கம்பிகளின் வழியே கசியும் வானம் (மாலனின் ’என் ஜன்னலுக்கு வெளியே’ புத்தக வெளியீடு)

என் ஜன்னலுக்கு வெளியே நூலை ஜென்ராம் வெளியிட, சிங்கப்பூர் ’ஒலி’ பண்பலையின் சாமிநாதன் மகாலிங்கம் பெற்றுக்கொண்டார். (மகாலிங்கம் பெயரைத் தவறாக எழுதியதற்கு வருந்துகிறேன்.) பத்ரி சேஷாத்ரி புத்தகத்தை அறிமுகம் செய்துவைத்தார்.

மாலனின் பல்வேறு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பான ‘என் ஜன்னலுக்கு வெளியே’ நூலை வெளியிட்டுப் பேசிய ஜென்ராம், தான் அரசியல் மற்றும் சமூகம் வகைகளில் வெளியாகியிருக்கும் கட்டுரைகளை மட்டுமே வாசித்ததாகவும், அதைப் பற்றி மட்டுமே பேசப்போவதாகவும் தெரிவித்தார். அடிப்படையில் ஒரு புத்தகத்தை விமர்சிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று முதலிலேயே சொல்லிவிட்ட ஜென்ராம், என் ஜன்னலுக்கு வெளியே புத்தகத்தில் உள்ள பல்வேறு கட்டுரைகளைப் பற்றிய தன் கருத்துகளைச் சொன்னார். தான் எழுதிய கட்டுரைகளில் எப்படி மாலனின் கட்டுரைகள் எப்படி ஒன்றுபடுகிறது அல்லது வேறுபடுகிறது என்பதை ஒப்பிட்டுப் பேசிய அவர், மாற்றுக் கருத்தை முன்வைக்க இன்று ஓர் எழுத்தாளர் இருப்பதே மகிழ்ச்சியான விஷயம் என்றார். சேது சமுத்திரம் பற்றிய மாலனின் கட்டுரை ஒரு வித்தியாசமான கோணத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது என்று பாராட்டினார். மாலனோடு ஒத்துப்போகமுடியாத கருத்துகளையும் சொன்ன ஜென்ராம், விவாதத்தின் மூலம் எதையும் நிறுவிவிடமுடியாது என்றும் அதற்கு உதாரணமாக அசோகமித்திரனின் ‘ரிக்‌ஷா ரிஷ்கா’ கதையைக் குறிப்பிட்டார்.

மாலன் ஏற்புரை வழங்கினார். சிங்கப்பூர் தமிழ்முரசுவில் தான் எப்படி எழுத நேர்ந்தது என்பதைச் சொல்லிய மாலன், சொல்லாத சொல் கட்டுரைத் தொகுப்பில் தொடக்கத்தில் இருக்கும் அறிமுகக் குறிப்பின் பின்னணி, அவை இக்கட்டுரைகளில் இல்லாததன் பின்னணி என்பதையெல்லாம் விவரித்தார். ஜென்ராம் பேசும்போது, சேது சமுத்திரத் திட்டக் கட்டுரையின் மூலம் தனக்கு ஒரு ஹிந்துத்துவ முத்திரை விழுந்துவிடும் அபாயம் உள்ளது என்று குறிப்பிட்டதை நினைவுகூர்ந்த மாலன், இது போன்ற முத்திரைகளைப் பல்லாண்டு காலமாகத் தான் எதிர்கொண்டு வந்திருப்பதாகவும், அதனால் தனக்கு எருமைத்தோல் வந்துவிட்டதாகவும் சொன்னார். தான் ஜனகணமன நாவல் எழுதியபோது ஆர்.எஸ்.எஸ். ஆள் என முத்திரை குத்தப்பட்டதாகவும், அப்போது எழுதிய வேறொரு படைப்பை முன்வைத்து நக்ஸல் ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டதாகவும், ஒரே நேரத்தில் ஒருவர் எப்படி இந்த இரண்டுமாகவும் இருக்கமுடியும் என்று தனக்கு விளங்கவில்லை என்றும் சொன்னார். சமீபத்திய வரலாறான பாரதியின் வரலாற்றைக் கூட நம்மால் இன்னும் சரியாகப் பதிவு செய்யமுடியவில்லை என்றும், மேடைக்கு மேடை மேம்போக்காக, பாரதி யானையால் மிதிபட்டு இறந்தார் என்றும் பேசுகிறார்கள் என்றும் சொன்ன மாலன், இதன் மூலம் பத்தி எழுத்தாளர்களின் முக்கியத்துவத்தைச் சொன்னார். இன்னும் சிறிது நேரம் தொடர்ந்த மாலனின் பேச்சை அடுத்து கலந்துரையாடல் தொடங்கியது.

முதல் கேள்வியே அவரது இலக்கிய முகம் சார்ந்ததாக அமைய, அதற்குப் பதில் சொன்ன மாலன் தான் என்னதான் எழுதினாலும் தான் அடிப்படையில் ஒரு வாசகனே என்று சொன்னார். வலைப்பூக்களின் தொடக்க காலத்தில் அதை முன்னெடுத்துச் சென்றவர்களில் ஒருவரான மாலன் தற்போது வலைப்பூக்களைப் பற்றிய ஒரு அவநம்பிக்கை கொண்டிருப்பதாகத் தோன்றுகிறதே என்று நான் கேட்டபோது, தனக்கு இன்னும் வலைப்பதிவுகளின் மேல் நம்பிக்கை உள்ளதாகவும், தனது நம்பிக்கையின்மை வலைப்பதிவுகளின் திரட்டி மீதானது மட்டுமே என்றும் குறிப்பிட்டார். சேது சமுத்திரத் திட்டம் பற்றிய கேள்விக்கு, அது சுற்றுப் புறச் சூழல் சார்ந்து பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்றால், அத்திட்டம் தேவையில்லை என்றும், அது செலவு ரீதியாகக் கட்டுப்படி ஆகாது என்றால் அதனால் பயனில்லை என்றும், அது ஹிந்துக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றால் அந்த நம்பிக்கையை ஏன் நிராகரிக்கவேண்டும் என்றும் மூன்று கோணங்களில் பேசினார். ராமன் இருந்தாரா இல்லையா என்றால் கண்ணகி இருந்தாரா இல்லையா என்று தான் எதிர்க்கேள்வி கேட்க விரும்புவதாகவும், கண்ணகிக்கு சிலை வைத்தல் ஒரு நம்பிக்கை என்றால், ராமர் பாலமும் அத்தகைய ஒரு நம்பிக்கையாக ஏன் இருக்கக்கூடாது என்றும் கேட்டார் மாலன். சேது சமுத்திரத் திட்டம் பொருளாதார ரீதியில் சாத்தியமானதே என்ற கருத்தைச் சொன்ன லக்கிலுக்கின் ஆதாரத்தை மாலன் மறுத்து, முதலில் பண உதவி செய்வதாக இருந்த வங்கி, இத்திட்டம் பொருளாதார ரீதியில் சாத்தியமானதில்லை என்று பின்வாங்கிவிட்டதை மாலன் குறிப்பிட்டார். பவளப் பாறைகள் 30 கி.மீ. வரை உள்ளதாகவும், அதில் மிகச் சில மீட்டர்களில் உள்ள பவளப் பாறைகள் மட்டுமே அழிய நேரிடும் என்றும் அதனால் பெரிய சுற்றுப் புறச் சூழல் அச்சுறுத்தல் இல்லை லக்கிலுக் சொன்னார். இதனால் மீன்வளம் குறையும் என்று தான் நம்பவில்லை என்றார் லக்கிலுக். மாலன், சுற்றுப்புறச் சூழலா, ஒரு திட்டமா என்றால் தனக்கு சுற்றுப்புறச் சூழலே முக்கியம் என்றார்.

சன் நியூஸில் இருந்தவரை கருணாநிதியை விமர்சித்து எழுதியதில்லை என்றும் ஆனால் சன் நியூஸிலிருந்து விலகியவுடன் கருணாநிதிக்கு எதிரான கட்டுரைகள் (மாறன் சகோதரர்கள் உள்ளிட்டவை) எழுதியது பற்றிய மாலன் மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய கேள்வியை நான் கேட்டேன். தான் சன் நியூஸில் இருக்கும்போதே கருணாநிதியைப் பற்றி எழுதியிருப்பதாகவும், தான் எழுதிய கட்டுரைகளைப் பார்த்துவிட்டு அன்றே கருணாநிதி தனது அதிருப்தியைச் சொல்லியிருப்பதாகவும் சொன்னார் மாலன். ஒரு விழாவில் ஸ்டாலின் பேசும்போது, ‘நம்மை விமர்சித்து எழுதும் மாலன்’ என்றுதான் அறிமுகப்படுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும், சன் நியூஸிலிருந்து விலகியபின்பு அவர் எழுதிய ‘இலவச வண்ணத் தொலைக்காட்சி சரியா’ என்பது பற்றிய கட்டுரை என்றும், மாறன் சகோதரர்கள் பற்றியது அல்ல என்றும் சொன்னார். ஒரு நிறுவனத்தில் இருக்கும்போது அதன் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு தான் செயல்பட்டதாகவும், அப்போதும் தனது கருத்துகள் தன்னுடனே இருந்ததாகவும் விவரித்தார் மாலன். (என்னால் இக்கருத்தை ஏற்கமுடியவில்லை. ஒரு நிறுவனத்தில் இருக்கும்போது, அந்நிறுவனத்தின் கருத்தை ஏற்பதும், ஓர் எழுத்தாளனின் அந்தரங்கக் குரலும் வெவ்வேறானது. குறைந்தபட்சம், அந்நிறுவனத்துக்கு எதிரான கருத்துகள் இருந்து, அதைச் சொல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்நிறுவனத்துக்கு ஆதரவான கருத்துகளையோ, அந்நிறுவனத்தின் அரசியல் சார்ந்த கருத்துகளையோ ஏற்பது என்பது முற்றிலும் வேறானது. இங்கேதான் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு எக்ஸுக்கும், மாலன், ஞாநி போன்ற எழுத்தாளர்களுக்கும் பெரிய வேறுபாடு வருவது. மேலும் இதைப் பற்றி விவரிக்கவேண்டுமானால், மாலன் எழுதிய கட்டுரைகளை முழுவதும் வாசித்தபின்பே முடியும்.)

பதிப்பக உலகத்தில் அந்நாளைய, இன்றைய, எதிர்காலம் பற்றிய கேள்வி வந்தது. அந்நாளில் அசோகமித்திரனின் ‘வாழ்விலே ஒருமுறை’ புத்தகம் தனக்குக் கிடைக்கவில்லை என்றும், அதனால் அசோகமித்திரனிடமே கேட்டதாகவும், மாடிக்கு மாலனை அழைத்துச் சென்ற அசோகமித்திரன், அங்கே ‘வாழ்விலே ஒருமுறை’ புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பித்து, ‘எத்தனை வேணும்’ என்று கேட்டதாகவும் குறிப்பிட்ட மாலன், இன்று அந்நிலை மாறியிருக்கிறது என்று குறிப்பிட்டார். மௌனியின் முதல் சிறுகதைப் புத்தகம் வர அவர் எவ்வளவு பாடுபடவேண்டியிருந்தது என்று சொன்ன அவர், இன்று பெரும்பாலான பதிப்பகங்கள் ‘நூலக ஆர்டரை’ நம்பி இல்லை என்றார். புத்தகக் கண்காட்சிக்கு வரும் கூட்டம் பற்றி நம்பிக்கை தெரிவித்த அவர், தற்போதைய புத்தகக் கண்காட்சிகளில் முன்பு போல் சமையல் புத்தகங்களும், ஜோதிட புத்தகங்களும் அதிகம் விற்பதில்லை என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார். கிழக்கு, தமிழினி போன்ற பதிப்பகங்களினால், நாவல் சிறுகதை கவிதை என்பதை மீறி இப்போது பல வகைப்பாடுகளில் புத்தகங்கள் கிடைப்பதைப் பற்றிச் சிலாகித்தார். இங்கே சில கருத்துக்களைச் சொல்லி, மாலனின் சந்தோஷத்தைக் கெடுத்து ஒரு குரூர சந்தோஷத்தை நான் அடையவேண்டியிருக்கிறது. 🙂

மாலன் அசோகமித்திரனின் வீட்டில் பார்த்த ‘வாழ்விலே ஒருமுறை’ என்பதைப் போன்ற இலக்கியப் புத்தகங்களின் நிலை இன்றும் அப்படியே உள்ளது என்பதுதான் உண்மை. கொஞ்சம் முன்னேறி இருக்கலாம். ஆனால் அன்று அசோகமித்திரன் வீட்டில் இருந்த நிலையே அந்நியமானது என்கிற அளவிற்கு இலக்கியப் புத்தகங்களின் விற்பனை வெகுவாக அதிகரித்துவிடவில்லை. அன்று இலக்கியப் புத்தகத்தையும், இன்று வெகுஜன புத்தகத்தையும் மனதில் வைத்து மாலன் எடை போடுகிறாரோ என்றும் தோன்றுகிறது. ‘இன்னும் பத்து வயதில் என் அக்காவை விட பெரியவனாகிவிடுவேன்’ என்கிற ஒரு சிறுவனின் நம்பிக்கைக்குச் சமமானதுதான், புத்தகக் கண்காட்சியில் விற்கும் இலக்கியப் புத்தகங்களின் விற்பனையும். இலக்கியப் புத்தகங்களின் விற்பனை எந்த வேகத்தில் அதிகரிக்கிறதோ, அதைவிட அதிகமான வேகத்தில் ஜோதிட, சமையல் புத்தகங்களின் விற்பனையும் அதிகரிக்கிறது. ஒட்டுமொத்தமாக இலக்கியப் புத்தகங்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது என்பதில் மட்டுமே நாம் மகிழ்ச்சி கொள்ளமுடியும். அதேபோல், பதிப்பகம் மற்றும் நூலக ஆர்டர் சார்ந்தது. கிழக்கு, ஆனந்தவிகடன் மற்றும் சில பெரிய எழுத்தாளர்களைக் கையில் வைத்திருக்கும் ஒரு சில பதிப்பகங்கள் இன்றைய நிலையில் நூலக ஆர்டரை நம்பாமல் இருக்கலாம். ஆனால் மற்ற பெரும்பாலான பதிப்பகங்கள் நூலக ஆர்டரை நம்பியே இருக்கின்றன. இதை எப்படி விளக்கலாம் என்றால், பெரிய பதிப்பகங்கள், நூலக ஆர்டர் நம்பி இல்லை என்றாலும் கூட, நூலக ஆர்டரை ஒதுக்குவதில்லை; அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்தே இருக்கின்றன. அப்படியானால், மற்ற சிறிய பதிப்பகங்களின் நிலையை நாம் உணர்ந்துகொள்ளமுடியும். அதனால் நூலக ஆர்டர் விஷயத்தில் இன்னும் பல விஷயங்களை நாம் நிச்சயம் செய்யவேண்டியிருக்கிறது. காலச்சுவடு இதழில் கண்ணன் சொன்னதுபோல, ‘எடைக்கு எடை போடுவதைவிடக் கொடுமையாக புத்தகங்கள் நூலகத்தில் வாங்கப்படுவதைப்’ பற்றி நிச்சயம் யோசிக்கவேண்டும்.

அடுத்து வாரிசு அரசியல் பற்றிய கேள்வியைக் கேட்டார் லக்கிலுக். ஆந்திரா, கர்நாடகா என இந்தியா முழுவதிலும் வாரிசு அரசியல் இருக்கும்போது, மக்கள் அதை அலட்டிக்கொள்ளுவதில்லை, ஆனால் தமிழ்நாட்டில், குறிப்பாக ஊடகங்கள் மட்டுமே அலட்டிக்கொள்கின்றன என்றும், மக்கள் மன்றத்தில் வெற்றி பெற்ற பின்னரே ஒரு வாரிசு கூட அரசியலில் நிலைக்கமுடியும் என்றும், யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது ஒரு கட்சியின் உட்கட்சி விவகாரம் எனப் பார்க்கலாமா என்றும் கேட்டார். லக்கிலுக். இதற்கு ஜென்ராம், மாலன் இருவருமே பதிலளித்தனர். ஜென்ராம், உட்கட்சி விவகாரம் என்றாலும், அதை பார்த்து கருத்துச் சொல்ல விமர்சிக்க தனக்கு உரிமை இருக்கிறது என்றும், ஓர் உட்கட்சி முடிவிலேயே ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார், அவரின் கட்சியை அடிப்படையாகவைத்தே தான் அவரைத் தேர்ந்தெடுப்பதால், உட்கட்சி விவகாரம் பற்றிய விமர்சனம் தேவையாகிறது என்றார். மாலன், உட்கட்சிகளில் நடக்கும் வன்முறை விமர்சனத்துக்குரியது என்றால் அவர்களின் அரசியலும் விமர்சனத்துக்குரியது என்றார். ஜென்ராம், ஜெயலலிதாவோ கருணாநிதியோ உட்கட்சியைக் கூட்டி முடிவெடுக்கிறார்கள் என்றால் அது, அவர்கள் ஜனநாயகத்தின் மீது கொண்டிருக்கும் காதலால் அல்ல, மாறாக, அரசியல் சட்டத்தின் தேவையைக் கருதி மட்டுமே என்று விளக்கினார். மக்கள் மன்றம் என்பதே போலியானது என்றும், மக்கள் மன்றம் ஏற்றுக்கொண்டுவிட்டதை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினால், ஜெயலலிதா ஊழலற்றவர் என்று தொடங்கி, மோடி வரையில், நாளை அத்வானி வென்றால் அவர் வரையில் அவரவருக்கு வேண்டிய வகையில் இதை ஏற்கவேண்டியிருக்கும் என்றும், இது சரியானது அல்ல என்பதால் மக்கள் மன்றம் போலியானது என்றும் நான் சொன்னேன். மக்கள் மன்றம் போலியானது என்றால் ஜனநாயகமே போலியானதா என்பது போன்ற கேள்வியை லக்கிலுக் கேட்க முனைந்தார். ஆனால் அதற்குள் வேறு வேறு கேள்விகளில் இக்கேள்வி சிதைந்து போனது.

உண்மையில் மக்கள் மன்றம் என்கிற கருத்துவாக்கம் போலியானது என்றே நான் நம்புகிறேன். மக்கள் மன்றம் என்கிற கருத்துருவாக்கம் உள்ளீடற்றது. அங்கே எளிய சமன்பாடுகள் மூலம் நிறுவப்பட்ட நிரலி சிந்திப்பது இல்லை. ரத்தமும் சதையுமுமான மக்கள் சிந்திக்கிறார்கள். இதைக் கொஞ்சம் யதார்த்தமாக்கினால் அவர்கள் பெரும்பாலும் சிந்திப்பதில்லை என்று சொல்லிவிடலாம். இந்திய மக்கள் மன்றம் என்பது, அறிவாளிகளாலும், சிந்தனையாளர்களாலும் நிரம்பியது என்று நான் நம்பவில்லை. கட்சி அடிப்படையிலும், தனிநபர் அரசியல் அடிப்படையிலுமே இன்றைய மக்கள் மன்றம் பெரும்பாலும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறது. அதனால்தான் பெரும் ஊழலில் சிக்கித் தவித்த அரசியல்வாதி மீண்டும் ஆட்சிக்கு வருவதும், பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஓர் அரசியல்வாதி டெபாசிட் இழப்பதும் நடக்கின்றன. நாம் மக்கள் மன்றம் என்கிற கருத்தை ஒற்றைப் பரிமாணத்தோடு ஏற்க முனைந்தோமானால், இவற்றை எல்லாமே ஏற்கவேண்டியிருக்கும். இது சாத்தியமற்றது. அதனால் மக்கள் மன்றம் என்கிற கருத்தை முன்வைக்கும் அரசியல்வாதிகள் எல்லாமே, தங்களுக்கு வேறு பதில் இல்லாத நிலையில் இதைக் கையில் எடுக்கிறார்கள் என்று நான் திடமாக நம்புகிறேன். வாரிசு அரசியல் விமர்சனத்தைத் தகர்க்க கருணாநிதியும், ஊழல் குற்றச்சாட்டைத் தகர்க்க ஜெயலலிதாவும் இந்த மக்கள் மன்றம் என்கிற கருத்தைக் கையில் எடுத்துக்கொள்கிறார்கள். மேலும் அரசியல்வாதிகள் மக்கள் மன்றத்தின் மீது வைத்திருக்கும் ‘நம்பிக்கை’ நாம் அறிந்ததே! மக்கள் மன்றத்தின் வழியாக ஜனநாயகத்தை நாம் அடைந்தோமானால், ஜனநாயகத்தை நான் ஏற்கிறேன். மக்கள் மன்றம் வலுவில்லாதபோது, அதன் வழியாக உருவாகும் ஜனநாயகம் எப்படி வலுவானதாக இருக்கும் என்றால், இருக்கும் மோசமான வழிகளில் தீமைகள் குறைந்த வழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுவதுபோல, (இங்கே ஜெயலலிதாவும் கருணாநிதியின் உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!) மக்கள்மன்ற ஜனநாயகத்தைவிடச் சிறந்த மாற்று ஒன்று இன்று நம்மிடம் இல்லையாததலால் அதை ஏற்கவேண்டியிருக்கிறது என்று கொள்ளலாம்.

ஸ்டாலின் திமுகவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் நான் அவரை வாரிசு அரசியலின் வெளிப்பாடு என்று இன்று சொல்லமாட்டேன். ஆனால், மாலன் எளிமையாகவும் மிகத் தெளிவாகவும் சொன்னதுபோல, வாரிசு அரசியல் என்பது வாரிசுகள் அரசியலுக்குள் வருவதில் இல்லை, மாறாக, அவர்கள் எப்படி அரசியலுக்குள் வருகிறார்கள் என்பதில் இருக்கிறது. வாரிசு அரசியலை முன்வைத்து ஒருவர் வந்தாலும், அவர் தாக்குப் பிடிப்பது அவருக்குள் இருக்கும் தலைமைப் பண்பு, திறமை போன்றவற்றால்தானே என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இதுவும் ஏற்கமுடியாததே. வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்புக் கொடுக்கும்போது, மற்றவர்களின் தலைமைப்பண்பைப் பற்றியும் திறமையைப் பற்றியும் அறியமுடியாமல் போய்விடுகிறது. இதை மாலன் தெளிவாகச் சொன்னார். அதனால் ஸ்டாலின் இன்று வாரிசு அரசியலுக்காகக் கேள்வி கேட்கப்படமுடியாதவர்; ஆனால் அதுவே கனிமொழிக்கோ, தயாநிதி மாறனுக்கோ எப்படி பொருந்தும் என்று யோசிக்கலாம். அதேபோல், வாரிசு அரசியலுக்கு கருணாநிதியை மட்டுமே குறை சொல்வதும் சரியல்ல. காங்கிரஸ், பாமக, தேமுதிக, சமக என யாருக்குமே வாரிசு அரசியல் பற்றிக் குறை சொல்லத் தகுதி இல்லை என்பதே உண்மை.

இந்த வாரிசு அரசியல் பற்றிய கேள்விகளோடு நேற்றைய மொட்டைமாடிக் கூட்டம் முடிவுக்கு வந்தது. நேற்று ஒரு ஐம்பது பேர் கலந்துகொண்டிருப்பார்கள். இத்தனைக்கும் திங்கள் கிழமை வேலை நாள், விளம்பரங்கள் இல்லை, அப்படியும் ஐம்பது பேர். மெல்ல மெல்ல எப்படியும் நூறு பேர் வருவார்கள் என்கிற இலக்கை மொட்டைமாடிக் கூட்டம் அடைந்துவிட்டால், பல்வேறு விஷயங்களைச் சோதித்துப் பார்த்து, பத்ரியையும் பாராவையும் சோதிக்கலாம். அது விரைவில் நடக்கும் என்றே தோன்றுகிறது!

பின்குறிப்பு: சென்னை புத்தகக் கண்காட்சியில் ரொம்ப பிசியாக இருப்பதால் பதிவு கொஞ்சம் சிறியதாகிவிட்டது.

Share

Comments Closed