மொட்டைமாடியில் அமெரிக்க அரசியல் – கதிகலங்கிப்போன கோயிந்த்சாமி (நாள் 3)


ஒபாமா ப்ராக் புத்தகத்தை சந்திரமௌலி வெளியிட அரவிந்தன் பெற்றுக்கொண்டார். ஆயில்ரேகை புத்தகத்தை நாராயணன் வெளியிட தமிழ் சுஜாதா பெற்றுக்கொண்டார்.

ஆர். முத்துக்குமார் எழுதிய ஒபாமா பராக் புத்தகத்தைப் பற்றி சந்திரமௌலி பேசினார். ஒபாமாவின் வெற்றிக்கான உழைப்பு, அமெரிக்காவின் தேர்தல் முறை என்பதைப் பற்றி ஆர்.முத்துக்குமார் விவரமாக எழுதியிருப்பதாகப் பாராட்டினார். ஒபாமாவின் வெற்றி, அவர் கருப்பர் என்பதற்காகக் கிடைத்த வெற்றியல்ல என்றார். அவர் தன்னை கருப்பர் என முன்வைத்து தேர்தலைச் சந்திக்கவில்லை என்று குறிப்பிட்டார். ஒபாமாவைப் பற்றிய பல்வேறு புத்தகங்களின் எஸென்ஸ் இந்தப் புத்தகம் எனக் குறிப்பிடும் வகையில், ஒபாமா பற்றி இல்லாத தகவல்களே இப்புத்தகத்தில் இல்லை என்று பாராட்டினார். புத்தகத்தின் குறைகளையும் குறிப்பிட்டார். புத்தகத்தில் உள்ள சில எழுத்துப் பிழைகளையும், ஃபார்மட்டிங் பிழைகளையும் குறிப்பிட்டார். இன்னும் நல்ல எடிட்டிங் இருந்திருக்கவேண்டும் என்றும் சொன்னார். கிழக்கு வெளியிட்டிருக்கும் மற்ற புத்தகங்களின் தரத்தில் இருந்து, எடிட்டிங்கை மையமகா வைத்து, இது கொஞ்சம் குறைந்திருக்கிறது என்றார். ஆனால் இத்தகைய சிறிய குறைகள், புத்தகத்தின் ஓட்டத்தை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்றும் இக்குறைகள் களையப்படவேண்டியவை மட்டுமெ என்றும் குறிப்பிட்டார். பதிலளித்த பத்ரி, சந்திரமௌலி குறிப்பிட்ட பல பிழைகள் ஏற்கெனவே களையப்பட்டுவிட்டன என்று தெரிவித்தார். உண்மையில் சந்திரமௌலி போன்றவர்கள் முன்வைக்கும் இக்குறைகள் நிச்சயம் பதிப்புக்குழுவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

உருப்படாதது நாராயணனும் பா.ராகவனும், ஒரு சிறிய மாற்றம் என்கிற பீடிகையுடன் ஆரம்பித்தார்கள். முதலில் பன்னிரண்டு நிமிடங்கள் (அது என்ன பன்னிரண்டு நிமிடக் கணக்கு எனத் தெரியவில்லை) நாராயணன் பேசுவார், பின்பு நாராயணனும் ராகவனும் கலந்துரையாடுவார்கள். பின்பு எல்லாரும் கேள்விகள் கேட்டு கலந்துரையாடல். இதுதான் விஷயம். நாராயணன் பேசியது, பின்பு அவர் பதில் சொன்னது எல்லாம் சேர்த்தால் 90 நிமிடங்கள் வருமென்றால், அதில் அவர் பேசிய நிமிடங்கள் 50 இருக்கலாம். மீதி 40 நிமிடங்கள் பேச ஆயத்தமாவது, மூச்சு இழுத்து விட்டுக்கொள்வது, ஆள்காட்டி விரலால் மூக்கின் கீழே நெருடிக்கொள்வது, தொண்டையைக் கனைத்துக்கொள்வது என்பது போன்ற கமல்தோஷத்தில் செலவழிந்தன. ஆனால் பேசிய நிமிடங்களில் மிகச் சிறப்பாகப் பேசினார். எண்ணெய் அரசியலோடு, உலக அரசியல் உள்ளிட்ட விஷயங்களில் அவரது ஆர்வம், அறிவு என்னை வியக்க வைத்தது. பொது அறிவு என்பது எவ்வளவு முக்கியமான விஷயம் என்பதை அவர் பேச்சில் உணரமுடிந்தது. பல்வேறு கேள்விகளுக்கு மிகச் சரியான அணுகுமுறையில் பதில் சொன்னார். ஆயில் ரேகை புத்தகத்தைப் பற்றியதாக அவருடைய பேச்சு அமையாமல், ஒரு ஒட்டுமொத்த, அமெரிக்கா சார்ந்த/சம்பந்தப்பட்ட அரசியலை முன் வைத்ததாக அமைந்தது. புத்தகத்தில் குறை சொல்லவேண்டியது சம்பிரதாயம் என்றவர் புத்தகத்தில் உள்ள ஒருசில குறைகளைச் சொன்னார். புத்தகத்தில் உள்ள ஓர் அச்சுத்தவறைச் சொன்னவர், புத்தகத்தின் போதாமையாகச் சொன்னது, எண்ணெய் அரசியலின் மீதான இந்தியாவின் பங்கு என்பதைப் பற்றி.

பின்பு எல்லோரும் பங்குபெறும் கலந்துரையாடல் ஆரம்பித்தது. பத்ரியின் முதல் கேள்வியே, நாராயணன் சொன்ன, எண்ணெய் அரசியலின் மீதான இந்தியாவின் பங்கு, இந்தியா எப்படி அதை எதிர்கொள்ளமுடியும் என்பதைப் பற்றியது. பத்ரி கேட்ட இரண்டு நிமிடக் கேள்விக்கு, பாரா 20 நிமிடங்கள் பதில் அளித்தார். (பாராவிற்குப் பேசத் தெரியாது என்று ஏற்கெனவே நாம் அளித்த செய்தி நினைவில் இருக்கலாம்.) ஆரம்பிக்கும்போது, ஆயில் ரேகை புத்தகத்தைப் பற்றி, ரிப்பன் பக்கோடாவைக் கொறித்துக்கொண்டே ஆரம்பிப்பதில் தவறே இல்லை என்று சொல்லி, தனக்கும் தமுஎச-விற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதி செய்தார். பின்லேடனைவிட அமெரிக்காவே மிகப் பெரிய தீவிரவாதி என்றார். பெட்ரோலுக்கு மாற்றுப் பொருள் பற்றிய விவாதத்தில், சில விஷயங்கள் இன்று பரிசோதனை முயற்சியில் இருந்தாலும், இன்னும் ஒரு 50 வருடங்களுக்காகவது பெட்ரோலின் தேவை இருந்தே தீரும் என்றார். ஏகப்பட்ட கேள்விகள் இந்த எண்ணெய் அரசியலைப் பற்றி எழுந்த வண்ணம் இருந்தன. எல்லாவற்றிற்கும் பாரா, நாராயணன், பத்ரி ஆகியோர் பதில் சொல்லிக்கொண்டிருந்தனர். அணு சக்தி என்பது பெட்ரோலுக்கு முழுமாற்றாகமுடியுமா என்ற கேள்விக்கு, அதற்கு தற்போது சாத்தியமில்லை என்றார் நாராயணன்.

சத்யா (எம்.டி, நியூ ஹொரைசன் மீடியா), நம்நாட்டில் ஏகப்பட்ட சூரிய சக்தி இருக்க, அதற்கு இதுவரை எத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது, இப்போதாவது இதில் கவனம் செலுத்துவோமா, அது சரியாக வருமா என்றார். அதில் இதுவரை போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்றும், தற்போது அதில் இந்திய அரசின் கவனம் குவிந்திருக்கிறது என்றும் நாராயணன் சொன்னார். ஆனால், அணு ஆயுதத்தில் நம் கவனம் இருக்குமளவிற்கு சூரிய சக்தியில் நம் கவனம் இதுவரை இருக்கவில்லை என்றும், தற்போது இருக்கும் கவனமும் ஒப்பீட்டளவில் மிகக் குறைவானதுதான் என்றும் சத்யா சொன்னார்.

எண்ணெய் அரசியலின் மீதான கேள்விகள் மிக நீண்டு கொண்டிருக்க, கேள்வி கேட்காமலேயே பதில் சொல்லிவிடும் அபாய முடிவிற்கு முத்துக்குமார் சென்ற நேரத்தில், அவரிடம் நான் கேள்வியைத் துவக்கி வைத்தேன். ஏற்கெனவே இரண்டு ஒபாமா புத்தகங்கள் வந்துவிட்ட நிலையில், தற்போது ஆர்.முத்துக்குமார் எழுதியிருக்கும் புத்தகத்தின் தேவை என்ன, அது மற்ற புத்தகங்களில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்பது என் கேள்வி. அதை தான் எழுதிய ஒரு காரணத்திற்காகவே அனைவரும் வாங்கவேண்டும் என்று சொல்லி, பேச்சுக்கலையில் திராவிடப் பாரம்பரத்தியின் அழுத்தமான முத்திரையைப் பதித்தார். தொடர்ந்து, மற்ற புத்தகங்கள் ஒபாமாவைப் பற்றி மட்டும் சொல்லிநிற்க, தனது புத்தகம் ஒபாமாவோடு அமெரிக்காவின் அரசியலையும், தேர்தல் முறையையும் முன் வைக்கிறது என்றார். தொடர்ந்து பதிலளித்த பாரா, ஒரு வாழ்க்கை வரலாறு என்பது அவர் பிறந்தார், வென்றார், இறந்தார் என்று சொல்வதல்ல; மாறாக, எந்த முறையில், எந்த இடத்தில் ஒருவரின் வெற்றியும், முக்கியத்துவமும் இருக்கிறது, அதன் பின்னணி என்ன என்பனவற்றை விளக்குவதிலேயே இருக்கிறது, அதை இப்புத்தகம் தெளிவாகச் செய்திருக்கிறது என்று அப்புத்தகத்தின் எடிட்டர் என்கிற முறையில் பதில் சொன்னார். தொடர்ந்து ஒபாமா பற்றிய விவாதங்கள் களைகட்டின. ஒபாமா வென்றதுக்குக் காரணம், கருப்பர்கள் வெறித்தனமாக வருக்கு வாக்களித்ததே என்றார் லக்கிலுக். அது மட்டுமே காரணமல்ல என்று விளக்கினார் பத்ரி. ஸ்ரீகாந்த் இது தொடர்பான தனது கருத்துகளையும் சொன்னார். ஸ்ரீகாந்த் ஒபாமாவை அண்ணன் ஒபாமா என்றார். வைகோ சந்தித்தது ஒபாமாவையா, ஸ்ரீகாந்தையா என்கிற சந்தேகம் எனக்கு எழுந்துவிட்டது. அமெரிக்கா எந்த நாட்டில் தனக்கு லாபம் வருகிறதோ அங்கு மட்டுமே உதவி என்ற போர்வையில் உள்ளே செல்லும் என்று கிட்டத்தட்ட அனைவரும் சொன்ன நிலையில், அதற்கும் சில எதிர்ப்புக் கேள்விகள் எழுந்தன. அமெரிக்கா அழித்த நாடுகளும் உண்டு, அமெரிக்காவால் வாழ்ந்த நாடுகளும் உண்டு என்றார் ஸ்ரீகாந்து. உதாரணமாக ஜப்பான் என்றார். லாபத்திற்காக மட்டுமே அமெரிக்கா ஒரு நாட்டிற்காகச் செல்லும் என்றால், வியட்நாமை எந்த வகையில் சேர்ப்பது என்றார் சத்யா. ஒரு சில விலக்குகள் நீங்கலாக, அமெரிக்காவின் குணம் அதுவே என்றார் பாரா. அமெரிக்கா ஜப்பானுக்கு உதவியது தனது குற்ற உணர்விற்காக என்றார் பத்ரி. ஒபாமா மீது நிறைய எதிர்பார்ப்பு எல்லாருக்குமே உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது. அவர் அதிகம் நல்லது செய்யாவிட்டாலும், அமெரிக்காவின் இன்றைய நிலையை மேம்படுத்தினாலே அதுவே மிகப்பெரிய வெற்றி என்று ஒபாமாவின் தம்பி நம்பிக்கையாகச் சொன்னதோடு கூட்டம் முடிவடைந்தது.

ஒபாமாவின் வெற்றிக்கு அவர் பையில் வைத்திருந்த ஆஞ்சநேயர் படமே காரணம் என்ற செய்தி உண்மைதானா என்று கேட்டேன். இந்தக் கேள்விக்கு ஏன் அனைவரும் அப்படி சிரித்தார்கள் என்று இன்னமும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

பின்குறிப்பு: நேசமுடன் வெங்கடேஷ் பின்நவீனத்துவப் பாணி கேள்வி (அது கேள்வியாக இல்லாமல் பதிலாகவும் இருக்கலாம்!) ஒன்றை எழுப்பினார். அதைப் பற்றி தனியாக ரூம் போட்டு யோசிக்க உத்தேசித்திருக்கிறேன்.

Share

Comments Closed