ஒரு நண்பனின் கதை இது

முன்குறிப்பு: இது கையறுநிலையில் எழுதப்பட்ட சுயபுலம்பல் மட்டுமே.

ஜெயகாந்தன் ஒருதடவை ‘இறந்தவனைக் கண்டு அழும் மனிதன் ஒவ்வொருவனும் தன் இறப்பை அதில் கண்டே அழுகிறான்’ என்ற ரீதியில் எழுதியிருந்தார். இதுகுறித்து நிறைய யோசித்திருக்கிறேன். இதில் எங்கோ உண்மையிருக்கிறது, ஆனால் அது சரியாகச் சொல்லப்படவில்லை என்றும் தோன்றியது.

நேற்று (17-11-2008) காலையே ஒரு மரணச் செய்தியாக, நண்பன் ஒருவனின் அகால மரணச் செய்தியாக, மிகப்பெரிய இடியைப் போல வந்திறங்கியது அச்செய்தி. என் வயதுதான். ப்ளஸ் 1, ப்ளஸ் 2 என்னுடன் படித்தான். நல்ல சிகப்பில், நிறைய முடியுடன், கொஞ்சம் பூசினாற் போல், மிக அழகாக இருப்பான். கல்லூரியில் பலர் இயற்பியல் எடுக்க, நான் மட்டும் வேதியியல் எடுத்தேன். அவன் மட்டும் கணிதம் எடுத்தான்.

நான் பத்தாம் வகுப்பு படித்தது மதுரையில். பதினொன்றாம் வகுப்புக்கு திருநெல்வேலியில் உள்ள மதிதா இந்துக்கல்லூரியில் சேர்ந்தேன். அங்கேதான் அவன் பரிச்சயம் ஆனது. எல்லா மாணவர்களும் தனித்தனியாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்க, அவன்தான் முதன்முதலில் நான்கைந்து பேர் சேர்ந்து சாப்பிடச் சொல்லி வற்புறுத்தியவன். அதேபோல், அந்த கூட்டம் அதிகமாகிவிடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தவன். அவன் அம்மா அவனுக்கு விதவிதமாகச் செய்து தந்து அனுப்புவார்கள். ஒருகட்டத்தில் மதியம் வரை காத்திராமல் முதல் இடைவேளையிலேயே அதனை உண்ண ஆரம்பித்தோம். எங்கள் உணவிலிருந்து அவனுக்குத் தருவோம்.

உண்டுவிட்டு, மதிதா இந்துக் கல்லூரி உயர்நிலைப்பள்ளியைச் சுற்றி வருவோம். சும்மா செல்லாமல் கடலை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டு போகலாம் என்று சொல்வான். வாழ்த்து அட்டை விற்கும் கடையில், காதலர்களுக்கான வாழ்த்து அட்டையைக் காண்பிப்பான். குறைந்த ஆடைகளில் உடலுறவுக்கு அழைக்கும்விதமாக ஆணும் பெண்ணும் அந்த வாழ்த்து அட்டைகளில் இருப்பார்கள். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வருவோம்.

அவனுக்கு நெய்ச்சோறும் வெல்லமும் மிகவும் பிடிக்கும். யாராவது அதைக் கொண்டுவந்தால், அவன் கொண்டுவரும் சப்பாத்தி அல்லது பூரியைக் கொடுத்துவிட்டு அதை வாங்கிக்கொள்வான்.

நண்பர்களுக்குள் ஓட்டிக்கொள்வது என்பதைத் தொடங்கி வைத்தது அவன்தான். என்னுடன் சேர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதே, திடீரென்று கட்சி மாறி, ‘இப்ப உங்கட்சி இல்ல, அவங்கட்சி’ என்று சொல்லி, அதுவரை எதையெல்லாம் சப்போர்ட் செய்தானோ அதையெல்லாம் எதிர்த்துப் பேசுவான். ஒவ்வொரு சமயம் வகுப்புக்குள் நுழையும்போதே, ‘நான் இன்னைக்கு அவன் சைட்ல’ என்று சொல்லிக்கொண்டே வருவான்.

மழை பெய்து ஓய்ந்திருக்கும் வேளையில், எங்களில் யாரேனும் ஒருவர் தோள்மீது கைபோட்டு பேசிக்கொண்டே சென்று, ஏதேனும் மரத்தடிக்குக் கீழே சென்றவுடன், மரத்தடியில் கிளையை ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு ஓடுவான். அவன் ஓடிவிடுவான். இலைகளில் சேர்ந்திருக்கும் நீரெல்லாம் அவன் அழைத்துக்கொண்டு சென்ற நண்பன் மீது விழ, மற்ற நண்பர்கள் பெருங்குரலெடுத்துச் சிரிப்பார்கள்.

நாங்களெல்லாம் கிரிக்கெட் என்று அலைந்துகொண்டிருக்க, அவன் ஸ்டெஃபியின் மிகத் தீவிர ரசிகனாக இருந்தான். ஒவ்வொரு ஓபன் டென்னிஸின் பைனல்ஸ் ஸ்கோரையும் ஒப்பிப்பான். திடீரென்று ஒருநாள், தனக்கு இனிமேல் ஸ்டெபி கிராஃப் பிடிக்காது என்றும் மோனிகா செலஸ்தான் பிடிக்கும் என்றும் அறிவித்தான். அப்படி எப்படி மாறமுடியும் என்றால், அது அப்படித்தான் என்று சாதித்தான். அத்தோடு ஸ்டெபி கிராபிற்கு விளையாடவே தெரியாது என்றெல்லாம் சொல்லி திட்ட ஆரம்பித்தான். எங்களுக்கெல்லாம் தலை சுற்றியது.

தமிழை வாசிப்பதில் எனக்கும் அவனுக்கும் பெரிய போட்டியே நடக்கும். அவன் தொலைக்காட்சி, வானொலிகளில் வாசிப்பவர்கள் போல வாசிப்பான். ஏதேனும் ஓரிடத்தில் திடீரென்று திக்கினாலோ, நிறுத்தக்கூடாத இடத்தில் நிறுத்தினாலோ நான் அவனைப் பார்த்துச் சிரிப்பேன். நான் வாசிக்கும்போது நான் எப்போதெல்லாம் தவறு விடுகிறேன் என்பதைக் கண்கொத்திப் பாம்பாகப் பார்த்திருப்பான்.

பள்ளிவாசம் முடிந்து நாங்கள் கல்லூரிக்குச் சென்றோம். எல்லாரும் பேசி வைத்து, இயற்பியல் என்றெழுதினார்கள், விண்ணப்பபடிவத்தில். நான் வேண்டுமென்றே வேதியியல் என்று எழுதினேன். இத்தனைக்கும் வேதியியலை விட இயற்பியலில் அதிகம் மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். அவன் கணிதம் என்று எழுதினானா என்பது நினைவில்லை. ஆனால் அவனுக்குக் கணிதம்தான் கிடைத்தது.

ஒருவருடம்தான் கல்லூரியில் படித்தான். அதற்குள் ஸ்டாஃப் நர்ஸ் கோர்ஸ் கிடைத்துவிட்டது. ஹைகிரவுண்டில் சேர்ந்துவிட்டான். எங்களுக்கெல்லாம் வருத்தமாக இருந்தது. அவன் இதற்காக அழுதே விட்டான். ஆனாலும் எங்கள் நட்பு அறுந்துவிடவில்லை. அது வேறொரு புதிய பரிமாணத்துடன் கிளைத்தெழுந்து செழித்தது என்றே சொல்லவேண்டும்.

அவனுக்கு ஹைகிரவுண்டில் விதவிதமாக நண்பர்கள் அறிமுகமானார்கள். எல்லோரையும் எங்கள் நண்பர்களாக்கினான். வாராவாரம் நாங்கள் அவனைப் பார்க்கப் போவோம். அதுவரை பெண்கள், கிரிக்கெட், கிண்டல் என்றே பேசிக்கொண்டிருந்த நாங்கள், வயதின் வளர்ச்சியில், காமம், உடலுறவு என்று பேச ஆரம்பித்திருந்தோம்.

அவன் ஸ்டாஃப் நர்ஸாக இருந்ததால், இந்த விஷயங்களைப் பற்றி விதவிதமாகச் சொன்னான். ஸ்டாஃப் நர்ஸ் படிக்கும் பெண்களைப் பற்றிய அவன் மதிப்பீடு, டாக்டர்களுக்கும் அங்கு வேலை பார்க்கும் ஸ்டாஃப் நர்ஸ்களுக்குமான உறவு என்றெல்லாம் என்னென்னவோ சொல்லுவான். நாங்கள் எப்படி பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது அவன் சொல்லுவதை நம்புவதா வேண்டாமா என்றெண்ணி பிறகு வேறு வழியில்லாமல் நம்புவோமோ அப்படித்தான் இதனையும் நம்புவோம். அவன் சொன்னவை ஏராளம். முதலிரவில் ஆண் பெண் கலவியில் ஏற்படும் பிரச்சினைகள், (‘அது அத்தனை லேசுன்னு நினைக்காத..’ என்றுதான் ஆரம்பிப்பான். நிறைய சொல்லுவான். அதையெல்லாம் இங்கே எழுதமுடியாது.) பெண்களின் பிரச்சினைகள், ஆணின் பிரச்சினைகள் என்றெல்லாம் விவரிப்பான்.

நாங்கள் எங்கள் நண்பர்களில் ஒருவன் வீட்டில் பிஎஃப் பார்த்தபோது, ஹைகிரவுண்டிலிருந்து வந்தான். ஸ்டாஃப் நர்ஸில் படிப்பவர்கள் ஹாஸ்டலில் தங்கிப் படிப்பார்கள். இரவில் வார்டன் ஹாஸ்டலைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு போய்விடுவார். பிஎஃப் பார்க்க வருவதற்காகவே கள்ளச் சாவி செய்து திறந்து கொண்டு வந்திருந்தான். பி எஃப் பார்த்துவிட்டு, அதிகாலை மூன்று மணிக்கு டவுணிலிருந்து ஹைகிரவுண்ட் நடந்து சென்றான்.

ஹாஸ்டல் வார்டன் ரொம்ப கேள்வி கேட்கிறாள் என்று, ஒரு கடிதத்தில் அவனே குங்குமம் மஞ்சள் என்றெல்லாம் தூவி, ஒரு தாயத்தையும் அதோடு சேர்த்து, உன் பெயருக்கு மந்திரித்துவிட்டோம், இனியும் உன் மாணவர்களுடன் விளையாடாதே என்று அவனே ஒரு போஸ்ட் அனுப்பி வைத்தான். அந்த வார்டன் அலறிவிட்டார் என்று சொன்னான். இப்படி நிறைய சொல்லுவான். செய்தானா என்றெல்லாம் தெரியாது.

திடீரென்று ஒருநாள் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகச் சொன்னான். நாங்கள் எல்லோரும் ஆர்வமாகக் கேட்டோம். பூர்வஜென்மத்து உறவு, அது இது, முத்தம் என்று என்னவெல்லாமோ சொன்னான். எல்லாம் கேட்டு முடித்து நாங்கள் கிளம்பும்போது, ‘இன்னும் இருக்குல’ என்று சொல்லி, அவன் காதலிக்கும் இரண்டாவது பெண்ணைப் பற்றியும் சொல்லத் தொடங்கினான். அப்போதும் அதே பூர்வ ஜென்மத்து உறவு, அது இது, முத்தம் எல்லாம் வந்தது. நான் கடுப்பாகிவிட்டேன். பின்பு என்னிடம் சத்தியமே செய்தான், இரண்டு பெண்களுமே அவனைக் காதலிப்பதாகவும், அவனுக்கு இரண்டு பெண்களையும் பிடித்திருப்பதாகவும். அவனுக்குப் பிறந்தநாள் வந்தால் இரண்டு சாக்லேட்டுகள், இரண்டு சட்டைகள் பரிசு வரும். சொல்லிச் சொல்லிச் சிரிப்பான். கடைசியில் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து, அவன் அம்மாவிடம் சொல்ல, அவன் அம்மா அவன் காதலை எவ்வித யோசனையுமின்றி ஒரே நொடியில் நிராகரித்தார். அவனும் உடனே அக்காதலை நிராகரித்துவிட்டான்.

எனக்கும் வேலை கிடைத்து, அவனுக்கும் வேலை கிடைத்து, எங்கள் நட்பு தொடர்ந்துகொண்டிருந்தது. மருத்துவமனைகளில் நடக்கும் காமகளியாட்டங்களை அவன் நிறைய சொல்லுவான். அதை வைத்து நான் ஒரு கதை எழுதினேன். (மீண்டும் ஒரு மாலைப்பொழுது.) Slept away என்பதை உருவாக்கி, அதை எல்லாருக்கும் சொல்லுவான். அந்த ஸ்டாஃப் நர்ஸ் நேத்து அவனோட ஸ்லெப்ட் அவே என்பான். பின்பு அவனுக்குச் சென்னையில் வேலை கிடைத்து, சென்னைக்குப் போனான்.

நான் தூத்துக்குடியில் வேலையில் இருந்தேன். நான்கைந்து நாள் விடுமுறை கிடைத்தபோது அவனைப் பார்க்கப் போனேன். அங்கேயும் எங்கள் நண்பர்களோடேயே இருந்தான். எல்லாரும் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடமாகப் பார்க்கப் போவோம். சோழிங்கர், வண்டலூர் பூங்கா, மெரீனா கடற்கரை என்று எல்லாம் பார்த்தது அவனோடுதான். எங்கே போனாலும் நாங்களே சமைத்துக்கொண்டு உணவெடுத்துக்கொண்டு போவோம். கைகளில் உருட்டித் தருவான் எல்லாருக்கும்.

போட்டோ எடுக்கும்போது இயல்பாக இருக்கவேண்டும் என்பது என் எண்ணம். வேண்டுமென்றே எல்லாரையும் செயற்கையாக நிற்கச் சொல்லி படமெடுப்பான். ஒரு புகைப்படத்தில் எல்லோரும் வரிசையாக ஒருவர் தோள்களில் ஒருகை வைத்திருக்க, ஓடும் ரயில்வண்டி போல, எல்லாரும் காலைத் தூக்கிக்கொண்டு, ஒரு கையால் கூவென ஊதிக்கொண்டிக்கும் போட்டோ இன்னும் நினைவிலிருக்கிறது.

எங்கள் நண்பர்கள் எல்லோருக்கும் ஒவ்வொருவராக திருமணம் நடக்க ஆரம்பித்தது. அவனுக்கும் திருமணம் ஆனது. நான் துபாயில் இருந்து திரும்பி வந்து, அவன் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பினேன். என் நம்பர் அவனுக்குத்தெரியாது என்பதால் கொஞ்சம் விளையாட ஆரம்பித்தேன். அவன் செய்த சேட்டைகளையெல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்லவும் கொஞ்சம் பயந்துவிட்டான். அவனது நண்பர்களிடம் சொல்லியிருப்பான் போல. ஒவ்வொருவராக என்னை அழைத்து நான் யார் என்று கேடகத் தொடங்கினார்கள். எல்லார் நம்பரும் என்னிடம் இருந்ததால், அவர்கள் எல்லோரிடமும் நான் விளையாடத் தொடங்கினேன். ஒருவாறாக அவனிடம் நாந்தான் என்று உண்மையைச் சொன்னபோது, ‘நான்கூட முதல்ல ஒருத்திய லவ் பண்ணேன்ல, அவதான் மிரட்டுறாளோன்னு நினைச்சிட்டேன். என் பொண்டாட்டி மட்டும் உன் மெசேஜை பாத்தா, செத்தேன்’ என்றான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘எல்லாம் பொய்தானல, சும்மாதான சொன்ன?’ ‘உனக்கும் எனக்கும் தெரியும் பொய்யுன்னு, அவ பொய்யத்தான் மொதல்ல உண்மைன்னு நம்புவா’ என்றான். ஒருவழியாக செட்டில் ஆகிவிட்டான் என்று சந்தோஷமாக் இருந்தது.

அவ்வப்போது தொலைபேசி. அவ்வப்போது சந்திப்பு. தன் மனைவி இரண்டாவதாக உண்டாகியிருக்கிறாள் என்றான். வாழ்த்து சொன்னேன். நேற்று காலை, நிறைமாதக் கர்ப்பிணியான தன் மனைவியை சிவகிரியில் பார்த்துவிட்டு, அங்கிருந்து திருநெல்வேலிக்கு ஸ்கூட்டரில் காலை 3 மணிக்கு வந்திருக்கிறான். விபத்து நேர்ந்து அந்த இடத்திலேயே இறந்துவிட்டான். எங்கள் நண்பர்கள் எல்லோரையும் பதைபதைக்கச் செய்துவிட்டது இம்மரணம்.

உண்மையில் நான் இது போன்ற மரணங்களில் என் மரணத்தின் மீதான பயத்தையே உணர்கிறேன் என்று நினைக்கிறேன். நேற்று முழுவதும் இருந்த பதட்டம் சொல்லி மாளாது. தேன்கூடு சாகரனின் மரணத்தைக் கேட்ட அன்றும் அப்படி பதற்றமாக இருந்தது. ஏனென்றால், அவர் இந்தியா வந்திருந்தபோதுதான் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் பேசியிருந்தோம். தேன்கூட்டில் சில போட்டிகள் நடத்தப்போவதாக எல்லாம் சொன்னார். அதே பதற்றம் நேற்றும் என்னைத் தேடி வந்தது.

மரத்தடியில் பாபு என்கிற நண்பர் எழுதிய கவிதை மிக முக்கியமானது. திடீரென்று இரண்டு நாள்களுக்கு முன்புதான் இதனை வாசித்தேன். நேற்று இக்கவிதையே மனதுள் சுழன்று சுழன்று வந்தது.

அது

பள்ளிக்கூட கிரிக்கெட் போட்டியில்
எதிரணிக்காரன் வீசிய வேகப்பந்து
பின் மண்டையில் விசையுடன் தாக்கிச் சுருண்டபோது
எதிரே வந்து நின்று விரல் நீட்டி
எச்சரித்துவிட்டுப் போனது.

நெடுஞ்சாலை மோட்டார்சைக்கிள் பயணத்தில்
அசுர பாய்ச்சலுடன் வந்த வாகனத்துடனான மோதலை
மயிரிழையில் தவிர்த்து மணலில் சரிந்தபோது
காதருகில் உருமிவிட்டுச் சென்றது.

பெருநோய் பீடித்து மருத்துவமனையில்
உடல் வற்றிக்கிடந்த ஒரு மாதகாலமும்
படுக்கையருகில் அமர்ந்திருந்து
உற்றுப் பார்த்தபடி இருந்தது.

நள்ளிரவு உறக்கத்தில்
நெஞ்சுக்கூட்டுக்குள் இரும்புப் பந்தொன்று அடைத்து
மூச்சுத்திணறி வியர்த்து
நிராயுதமாய் சில நிமிடங்கள் போராடியபின்
இயல்புநிலை திரும்பியபோது
ஜன்னலில் நிழலெனப் பதுங்கி வெளியேறிற்று.

இதுவரை
வாய்த்த சந்தர்ப்பஙகளெல்லாம்
நழுவிப்போனதில்
மேலும் வன்மம் வளர்த்தபடி
எங்கிருந்து எப்போது
என் மீது பாய்ந்துவிடக் காத்திருக்கிறதோ –
அந்த மரணமென்னும் மிருகம்.

நான் எழுதுவதைக்கூட மரணம் வாசித்துக்கொண்டிருக்கலாம்.

நன்றி: பண்புடன் இணையக் குழுமம்

Share

Comments Closed