மீண்டும் பூனைகளைப் பற்றி எழுதுதல் அவசியம்.
சத்தம் எங்கிருந்து வருகிறது எனத் தெரியவில்லை. ஒருமுறை பின்ஜன்னலுக்குக் கீழிருந்து வருவது போலவும் ஒருமுறை வாசலுக்குப் பக்கத்திலிருக்கும் மாடிப்படியின் கீழிருந்து வருவது போலவும் பூனைக்குட்டிகளின் மியாவ் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. என் மகன் ஓடிவந்து பூனை அவனைக் கூப்பிடுவதாகச் சொன்னான். அவனுக்கு அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நான் லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு ஒரு பிளாஸ்டிக் டம்பளரில் பாலை ஊற்றிக்கொண்டு, ‘புஸி பாஸ் பாஸ்’ என்று அழைத்துக்கொண்டும், இரண்டு உதடுகளைக் குவித்து பூனைகளை அழைக்க நாங்கள் மரபாகப் பயன்படுத்தும் ஒலியை எழுப்பிக்கொண்டும் பூனைக்குட்டிகளைத் தேடினேன். ஏற்கெனவே பூனை என் விரலைக் கடித்த அனுபவம் இருந்ததாலும், பூனை நாயொன்றை விரட்டும் காட்சியை நேரில் கண்டிருந்ததாலும் கொஞ்சம் அஞ்சி அஞ்சியேதான் அவற்றைத் தேடினேன்.
பொதுவாகவே பூனைகள் நன்றி அற்றனவாகவும் திருட்டுக்குணம் கொண்டனவாகவும் சித்திரிக்கப்படுகின்றன. பூனைகள் தங்கள் உலகைப் பொதுவில் காட்டாதவை. அவை அவற்றிற்கே உரிய உலகை தங்களோடு ஒளித்துவைத்து வெளியில் அலைபவை என்ற ஒரு கருத்தும் சொல்லப்பட்டது. அதில் உண்மையும் உண்டு. ஒரு பூனை தன் குட்டிகளை ஓரிடத்தில் ஏன் ஒளித்து வைக்கிறது என்பது அந்தப் பூனையைத் தவிர யாருக்கும் தெரியாத மர்மமாகத்தான் இருக்கமுடியும். நான் தேடிக்கண்டடைந்த பூனைக்குட்டிகளும் எங்கள் வீட்டைச் சுற்றிக் கிடக்கும் சந்தின் மேல் உள்ள ஸ்லாப்பில் கிடக்கும் பழஞ்சாக்கு ஒன்றில் அண்டிக்கிடந்தன. ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு, கண் திறக்காமல் தாயைத் தேடும் அப்பூனைக்குட்டிகளை நான் பார்த்த மாத்திரத்தில், அவை எனக்குப் பிடிதுப்போயின. என் மகன் விடாமல் ‘பூனக்குட்டி பூனக்குட்டி’ என்று சொல்லிக்கொண்டே இருந்தான். நான் மூடப்பட்டிருந்த கிணறு ன்றில் கால்வைத்து மேலேறி மெல்லப் பூனைக்குட்டிகளை வருட யத்தனித்த நேரத்தில் கொஞ்சம் சீறலும் கோபமுமாக பெரிய பூனை ஒன்று குரல் கொடுத்தது. உடலெங்கும் ரோமங்கள் குத்த்திட்டு நிற்க – பூனைக்கல்ல, எனக்குத்தான். பூனையின் குரலில் கொஞ்சம் பயந்துவிட்டேன்! – நான் முகம் வெளிறிப் பூனையைப் பார்த்தேன்.
பூனையின் முகங்கள் பலவேறானவை. மிகவும் தீர்க்கமான முகம் முதல், முக்கோண முகமாக, அசமந்த முகத்துடன், எப்போதும் பயந்தது போலவே இருக்கும் முகத்துடன் எனப் பல்வேறு பூனைகளை நான் கண்டிருக்கிறேன். இந்தப் பூனையின் முகம் அருளற்றது. தீர்க்கமற்றது. அதன் முகத்தில் எப்போதும் ஒரு கோபம் இருந்தது. கண்களில் எப்போதும் ஒரு மருட்சியிருந்தது. வீட்டில் வளர்க்கப்படாமல் தான்தோன்றியாக வளரும் பூனைகள் எப்போதுமே ஒரு பயத்துடனும் எப்போதும் எங்கேயாவது ஓடிவிட யத்தனிக்கும் ஒரு நினைப்புடன் அலைவது போலவே இருக்கும். இந்தப் பூனையும் அப்படியோர் எண்ணத்துடன் என்னை முறைத்துப் பார்த்தது. நான் கொண்டு போயிருந்த பாலை குட்டிகள் குடிக்கப்போவதில்லை. இருந்தாலும் அங்கு வைத்துவிட்டு வந்தேன். மறுநாள் பார்த்தபோது ஒரு சொட்டுப் பால் இல்லாமல் ப்ளாஸ்டிக் கப் காலியாக இருந்தது. அதைக் குடித்த நன்றிகூட இல்லாமல் அந்தப் பெரிய பூனை வழக்கம்போல் ஏதோ ஒரு கோபத்துடன் என்னைத் தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தது.
தொடர்ந்து இரண்டு மூன்று நாள்களுக்கு வேலை விட்டுச் செல்லவும் முதல் வேலை, என் பையனை அழைத்துக்கொண்டு குட்டிகளுக்குப் பால் வைப்பது என்கிற பெயரில் பெரிய பூனைக்குப் பால் வைப்பது என்பதாகிவிட்டது. நான் மறந்தாலும் என் பையன் என்னிடம் ‘பூன என்ன கூப்பிடுது, பால் கேக்குது’ என்று கூட்டிக்கொண்டு போய்விடுவான். ஒருநாள் பூனைக்குட்டிகளின் சத்தத்தையே காணவில்லை. ஒரு தாய்ப்பூனை குட்டிப் பூனைகளின் இடத்தை ஏழு தடவை மாற்றும் என்று என் அம்மா சொல்வாள். அப்படி இடம் மாற்றப்பட்டிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். சில நாள்களுக்குப் பின்பு மீண்டும் பூனைக்குட்டிகளின் சத்தம். பூனைக்குட்டிகள் இரண்டு வீட்டின் பின்புறத்திலுள்ள சிறிய சந்தில் கீழே இருந்து கத்திக்கொண்டிருந்தன. மேலே ஸ்லாப்பில் இன்னொரு குட்டி இருக்கும் என்று தேடியபோது அந்தக் குட்டியைக் காணோம். தாய்ப் பூனையையும் காணவில்லை. குட்டிகள் கொஞ்சம் வளர்ந்திருந்தன.
இப்போது குட்டிகளுக்கே பால் வைக்கத் தொடங்கினேன். என்னைப் பார்த்ததும் எதிர்த்திசையில் ஓட்டமெடுத்தன இரண்டும். நான் ‘புஸி பாஸ் பாஸ்’ என்று கூப்பிடும்போது, நான் ஏதோ கெட்டவார்த்தையில் திட்டுவதாக நினைத்த அப்பூனைக்குட்டிகள் மிரண்டு விழித்தன. என் மனைவி தூரத்திலிருந்து, ‘புஸி பாஸ் பாஸ்னா எனக்கே புரியல, புஸி பால் பால்னா அதுக்குக் கொஞ்சமாவது புரியும்’ என்று சொல்லிவிட்டு, அவளே உரக்கச் சிரித்துக்கொண்டாள். இரண்டடி எடுத்துக் கொஞ்சம் அருகில் சென்றால், பூனைக்குட்டிகள் சீறின. பாலை வைத்துவிட்டு, கையைக் காண்பித்துவிட்டு, அதன் கண்ணில் படாமல் ஒளிந்து நின்றதும், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு வந்து குடித்தன. தட்டில் வைத்த பாலைக்கூடக் குடிக்கத் தெரியாத குட்டிகள் அவை. பாலைத் தரையில் தட்டிவிட்டுப் பின்பு நக்கின. என் பையன் ஜாலி ஜாலி என்று குதித்தான்.
ஒருநாள் இரவு 8 மணி வாக்கில் தொடர்ந்து ஒரு குட்டியின் மியாவ் சத்தம் கேட்டது. வெளியிலிருந்து நாயின் குரைப்புச் சத்தமும் கேட்டது. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள். பால் எடுத்துக்கொண்டு போனாலும் குடிக்கப்போவதில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நாயின் விநோதமான சத்தம் திடீரென என்னுள் ஒரு படபடப்பை ஏற்படுத்த தலைதெறிக்க வீட்டின் பின்பக்கம் ஓடினேன். ஒரு கையளவே ஆகாத குட்டியொன்று சுவரோடு சுவராக ஒடுங்கி, கத்தலுடனும் சீறலுடனும் நாயைப் பார்த்துப் பயந்துபோயிருக்க, நாய் அப்பூனைக்குட்டியைப் பார்த்து விடாமல் குரைத்துக்கொண்டிருந்தது. அந்தத் தெருநாய் ஏன் அப்பூனைக்குட்டியைக் கடிக்கவில்லை என்பது புரியவில்லை. குட்டிப்பூனையின் சீறல் அந்நாய்க்கு விநோதமாகப்பட்டிருக்கவேண்டும். நாயின் வாயில் பட்ட பூனை பிழைப்பது அரிது. மேலும் நாய்கள் பூனையின் சீறலுக்குப் பயந்து நிற்கும் என்பதும் நிச்சயமல்ல. தெருநாய் என்பதால் எதற்கோ பயந்துகொண்டு குரைத்தலோடு நின்றுவிட்டது போல. கையில் கிடைத்த கம்பொன்றைத் தூக்கி எறிந்தேன். குரைத்துக்கொண்டு ஓடியது நாய். பூனை பிழைத்தது மறுபிழைப்புதான். அன்றிலிருந்து பூனை அங்கேயேதான் இருக்கிறது. இன்னொரு குட்டி எப்போதாவது வரும், போகும்.
இன்னொரு நாள் நான் வீட்டுக்குள் நுழைந்தவுடன் என் பையன் என்னிடம், ‘இன்னைக்கு பூனைக்குட்டி வீட்டுக்குள்ள வந்திட்டு’ என்றான். என் ஷ¥வை நக்கியது அவனுக்குப் பிடிக்கவில்லை போல. அதையே சொல்லிக்கொண்டிருந்தான். தினமும் பால் ஊற்றுவோம். நானும் என் பையனும் பூனைக்குட்டிகளின் கண்களில் இருந்து மறைந்து பின்னரே பூனைக்குட்டிகள் பாலைக்குடிக்கும். உண்மையில் பூனையின் உலகம் வேறானதுதான். ஏனென்றால் அதிகம் ஓடத் தெரியாத குட்டிகள்கூட திடீரெனப் பகலில் எங்கு காணாமல் போகின்றன, எப்போது வருகின்றன, திடீர் மழையில் எங்கு ஒதுங்குகின்றன, ஏன் திடீரென மௌனம் காக்கின்றன, ஏன் திடீரென விடாமல் கத்துகின்றன என்பது எதுவும் புரிவதேயில்லை. வீட்டில் வளரும் பூனைகள் இப்படி தானாக வளரும் பூனைகளிலிருந்து வெகுவாக வேறுபட்டவை. வீட்டில் வளரும் பூனைகள் நம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும்வரை விடாமல் கத்தும். ஓரளவு நம்முடன் பரிச்சயம் ஏற்பட்டபின்பு, காலையும் மாலையும் பால் ஊற்றும் சமயங்கள் நீங்கலாக அவை கத்துவதே இல்லை.
இரவில் உங்கள் படுக்கையில் படுக்கும் பூனைகள், நீங்கள் ஒருக்களித்துப் படுக்கும்போது அசைந்து கொடுத்து தன்னை பாதுகாத்துக்கொள்ளும் உங்கள் குழந்தையைப் போல, தன்னைப் பாதுகாத்துக்கொள்பவை. எக்காரணம் கொண்டும் அவை தூக்கம் கலைத்துவிட்டு ஓடுவதில்லை. அல்லது அதன் மேலேவிழும் உங்கள் கையைக் கடிப்பது இல்லை. காலை நேரங்களில் வீட்டுப் பூனைகள் அடையும் பரபரப்பு என்றென்றும் ரசிக்கத்தக்கது. ஒரு பூவையோ ஒரு ஈர்க்குச்சியையோ நீங்கள் ஆட்டும்போது, மிகக் கூர்மையாக அதைப் பார்த்து, அவை பதுங்கி -அப்படிப் பதுங்கி அமரும்போது விடாமல் வாலை ஆட்டும் அழகு ரசிக்கத்தக்கது – பின் சடாரெனப் பாயும் அதன் வேகமும் விளையாட்டு ஆர்வமும் பிரமிக்கத்தக்கது. இவற்றையெல்லாம் தெருப்பூனைகள் செய்வதில்லை. அல்லது யாரும் தெருப்பூனையிடம் இப்படி விளையாடுவதில்லை. ஒரு தெருப்பூனையை வீட்டுப் பூனையாக்குவது குறித்து யோசிக்கிறேன். ‘பூன நம்ம வீட்டுக்கு ராசிதான், ஆனாலும் எதுக்கு இப்ப’ என்ற குரல்கள் என் வீடெங்கும் ஒலிக்கும் என்பது தெரியும். அதனால் யோசனையாகவே இருக்கிறது. மட்டுமின்றி, பூனையின் ரோமங்கள் வீட்டிலிருக்கும் குழந்தையின் உடல்நிலைக்கு ஆரோக்கியமானதல்ல என்பதும் ஒரு கருத்து. இப்படிப்பட்ட யோசனைக்கிடையில் தெருப்பூனையாகவே காலம் கழித்துவருகின்றன இரண்டு பூனைக்குட்டிகள்.
இந்த இரண்டு பூனைக்குட்டிகளின் முகம்கூட அருளற்றதாகவும் பதற்றம் நிறைந்ததாகவுமே தோன்றுகிறது. பதற்றம் அதற்குத் தொடர்ந்து கிடைக்காத உணவின் காரணமாக இருக்கலாம். அருளற்ற முகம் நிச்சயம் அதன் தாயிலிருந்தும் மரபு மரபாக தொடர்ந்து அலையும் தெருப்பூனைகளிலிருந்து வந்ததாகவே இருக்கவேண்டும். நான் அப்பூனையை வீட்டுக்குள் கொண்டு வராததற்கு, இந்த அருளற்ற முகம்கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று இக்கணத்தில் உணர்கிறேன்.
முதலிலேயே தலைப்பைச் சொல்ல நினைத்தேன். ‘பொழுதுபோகாத பூனைகளும் காய்ச்சல்காரனின் கசாய முயற்சிகளும்.’ ஆம், கடுமையான காய்ச்சலன்றுதான் இக்காவியத்தை நான் இயற்றினேன்.
தொடர்புடைய சுட்டிகள்: 🙂