வேர்ப்பற்று – ஆவதும் ஆக்கப்படுவதும்

முற்போக்கு பேசும் பிராமணர்கள் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். ஒருவகையில் பிராமணர்கள் என்ன செய்தாலும் அது நடிப்பாகவே இங்கு கருதப்படுகிறது எனலாம். எவ்வளவு உண்மையாக முற்போக்கு பேசி, எத்தனை தூரத்தில் தன்னை ஜாதியில் இருந்து பிரித்து வைத்துக்கொண்டாலும், பிறப்பால் ஒருவன் பிராமணனனாக இருக்கும்பட்சத்தில், அவன் எப்போதும் இச்சமூகத்தால் பூணூலாலேயே பிணைக்கப்பட்டிருக்கிறான். நிகழ்காலத்தில் ஞாநியிலிருந்து கமல்ஹாசன் வரை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லமுடியும். ஒருவகையில் ஞாநி, கமல்ஹாசன் போன்றவர்கள் பிராமணர்களாலும், பிராமணர்களின் எதிர்த்தர்ப்பாலும் ஏற்கப்படவும் புறக்கணிக்கப்படவும் ஆளாகிறார்கள். இவர்களைப் போன்றவர்கள் சொல்லும் கருத்துகளை வைத்து அவர்கள் மீது தம் எண்ணத்தை ஏற்றுவதை இச்சமூகம் செய்துகொண்டே இருக்கிறது. கருணாநிதிக்கு வயதாகிவிட்டதற்காக ஞாநியும் தசாவதாரம் படத்திற்காக கமலும் பல இடங்களில் பிராமணர்களாக்கப்பட்டார்கள். இதற்கான எதிர்க்கருத்தும் பதிவு செய்யப்பட்டதும் உண்மையே. இன்றைய இந்நிலையை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எழுதியிருக்கிறார் இந்திரா பார்த்தசாரதி.

திராவிடர் கழகம் முன்னிறுத்தியது போல பிராமணர்கள் அனைவரும் எத்தர்கள் அல்ல. அதேபோல் பிராமண ஆதரவாளர்கள் பிராமணர்களை முன்னிறுத்துவதுபோல் அவர்கள் அப்பாவியுமல்ல. இதையே நாவலின் எல்லா இடங்களிலும் கதாபாத்திரங்கள் வழியே பேசியபடியே செல்கிறார் இபா. இபா பிறப்பால் ஒரு பிராமணர் என்பதால் அவரை விடுத்து, நாவலை வெறும் கற்பனையாகப் பார்க்கமுடிவதில்லை. அதனால் கதாபாத்திரங்கள் சொல்லும் அனைத்து வசனங்களையும் இபாவின் விவாதமாகவே என்னால் எடுத்துக்கொள்ளமுடிகிறது. எந்த ஒரு சமூகத்தையும் பிரதிபலிக்கும் மனிதர்களைப் போலவே பிராமண சமூகத்தையும் அம்மக்கள் பிரதிபலிக்கிறார்கள். பிராமணன் ஏமாற்றுகிறான் என்பது பிரதானமாகிறது என்பதைவிட, எச்சமூகத்திலும் நிலவும் பல்வேறு வகைப்பட்ட மனிதர்கள் போலவே பிராமண சமூகத்திலும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லலாம். இதுவே கழகக்காரர்களால் பிராமணியம் என்றழைக்கப்படுகிறது. எப்போதெல்லாம் நாம் மனதில் பட்டதைச் சொல்லத் துவங்குகிறோமோ அப்போது அதற்கு பிராமணியச் சாயமும், ஹிந்த்துவச் சாயமும் பூசப்படுவது புதியதல்ல. இதிலிருந்து இன்றைய நிலையில் விடுபடுவது கடினம். ஒரு கருத்தைச் சொல்லிவிட்டு, உங்கள் மேல் சாயம் பூசப்படுமுன் நீங்கள் அதற்கெதிரான கருத்தைச் சொல்லியே தீரவேண்டும் என்கிற ஒரு கட்டாய நிலையிலேயே நிகழ் சமூக நிலை இருக்கிறது. இந்தக் கட்டாயத்தை மீறும்போது வேறு வழியே இன்றி நீங்கள் என்னவாக இருக்கப் பிறர் தீர்மானிக்கிறார்களோ அவராக மாறியே தீரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுப்போகிறது. இதோடு சேர்ந்து துரத்தும் வாழ்தல் தொடர்பான அவசியங்கள். வேறு வழியில்லாமல் உங்கள் மனதோடு தொடர்பே இல்லாத சில முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கிறது. இது போன்றவர்கள் ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள். வேறு வழியின்றி, வாழ்தல் பொருட்டு ஒருவர் எடுக்கும் முடிவின் மீதான அவரது பங்கைவிட அவர்கள் மேல் அவர்கள் சார்ந்த சமூகம் செலுத்தும் பங்கு அதிகம் எனலாம். வேர்ப்பற்றின் கதாநாயகன் இத்தகைய ஒரு முடிவுக்குத் தள்ளப்படுகிறான். வாழ்தல்வேண்டி அவன் பூணூலானாக வேண்டியிருக்கிறது.

வேர்ப்பற்று நாவல் 1946ல் இருந்து 1952 வரை, ஓர் ஆசார பிராமணக் குடும்பத்தில் பிறந்த, சாதிகளை மறுக்கும் ஓர் இளைஞனை மையமாக வைத்துச் சொல்லப்படுகிறது.

ஆசாரமான குடும்பத்தின் பிராமண வாழ்க்கையும், அக்குடும்பத்தில் உழலும் பிராமணக் குழந்தைகள் எதிர்கொள்ளும் வெளி உலகமும் ஒன்றோடு ஒன்று சிறிதும் தொடர்பில்லாதவை. அதனால் தன்னை வெளி உலகத்தில் ஒரு வினோத மனிதனாக, பிராமணனாகப் பிறந்த ஒரு இளைஞன் நினைப்பது தவிர்க்கமுடியாதது. இதைத் தொடர்ந்து அவன் சிந்திக்கத் தொடங்கினால் அவனுக்கு பைத்தியம் பிடிக்கலாம் அல்லது மார்க்ஸிடம் சரணைடையலாம். இரண்டாவது விஷயம், வேர்ப்பற்றின் கேசவனுக்கு நிகழ்கிறது. பிராமணன் என்கிற சாதியிலோ, அது சார்ந்த சின்னங்களிலோ சற்றும் நம்பிக்கையில்லாத கேசவன் தன்னை கம்யூனிஸ்டாக அறிகிறான். தன் தந்தையை மீறி, தன் சாதிக் கட்டுப்பாடுகளை மீறி ஒரு கம்யூனிஸ்ட்டாக மாறுகிறான். புத்தகங்களில் இருக்கும் சித்தாந்தங்களின் வழியாக அவன் கண்டடையும் கம்யூனிஸம் அவனைக் கிறங்கடிக்கிறது. ஒரு கம்யூனிஸ்டாக கல்லூரிக்குள் நுழையும் கேசவன், கல்லூரியில் நடக்கும் கழக – கம்யூனிஸ மோதலுக்குப் பின் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறான். மன்னிப்பு கேட்டால் மீண்டும் கல்லூரியில் சேரலாம் என்கிற நிலையில், அவன் மன்னிப்பு கேட்பதை கேவலமாக நினைக்கிறான். ஆனால் அவனுடன் சேர்ந்து போரிட்ட கம்யூனிஸ்ட்டுகள் மன்னிப்பு கேட்டுவிட்டு கல்லூரியில் சேர்ந்துவிட, அவனுக்கு கம்யூனிஸத்தின் மீதிருக்கும் அபரிமித ஈர்ப்பு விலகுகிறது. அதோடு காந்தியின் மரணம் அவனுக்குள் தரும் சலனங்களைக் கண்டு அவனே அரண்டு போகிறான். காந்தியின் மீது தனக்கிருந்த வெறுப்பின் கீழே, மிக அடியாழத்தில் குடிகொண்டிருந்த காந்தியின் பிம்பம் விஸ்வரூபம் எடுக்கும்போது அவன் காந்தியைப் புதியதாகக் கண்டடைகிறான். அவனது கம்யூன் நண்பர்கள் அவனுக்கு, ‘நாம காந்திய கெட்டவர்னு சொல்லலே, நல்லவர்னுதான் சொல்றோம்’ என்று புதுவிளக்கம் கொடுக்கிறார்கள். தொடர்ந்து கம்யூனிஸ்ட்டாகவே வலம் வரும் கேசவனின் உலகம், கல்லூரியில் நடக்கும் கலகத்திற்குப் பின் தடம் புரள்கிறது.

எல்லா பிராமண இளைஞர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினையின் வழியிலேயே செல்லும் கேசவன் அடுத்த எதிர்நிலையாக ஆன்மிகத்தில் செல்ல முடிவெடுத்து, துறவறம் மேற்கொள்ள சிந்திக்கிறான். ஒரு பிராமண இளைஞன் தவிர்க்கவே முடியாத இன்னொரு புள்ளி இது என்பதை இபா மிகத் தெளிவாக, மிக இயல்பாகச் சொல்லிச் செல்வது நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. துறவறம் கொள்வது கல்லூரியில் இடம்பெறுவது போன்றதல்ல என்பது அவனுக்கு விளங்குகிறது. வெளியில் தன்னை பிராமண துவேஷியாகக் காட்டிக்கொள்ளும் ஒரு பெரியாரிஸ்ட், கேசவனுக்கு வேலை வாங்கிக் கொடுக்கிறார். ஒன்று கேசவன் பிராமணனாக இருக்கவேண்டும், இல்லையென்றால் கலப்பு மணம் செய்துகொண்டு கிறிஸ்துவனாகவேண்டும் என்கிற நிலை வரும்போது, பிராமணனாக இருப்பதே எளிதானது என்கிற முடிவுக்கு வரும் கேசவன் பிராமணனாக்கப்படுகிறான். அவனது அறுபதாவது வயதில் திருச்சூர்ணத்துடனும், பஞ்சகச்சத்துடனேயுமே அவன் உலவேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது.

நாவலின் போக்கில், கதாபாத்திரங்களின் பேச்சில் பல்வேறு வரலாறு தொடர்பான விஷயங்கள் அலசப்படுகின்றன. குறிப்பாக 1947ல் நிலவிய கழக எழுச்சியும், கம்யூனிஸ ஆதரவும் அதற்கு உண்டான போட்டியும். கழகங்களும் கம்யூனிஸமும் கல்லூரிகளில் அப்போதிருந்தே வன்முறையையே முன்வைத்திருக்கின்றன போலும். இன்றுவரை அரசியலில்லாத கல்லூரி தேர்தல்களை நாம் பார்த்துவிடமுடியாது. வீரிய விதை.

அதேபோல் நாவல் முழுவதும் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் ஒரு விஷயம் பிராமணனுக்குத் தமிழ் எதற்கு என்பது. கேசவனைக் காணும் ஒவ்வொருவரும், பிராமணர், பிராமண ஆதரவாளர்கள், பிராமண எதிர்ப்பாளர்கள் என்கிற பேதமில்லாமல், அவன் தமிழ் படிப்பதற்கு கேலி செய்கிறார்கள் அல்லது உபதேசிக்கிறார்கள். அதில் பிராமண எதிர்ப்பாளர் கேட்கும் கேள்வி ருசிகரமானது, “இதையும் நீங்க எடுத்துக்கிட்டா நாங்க என்னதாண்டா பண்றது?” தடையை எல்லாம் மீறி தமிழ் படிக்கும் கேசவன் வேலைக்காக வேறு வழியே இன்றி பிராமணனாக மாறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுப் போகிறது. தமிழோ சமிஸ்கிரதமோ அல்ல, கடைசிவரை வரப்போவது ஜாதியே என்கிற உண்மை அவனுக்கு முகத்தில் அறைகிறது.

நாவலில் சில இடங்களில் மட்டுமே தென்பட்டாலும், இபாவின் நகைச்சுவை உணர்வு அசரவைக்கிறது. எங்கெல்ஸ் பற்றியும் மார்க்ஸ் பற்றியும் கேசவன் சொல்லும்போது முருகேசன் (கேசவனின் கம்யூன் தோழன்) என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறும் இடம் (பக் 62), கழகக்காரர்கள் போல அடுக்குமொழியில் கவிதை எழுதும் ஒரு கம்யூனிஸ்ட்டைச் சுற்றிய விவாதங்கள் (பக். 73), நேரு, ராஜாஜி உள்ளிட்டோர்கள் பேசிய ஆங்கிலத்தால்தான் சுதந்திரம் கிடைத்ததோ என்பது (பக். 81), ஒரு பெரிய கதையில் தமிழாசிரியர் ஒற்றுப் பிழைகளைக் கண்டுபிடிப்பது, கதையில் கம்பனைப் பற்றிக் குறிப்புகள் இல்லை என்று வருத்தப்படுவது (பக். 97), கேசவனின் அப்பா மகானாக்கப்படும் தருணங்கள், இப்படி பல இடங்கள்.

பிராமண இளைஞனின் கதையில் பிராமணர்களைப் பற்றி எல்லா வகையிலும் யோசித்திருக்கிறார் இபா. அவர் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களிடமிருந்து இதைக் கொண்டிருந்திருக்கவேண்டும். கேசவனின் தந்தையின் கதாபாத்திரம் ஒரு கட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கிறது. தன் வீட்டில் வேலை பார்க்கும் ஒரு தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணை கையைப் பிடித்து இழுக்கும் ஒரு பிராமணருக்கு எதிராகப் பேசாமல் எல்லா பிராமணர்களும் அமைதியாக இருக்கும்போது, கேசவனின் அப்பா பிராமணனாக இருப்பதைவிட முக்கியம் நேர்மையானவனாக இருப்பது என்று முடிவெடுக்கிறார். இச்சம்பத்தில்தான் தன் தந்தையை தானே கண்டடைகிறான் கேசவன். ஒரு கம்யூனிஸ்ட்டுக்கான சிந்தனையை ஓர் ஆசார பிராமணரிடத்தில் காணும் அவன் அதற்குப் பின் தன் தந்தையைப் பற்றிய பெருமையான தருணங்களையே தொடர்ந்து தரிசிக்கிறான். கேசவனின் பெரியப்பா பல்வேறு பெண்களிடம் தொடர்பு வைத்துக்கொண்டு சொத்தை இழந்து திரும்ப வருகிறார். அதற்குப் பின் அவர் கொள்ளும் நிலையில் பெரும் ஆன்மிக அமைதி காணக்கிடைக்கிறது. இத்தகைய பெரியப்பாவை வைத்து காசு பார்க்க அவர் குடும்பத்தவர்கள் முயலும்போது கேசவனின் தந்தை அப்போதும் நேர்மையே முக்கியம் என முடிவெடுக்கிறார். இப்படி ஒரு சமூகத்தில் நிலவும் எல்லாவிதமான மனிதர்களையும் வெளிப்படுத்துவதில் முழுவெற்றி காண்கிறார் இபா.

இக்கதையில் வரும் இடறல்கள் எனச் சிலவற்றைச் சொல்லலாம். முதல் விஷயம், இது ஒரு நாவலுக்கான கட்டமைப்பைப் பெறுவதைவிட, தொடருக்கான மனோநிலையிலேயே எழுதப்பட்டுள்ளது என்பது. திடீரென மாறும் காட்சிகளுக்குள் தொடர்பு இல்லாமல் போவது முதல் சறுக்கல். ஒரு கதாபாத்திரம் வரும்போது அதைப்பற்றிய இரண்டு வரிகள் தந்தே தீரவேண்டிய கட்டாயம் தொடர்களுக்கு ஏற்படுவதுண்டு. இதை இபாவால் சமாளிக்கமுடியவில்லை. அடுத்தது கதையில் அரசியல் நிகழ்ச்சிகள் உக்கிரம் கொள்ளும் சமயத்தில் அது தடாரெனத் தடம் விலகி, கிருஷ்ணன் (கேசவனின் கல்லூரி நண்பன்) மற்றும் கேசவனின் ஈகோவில் முட்டி நிற்பது. இதிலிருந்தும் விலகும் கதை கேசவனின் பெரியப்பா வழியாக ஆன்மிக வழிக்குச் செல்கிறது. இதையாவது, கேசவன் கடைசியாக ஆன்மிக வழியை அடைவதற்கான முகாந்திரம் என்ற அளவில் ஏற்கலாம். கேசவனின் பெரியப்பாவும் கேசவனும் பேசிக்கொள்ளும் விஷயங்கள் அதிகமாக பாலகுமாரனை நினைவுபடுத்துகின்றன. வெகுஜன எழுத்தாளர்களாக அறியப்படுபவர்களில் (மாலன், ஆதவன், சுப்ரமண்ய ராஜு போன்றோர்) பாலகுமாரனே சிறந்தவர் என்பது என் எண்ணம். இபாவின் பாலகுமாரத்தனமான வசனங்களைப் படிக்கும்போது, மீண்டும் பாலகுமாரனைப் படித்து, நாஸ்டால்ஜியாவை மீட்டெடுக்கலாம் என்று தோன்றிவிட்டது. :)அதேபோல் நாவலுக்கான முடிவு என்பது ஒருவித எதிர்பார்த்த முடிவு என்பது தெரிந்துவிடுகிறது. ஆனால் இன்றளவும் இது யதார்த்தமாக இருப்பதால், இம்முடிவைத் தவிர்க்கமுடியாததாகவும் எடுத்துக்கொள்ளலாம். என் பெயர் ராமசேஷன் நாவலின் முடிவு இத்தகைய தன்மை கொண்ட ஒன்று. அதாவது எதிர்பார்த்த ஒன்று; ஆனாலும் யதார்த்தமானது என்கிற அளவில்.

1994ல் எழுதப்பட்ட நாவல் இன்னும் நூறாண்டுகளுக்குப் பொருத்தமாக இருக்கப்போகிறது என்பதுதான் இதன் முக்கியத்துவம்.

வேர்ப்பற்று, நாவல், இந்திரா பார்த்தசாரதி, கிழக்கு பதிப்பகம், விலை: 120 ரூ.

Share

Comments Closed