உயிர்ப்புத்தகம் – ஆன்மாவின் அந்தரங்கக் குரல்

உயிர்ப் புத்தகம், ஸி.வி. பாலகிருஷ்ணன், தமிழில்: வை. கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம், 224 பக்கங்கள், 120 ரூபாய்.

சி.வி. பாலகிருஷ்ணன் மலையாளத்தில் எழுதிய ‘ஆயிஸிண்டே புஸ்தகம்’ என்னும் நாவலின் தமிழாக்கம் இந்நாவல். மலையாளத்தின் மிக முக்கிய நாவல்களில் ஒன்றாக இந்நாவல் கருதப்படுவதாக இந்நூலில் உள்ள குறிப்பு சொல்கிறது. நாவலை வாசித்தபோது, இக்குறிப்பு சொல்வது நிச்சயம் உண்மையாகவே இருக்கவேண்டும் என்பது புரிந்தது.

இந்நாவலில் சித்திரிக்கப்படும் தோமோ, அவரது தந்தை, தோமோவின் மகன், மகள், மனைவி என ஒவ்வொருவரின் ஆன்மாவின் குரலும் காமத்தை முன்வைத்து ஒலிக்கின்றன. இந்த ஒட்டுமொத்த பிரதியையும்கூட காமத்தின் மீதான ஆன்ம விசாரணை என்று வகைப்படுத்திவிடமுடியும். எங்கும் பின் தொடரும் நிழல் போல, ஒவ்வொருவரின் ஆன்மாவையும் காமம் விடாது பின் தொடர்கிறது. சில சமயம் காதல் என்னும் பூச்சோடு. பல சமயங்களில் எவ்வித பூச்சுமில்லாமல் காமம் என்கிற வேகத்தோடு.

தோமோவின் தந்தை தன் பேத்தியின் மீது தானே எதிர்பார்க்காத தருணமொன்றில் காமம் கொள்கிறார். அதற்கான தண்டனையாகத் தூக்கிட்டுச் சாகிறார். தோமோவின் மனைவி இறந்த பின்பு தோமோ திருமணம் செய்யாமல் குடித்துவிட்டுச் சீரழிகிறான். மகள் ஆனி, பாதிரியார் ஒருவருடன் ஓடிப்போகிறாள். மகன் யோஹன்னான் பள்ளியில் உடன் படிக்கும் ஒரு நண்பனுடன் நெருக்கமாகிறான். ஓரினச்சேர்க்கைக்கு அது இட்டுச் செல்லும் சாத்தியக்கூறுகள் ஒருவித பூடகத் தன்மையுடன் சொல்லப்படுகின்றன. பின்பு அவனுக்கு ராஹேல் என்னும் பெண்ணுடன் உடலுறவு ஏற்படுகிறது. அது காதலாக மாறும் முன்பு, ராஹேல் கன்னியாஸ்த்ரி மடத்திற்குச் செல்கிறாள். ஸாரா என்னும் பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லாத சகரியா கணவனாகிறான். அவளை விடாது காதலிக்கும் யாக்கோப் குடித்துவிட்டு சாகிறான். எவ்விதப் பிடிப்பும் இன்றி அலையும் யோஹன்னான் அவளுடன் உறவு கொள்ளத் தொடங்குகிறான். இந்நிலையில் யோஹன்னின் தந்தை தோமோவிற்கு, மனைவி இறந்து பல வருடங்களுக்குப்பின்பு திருமணம் செய்யும் எண்ணம் வருகிறது. கணவன் இல்லாத ஸாராவைத் திருமணம் செய்ய நினைக்கிறான். தன் மகனுக்கும் ஸாராவிற்கும் இருக்கும் தொடர்பு தெரிந்திருந்தும்கூட, ஸாராவின் அழகு அவனைக் கட்டிப் போடுகிறது. அவள் திருமணத்திற்குச் சம்மதிக்க மறுப்பதால், அவளைக் கொலை செய்கிறான். யோஹன்னான் தனித்து விடப்படுகிறான். இறந்துபோன அவனது தாத்தா, தாய், ஸாரா என எல்லோரையும் ஆன்மாவாகக் காண்கிறான்.

கதையின் நடை ஒருவித மாந்திரிக யதார்தத் தன்மையோடு விவரிக்கப்படுகிறது. இத்தன்மையை அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்தாமல், தேவையான இடங்களில், ஆன்மாவின் குரலாக வெளிப்படுத்துவதில் ஆசிரியர் கவனமாயிருந்திருக்கிறார் என்று தெரிகிறது. ஒவ்வொரு முக்கியமான நிகழ்வின்போதும், அதையொத்த விவிலியக் குறிப்புகள் வருகின்றன. பெரும்பான்மையான குறிப்புகள் நடைமுறை வாழ்விற்கும் விவிலியத்திற்குமான முரணாகவே முன்வைக்கப்படுகிறன.

பாதிரியார் ஒருவர் காதல் கொண்டு ஒரு பெண்ணோடு ஓடிப்போவது ஒரு முக்கிய விஷயம். அதை பெரிய பாதிரியார் கடைசியில் ஏற்கிறார். பிரம்மச்சரியம் என்கிற விஷயம் குறித்து நான் பலமுறை நினைத்திருக்கிறேன். கடுமையான பிரம்மச்சரியம் என்பது சாத்தியம்தானா என்பது புரியவில்லை. பாதிரியின் காதல் அவரது கட்டுக்களை உடைக்கிறது. அவர் இயல்பான வாழ்க்கையைத் தேடி ஓடுகிறார். பாதிரியாவதற்கான பயிற்சியில் கடுமையான பிரம்மச்சரிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட நிர்ப்பந்திக்கப்படுவது பற்றிய குறிப்புகளும் உள்ளன. பாதிரியார்கள் இருவருக்கிடையேயான காமம் பற்றிய உரையாடல் முக்கியமானது. ‘கன்னியான தன் மகளைக் கல்யாணம் பன்னிக்கொடுக்கிறவனும் நன்மை அடைகிறான், கொடுக்காதவனும் அதே நன்மையை அடைகிறான்.’

தோமோவின் மகனான யோஹான்னனே மிக முக்கிய பாத்திரம். முக்கியமான விஷயம் அவன் வயது. கடைசியில் ஸாராவுடன் உறவுகொள்ளும்போது அவன் வயது 17. ஸாராவின் வயது 36. அதேபோல் மேரி – நைநான் உறவு. அவர்கள் உறவு கொள்கிறார்கள். ஆனால் நைநான் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான். ஸாராவின் பக்கத்து வீட்டுப் பெண்ணான பிரிஜித்தாம்மாவும் தன்னைவிட ஒரு சிறிய பையனிடம் உறவு கொள்ள முயல்கிறாள். கட்டுக்கடங்காத காமத்தின் பிரதிகளாக இவர்கள் அனைவரும் சித்திரிக்கப்பட்டுள்ளனர். ஸாராவிற்கும் யோஹான்னானுக்கும் இடையேயான முறை தவறிய உறவை அறியும் பெரிய பாதிரியார் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறார். அவரால் யோஹன்னனையோ ஸாராவையோ கட்டுப்படுத்தமுடியவில்லை. அதற்கான வார்த்தைகளோ வழிகளோ அவரிடம் இல்லை. அவருக்கு எளியதும் பணிவதும் பிரார்த்தனை மட்டுமே. அவர் பிரார்த்தனையின் வழியாக அடையும் மன அமைதியை, யோஹான்னனும் ஸாராவும் காமத்தின் மூலம் கண்டடைகிறார்கள். அதுபோன்ற காமமே ஒரு பாதிரியாரை ஒரு பெண்ணோடு ஓடச் செய்கிறது.

இதில் வரும் எல்லா முக்கியக் கதாபாத்திரங்களில் ஏதேனும் ஒரு தடவையேனும் தங்கள் உயிரின் ரகசியக் குரலை எதிர்கொள்கிறார்கள். ஒருவித அமானுஷ்யத் தன்மையோடோ அல்லது அது தங்களுக்கான குரல்தான் என்கிற தெளிவோடோ அதை எதிர்கொள்கிறார்கள். யோஹான்னான் அக்குரலை எதிர்கொள்கிறான். தோமோ அக்குரலைக் கண்டு ஓடுகிறான். ஸாரா அக்குரலைப் புறக்கணித்து தனக்கான பாதையைத் தேர்கிறாள். ஆனி அக்குரலோடு உடன்படுகிறாள். உயிரின் குரல் யாரையும் விடுவதில்லை.

இந்நாவலை வை. கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்திருக்கிறார். சிக்கலான மொழியுடைய நாவலை மிக நன்றாக மொழிபெயர்த்திருக்கிறார். இடையிடையே விவிலியத்திலிருந்து வரும் குறிப்புகளை அப்படியே தமிழில் தந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். சில சமயங்களில் எந்த இடத்தில் குறிப்பு வருகிறது, எந்த இடத்தில் நாவலின் பிரதி வருகிறது என்பதைப் பிரிக்கமுடியவில்லை. சில மலையாள வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார். (ரூபவதி, பரிகாரப் பிரதக்ஷணம், வரிஷித்தார், ஸாரா என்ற பெயரை ஸாரே என்று சொல்லியிருப்பது, ஆகர்ஷித்தன, குசலப்ரச்னம் இப்படிப் பல.) இவற்றைத் தமிழில் எழுதியிருக்கலாம். அதேபோல் திடீரென ஆங்கில வார்த்தைகள் வருகின்றன. (லீவு நாள், ரெடி ஆயின போன்றவை.) மூலத்திலேயே இப்படி இருந்திருக்கலாம் என நினைக்கிறேன். அதேபோல் குற்ற சம்மதம் என்னும் வார்த்தைக்கு பாவ மன்னிப்பு என்றும் கடவுளே என்று அடிக்கடி உச்சரிக்கப்படும் சொல்லுக்கு ஆண்டவரே என்னும் மாற்றியிருந்தால், நாவலின் கிறித்துவத்தன்மை கூடியிருக்கும். பொருட்படுத்தத்தகாத இந்த மிகச் சிறிய குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், படிக்க எவ்விதத் தடங்கலுமில்லாத, அழகான மொழிபெயர்ப்பு இது.

ஆன்லைனில் வாங்க: http://nhm.in/printedbook/648/Uyir%20Puththagam

.

Share

Comments Closed