இருளர்கள் ஓர் அதிசயம்

நன்றி: இட்லிவடை

இருளர்கள் ஓர் அறிமுகம், க. குணசேகரன், 75 ரூபாய், கிழக்கு பதிப்பகம்.

இருளர்கள் ஓர் அறிமுகம் புத்தகத்தை முதலில் பார்த்தபோதே அதன் மீதான ஓர் ஈர்ப்பு தோன்றியது. புத்தகத்தின் மிக நல்ல அட்டையும், இருளர்கள் என்னும் பழங்குடிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆர்வமும் இவற்றிற்குக் காரணம்.

முதல் அத்தியாத்தைப் படித்தபோது, நூலாசிரியரின் ரசனையை எண்ணி வியந்தேன். அவர் விவரிக்கும் சம்பவங்கள் காட்டு வாழ்க்கை மீதான போதையைத் தந்தன. வாழ்க்கையில் இது சாத்தியமில்லை என்று தெரிந்திருந்தும் சில சமயங்களில் மனம் கொள்ளும் ஒருவித ஆசையை இப்புத்தகத்தின் முதல் அத்தியாத்தில் மீண்டும் கண்டேன். என் சுவாசக்காற்றே திரைப்ப்டடத்தில் வரும் ‘திறக்காத காட்டுக்குள்ளே’ பாடலும் காடு நாவலும், ஜெயமோகனின் சில கட்டுரைகளில் இத்தகைய ஒருவித கிறக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அதே கிறக்கத்தை இந்நூலின் முதல் கட்டுரையில் என்னால் காணமுடிந்தது. இரண்டாம் அத்தியாயம் அப்படியே மேலெழுந்து, ரசனையை முற்றிலும் உதறி, சிறந்த ஆய்வுப் புத்தகமாக மாறியது. உண்மையில் ஓர் அதிசயத் தருணமாக முதலிரண்டு கட்டுரைகளுக்குள் இருந்த வேற்றுமையை உணர்ந்தேன். கிட்டத்தட்ட இதை ஒத்த உத்தியொன்றை மு.க. புத்தகத்திலும், நான் வித்யா புத்தகத்திலும் பார்த்திருக்கிறேன். என்னளவில் அவை தோல்வியான முயற்சிகள். ஆனால் இப்புத்தகம் மிக இயல்பாக இந்த மாற்றத்தை உள்வாங்கிக்கொண்டிருக்கிறது.

முதல் அத்தியாயத்தில் கோபால் ராவ் என்பவர் இருளரைப் பற்றிச் சொல்கிறார். இரண்டாவது கட்டுரையில் குணசேகரன் தன் பார்வையைத் தொடர்கிறார். அங்கே தொடரும் தகவல் மழை இப்புத்தகம் முழுக்க எல்லாக் கட்டுரைகளிலும் கொட்டி வழிகிறது. இவ்வளவு தகவல் மழைகளை எப்படி ஆசிரியர் திரட்டினார் என்பதே பெரும் ஆச்சரியம். தகவல் மழைகள் என்றால், வெறும் அடுக்குதல் அல்ல. ஆராய்ச்சியுடன் கூடிய தகவல்கள். ஆராய்ச்சிக்கான தகவல்களும் அதற்கான நிரூபணங்களும் சங்க காலத்திலிருக்கும் பாடல்களிலிருந்து, இருளர்களின் வாழ்வில் சமீப, கடந்த காலங்களில் சந்தித்த அரசியல், சமூகப் பிரச்சினைகள் வரை நீண்டு விரிகின்றன.

பழங்குடிகளாக வாழ்ந்த மக்கள் கடற்கோள்களாலும் இயற்கைச் சீற்றங்களாலும் பல்வேறு இனக்குழுக்களாக இடம்பெயர்கிறார்கள். அங்கிருந்து கிளைக்கிறது இருளர் என்னும் இனக்குழு. அது பின்னர் சாதியாக நிலைபெறுகிறது. இருளர்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு நாடோடியின் வாழ்க்கையையாகவே வாழ்கிறார்கள். காடுகளில் தேன் எடுப்பது, பாம்பு பிடிப்பது, மூலிகைகள் சேகரிப்பது என அவர்களது வாழ்க்கை தொடர்கிறது.

சங்ககால மக்கள் தங்கள் குலச்சின்னங்களாக மரத்தையும் பறவையையும் வரித்துக்கொள்வதை ஆசிரியர் விளக்கியிருப்பது சுவையானது. கீரனார், மருதனார் என எடுத்துக்காட்டுகளைத் தந்து விளக்கி, அதற்கான காரணமாக ஆசிரியர் முன்வைப்பது, அக்கால மக்களின் மனதைத் துல்லியமாகப் படம் பிடிக்கிறது. ‘அவர்களின் அத்தனை சந்தேகங்களுக்கும் விடை அளிப்பது போலிருந்தது.’ இருளர்களின் பெயருக்கான காரணங்கள் பல. இருளான பகுதிகளில் வாழ்பவர்கள், இருளைப் போன்ற கருமையானவர்கள், இருள மரத்தின் சந்ததிகளாகத் தங்களைக் கருதுபவர்கள் எனப் பல காரணங்கள். அவர்கள் பேசும் மொழி இருள என்னும் மொழியைப் பேசியிருக்கிறார்கள். இருள என்னும் மொழி தமிழ் மொழியின் ஒரு கிளை. இருளர்கள் ஐவகை நிலங்களில் வாழ்ந்த தமிழர்கள். தமிழிலிருந்து பிரிந்த மொழிகள் வழங்கும் நிலங்களில் வாழ்ந்தாலும், அவர்களுக்குள் ஒருவித தனி மொழி புழக்கத்தில் உள்ளது. இன்று இருளர்கள் கன்னடம் பேசினாலும், மலையாளம் பேசினாலும், துளு பேசினாலும், அவர்கள் தமிழர்களே.

இருளர்கள் எந்நிலையிலும் தங்கள் மரபைக் கைவிடாத தீவிர இந்துக்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் வழிபாடு குலதெய்வ வழிபாடு சார்ந்தது. கன்னித் தெய்வத்தை அவர்கள் நம்புகிறார்கள். எல்லாத் திருவிழாக்களிலும், சடங்குகளிலும் கன்னித் தெய்வமே முதலிடம் பெறுகிறது. எல்லா இருளர்களின் வாழ்விலும் கன்னித் தெய்வமும், அவர்களின் மரபான திருவிழாவும் முக்கிய இடம் பெற்றுள்ளது.

இருளர்கள் கொண்டாடும் திருவிழா பல்வேறு படிகளைக் கொண்டது. அத்தனையையும் மிக விரிவாக, பொறுமையாக, படிப்பவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் விளக்கியிருக்கிறார் குணசேகரன். ஆய்வு செய்து, அவர்கள் அத்திருவிழாவின் ஒவ்வொரு நிலையிலும் பாடும் பாடல்களைத் தொகுத்திருக்கிறார். இன்று மக்கள் வாழும் இடங்களிலெல்லாம் வழிபடும் இடங்களை வைத்துக்கொள்ளும் மரபைக் கொண்டு வந்தவர்கள் இருளர்களே என்கிறார் ஆசிரியர். தாங்கள் வாழ்ந்த இடங்களிலெல்லாம் கோயிலையும், கடவுளையும் அழைத்துக்கொண்டவர்கள் இருளர்கள்.

வழிபாட்டில் முதல் இறைவணக்கம் பாடும் பண்பாட்டைக் கொண்டு வந்தவர்கள் இருளர்களே என்கிறார் குணசேகரன். பாணர்களின் (பாணரின் மனைவி பெயர் பாணிச்சி என்கிறார் ஆசிரியர். இப்படி போகிற போக்கில் அவர் சொல்லிச் செல்லும் விஷயங்களின் பட்டியலிடவே முடியாது. நினைவில் வைத்துக்கொள்ளவும் முடியாது. அத்தனை அதிகம்) பாடல்களையும், பழங்குடிகளின் பாடல்களையும் தொடர்ந்து இன்றுவரை காப்பாற்றிக்கொண்டு வந்தவகள் இருளர்களே. இதனால் இருளர்களின் வாழ்க்கையில் இசை மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. (கம்பியில் கட்டிய சலங்கையால் இசையை எழுப்பி, ஒருவரின் தோளை ஒருவர் பிடித்துக்கொண்டு ஆடுவதை ஆசிரியர் விவரிக்கும்போது, பின்னொலியில் இளையராஜாவின் முள்ளும் மலரும் ஹம்மிங்கான ‘எலலே’ (ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்) ஒலிக்கிறது.)

இருளர்கள் திருமணத்திற்காக மேற்கொள்ளும் பெண் பார்க்கும் படலம் மிகவும் சுவையானது. (இதன் நம்பகத்தன்மை குறித்துத் தெரியாது. ஆசிரியர் சொல்வதை அப்படியே நம்புகிறேன். அவ்வளவே.) பெண் பார்க்க வரும் இருளர் அதைப் பற்றிப் பேசுவதில்லையாம். வரும்போது கையில் இரண்டு கம்பிகளைக் கொண்டு வருகிறார்கள். மற்ற எல்லா விஷயங்களையும் நீட்டி முழக்கிப் பேசிவிட்டுப் போய்விடுகிறார்கள். இப்படியே இரண்டாவது முறையும் செய்கிறார்கள். அப்போது பெண் வீட்டார்கள் ‘சென்றமுறையும் இப்படிச் செய்தீர்கள், என்ன விஷயம்’ என்று கேட்க திருமண விஷயம் தொடங்குகிறது. துளை உள்ள பானை ஒன்றை சீதனமாகத் தருகிறார்கள். இதுவே இருள ஆணுக்குப் பின்னர் எலி பிடிக்கப் பயன்படுகிறது. எலி என்பதைச் சிறந்த உணவாகச் சொல்கிறார்கள் இருளர்கள்.

இருளர்களின் இன்றைய முக்கிய வேலை பாம்பு பிடிப்பது. பாம்பு பிடிப்பதன் முகமாகவே இன்றைய இருளர்கள் அறியப்படுகிறார்கள். பாம்பின் வகையை அதன் மணத்தை வைத்தே கண்டறியும் திறமை பெற்றவர்கள் என்கிறார் ஆசிரியர். (எந்தப் பாம்பு என்ன மணம் என்கிற விவரணையும் உண்டு!) எந்தப் புற்றில் பாம்பிருந்தாலும் Y வடிவ முனை கொண்ட கழியை வைத்துப் பிடிக்கிறார்கள். கையாலும் பிடிக்கிறார்கள். காடுகள் குறைந்து வீடுகள் அதிகரிக்கும் சூழலில் இருளரின் தேவையைப் புரிந்துகொள்ளமுடியும். எந்த விதப் பாம்புக் கடிக்கும் மூலிகை மருந்து உண்டு என்கிறார்கள். மூலிகைகளின் பட்டியலையும், பாம்புக்கடிக்கான மருத்துவத்தின் பட்டியலையும் மிக விரிவாகக் கொடுத்து அசர வைக்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு தாவரத்தின் தாவரவியல் பெயரையும் கொடுப்பது இன்னும் பாராட்டப்படவேண்டியது.

இருளர்களின் உரிமைப் போராட்டங்கள் பற்றியும் குணசேகரன் எழுதியிருக்கிறார். ஆங்கிலேயர்கள் காலத்தில் இருளர்கள் குற்றப் பரம்பரையாக அறிவிக்கப்பட்டதையும் அதற்கான போராட்டத்தையும் ஓர் இருளரே விவரிக்கிறார். இன்றைய இருளர் வாழ்வின் முக்கியப் பிரச்சினையான சான்றிதழ் வாங்குவதைப் பற்றிச் சொல்லும் ஆசிரியர், இதன் காரணமாகவே பெரும்பாலான இருளர்கள் பாம்பு, அணில் பிடிக்கும் இருளர்களாகவே தங்கிவிடுவதைச் சுட்டிக்காட்டுகிறார்.

மிக எளிமையான தமிழ், ஆழமான பார்வை, தொடர்ச்சியான தகவல்கள் என அசர வைக்கும் ஆசிரியரின் முதல் நூல் இது என்னும்போது அந்த ஆச்சரியம் இன்னும் பன்மடங்கு அதிகரித்தது. இத்தனை முயற்சியும் உழைப்பும் காண்பித்த ஆசிரியர் இன்னும் சில விஷயங்களில் கவனம் கொண்டிருக்கலாம்.

ஒரே விஷயத்தைப் பலமுறை மீண்டும் மீண்டும் சொல்வதன்மூலம் ஏற்படும் அலுப்பைத் தவிர்த்திருக்கலாம். ஐவகை நிலங்கள் பற்றியும், இருளர்களின் மொழி பற்றியும் இது போன்ற இன்னும் நிறைய தகவல்களும் நிறைய முறை வருகின்றன. ஆரிய படையெடுப்பு என்கிற ஒரு கருத்தாக்கம் இன்று பல ஆய்வாளர்களால் நிராகரிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதை ஒரு விவாதித்திற்குரிய விஷயமாகக்கூட ஆசிரியர் எடுத்துக்கொள்ளவில்லை. ஆரியப்படையெடுத்து நிகழ்ந்தது என்கிற முடிவின் அடிப்படையில் இருளர்களை தஸ்யூக்களாகவே அணுகிறார். அதேபோல், ஒவ்வொரு அத்தியாயத்திலும் இருளர்களின் பெருமையைச் சொல்வதாக எண்ணிக்கொண்டு, இன்றைய மக்களின் நாகரிகத்தைப் பற்றிய கிண்டல்கள், ஒருவகையில் ஆசிரியரின் சமூக அக்கறையைக் காட்டுவதாக எடுத்துக்கொள்ள முடிந்தாலும், செயற்கைத்தனமாக ஒலிக்கிறது. இந்த செயற்கைத்தனமான எழுத்துகள், இந்நூலில் ஆசிரியர் எட்டியுள்ள உயரத்திற்குச் சற்றும் பொருந்தாதவை. சில இடங்களில் இந்த சமூக அக்கறை எல்லை மீறி ஒருவித அலுப்பைத் தருகிறது. ஆய்வுகள் ஊகங்களின் அடிப்படையிலும் நடக்கின்றன என்றாலும், இந்த ஊகம் ஓரோர் இடங்களில் அதிகமாகவிடுகிறது. ஓர் உதாரணம், இருளர்கள் தலைப்பாகை கட்டுவதைப் பற்றியது. இதை இன்றைய உலகின் மக்கள் அணியும் தலைக்கவசங்களோடு ஒப்பிடுவது கொஞ்சம் அதிகபட்ச கற்பனை, ஊகம். இருளர்களின் திருமணம் பற்றிய சிறந்த குறிப்புகளைத் தரும் ஆசிரியர், இருளர்களின் மறுமணம் பற்றிய குறிப்புகளைத் தந்திருக்கலாம். (நிறைய தகவல்களை விடாமல் படித்ததில், இதை நான் பார்க்கத் தவறியிருந்தால் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன். நன்றி.) நிறைய நூல்களையும், குறிப்புகளையும் படித்து நூலாய்வு செய்திருக்கும் ஆசிரியரின் கள ஆய்வு குறித்த விவரங்கள் இல்லை. கள ஆய்வும் செய்திருந்தால் இந்நூலில் இருளர்களின் இன்னொரு பரிமாணமும் கைக்கூடியிருக்கலாம்.

‘சோளகர் தொட்டி’ நாவலில் இருளர்கள் வாழ்வின் இன்னொரு பக்கத்தை உணரமுடியும். காட்டில் வாழ்வதால் அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள், வீரப்பன் தேடுதல் வேட்டையில் அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் நம்மைப் பதறவைப்பவை. சரியான கல்வி அறிவும், பொருளாதார சமூக முன்னேற்றமும் மட்டுமே இவர்களை முன்னேற்ற முடியும். இன்றைய இருளர்கள் தங்கள் சந்ததிகளாவது படித்து முன்னேற வேண்டும் என்கிற எண்ணம் உள்ளதை ஆசிரியர் குறிப்பிடுகிறார். இது முக்கியமானது. இது நிகழ அவர்களின் இஷ்டமான கன்னித் தெய்வம் அருளட்டும்.

தமிழக அரசின் சிறந்த புத்தகத்திற்கான விருதைப் பெறும் தகுதியுடைய இப்புத்தகத்தைப் போன்ற இன்னும் பல புத்தகங்களை, ஆய்வு நூல்களை குணசேகரன் எழுதுவார் என எதிர்பார்க்கலாம்.

ஆன்லைனில் வாங்க: http://nhm.in/printedbook/767/Irullargal%20:%20Orr%20Arimugam

Share

Comments Closed