பொது நூலகத்துறை – அகமும் புறமும்

காலச்சுவடு ஜனவரி 2009 இதழில் கண்ணன் பொது நூலகத்துறையில் நிலவும் அக்கறையின்மையைக் குறிப்பிட்டு ஒரு பத்தி எழுதியுள்ளார். கனிமொழி காலச்சுவடு விவகாரம் வெடிக்கவில்லை என்றால் இந்தப் பத்தி சாத்தியமாயிருக்குமா என்பது ’கண்ணனுக்கே’ வெளிச்சம். எது எப்படி இருந்தாலும், கண்ணன் சொல்லியிருக்கும் விஷயங்கள் உண்மையானவை. ஆயிரம் புத்தகங்கள் நூலகத்துறைக்கு எடுக்கிறோம் என்கிற அறிவிப்பெல்லாம் வந்துவிடுகிறது. வாக்கு வாங்க மக்களை ஏமாற்றுவதுபோல பதிப்பாளர்களையும் இந்த அரசு ஏமாற்ற நினைக்கிறதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இந்த அரசு என்பது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு என்றாலும், எந்த அரசு ஆண்டாலும் இக்கதியே நிலவுகிறது. ஜெயலலிதாவிற்கு பொது நூலகத்துறை என்று ஒன்று இருக்கிறது என்பது தெரியும் என்று நம்பியே தொடர்ந்து எழுதுகிறேன்!

ஒவ்வொரு ஆண்டும் பொது நூலகத்துறைக்குப் புத்தகங்களைத் தேர்வு செய்வார்கள். அதற்கென ஒரு குழு அமைக்கப்படும். அவர்கள் எந்தப் புத்தகங்களை நூலகங்களுக்குத் தேர்வு செய்வது என்று முடிவு செய்து தேர்ந்தெடுப்பார்கள். முதலில் 600 புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தார்கள். 2007 முதல் 1000 புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள். மிக எளிமையானதாகவும், தேவையானதாகவும் தோன்றும் இத்திட்டத்தை இந்த அரசுகள் எப்படி வைத்திருக்கின்றன என்று பார்க்கலாம்.

பொதுவாக ஒவ்வொரு வருடத்தின் பிப்ரவரி மாதம் 28ம் தேதிக்குள் பதிப்பாளர்கள் புத்தகங்களை தேர்வுக்கு வேண்டி சமர்ப்பிக்கவேண்டும் என்று அறிவிப்பு வரும். வருடத்தில் பத்து நாள்கள் மட்டும் விழித்திருந்தால் போதும் என நினைக்கும் பபாஸி இதைப் பற்றி செய்தி எல்லாம் எல்லா பதிப்பாளர்களுக்கும் அனுப்பாது. பதிப்பாளர்தான் கவனமாக இருந்து இதைத் தெரிந்துகொண்டு, புத்தகங்களைச் சமர்ப்பிக்கவேண்டும். ஒரு புத்தகத்தைப் பதிவு செய்ய 50 ரூபாய் டிடி எடுக்கவேண்டும். ஒரு புத்தகத்தின் இரண்டு படிகளையும் தரவேண்டும். பரிசீலனைக்குப் பின்னர் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

320 பக்கங்கள் வரைக்குமான புத்தகங்கள் ஆயிரமும், அதற்கு மேல் பக்கங்கள் உள்ள புத்தகங்களை ஒரு குத்துமதிப்பாகவும் தேர்ந்தெடுக்கப்படும். ஒரு புத்தகத்திற்கு என்ன விலை கொடுப்பது என்பதை அரசே தீர்மானிக்கும். எனக்குத் தெரிந்து பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலை இது. 16 பக்கங்கள் கொண்ட ஒரு டெமி சைஸ் புத்தகத்திற்கு ரூபாய் 3.90 என நினைக்கிறேன். இதில் என்ன கொடுமை என்றால், பதிப்பாளர் எந்த விதமான தாளை அச்சுக்குப் பயன்படுத்தி இருக்கிறார், எந்த விதமான அட்டையை அவர் பயன்படுத்தியிருக்கிறார் என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. நல்ல தாளில் அச்சிடப்பட்ட 16 பக்கத்திற்கும், நியூஸ் ரீலில் அச்சிடப்பட்ட 16 பக்கத்திற்கும் ஒரே விலை 3.90தான். இதனால் சில பதிப்பாளர்கள் நூலக ஆர்டர் கிடைத்ததும் அச்சிடும் புத்தகங்களை சாதாரண தாளில் அச்சடித்து செலவைக் குறைத்துக்கொள்கிறார்கள்.

பொதுவாக, ஒரு பதிப்பாளர் எந்த நூலை சமர்ப்பிக்கிறாரோ அதே நூலின் தரத்தில் நூலகத்திற்கான புத்தகங்களின் தரத்தையும் வைத்திருக்கவேண்டும். ஆனால் இப்படி நிகழ்கிறதா என்று நூலகத்துறை சோதனை செய்வதாக எனக்குத் தெரியவில்லை. பத்தாண்டுகளாக ஒரே விலையை வைத்திருக்கும் அரசு, அதில் என்ன செய்து செலவைக் குறைக்கலாம் என பதிப்பாளர்கள்.

நூல்களை சமர்ப்பித்துவிட்டால், உடனே நூலகத்துறை சுறுசுறுப்பாகச் செயல்பட்டு நூல்களைத் தேர்ந்தெடுத்துவிடாது. 2007ல் வந்த புத்தகங்களை 2008 பிப்ரவரியில் தேர்வுக்குச் சமர்ப்பித்தார்கள் பதிப்பாளர்கள். இதுவரை புத்தகங்களின் தேர்வு வெளியிடப்படவில்லை! இதுவாவது பரவாயில்லை. 2006ல் வெளியான புத்தகங்களின் தேர்வு 2008ன் பாதியில்தான் வெளியானது. இதுபோக, 2004 அல்லது 2005ல் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படவே இல்லை. அடுத்த வருடம் சேர்ந்து தேர்ந்தெடுத்தார்களாம். இப்படிப்பட்ட கூத்தெல்லாம் நடக்கும்.

இந்தக் கூத்து முடிந்தால் அடுத்த கூத்து தொடங்கும். ஆயிரம் புத்தகங்களை அரசு தேர்ந்தெடுக்கும். அதை எல்லா நூலகங்களுக்கும் (தமிழகம் முழுவதும் 30 நூலகங்களுக்கு அனுப்பச் சொல்லுவார்கள்) அனுப்ப ஒரு மாத கால அவகாசம் மட்டுமே கொடுக்கப்படும். எல்லா பதிப்பாளர்களும் ஒரே நேரத்தில் அச்சுக்கூடங்களை நெருக்க, ஒரு மாதத்துக்குள் அனுப்ப முடியுமா முடியாதா என்ற நெருக்குதலில்தான் புத்தகத்தை அனுப்பி வைப்பார்கள். இந்த கால அவகாசத்தை மூன்று மாத காலம் ஆக்கவேண்டும் என்கிற கோரிக்கை நியாயமானதே. ஒரு நூலகத்திற்கு நான்கு புத்தகங்கள் (ஒவ்வொரு புத்தகமும் அதிகபட்சமாக 40 பிரதிகள்) கொண்ட ஒரு பார்சலை அனுப்ப கிட்டத்தட்ட 400 ரூபாய் செலவாகும் என்று வைத்துக்கொள்ளலாம். இப்படி 30 நூலகங்களுக்கு அனுப்பவேண்டும். இந்தச் செலவை அரசு கணக்கில் எடுத்துக்கொள்கிறதா என்பது யாருக்குமே தெரியாது. இதுபோக வண்டிச் செலவு, பேக்கிங் செலவு என பல உண்டு. இவை எல்லாமே அந்த 3.90ல் அடங்கவேண்டும்.

அடுத்த கூத்து தொடங்கும். புத்தகம் கிடைத்ததும் பணம் கிடைக்காது. நினைத்த நேரத்தில் நூலகங்கள் பணம் அனுப்பும். ஏன் அனுப்பவில்லை என்று கேட்கமுடியாது. கேட்டால் அனுப்புவோம் என்பார்கள். இப்படியாக 2007ல் பதிப்பாளர் அச்சடித்த புத்தகங்கள், 2009ல் தேர்ந்தெடுக்கப்பட்டு (இது விரைவு என்று பொருள்!) 2010ல் பணம் வந்துவிடும்.

திடீரென்று ஒரு நூலகர் பதிப்பாளரை அழைப்பார். அவர் அனுப்பியதில் சில பிரதிகள் இல்லை என்றும் உடனே அனுப்பவும் என்று சொல்லி தொலைபேசியை வைத்துவிடுவார். பதிப்பாளர் சிரமேற்கொண்டு இதை அனுப்பிவைக்கவேண்டும். அப்படி மிஸ்ஸாக சான்ஸே இல்லையே என்று பதிப்பாளர் யோசித்தால், அவர் புத்தகம் அனுப்பாத வரை பணம் வராது.

இதெல்லாம் நடைமுறை கஷ்டங்கள் என்றால், அரசு அமைக்கும் குழு எப்படி புத்தகங்களை தேர்ந்தெடுக்கிறது என்பது யாருக்குமே புரியாத புதிர். குழு புத்தகத்தைப் படித்து அதைத் தேர்வு செய்யவேண்டும் என்பது விதி. குழு உறுப்பினர்கள் இந்த விதியையாவது படித்திருப்பார்களா என்பது தெரியவில்லை. பெரும்பாலும் முன்னட்டையைப் பார்த்து தேர்ந்தெடுப்பார்கள் என்பதுதான் நடைமுறை என்கிறார்கள். அட்டைப்படத்தில் ஏதேனும் கடவுளின் படமோ, மத சம்பந்தமான படமோ இருந்துவிட்டால் தேர்ந்தெடுக்கமாட்டார்கள். இப்படிப்பட்ட அறிவுஜீவிகளின் வழியே நூலகத்திற்கான அறிவுக்கண்கள் திறக்கவேண்டும்!

நூலகம் என்பதையும் அதன் வழியே நிகழவேண்டிய அறிவுப் புரட்சியையும் பற்றிக் கொஞ்சமாவது உணர்ந்தவர்கள் இருந்தால், நூலகத்திற்கான புத்தகத் தேர்வு பற்றி சிந்திப்பார்கள். எல்லாவற்றையும் வாக்கு அரசியலாகவும், சிபாரிசு அரசியலாகவும் நினைக்கும் இந்த அரசுகள் நூலகத்துறையையும் குட்டிச்சுவராக்கி வைத்திருக்கின்றன. ஒரு பதிப்பாளர் அவரது புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க, பணம் கொடுக்கவேண்டி வந்ததாகச் சொன்னார். உண்மையா பொய்யா எனத் தெரியாது.

பாரதியின் எழுத்துகளைத் தேடி, அதைக் காலவரிசையாகத் தொகுப்பதையே தன் வாழ்நாள் கடமையாக நினைத்துச் செயல்படும் சீனி விசுவநாதனின் புத்தகம், காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் பாகம் 6 என நினைக்கிறேன், அரசால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அந்தக் கிழவர் பேருந்தைப் பிடித்து, அலையாய் அலைந்து, மனு கொடுத்து….

மதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ’நிமிர வைக்கும் நெல்லை’ என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டார். இந்தப் புத்தகம் நூலகத்திற்குத் தேர்வு செய்யப்படவில்லை. அவர் அரசுக்கெதிராக வழக்கு தொடர்ந்தார். ஏன் தன் புத்தகம் தேர்வு செய்யப்படவில்லை என்று காரணம் கேட்டும், எந்த எந்த புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பதன் விளக்கம் கேட்டும் வழக்கு தொடர்ந்தார். வழக்கு என்ன ஆனது என்பது தெரியாது. ஆனால் கே.எஸ். ராதாகிருஷ்ணனின் ‘நிமிர வைக்கும் நெல்லை’ புத்தகத்திற்கு நூலக ஆர்டர் கிடைத்தது. அப்போது அரசு சார்பில் வாய்மொழியாக ‘இப்படி ஏன் தன் புத்தகத்திற்கு ஆர்டர் கிடைக்கவில்லை என்று கேட்டுவரும் பதிப்பாளர்களின் புத்தகங்க்ளுக்கு ஆர்டர் கொடுத்து பிரச்சினையைத் தீர்த்துவிடுங்கள்’ என்று சொல்லப்பட்டதாகக் கேள்விப்பட்டேன்.

இந்தப் புண்ணியத்தில், பாரதியின் காலவரிசைப்படுத்தபட்ட புத்தகத்திற்கு லைப்ரரி ஆர்டர் கிடைத்தது! (இந்தப் பிரச்சினையெல்லாம் அதி சின்னப் பயல் பாரதி போன்ற ஒரு மண்ணும் பெறாத கவிஞனுக்குத்தான். மகாகவி (இனி இப்பட்டம் வாலிக்குத்தான், யாராவது பாரதிக்கென்று வந்தால் என்ன நடக்கும் என்றே எனக்குத் தெரியாது) வாலி, கவிப்பேரரசு வைரமுத்து, பெருங்கவி அப்துல் ரகுமான், கவிக்கோ மேத்தா, வித்தகக் கவிஞர் பா. விஜய் போன்ற மேதைகளுக்கெல்லாம் பொருந்தாது என்றறியட்டும் தமிழ்க்குலம்!)

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் சிறந்த புத்தகங்களுக்கு விருது வழங்கப்படும். தமிழினியின் வெளியீடாக வந்த ‘தேவதேவன் கவிதைகள்’ புத்தகத்திற்கு விருது கிடைத்தது. அப்புத்தகம் நூலகத்துறையால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தேர்வுக்குழு உறுப்பினர்கள் எந்தப் புத்தகத்திற்கு விருது கிடைத்திருக்கிறது என்றாவது பார்த்தால் நல்லது! மீண்டும் அலைச்சல், மனு. பின்னர் நூலக ஆர்டர். இப்படி இருக்கிறது நூலகத்துறையின் செயல்பாடு.

சில புத்தகங்களின் முதல் பாகம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்காது. இரண்டாம் பாகம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். நூலக வாசகர்களின் கொடுமையை நினைத்துப் பாருங்கள்.

பதிப்பாளர்கள் நூலக ஆர்டரை நம்பாமல் இருக்க அறிவுறுத்தி, வாசகர்களிடையே புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை அதிகமாக அருளுரை வழங்கலாம். ஆனால் நூலகத்துறைக்குப் புத்தகங்களை எடுப்பது என்பது, பதிப்பாளர்களுக்கு போடப்படும் பிச்சை அல்ல. அது அரசின் கடமை. இதில் ஜனநாயகத்தன்மை என்பது எள்ளளவும் இல்லை என்பது அதைவிடப் பெரிய மோசடி. எந்த எந்த புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்கிற விவரங்கள் பதிப்பக வாரியாக பொதுவில் வெளியிடப்படவேண்டும். எந்த எந்த புத்தகங்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்கிற குறிப்பு தயாராக இருக்கவேண்டும். ஏதேனும் பதிப்பாளர் அதை அறிய விரும்பினால், அதுகுறித்து மேல் வழக்கு நடத்த விரும்பினால் அதற்கான வழி தயாராக இருக்கவேண்டும். ஒவ்வொரு பதிப்பகமும் எத்தனை புத்தகங்கள் ஆர்டர் பெறுகின்றன, அவை எத்தனை புத்தகங்களைச் சமர்ப்பித்தன என்பது பொதுவில் வைக்கப்பட்டுவிட்டாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும். இதுவரை இது நிகழவில்லை. ஒரு பதிப்பாளருக்கு இந்த விவரம் வேண்டுமென்றால் தகவலறியும் உரிமைச்சட்டத்தில்தான் இதைத் தெரிந்துகொள்ளமுடியும். கவிதைப் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதே இல்லை என்று லதா ராமகிருஷ்ணன் வார்த்தை இதழில் எழுதினார். அவர் சொல்லாவிட்டால் யாருக்குமே இது தெரிந்திருக்காது. அதனால் எந்தப் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பதை பொதுவிலேயே வெளியிட அரசு ஆவன செய்யவேண்டும். அதுமட்டுமின்றி, தேர்ந்தெடுக்கப்படும் புத்தகங்களுக்கான தொகை, அப்புத்தகத்தின் தரத்தின் அடிப்படையில் அமையவேண்டும். என்ன தாள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, என்ன அட்டை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதன் அடிப்படையில் புத்தகத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்படவேண்டும். அதேபோல் ஒட்டுமொத்த புத்தகங்களையும் பதிப்பாளர்கள் தங்கள் மாவட்ட தலைமை நூலகத்தில் சமர்ப்பிக்க வழி செய்யப்படவேண்டும். அங்கிருந்து மற்ற நூலகங்களுக்குப் புத்தகங்களை அனுப்புவதை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும். அரசு என்பது பணம் கொடுத்துவிட்டு சும்மா இருந்துவிடும் அமைப்பு இல்லை என்பதை உணரவேண்டும்.

ஒரு வருடத்திற்கான புத்தகங்களைத் தேர்வுக்குச் சமர்ப்பித்ததும், அடுத்த மூன்று மாதங்களுக்குள் தேர்வு செய்யப்பட்ட புத்தகங்கள் அறிவிக்கப்படவேண்டும். ஒரு வருடத்தில் தோராயமாக 10,000 புத்தகங்கள் சமர்ப்பிக்கப்படலாம். உதவிக்குழு ஒன்று அமைத்து இதில் 3000 புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி, அவற்றில் இருந்து தேர்வுக்குத் தேவையான புத்தகங்களை மேல்மட்டக்குழு தேர்ந்தெடுக்கலாம். (இப்போதும் இப்படித்தான் இருக்கிறது, ஆனால் நடப்பதில்லை!) தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்கள் நூலகங்களுக்கு அனுப்பப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் பதிப்பாளருக்குப் பணம் அனுப்ப உத்தரவிடவேண்டும். தவறும் பட்சத்தில் அதற்கான அபராதத் தொகையையும் செலுத்தச் சொல்லி அரசு உத்தரவிடவேண்டும்.

எப்போது ஆர்டர் வரும், எப்போது பணம் வரும் என்று பதிப்பாளர்களைப் பிச்சைக்காரர்களைப் போல் அரசு வைத்திருப்பது மோசமானது. நூலகமும், புத்தகமும் நாட்டிற்கு எவ்வளவு தேவையானது என்பதை உணர்ந்த அரசு இப்படி மெத்தனமாக நடந்துகொள்ளாது.

நம்மை ஆளும் கழக அரசுகளுக்கு தற்போது வரும் தமிழ்ப்புத்தகங்கள் பற்றிய அறிவு கொஞ்சமாவது இருக்குமா என்பது கேள்விக்குறியே. அவர்கள் இன்னும் அண்ணாவிடமிருந்தும், கல்கியிடமிருந்தும், மு.வரதராசனாரிடமிருந்தும், இவை நீங்கலாக நெடுநல்வாடை, பதினென்கீழ்கணக்கு நூல்களின் பிடியில் இருந்து வெளிவந்தபாடில்லை. தனியார் நூலகம் தொடங்க விரும்பும் ஒருவருக்கு அரசு பரிந்துரைத்த புத்தகங்களின் பட்டியல் பார்த்தேன். அவை புத்தகங்களின் பட்டியல் அல்ல. அரசியலின் பட்டியல். எல்லாம் சங்ககால நூல்கள், கண்ணதாசனின் நூல்கள், கல்கியின் நூல்கள், அண்ணாவின் நூல்கள், நெஞ்சுக்கு நீதியின்றி சில நூல்கள். 1970ஐத் தாண்டவில்லையே என நினைத்தால், சரியாகத் தாண்டியிருக்கிறார்கள். வைரமுத்துவின் நூல்கள், கொடுமையிலும் கொடுமையாக பா.விஜய்யின் நூல்கள். எங்கே போனார்கள் மற்றக் கவிஞர்கள்? எங்கே போயின மற்ற நூல்கள்? பார்த்திபனின் கிறுக்கல்கள் நூலகத்திற்கான சிபாரிசு பட்டியலில் நுழைந்தது எப்படி? சிங்கிச் சத்தமே கவிதை என்றால் மேலே உள்ள நூல்களெல்லாம் இருக்கவேண்டியதுதான். சுந்தர ராமசாமி என்றொரு எழுத்தாளர் இருந்தார் என்றும் வெங்கட் சாமிந்தான் என்றொரு விமர்சகர் இருக்கிறார் என்றும் யாரேனும், செவிடன் காதிலும் கேட்க வல்ல சங்காய் எடுத்து ஊதினால் நல்லது. ‘ஓ போடலாம்!’

Share

Comments Closed