மால்கம் எக்ஸும் நிறைய எக்ஸ்களும் (நாள் 2)

சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் புத்தகத்தை சோம வள்ளியப்பன் வெளியிட ’உருப்படாதது’ நாராயணன் பெற்றுக்கொண்டார். மால்கம் எக்ஸ் புத்தகத்தை பா.ராமசந்திரன் வெளியிட நேசமுடன் வெங்கடேஷ் பெற்றுக்கொண்டார்.

சோம வள்ளியப்பன் யுவ கிருஷ்ணாவின் (லக்கிலுக்) ’சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்’ புத்தக்த்தைப் பற்றிப் பேசினார். விளம்பரங்களைத் தயாரிப்பதில் விளம்பர ஏஜென்ஸிகளின் பங்கு, ஒரு விளைபொருள் (ப்ராடக்ட்) வெற்றியில் விளம்பரங்களின் பங்கு, அதன் தோல்வியில் விளம்பரங்களின் பங்கு, நெகடிவ் விளம்பரங்களின் வெற்றி, விளம்பரங்களில் நேரும் போட்டி (உதாரணமாக கோக் Vs பெப்சி, ஹார்லிக்ஸ் Vs காம்ப்ளான்) எனப் பல விஷயங்களைத் தொட்டுப் பேசினார். நல்ல விளம்பரம் என்றதும் நினைவுக்கு வரும் ஒரு விளம்பரமாக, பத்தாண்டுகளுக்கு முன்பு வந்த சிறிய மொபைல் போனுக்கான விளம்பரத்தைக் குறிப்பிட்டார். ஒரு பெண் மொபைல் பேசிக்கொண்டிருக்க, தன்னுடன் பேசுவதாக நினைக்கும் ஒருவர் எழுந்து வரவும், அவரிடம் ‘ஒன் காஃபி ப்ளீஸ்’ (என்று நினைக்கிறேன்) எனச் சொல்லும் விளம்பரம் அது. (அந்த விளம்பரத்தில் எனக்குப் பிடித்தது, அந்த மனிதர் முகம் அடையும் பாவங்கள். சிறந்த நடிப்பு அது.) லக்கிலுக்கின் இப்புத்தகம் சிறப்பாக எழுதப்பட்டிருப்பதாகவும், பல்வேறு விஷயங்களை லக்கிலுக் எழுதியிருப்பதாகவும் பாராட்டினார். ஒரு சிறிய குறையாக, எப்படி சிறந்த விளம்பரங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன, எப்படி விருது வழங்குகிறார்கள் என்பதைப் பற்றியும் ஓர் அத்தியாயம் எழுதியிருக்கலாம் என்றார். சிறந்த நடையில் புத்தகம் எழுதியிருப்பதாக லக்கியைப் பாராட்டினார். (சோம வள்ளியப்பன் தொலைக்காட்சிகளில் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். நேற்றைய கூட்டத்தில் அவர் இன்னும் சிறப்பாகப் பேசுவார் என எதிர்பார்த்தேன். அவர் பேச்சில் ஒரு கோவை இல்லை என்பதே மிகப்பெரிய குறை.)

பா. ராமசந்திரன் (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்) மருதனின் மால்கம் எக்ஸ் புத்தகத்தைப் பற்றிப் பேசினார். தமுஎச-வின் மாநாடு தற்போதுதான் முடிவடைந்திருந்ததால் தான் மிகவும் பிஸியாக இருந்ததாகவும், ஆனாலும் மால்கம் எக்ஸ் புத்தகம் என்பதால் தான் பேச ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார். அவர் பேச வருவதற்கு முன்பாக எல்லாரும் சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். பேச ஆரம்பித்த பா.ராமசந்திரன் (பாரா என்று வந்தாலே இப்படி எதாவது சொல்லி பேச ஆரம்பிப்பார்கள் போல!) தான் பேச வரும்போது யாரும் சிப்ஸ் கொறித்துக்கொண்டிருக்கக்கூடாதே என்று நினைத்ததாகச் சொன்னார். காரணமாக, ‘மால்கம் எக்ஸை சிப்ஸ் கொறித்துக்கொண்டு பேசமுடியாது’ என்று சொல்லி, தான் தமுஎச-வின் தீவிர உறுப்பினர் என்பதை நிரூபித்தார். இன்னும் சிறிது நேரத்தில் காப்பி வருமே என நினைத்துக்கொண்டேன். [’ஹிந்துமத வெறியன் கோட்ஸே காந்தியைக் கொன்ற போது அவர் ஹே ராம் என்று சொல்லி இறந்ததுபோல’ என்றெல்லாம் பேசினார். கோட்ஸே ஹிந்துமத வெறியன். அதில் விவாதமில்லை. ஆனால் காந்தி இறந்தபோது ஹே ராம் என்று சொன்னாரா இல்லையா என்பது பற்றி பல விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இது இப்போது தேவையா என நினைக்கலாம். தமுஎச என்று வந்துவிட்டாலே என்ன வேண்டுமானாலும் எழுத வந்துவிடுகிறது. :-)] பா.ராமசந்திரன் மால்கம் எக்ஸின் வாழ்க்கையை, அவர் கறுப்பினத்தவராகப் பிறந்து அடைந்த அவமானங்களை, வலியை விவரித்தார். இனவெறியை எங்கும் பரப்பும் அமெரிக்காவை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்ட மால்கம் எக்ஸை வானளாவப் புகழ்ந்தார். ‘அஸ்லாமு அலைக்கும்’ என்று நூலில் இருந்ததைப் பார்த்தபோதே, மால்கம் எக்ஸ் இஸ்லாமியராக மாறுவார் என எதிர்பார்த்ததாகச் சொன்னார். முதல் அத்தியாயத்திலேயே சுட்டு வீழ்த்தப்படும் மால்கம் எக்ஸ் புத்தக்த்தை சிறப்பாக எழுதியிருப்பதாக மருதனைப் பாராட்டினார். புத்தகத்தில் எவ்விதக் குறையையும் பா.ராமசந்திரன் வைக்கவில்லை. மால்கம் எக்ஸை ஒரு புனித பிம்பமாகவே நிறுவிவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

பின்னர் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள். பத்ரி மருதனிடம் நிறையக் கேள்விகள் கேட்குமாறு ஊக்குவித்தார். மால்கம் எக்ஸைப் பற்றி கூட்டத்துக்கு வந்திருந்த ஏகப்பட்ட மிஸ்டர் எக்ஸ்கள் கேள்வி கேட்டார்கள். விளம்பரப் பிரியர் யுவகிருஷ்ணாவை கேள்வி கேட்காதவர்களே இல்லை எனலாம். தொடர்ந்து விளம்பரங்கள் பற்றியும், விளம்பர ஏஜென்ஸிகள் பற்றியும் கேள்விகள். எல்லாவற்றிற்கும் லக்கிலுக் பொறுமையாகப் பதில் சொன்னார். அனைவரும் பொறுமையாகக் கேட்டார்கள். விளம்பரங்களில் ‘செலிபிரிட்டியை ஏன் விளம்பரங்களில் போடவேண்டும்’ என்கிற கேள்வியும், ‘கருப்பு நிறத் தோல்’ பற்றிய கேள்வியும் சில விவாதங்களை எழுப்பின. (கருப்பு வேண்டாம் என்று சொல்கிறோமே, ஆனால் டை (மயிர்ச்சாயம்) அடிக்கும்போது மட்டும் கருப்பை வேண்டுகிறோமே, அது எப்படி என்று ஒரு நண்பர் கேட்டபோது, அவரது பேரல்லல் திங்கிங்கை நினைத்து கூட்டமே அசந்துவிட்டது! அந்த நண்பர் எங்கள் நிறுவனத்தின் விற்பனை மேலாளர் என்பது ஜெனெரல் நாலெட்ஜுக்காக மட்டும் இங்கே.) மருதனை மறந்துவிட்டார்கள். ஒரு எக்ஸ் ஏன் அரசியல்வாதிகளை வேட்டி விளம்பரங்களில்கூட பயன்படுத்துவதில்லை என்றார். அரசியல்வாதிகளுக்கு விளம்பரம் தரமாட்டார்கள் என்றார் லக்கி. ஆனால் உண்மையான காரணத்தை நான் கண்டுபிடித்தேன். அரசியல்வாதிகளை நம்பி வேட்டி விளம்பரங்களை எடுத்தால், அவர்கள் வேட்டியை உருவிக்கொண்டு சண்டைக்கு நிற்கும்போது விற்பனை பாதிக்கப்பட்டுவிடும் என்று விளம்பர நிறுவனங்கள் அஞ்சலாம் என்றேன். நல்ல அரசியல்வாதி யார் என்று ஒரு நிமிடம் யோசித்த லக்கி, தமிழருவி மணியன் எனச் சொன்னார். எங்கே கருணாநிதி பெயரைச் சொல்லிவிடுவாரோ என்று அந்த ஒரு நிமிடத்தில் நான் அடைந்த கலவரத்தைச் சொல்லி மாளாது. இந்த யுவனுக்குள் இருந்து பதில் சொன்ன கிருஷ்ணனுக்கு நன்றி. 🙂

பத்ரி மீண்டும் ஞாபகப்படுத்தி மருதனிடம் கேள்வி கேளுங்கள் என்றார்.. இன்னொரு ’நண்பர் எக்ஸ்’, இன்னும் முப்பது ஆண்டுகள் கழித்து மருதன் எந்தத் தலைவரைப் பற்றி எழுதப்போகிறார் என்று கேட்டார். அவர் கேட்ட தொனி, இன்றைக்கு நல்ல தலைவர்களே இல்லையே என்கிற ஆதங்கத்தில். ஆனால் பத்ரி அப்படி எல்லாம் நிகழாது என்றும் தனக்கு நம்பிக்கை உள்ளது என்றும் தலைவர்கள் உருவாவர்கள் என்றும் சொன்னார். (பத்ரி லெஃப்ட் விங்க் என்கிறார்கள்! ஆம், நிச்சயம் புரட்சி வரும்.) நான், மருதனே தலைவராகிவிட்டால் அவர் ஏன் புத்தகம் எழுதவேண்டும் என்றேன். அப்போதும் பத்ரி விடவில்லை, சுயசரிதை எழுதுவார் என்றார். (புரட்சி வந்தேவிட்டது!) கூட்டம் முடிவதற்கு முன்பாக மைக்கைப் பிடித்த பா.ராமசந்திரன், இன்னும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு எழுத நிறையப் பேர் இருப்பார்கள் என்றும், அதற்கான நம்பிக்கை உள்ளது என்றும், அந்த விதையை கிழக்கு மொட்டைமாடிக்கூட்டத்தில் விதைக்காவிட்டால் தனக்கு அன்றிரவு தூக்கம் வராது என்றும் சொன்னார். (இவர் தமுஎச என்கிறார்கள்.)

இப்படி கூட்டம் களையாக நடந்துகொண்டிருக்க ஒரு பெரிய விஷயம் நடந்தது. பலர் கவனிக்கவில்லை. ஏதோ ஒரு நண்பர் மட்டும் அதை படம் பிடித்தார். லக்கியின் இரண்டு கொலைவெறி ரசிகர்கள் ‘சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்’ புத்தகத்தில் அவரிடம் கையெழுத்து வாங்கினார்கள். நான் கேட்க நினைத்த ஒரே கேள்வி இதுதான். ‘லக்கி, நீங்கள் இப்படி கையெழுத்து போடும்போது எப்படி உணர்ந்தீர்கள்?’ என்பதே. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியைக் கேட்க முடியாமல் போயிற்று. அந்த இரண்டு கொலைவெறி ரசிகர்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

’இன்னும் கேள்விகள் கேட்டால் நான் நிஜமாகவே பேசவேண்டியிருக்கும்’ என மருதன் அறிவிக்க இருந்த கணத்தில் கூட்டம் நிறைவடைந்தது.

இன்றைய கூட்டம்:

பாராவின் ஆயில் ரேகை புத்தகத்தை வெளியிட்டு பேசுகிறார் நாராயணன். நிறையக் கேள்விகள் வரும் என்பதால் வீட்டில் கடுமையான பயிற்சியில் பாரா ஈடுபட்டிருக்கிறார். யாருக்கேனும் கேள்விகள் தேவைப்பட்டால் என்னைத் தனிமடலில் தொடர்புகொள்ளவும். ஆயில்ரேகை புத்தகத்தை எப்படி இஸ்லாத்துடன் இணைப்பது, அங்கிருந்து எப்படி பாராவை மதச்சண்டைக்குள் கொண்டுபோவது எனப் பல விஷயங்களைத் தயாரித்து வைத்திருக்கிறேன்.

இன்னொரு புத்தகம் ஒபாமா பராக் பற்றியது. இப்புத்தம் பற்றிய ஒரு பார்வையை லக்கிலுக் அவரது பதிவில் வைத்திருக்கிறார். அதைப் படித்துவிட்டு (புத்தகத்தையே படித்துவிட்டதாக நினைத்துக்கொண்டு) யார் வேண்டுமானாலும் முத்துக்குமாரிடம் கேள்விகள் கேட்கலாம்.

முக்கியமான விஷயம், கேள்விகள் கேட்பதன் பெயர் கலந்துரையாடல் என்பதாகும்.

Share

Comments Closed