உயிர்மை ஏழு நாவல்கள் வெளியீட்டமர்வு – டிசம்பர் 2007

* மனுஷய புத்திரன் வரவேற்புரை கூற விழா தொடங்கியது.

* இந்திரா பார்த்தசாரதி தலைமையேற்றார். தமிழனவனின் ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ புத்தகத்தை வெளியிட்டு, அதைப் பற்றிப் பேசினார். தான் வார்ஸாவில் வாழ்ந்த காலத்தில் பார்த்த மனிதர்களுக்கும் தற்போது தமிழவன் தன் நாவல் வழியாகக் கண்டடைந்த மனிதர்களுக்குமிடையே உள்ள வேறுபாட்டை விளக்கினார். தான் வாழ்ந்த காலத்தில் ராணுவத்தின் தீவிரக் கட்டுப்பாட்டில் இருந்த நிலம், தற்போது சுதந்திரத்திற்குப் பின்னான மனநிலையை எப்படி எதிர்கொள்கிறது என்பதையும் தொட்டுப் பேசினார்.

* ஜீ.முருகனின் மரம் என்கிற நாவலை வெளியிட்டு திலீப்குமார் பேசினார். இயல்பாகவே திலீப்குமாரின் குரல் மிக மென்மையானது. அதனால் அவர் பேசியது பலருக்கும் கேட்கவில்லை. மரம் நாவலில் வரும் மனிதர்கள் எப்படி பாலிச்சை மிகுந்தவர்களாக தீவிரமாக உள்ளார்கள் என்பதைப் பற்றிப் பேசினார் திலீப்.

* புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் ‘கண்யாவனங்கள்’ என்கிற மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டு பேசினார் யுவன் சந்திரசேகர். எப்போதும் சிரிப்பும் நட்புமாக இருக்கும் யுவன் மேடையை பேச ஆரம்பித்த ஐந்தே நிமிடங்கள் வளைத்துக்கொண்டார். நாவல் பற்றிப் பேசப்போவதில்லை என்று சொன்ன யுவன் தமிழின் மொழிபெயர்ப்பு சார்ந்த கருத்துகளைப் பற்றிப் பேசினார். அழகான இயல்பான தமிழில் அவரது பேச்சு மிகச்சிறப்பாக இருந்தது. மொழிபெயர்ப்பை இரண்டாகப் பிரித்துக்கொண்டு (பொதுநீரோட்ட மொழிபெயர்ப்பு, சிற்றிதழ் சார்ந்த மொழிபெயர்ப்பு) அதன் சாதக பாதக அம்சங்களை விரிவாக எடுத்துரைத்தார். இந்நாவல் எப்படி சிறப்பாக, மூல நூல் சொல்ல நினைக்கும் கருத்துகளைச் சிதைக்காமல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதையும் வலியுறுத்தினார். புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் நாவலை வாசிக்க விரும்புவர்கள் கன்யாவனத்தில் தொடங்கி, அதன் வழியாக மீஸான் கற்கள், அதன் பின்னர் மஹ்சர் பெருவெளி எனச் செல்லலாம் என்றும் ஆலோசனை சொன்னார். வெளிநாட்டில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையைச் சித்தரிப்பதில் ஆபிதினின் இடம் ஒரு முக்கிய நாவல் என்றும் அது கீழ்த்தட்டு மக்களைப் பேசுகிறது என்றும் சொல்லிய யுவன், இந்நாவல் அதற்கு மாறாக ஒரு அராபிய முதலாளி பற்றிப் பேசுகிறது என்றும் சொன்னார். நாவலில் வெக்கையும் தகிப்பும் எப்படி உள்ளும் புறமும் மையச்சரடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

* சி.வி.பாலகிருஷ்ணனின் ‘திசை’ மொழிபெயர்ப்பு நாவலை வெளியிட்டு தமிழவன் பேசினார். 1995க்குப் பின் வந்த தமிழ் நாவலைப் படிக்க வாய்ப்பிருக்கவில்லை என்று ஆரம்பித்த தமிழவன், நாவலின் கட்டுமானம் பற்றிப் பேசினார். கடந்த பத்து வருடங்களில் தமிழர்களின் சிந்தனை, வெளிப்பாடு வரைபடம் நேர் குத்துக்கோடுகளாக ஆகிவிட்டது என்றும் அதற்கு முன்னர் கிடைமட்டமாக இருந்தது என்றும் சொன்னார். கைகளால் காற்றில் வரைந்து காட்டினார்! இந்நாவலில் வரும் திடீர் திடீர் பாத்திரங்கள் அதே மாதிரி காணாமல் போகின்றன, ஆனால் இவையே ஒரு சுவையான விஷயமாக நாவல் நெடுகிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்றும் சொன்னார். மொழிபெயர்ப்பின் கச்சிதம் பற்றியும் பேசினார்.


* எஸ். செந்தில்குமாரின் ஜீ.சௌந்தர ராஜனின் கதை என்னும் நூலைப் பற்றிப் பேசினார் நாஞ்சில் நாடன். நூலில் தெற்றுப் பார்க்கப் போவதில்லை என்று தொடங்கிய அவர், இந்நூல் இன்னும் பெரியதாக எழுதப்பட்டிருக்கலாம் என்றும் அதற்கான தேவையும் அவகாசமும் இருக்கிறது என்றும் சொன்னார். செந்தில் குமார் புதிய எழுத்தாளர் என்ற போதிலும் அவர் எடுத்துக்கொண்டிருக்கும் பிரச்சினை இன்றைய நிலையில் கண்டிப்பாக விவாதிக்கப்படவேண்டியது என்பதால் நாவல் முக்கியத்துவம் பெறுகிறது என்றும் சொன்னார்.

* வாமு.கோமுவின் கள்ளி நாவலை வெளியிட்டுப் பேச வந்தார் சாரு நிவேதிதா. ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் கடைசி பத்து ஓவர்கள் இங்கிருந்துதான் தொடங்கியது! தமிழவனுடன் 1978 முதல் 1985 வரை தனக்கிருந்த ஆழமான நட்பு, தினம் தினம் கடிதம் என்று தொடங்கிய சாரு, அதை இப்படி முடித்தார். தமிழவன் எழுதிய நாவல் (பெயர் மறந்துவிட்டது, சாவு என்று எதோ வரும்!) ஒன்றைப் பற்றி சாரு கடுமையாக விமர்சிக்க அன்றோடு முடிவுக்கு வந்ததாம் தமிழவனுடனான நட்பு. இதேபோல் யுவன் சந்திரசேகரைப் பற்றியும் பேசினார். ய்வனுடன் மிக ஆழமான நட்பு இருந்ததாகவும் ஒரு நாள் பார்க்காவிட்டால் கூட தலை வெடித்துவிடும் என்கிற அளவிற்கு நட்பு இருந்ததாகவும் கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் நடைபாதையின் படிகளில் அமர்ந்து இலக்கியம் பற்றிப் பேசியதாகவும் சொன்ன சாரு, அன்றைக்கு யுவனின் சிறுகதைகளின் கையெழுத்துப் பிரதியைப் படித்துவிட்டு யுவனை கொண்டாடுவாராம். இந்நிலையில் யுவன் இன்னொரு கையெழுத்துப் பிரதியைத் தந்தாராம். ‘குள்ளச் சித்தன் சரித்திரம்.’ அதைப் படித்துவிட்டு மறுநாள் 15 நிமிடம் காரசாரமாக சாரு யுவனை விமர்சிக்க, அன்றோடு முடிவுக்கு வந்ததாம் யுவனின் நட்பு! அதன் பின்பு டிசம்பருக்கு டிசம்பர் உயிர்மை விழாவில்தான் பார்க்கமுடிகிறதாம். அதேபோல் வாமு கோமுவின் அறிமுகத்தையும் அவரது சிறுகதைகளை தான் கொண்டாடியதையும் சொன்ன சாரு, இந்நாவல் மீண்டும் இயல்புவாதம் என்கிற மூடப்பட்ட பிரதிக்குள் விழுந்துவிட்டது என்றும் சொன்னார். பின் நவீனத்துவமே திறந்த எழுத்து என்றும் அதுவே இன்றைக்குத் தேவை என்றும் பின்நவீனத்துவ மாணவன் என்கிற முறையில் தன்னால் இதுபோன்ற எழுத்துகளைப் படிக்கமுடிவதில்லை என்றும் சொன்ன சாரு, பின் நவீனத்துவத்தைப் பற்றியும் கொஞ்சம் விளக்கினார். கடைசியில், வாமு. கோமு இன்றோடு பேச்சை நிறுத்திவிடக்கூடாது என்றும் சொல்லி, let us be friends என்று சொல்லி உரையை நிறைவு செய்தார்.

* எஸ். ராமகிருஷ்ணனின் ‘யாமம்’ நாவலை வெளியிட்டு பேசினார் ஜெயமோகன். தொடங்கும்போதே சாருவிற்கான பதிலாகத் தொடங்கினார். சாருவின் எழுத்தை தான் பொருட்படுத்தியது கிடையாது என்றும் எல்லாரும் எழுதுகிறார்கள், சாருவும் எழுதுகிறார் என்ற அளவில் மட்டுமே நினைத்திருந்ததாகவும் சொன்ன ஜெயமோகன், ‘ஸீரோ டிகிரி’ நாவலைப் படித்த பின்புதான் அதில் ஒரு நாவல் இருக்கிறது என்று அறிந்து, அதை சாருவிற்குக் கடிதமாகவும் அனுப்பியதாகச் சொன்னார். அதன்பின்புதான் சாரு தன்னை நண்பன்¡க நினைத்தார் என்று சொன்னார்! அதேபோல் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்தில், நடையில் தனக்கு கடுமையான விமர்சனம் இருந்தது என்றும் அதை சொல்லியும் இருக்கிறேன் என்றும் சொன்ன ஜெயமோகன், உப பாண்டவம் படித்தபோது, எஸ். ராமகிருஷ்ணனில் சிறந்த நாவலாசிரியர் இருப்பதை அறிந்தேன் என்றும் சொன்னார். உப பாண்டவம் முக்கியமான நாவல் என்றும் நெடுங்குருதி தமிழின் நல்ல படைப்புகளுள் ஒன்று என்று நம்புவதாகவும் சொன்னார் ஜெயமோகன். அதன்பின் எஸ்.ராமகிருஷ்ணனின் நட்பும் கிடைத்தது என்றும் சொல்லி, இது இயல்பானது என்றார். ஒரு சமயம் ஜெயமோகனை யுவன் சந்திரசேகர் தொலைபேசியில் அழைத்து, அவருடன் சாரு பேசுவதே இல்லை என்றும் ஜெயமோகன் சாருவை அழைத்து இது பற்றிச் சொல்லவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாராம். ஜெயமோகன் என்ன நடந்தது என்று கேட்டதற்கு, சாரு கோணல் பக்கங்கள் புத்தகத்தைத் தந்தார், அதைப் படித்துவிட்டு கருத்து சொன்னேன், அன்றிலிருந்து சாரு பேசுவதில்லை என்றாராம் யுவன் சந்திரசேகர்! பின்பு எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் நாவல் பற்றிப் பேசினார் ஜெயமோகன். யாமம் நாவல் அத்தர் தயாரிக்கும் இஸ்லாமிய குடும்பத்தின் கதை என்றும் அது ஷாஜஹானின் அரண்மனையில் தொடங்கி, கிழக்கிந்தியக் கம்பெனிக்காரர்கள், அதன் பின்பு வந்த சென்னை பட்டினம், அது சந்தித்த போர்கள் வழி நீள்கிறது என்றார். Metaphor மூலம் கட்டமைக்கப்படும் metaphysics எனப்படும் மீப்பொருண்மை வாதம் பற்றிய விளக்கிய ஜெயமோகன், அதை இந்நாவல் எப்படி வெற்றிகரமாக கையாண்டிருக்கிறது என்றும் விளக்கினார். இப்பிரபஞ்சத்திற்கு இணையான இன்னொரு பிரபஞ்சத்தை முன்வைக்கிறது இந்நாவல் என்றார். போர்ஹேயின் எழுத்தைப் பின்பற்றியிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணன், அவரது நடையை அப்படியே பின்பற்றாமல் எழுதியிருப்பது தனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப்படுகிறது என்று சொன்ன ஜெயமோகன், இந்நாவலைப் படிக்க சிறந்த வழி, வாசனை மூலம் கண்டடைவது என்றார்.

* விழா இனிதே முடிவடைந்தது.

(குறிப்பு 1: இதிலிருக்கும் விஷயங்கள் அத்தனையும் என் நினைவிலிருந்து எழுதியது. குறிப்புகளும் எடுக்கவில்லை. அதனால் எந்த எழுத்தாளர்களாவது இப்படி பேசவில்லை என்றோ, இந்த வார்த்தையைச் சொல்லவில்லை என்றோ சொல்வார்களானால், அதுவே சரி.

குறிப்பு 2: விழாவில் பார்த்த வலைப்பதிவுலக, இணைய நண்பர்கள் – மதுமிதா, சாபு, அப்துல் ஜப்பார், நிர்மலா. எல்லாருடனும் ஹாய் சொல்ல மட்டுமே நேரம் இருந்தது.)

வெளியீட்டமர்வு நடந்த நாள்: 15.12.007 மாலை 6 மணி
இடம்: புக் பாயிண்ட், (ஸ்பென்ஸர் பிளாசா எதிரில்),சென்னை.

Share

Comments Closed