கேண்டீட் – புத்தகப் பார்வை

கேண்டீட், வோல்ட்டேர்; தமிழில்: பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகம், விலை: 100 ரூபாய்.

’வாள்முனையைக் காட்டிலும் பேனாவின் முனை சக்தி வாய்ந்தது’ என்றும் ‘நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அவ்வாறு சொல்லும் உன் உரிமையை என் உயிர் போனாலும் காப்பேன்’ என்றும் தத்துவங்களையும் தீர்க்கதரிசனங்களையும் அள்ளி வழங்கிய வோல்ட்டேரின் நாவல் கேண்டீட். ஏகப்பட்ட கவிதைகளையும் நாவல்களையும் இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களையும் எழுதிய வோல்ட்டேரின் கேண்டீட் நாவலின் வாசிப்பனுபவம் மிகவும் வித்தியாசமானதாகவும், பல இடங்களில் அதிசயிக்க வைப்பதாகவும் இருந்தது. வோல்ட்டேர் தனது witகளுக்காக மிகவும் பிரசித்தி பெற்றவர். கேண்டீட் நாவல் முழுக்க அவரது விட் குணத்தைக் காணமுடிகிறது. இன்று திரைப்படங்களில் நாம் பார்க்கும் விதந்தோத்தி ஏற்றி, தடாரென்று காலை வாரும் விட்டுகளை 250 வருடங்களுக்கு முன்பே வோல்ட்டேர் தன் நாவலில் சர்வசாதாரணமாகப் பல இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார். வோல்ட்டேரின் அப்பா வோல்ட்டேரை ஒரு வழக்குரைஞராகப் பார்க்க ஆசைப்பட்டாராம். ஆனால் அவரை ஏமாற்றி, வழக்குரைஞராகப் பணியாற்றுவதாகப் பொய் சொல்லி, வோல்ட்டேர் இலக்கியத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். அந்த வழக்குரைஞர் சகவாசம் நாவல் முழுக்க காணக்கிடைக்கிறது. மிகக்கடுமையான வாதங்கள், கேள்விகள், ஆழ்ந்த தத்துவங்கள் என வோல்ட்டேர் மிகக்கடினமான எழுத்தை மிக எளிமையாக முன்வைக்கிறார்.

கேண்டீட் என்னும் மனிதன் ஒரு ஜமீந்தாரின் வம்சத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலிக்கிறான். அதன் காரணமாக நாட்டை விட்டு விரட்டப்படும் அவன் எப்படி தன் காதலியை அடைகிறான் என்னும் கதையை, பல்வேறு உலகங்களில் கேண்டீட் மேற்கொள்ளும் பயணங்கள் மூலமும், அந்நாடுகளின் மக்களும் பாதிரிகளும் தலைவர்களும் மேற்கொண்டிருக்கும் வாழ்க்கையின் மூலமும், ஆழ்ந்த தத்துவ விசாரணையோடு விவரிக்கிறார் வோல்ட்டேர். தத்துவ விசாரணைகளுக்கும், கிண்டலுக்கும், கேலிக்கும், பாங்க்லாஸ் என்னும் கேண்டீடின் ஆசிரியர் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அவர் சொல்லும் தத்துவமான ‘உலகில் ஒவ்வொன்றும் சிறப்பானதாகவே இருக்கிறது’ என்பது, பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக அலசப்பட்டிருப்பதுடன், அது சரியானதல்ல என்கிற முடிவும் சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல், கேண்டீடின் உதவியாளனாக வரும் மார்ட்டீன் என்னும் மனிதன் மூலம் விவாதிக்கப்படும் இன்னொரு தத்துவமான மானிகியர்களின் தத்துவமும் கடுமையாக கிண்டலடிக்கப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது.

கேண்டீடின் காதலியாக வரும் குனிகொண்டே அடையும் அவமானங்களைக் காட்டிலும் தான் அதிகம் அவமானம் அடைந்ததாக ஒரு கிழவி சொல்லும் கதையும் அதைத் தொடர்ந்து அவர்களோடு கப்பலில் பயணம் செய்யும் ஒவ்வொருவரும் தானே அதிகம் துன்பம் அடைந்ததாகக் கூறும் கதைகளும் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் இன்னொரு வகையில் தத்துவ விசாரணை செய்கின்றன. இது உண்மையாக இருக்குமானால் பேராசிரியர் பாங்க்லாஸ் சொல்லும் எல்லாமே சிறப்பானது என்னும் தத்துவம் அடிபட்டுப்போகிறது என்று கேண்டீட் நினைக்கும்போதே பூலோக சொர்க்கமாக இருந்திருக்கவேண்டிய எல் டொரோடாவை அடைகிறான். அங்கு அவன் எதிர்கொள்ளும் அனுபவங்கள் பாங்க்லாஸ் சொன்னது உண்மையாக இருக்கவேண்டும் என்று அவனை யோசிக்க வைக்கின்றன.

கேண்டீட் தொடர்ந்து எதிர்கொள்ளும் வெவ்வேறு உலகின் வெவ்வேறு மனிதர்கள் அவனுக்கு வாழ்க்கையின் பல்வேறு நிறங்களைப் புரியவைக்கிறார்கள். ஒரு விபசாரியும் மகிழ்ச்சியாக இல்லை. ஒரு பாதிரியும் மகிழ்ச்சியாக இல்லை. அரசனும் மகிழ்ச்சியாக இல்லை. அரச பதவியை இழந்தவர்களும் மகிழ்ச்சியாக இல்லை. அவர்களது பணியாளர்களும் மகிழ்ச்சியாக இல்லை. இதற்கான காரணமாக கேண்டீட் கண்டடைவது, அவரவர்கள் அவரவர்கள் வேலையைச் செய்யவேண்டும் என்பதே. இப்படியாக தனது வேலையைச் செய்வதன் மூலம் தன் வாழ்க்கையின் ஒளியைக் கண்டடைகிறான் கேண்டீட். குனிகொண்டேவுடன் தனது வாழ்க்கையைத் தொடருகிறான்.

இந்த நாவல் மிக முக்கியமான சிறப்புகள் பலவற்றைக் கொண்டிருக்கிறது. கேண்டீட் சந்திக்கும் எல்லா மனிதர்களும் சுயநலம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். சுயநலம் என்பது மக்களின் ஒரு குணம் என்பதை கேண்டீட் உணர்ந்துகொள்கிறான். 250 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு நாவலில் இந்த உண்மை ஆழமான வசனங்கள் மூலமும், கேண்டீட் அடையும் அனுபவங்கள் மூலமும் நிறுவப்படுகிறது. நாவலாசிரியர் வோல்ட்டேர் ஒரு எழுத்தாளராக இருப்பதால், ஒரு எழுத்தாளனும் பதிப்பாளனும் படும் கஷ்டங்களைப் புரிந்துகொண்டிருக்கிறார். அதையும் அவர் நாவலில் கொண்டுவரும் விதம் அலாதியானது. கற்பனையான நாவலில் உண்மையான பாத்திரங்களின் மீதான விமர்சனத்தை உலவவிட்டிருப்பது இன்னொரு சிறப்பம்சம். இன்றைய நாவலில் நாம் காணும் உத்தியை அன்றே வோல்ட்டேர் கையாண்டிருப்பது அசர வைக்கிறது. தனது எதிரிகளாகக் கருதும் எழுத்தாளர்களைப் பற்றிய விமர்சனங்களை அவர் ஒரு கதாபாத்திரம் மூலம் மிகக் கடுமையாக (’அவன் ஒரு மசுராண்டி’) விமர்சிக்கிறார். அக்கதாபாத்திரத்திற்கு ஒத்துப் பேசும் இன்னொரு கதாபாத்திரத்தின் கூற்றை அவர் போற்றவும் தவறவில்லை.அதேபோல் ஓரிடத்தில் —–ஐக் கொண்டு எறிந்தான் என்று எழுதுகிறார். அந்த கோடிட்ட இடத்தில் நமக்குத் தேவையானதை நாம் போட்டு, நம் கோபத்தை வெளிப்படுத்திகொள்ள ஒரு வாய்ப்பு என்பதைப் போல. இதுவும் ஒரு நவீன சிந்தனையே.

மதங்கள் மூலம் பாதிரிமார்கள் செலுத்திக்கொண்டிருந்த ஆதிக்கத்தின் மீது வோல்ட்டேருக்கு இருக்கும் ஆத்திரம், மிக எளிமையான ‘விட்’டுகள் மூலம் விமர்சிக்கப்படுகிறது. இந்த விமர்சனங்களை நாவல் முழுக்க ஏகப்பட்ட இடங்களில் காணலாம். மொரோக்கோவில் நடக்கும் கலவரத்தில், இஸ்லாமிய சிப்பாய்கள் நட்ந்துகொள்ளும் விதத்தையும் அவர் இதேபோன்ற விட் மூலம் விமர்சிக்கிறார். (’இடையில் முஹமதுவால் அறிவுறுத்தப்பட்ட, நாளைக்கு ஐந்து தொழுகைகள் என்பதைச் செய்ய அவர்கள் மறக்கவில்லை.’)

125 வருடங்களுக்கு முன்பு தமிழில் எழுதப்பட்ட பிரதாப முதலியார் சரித்திரத்திற்கும் இந்நாவலுக்கான ஒற்றுமை வேற்றுமைகளைப் பற்றி யோசித்தேன். விட் என்னும் வகையில் இரண்டு நாவல்களும் ஒற்றுமையைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றின் தன்மை முற்றிலும் வேறுபட்டது. பிரதாப முதலியார் சரித்திரத்தின் விட்டுகள் வெறும் விட்டுகள் மட்டுமே. அதன் வழியாக அவை எவ்வித கருத்தையும் விமர்சனத்தையும் தரிசனத்தையும் முன்வைப்பதில்லை. அவை வெறும் பக்க நிரப்பிகள் மட்டுமே. ஆனால் வோல்ட்டேரின் விட்டுகள் சமூகத்தின் மீதான விமர்சனங்கள். தத்துவத்தின் மீதான கேள்விகள். எழுத்தாளரின் கோபத்தின் வெளிப்பாடு. கிழவி தனது கதையைச் சொல்லும்போது ‘அதில் ஒரு கவிதை கூட தேறாது என்பது வேறு விஷயம்’ என்னும்போது கிழவி மறைந்து வோல்ட்டேர் வெளியாகிறார். நாவல் முழுக்க இப்படி தன்னையறியாமலேயே அல்லது வேண்டுமென்றே வோல்ட்டேர் வெளிப்படும் தருணங்கள் சிறந்த விமர்சனங்கள். அதிலும் போர்தூவில் நடக்கும் சீட்டாட்டத்தின்போதும், நாடகம் பார்க்கும் இடத்தில் ஒரு விமர்சகன் நாடகத்தின் மீதும், நாடக நடிகர்கள் மீதும் வைக்கும் விமர்சனங்களிலும் வோல்ட்டேர் கொள்ளும் தீவிரம் இந்த நாவலின் உச்சம் எனலாம். இப்படி தன்னளவில் ஒரு சிறப்பான பிரதியாக மாறும் ஒரு காட்சியை நாம் பிரதாப முதலியார் சரித்திரத்தில் காணமுடியாது. இறந்தவர்கள் திடீரென ஒரு கதை கூறிக்கொண்டு உயிரோடு வரும் காட்சிகள் பிரதாப முதலியார் சரித்திரத்திலும், கேண்டீடிலும் ஒரே மாதிரியாகவே வெளிப்படுகின்றன. பிரதாப முதலியார் சரித்திரம் ஒரு கற்புக்கரசியின் கதையைச் சொல்லும் கதை மட்டுமே. ஆனால் ’கேண்டீட்’ காதல் கதையின் மூலம், சமூக-மத-தத்துவ சிக்கல்களை மிக ஆழமாக ஆராய்கிறது.

இந்நாவலை தமிழில் பத்ரி மொழிபெயர்த்திருக்கிறார். மிக எளிமையாகவும் சிறப்பாகவும் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. பத்ரி இலக்கிய உலகில் தனது பயணத்தை இங்கே இருந்து சிறப்பாகத் தொடங்குகிறார் எனச் சொல்லலாம். வோல்ட்டேர் தனது வீச்சில் எழுதித் தள்ளியிருக்கும் வரலாற்றின் மீதான விமர்சனங்களையும் தத்துவக் கேள்விகளையும் படிப்பவர்கள் சிக்கலின்றிப் புரிந்துகொள்ளும்படியாக மொழிபெயர்க்கவேண்டுமானால், அதற்கான உழைப்பு மிக அதிகம் தேவைப்பட்டிருக்கும். இந்நாவலுக்கு அழைத்துச் செல்லும் வரலாற்றின் பக்கங்களைப் பற்றிய சிறப்பான புரிந்துணர்வு இருக்கவேண்டும். இது பத்ரிக்கு நிச்சயம் இருந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் இவ்வளவு சிறப்பாக மொழிபெயர்த்திருக்கமுடியாது.

அதே சமயம் மொழிபெயர்ப்பில் சில கவனப்பிசகுகளும், கொள்கை வேறுபாடுகளும் இருக்கின்றன. ஹம்மிங் பறவை என்பதற்கு ஹம்மிங் பேர்ட் என்றெழுதியிருப்பது கவனப்பிசகு. ஆனால் கொள்கை வேறுபாடுகள் விவாதத்திற்குரியவை. ஒரு பிரெஞ்சு நாவலை நான் படிக்கிறேன் என்றால் என் நினைவிலி கட்டமைப்பில் என் மனம் பிரெஞ்சு நாவலை நான் படிக்கிறேன் என்று ஆழமாகப் பதிந்துகொண்டிருக்கும். அப்படிப்பட்ட நாவலில் திடீரென ‘ங்கோத்தா’ என்றும் ‘மசுராண்டி’ என்றும் வரும்போது, அந்த நினைவிலி கட்டமைப்பில் இருந்து நான் பிடுங்கப்பட்டு சென்னையில், அதுவும் 250 வருடங்கள் தூக்கி எறியப்பட்டு நிகழ்காலத்தில் நடப்படுகிறேன். இது எனக்கு ஒட்டவில்லை. ஆனால் இதை எப்படி தாண்டுவது என்று சொல்லும் திறமையும் எனக்கு இல்லை. ஒருவாறாகச் சொல்லவேண்டுமென்றால், பிரெஞ்சு நாட்டின் பணத்தை அதே பெயராலேயே குறிப்பிடுவது போல, தாமஸ் என்கிற கிறித்துவப்பெயரை தோமையார் என்று மாற்றி சாகடிக்காமல் அப்படியே பயன்படுத்துவது போல, பிரெஞ்சு வசைகளையும் அப்படியே பயன்படுத்தி, அடிக்குறிப்புகள் தந்திருக்கலாம் என்பேன். அதேபோல் இந்நாவலில் வரும் அடிக்குறிப்புகள் மிகச் சொற்பமானவையே. பல இடங்களில் அடிக்குறிப்புகளின் தேவை இருக்கின்றன. அவையெல்லாம் சேர்க்கப்பட்டால், இந்நாவல் அதனளவில் மிகச் சிறப்பானதாகவும் பூரணத்துவம் நிறைந்ததாகவும் அமையும். உதாரணமாக, காயடிப்பு செய்யப்பட்ட அலி ஒருவன் நன்றாகப் பாடத் துவங்கினேன் என்கிறான். இதற்கான அடிக்குறிப்பு இருந்திருந்தால், அக்கால கட்டத்தில் விதையடிப்பு (காயடிப்பு) செய்யப்பட்டவர்கள் நன்றாகப் பாடலாம் என்கிற மூட நம்பிக்கை பற்றியும் அப்படிப்பட்ட பாடகர்கள் தேவாலயத்தில் பாடகர்களாக ஆனார்கள் என்பது பற்றியும் தெரிந்துகொண்டிருக்கமுடியும். (இசையின் விதையும் விதையின் இசையும் கட்டுரை இதை அடியொற்றி சேதுபதி அருணாசலத்தால் வார்த்தை இதழில் எழுதப்பட்டிருந்தது.) அதேபோல் திடீர் திடீரென வரும் பிரெஞ்சு பணம் பற்றிய பெயர்களும், அளவைப் பெயர்களும் (லீக்) முதல் வாசிப்பில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. இதற்கான எளிமையான குறிப்புகள் கொடுக்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அதேபோல் கேண்டீட் செல்லும் ஊர்கள் பற்றிய வரைபடம் (மேப்) இருந்திருந்தால், அதுவும் மிகவும் பயனுள்ளதாகவே இருந்திருக்கும்.

மொத்தத்தில் ஒரு சிறப்பான நாவலைப் படித்த உணர்வு இருந்தது.

ஆன்லைலில் வாங்க: காமதேனு.காம்

Share

Comments Closed