும்.

* புத்தகக் கண்காட்சிக்கென்று ஒரு பெரிய ஈர்ப்பு இருக்கிறது. அதைத் தக்கவைத்துக்கொள்ள செய்யவேண்டிய விஷயங்களைத் தொடர்ந்து செய்யவேண்டும். திறப்புவிழாவிற்கு மக்களை ஈர்க்கும் ஒரு தலைவரை அழைப்பதில் தொடங்கி, தொடர்ந்து ஊடகங்களில் புத்தகக் கண்காட்சி பற்றி செய்திகள் வரவைப்பதுவரை பல்வேறு செயல்களைச் செய்யவேண்டும். அப்போதுதான் பத்து நாளும் மக்கள் மனதில் புத்தகக் கண்காட்சி பற்றிய நினைவு வந்துகொண்டே இருக்கும்.

* சென்ற ஆண்டை ஒப்பிடும்போது கழிப்பறைகளின் வசதி கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் அவை சரியாகப் பராமரிக்கப்படவில்லை. இதை பபாஸி கவனத்தில் கொள்ளவேண்டும்.

* எல்லா நாளும் சரியாகக் கிடைத்துக்கொண்டிருந்த குடிநீர், இறுதிநாள் காலைமுதல் கிடைக்கவில்லை. ஒருநாள்தானே என்றெல்லாம் சொல்லமுடியவில்லை. கடுமையான தாகம். குடிநீர் வாங்க, பெரும்பாலான பதிப்பாளர்களால் வெளியில் செல்லவும் முடியாது. இதுபோன்ற குறைகளையும் பபாஸி களையவேண்டும்.

* வாகனங்களை நிறுத்துமிடம் சரியாக, சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. சென்ற ஆண்டு வரை இருந்த குழப்பங்கள் அறவே தவிர்க்கப்பட்டிருந்தன.

* விளம்பரங்களைத் தவிர்த்துப் பார்த்தால், பபாஸியின் செயல்பாடு பாராட்டத்தக்கதாகவே உள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இருக்கும் சில குறைகளும் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

* கடைசியாக ஒன்று. தொடக்க நாளில் மழை பெய்வதைத் தடுக்க பபாஸி முயலவேண்டும்.

நான் குழந்தைகளுக்களுக்கான சில புத்தகங்களை வாங்கினேன். எளிய ஆங்கிலத்தில் மகாபாரதம், ராமாயணம், பஞ்ச தந்திரக் கதைகள் வாங்கினேன். நாவல் டைமில் மலிவு விலையில் வெளிவந்த ‘கோணல் பக்கங்கள் பாகம் 1’ பத்து ரூபாய்க்கு வாங்கினேன். தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் காலியாகிவிட்டன. அதனால் வாங்கமுடியவில்லை. பாரதிய வித்யா பவனில், ‘தமிழ் வழியாக சமிஸ்கிருதம்’ படிக்கும் புத்தகங்களை வாங்கச் சென்றேன். ‘முதல் ரெண்டு பாகம் இல்லை, மூணாம் பாகத்துலேர்ந்து வாங்கிக்கிறேளா’ என்றார்கள்.

பின்குறிப்பு 1: வைகுண்ட ஏகாதசி அன்று தொடங்கியதால் பல பதிப்பாளர்களுக்கு நாமம் விழுந்துவிட்டதாக சிலர் பேசிக்கொண்டார்கள். இந்த சைவ சூழ்ச்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பின்குறிப்பு 2: ஒவ்வொரு நாளும் எதாவது எழுதவேண்டும் என்கிற தொல்லை இன்றோடு ஒழிந்தது என்பதை எண்ணும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! சும்மா இருப்பதே சுகம் என்றவனே உலகின் தலைசிறந்த ஞானி. 🙂

Share

Comments Closed