கொலு

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பின்பு இன்றுதான் கொலு பார்ப்பதற்காக என்னுடைய உறவினர் வீட்டுக்குப் போனேன். நான் கல்லுப்பட்டியில் இருந்தபோது பல வீடுகளுக்குக் கொலு பார்க்கப்போவோம். அந்த நினைவு வந்தது. கல்லுப்பட்டியில் கொலுவிற்கு வீடே அமர்க்களப்படும். கடும் ஆசாரத்தைக் கடைப்பிடிக்கும் என் அம்மா வழிப் பாட்டிவீடு அது. சிரத்தையாக கொலு வைத்து, கலசம் வைத்து வழிபட்டு, ஒவ்வொரு நாளும் ஒரு சுண்டல் செய்து வரும் எல்லாருக்கும் விநியோகிப்பார்கள். கொலு வைப்பதற்கு முன்பும், கொலு முடிந்த பின்னர் பொம்மைகளை எடுத்து வைப்பதற்குள்ளும் வீடு ரணகளமாகியதெல்லாம் நினைவுக்கு வருகிறது.

கொலுவை வீட்டின் முக்கிய அறையில் வைப்பார்கள். அடுத்த ஆண்டில் திடீரென பாட்டி கொலுவை தனியறையில் வைக்கச் சொல்லிவிட்டார். அது மாமாவும் அத்தையும் உறங்கும் இடம். ரணகளத்திற்கான காட்சிகள் தொடங்கிவிட்டன. என்ன வெட்டுக்குத்து நடந்தாலும் பாட்டியை யாரும் ஜெயித்ததில்லை. சாகும்போதுகூட இரண்டு தடவை டாக்டர் தோற்றுவிட்டார். மதுரை மருத்துவமனையில், இந்தக் கிழவி பிழைக்காது என்று வீட்டுக்கொண்டு போகச் சொல்லி, வரும் வழியில் திருமங்கலத்தில் இறுதிச் சடங்கிற்கு ஆச்சார்களைச் சொல்லி வீட்டிற்கு வந்தால், கிழவி எழுந்து உட்கார்ந்துகொண்டுவிட்டது. மீண்டும் மதுரை டாக்டர்க்கு ஃபோன், ஆச்சார்களுக்கு ஃபோன் என எல்லாரையும் தோற்கடித்தது பாட்டி. அடுத்தமுறை மீண்டும் டாக்டரைத் தோற்கடித்தது பாட்டி. இன்னும் ஒரு வருஷம் இருக்கும் என்று சொன்ன பத்தாவது நாளில் அந்த வருடக் கொலுவைப் பார்க்காமலேயே போய்ச் சேர்ந்தது பாட்டி. சாகும்வரை ஜெயித்துக்கொண்டே இருந்த பாட்டி, தன் வீட்டிற்கு வந்த மாட்டுப்பெண்களிடமா தோற்கும்? தனியறையில்தான் கொலு வைத்தார்கள். இடம் தீர்மானித்தாகிவிட்டது. எத்தனை படி வைக்கலாம் என்பதில் அடுத்த பிரச்சினை தொடங்கும். படிகள் தீர்மானிக்கப்பட்டால் எப்படி லைட் செட் போடலாம் என்பதில் பிரச்சினை வரும். எல்லாவற்றையும் தீர்த்து முதல் நாள் கொலுவைக் கண்ணில் பார்த்து, வருபவர்களுக்கெல்லாம் சுண்டல் கொடுத்ததும்தான் பெருமூச்சு விடும் பாட்டி. மற்ற வீடுகளுக்குக் கொலு பார்க்கப் போகும். வரும்போது ஒரு பெரிய சண்டைக்கான முகாந்திரத்துடன் கிழவி வரும். நான் சொன்னமாதிரி வெச்சிருந்தா அவ வீட்ட விட நம்ம வீட்டுல நல்லா இருக்கும் என்று ஆரம்பித்து, வீட்டிலிருக்கும் எல்லாரையும் ஒரு வாங்கு வாங்கிவிடும். இதில் ஏடாகூடமாக எதாவது ஒரு பெண் வீட்டிற்கு விலக்கு என்றால் கேட்கவே வேண்டாம்.

நவராத்திரி நாள்களில் ஒரு பட்டாளமாக கொலு பார்க்கப்போவார்கள். நான் என் அம்மாவுடன் ஒட்டிக்கொள்வேன். ஒவ்வொரு வீடாக தினமும் அசராமல் கொலு பார்க்கப்போவார்கள். எல்லார் வீட்டிலும் ஏதேனும் சுண்டல் இருக்கும். எல்லார் வீட்டிலும் சுண்டல் அருமை என்று சொல்லிவிட்டு வருவார்கள். கடைசி நாள் கொலு பார்க்கச் செல்லும்போதுக்கூட, ஏற்கெனவே எட்டு நாள் அந்த பொம்மைகளைப் பார்த்தே இருக்காதது மாதிரி, புதுக்கருத்து சொல்வார்கள். அந்த வீட்டு அம்மா முகம் மலர்ந்து அதைக் கேட்டுக்கொள்ளும்.

மாமி ஒரு பாட்டு பாடலாமே என்று ஒவ்வொருமுறையும் கேட்டபின்புதான் மாமி பாடத் துவங்குவார். ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி பாட்டைக் கேட்டாலே பிச்சி பிடுங்கி ஓடலாமா என்றிருக்கும். ஆனால் மாமியோ சுசிலாவின் குரலில்கூட லேசாக பிசிறு இருந்தது என்கிற பாவத்தில் பாடிக்கொண்டிருப்பார். முடித்தவுடன் வெற்றியும் நாணமும் கலந்த சிரிப்பில் தலைமுடியைக் கோதிக்கொண்டு ‘எப்படி இருந்ததிடீ’ என்பார். அதற்குள் திடீரென ஒரு அக்கா கேட்காமலேயே நவராத்திரி நாயகியே என்று ஏதேனும் ஆரம்பிப்பாள்.

என் அம்மாவும் பாடுவாள்.

‘கற்பகவள்ளி நின் பொற்பதங்கள் பிடித்தே… மின்ன மாதிரி இல்லை. வயசாயிடுத்து. பொற்பதங்கள் பிடித்தே நற்கதி அருள்வாயம்மா… வயசுல அப்படி பாடுவேன். பற்பலரும் போற்றும் பனிமதுராபுரியில்.. லலலலா லலலா… ஆஸ்துமா வந்து முடியல… வரியும் மறந்துடுச்சு… நீ பாடுவியேடி…’

நான் அம்மாவிடம் இன்று சொன்னேன் இதைப் பற்றி. ‘இவன் எல்லாம் கண்டான்’ என்றாள். அவள் வயசுக் காலத்திலே இருந்து இப்படித்தான் ‘வயசுக்காலத்துல நல்லாப்பாடுவேன்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள் – என்று சொன்னேன். சிரித்துக்கொண்டாள்.

நாங்கள் இன்று கொலு பார்க்க வந்தது குறித்து என் உறவினருக்கு மிகவும் மகிழ்ச்சி. என் மனைவி வந்திருக்கிறாள் என்று தெரிந்தவுடன் பக்கத்துவீட்டு, எதிர்வீட்டுப் பெண்கள் வந்து என் மனைவியை அழைத்துச் சென்றார்கள். இதற்கு முன்பு பார்த்ததில்லை என்கிற எவ்வித தடங்கல்களும் இல்லை. உடனடி நட்பு. நவராத்திரி நட்புக்கான பண்டிகை. கடந்த நான்குவருடங்களில் என் மனைவியும் இதுபோலப் போனதில்லை என்பதால் அவளுக்கு இது புதிய அனுபவமாக இருந்தது. நவராத்திரி பெண்கள் பண்டிகை. அதுவும் வீட்டில் கன்னிப் பெண்கள் இருந்தால் அந்த வீடே களைகொண்டுவிடுகிறது என்பதை கண்கூடாகப் பார்க்கமுடிந்தது.

முன்பு அக்கிரஹாரத்தில் இருந்தபோது அக்கிரஹாரமே தாவணி உடுத்திகொள்ளும். தெருவெங்கும் வண்ணங்கள் இழைந்தோட பையன்கள் வாய் பார்த்திருப்பார்கள். இழந்த வயது திரும்ப வருவதில்லை. நவராத்திரி வருகிறது.

ஒரு காலத்தில் யாருக்கும் அலுவலக வேலை என்பது இல்லாதிருந்த காலத்தில், பணத்திற்காக அதிகம் உழைக்கவேண்டிய கட்டாயம் இல்லாதிருந்த காலத்தில், தேவை குறைவாகவும் அதை அடைவது எளிதாகவும் இருந்த மகிழ்ச்சி நிறைந்த காலத்தில், பண்டிகைகளே மக்களை உற்சாகமாக வைத்திருந்திருக்கிறது. ஒன்பது நாள்களும் ஒரு ஊரே கொண்டாட்டத்தில் இருந்திருக்கும். கோயில்களில் கொலு வைக்கும் வழக்கம் உண்டு. நவராத்திரி பெண்களுக்கான விழாவாதலால், வீட்டிலும் கோயிலிலும் கூடும் பெண்களைக் கண்டு பழம்கால மன்னர்களும் தளபதிகளும் காதல் கொண்டு கல்யாணம் செய்திருக்கக்கூடும். ஒருவகையில் நவராத்திரி என்பதே வயசுப்பெண்களுக்காக விழாவாக இருந்திருக்கலாம் – இப்படி யோசித்துக் கொண்டே போனபோது நவராத்திரியை மிகவும் பிடித்துவிட்டது.

மீனாட்சி அம்மன் கோவில் கொலு வைப்பார்கள். கொலுவைப் பார்த்துமுடிக்கும்போது கால் வலி வந்துவிடும். அத்தனை பொம்மைகள் வைப்பார்கள். எங்கள் வீட்டில் கொலு கிடையாது. முன்பு ஒருமுறை பல வருடங்களுக்குமுன்பு எங்கள் வீட்டில் கொலு வைத்தபோது எங்கள் முக்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட்டாராம். அதிலிருந்து கொலு வைக்காமல் இருந்திருக்கிறார்கள். இன்னும் சில வருடங்கள் கழித்து, இன்னொரு தடவை கொலு வைத்துப் பார்க்கலாம் என்று வைத்தபோது, தீபம் கீழே விழுந்து கொலு மண்டபம் எரிந்துவிட்டதாம். இப்படி தடங்கல் வந்ததால் என் தாத்தா இனிமேல் கொலு வைக்கவேண்டாம் என்று முடிவெடுத்து, எல்லா பொம்மைகளையும் கோவிலுக்குக் கொடுத்துவிட்டாராம். மீனாட்சி அம்மன் கோவிலில் கொலுபார்க்கும்போதெல்லாம் இந்த நினைவு எனக்கு வரும். இப்போது எத்தனை பொம்மைகளைக் கொலுவில் வைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. நெல்லையப்பரின் தேர்த்தட்டுகளின் எண்ணிக்கை வருடாவருடம் குறைந்துவருவது பற்றி ஊர் பெருசுகள் புலம்புவதுபோல, மீனாட்சி அம்மன் கோவிலில் குறைந்துவரும் பொம்மைகளின் எண்ணிக்கையைப் பற்றியும் மதுரை புலம்புவதுண்டு.

இந்த பரபரப்பான காலத்திலும் மக்கள் விடாமல் கொலு வைப்பது சந்தோஷமாக இருக்கிறது. குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மக்கள் தங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும், எந்த வீட்டில் எந்தப் பெண் எப்படி இருக்கிறாள் என்று தெரிந்துகொள்ளவும், குறிப்பிட்ட இடங்களில் வசிக்கும் மக்களுக்கான ஒரு தொடர்பு வெளியாகவும் இப்பண்டிகை விளங்குகிறது என்பதை இன்று நேரில் பார்த்தேன்.

என் மனைவி ஐந்தாறு வீடுகளுக்குச் சென்றுவிட்டு, கை நிறைய பழங்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், ஐந்தாறு வகை சுண்டலகள், ஒரு சிறிய எவர்சில்வர் தட்டு என சுமந்துகொண்டு வந்தாள். அந்த வீட்டுல அப்படி இருந்தது, இந்த வீட்டுல இப்படி இருந்தது, நம்ம வீட்டுலதான் இதெல்லாம் ஒண்ணுமில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தாள். கல்லுப்பட்டியில் என் அம்மா வழிப்பாட்டி இப்படித்தான் சொல்லுவாள். ‘ஒரு ஏரி கட்டி நாலஞ்சு படகை மிதக்க விட்டு, சுத்திலும் பார்க் போட்டு, மண்ணு ரொப்பி, லைட் செட் போட்டுட்டா, நம்ம வீட்டு கொலுதான் இருக்கிறதுக்குள்ள நல்லா இருக்கும்…’

Share

Comments Closed