கல்லூரி படம் பார்த்தேன். (சுரேஷ்கண்ணன் படம் பார்த்து எழுதிவிடுவதற்குள் அந்தப் படத்தைப் பார்த்து எழுதுவது என்பது பெரிய விஷயமாகத்தான் போய்விட்டது எனக்கு!)
முடிவின் கனத்தில் முன்னோக்கி நகரும் இன்னொரு படம். நடிகர்களின் தேர்வு வெகு யதார்த்தம். எல்லாருமே நன்றாக நடிக்கிறார்கள். அதிலும் கதாநாயகியாக வரும் நடிகையின் முக பாவங்கள் என்னை ஆச்சரியப்படுத்தின. காதல், நட்பு, ஏக்கம், கோபம், பொஸஸிவ்நெஸ் என எல்லாவற்றையும் முக அசைப்பிலேயே காண்பிக்கிறார். கதாநாயகியுடன் நடிக்கும் பெண், கயல், சிறப்பாக நடித்திருக்கிறார். அவரின் பாத்திரப் படைப்பும் அருமை. எப்படியும் நட்பு வட்டத்துள், இப்படி மரபு பேசி, குற்ற உணர்ச்சியை அதிகமாக்கிக்கொண்டிருக்கும் ஒரு நண்பர் இருந்தே தீருவார். அதேபோல் இன்னொரு நடிகர், எப்போதும் கமெண்ட் அடித்துக்கொண்டு, பரதநாட்டியம் ஆடும் நடிகர். வெகு யதார்த்தம். இப்படியும் ஒரு நண்பர் உங்கள் நட்பு வட்டத்துள் இருந்தே தீருவார்.
செழியனின் கேமராவில் கல்குவாரி காட்சிகள் அழகு. மழையில் வரும் ஒரு பாடலும் வெகு அழகு.
யதார்த்தமான காட்சிகளே படத்தின் பலம். தொடர்ச்சியான கலாய்த்தல் மூலம், மாறி மாறிப் பேசிக்கொள்வதன் மூலமும் பாலாஜி சக்திவேல் நட்பை அதிக பிணைப்பு கொள்ளச் செய்கிறார். ஒரு கட்டத்தில் இது அளவுக்கு மீறி எனக்கு சலிப்பை ஏற்படுத்திவிட்டது. படத்தின் முடிவு தரவேண்டிய கடுமையான மன உளைச்சலுக்கு – நானும் மன உளைச்சலுக்கு ஆளானேன் – இந்த சலிப்பு தேவை என்று இயக்குநர் உணர்ந்தே செய்தாரோ என்னவோ.
கதாநாயகி கதாநாயகன் மீது நெருக்கம் கொள்ள ஆரம்பிக்கும் தருணங்கள் மீண்டும் மீண்டும் காட்டப்படுவதும் ஒரு வகையில் எனக்கு சலிப்பை ஏற்படுத்தியது என்றே சொல்லவேண்டும். குறிப்பாக, நணபர்கள் மதுரைக்குச் சென்று பங்குகொள்ளும் இணடர் மீட் காட்சிகள். இதன் மூலம் இயக்குநர் சொல்ல நினைப்பது நாயகியின் பொஸ்ஸஸிவ்நெஸ்ஸை. அதற்கு இந்தக் காட்சிகளின் நீளம் அதிகம். ஏனென்றால் இதற்கு அடுத்து வரப்போகும் (மகாபலிபுரம் காட்சியில் கயல் முத்துவின் தலையை தடவிக்கொடுப்பது) காட்சியும் இதையே முன்வைக்கப்போகிறது.
கல்லூரியின் மிக முக்கியமான இரண்டு இதில் காட்சிப்படுத்தப்படவில்லை. ஒன்று, என்னதான் ஒரு கூட்டமாக ஆண் பெண் நட்பிரிந்தாலும், அதிலிருந்து பிரிந்து ஆண்களுக்குள்ளே ஏற்படும் நட்பும் அதில் முக்கியப்பொருளாக விவாதம் கொள்ளும் காமமும். பெரும்பாலும் இளைஞர்களுக்கு BF, மேற்படி படங்கள் அறிமுகமாவது கல்லூரியில்தான். இதைப் பற்றிய விஷயமே இந்தக் கல்லூரியில் இல்லை. இரண்டாவது, கல்லூரியின் தேர்தல் மற்றும் சமூகத்தின் ஜாதி தனது முகத்தை அறிமுகப்படுத்தும் காலங்கள். தேர்தல் நேரத்து களைகட்டுதல் இல்லாது கல்லூரிகளே இல்லை. மட்டுமின்றி, ஒரு இளைஞன் மெல்ல ஜாதிகளின் நிழல் அதன் இன்னொரு முகத்தோடு தன் மீது படிவதை ஒரு கல்லூரியில் உணரத் தொடங்குவான். அதிலும் இதுபோன்ற கிராமம் சார்ந்த மனிதர்கள் சென்று படிக்கும் கல்லூரிகளில் இந்த விஷயம் வெகு சாதாரனம். மதுரை இண்டர் மீட்டுக்கு பதில் இதில் எதாவது ஒன்றை இயக்குநர் யோசித்திருக்கலாம் என்று தோன்றியது. இதனால் கல்லூரி படம், கல்லூரியில் நடக்கும் ஆண் பெண் உறவை மட்டுமே முன்வைப்பதாக அமைந்துவிட்டது. இதன் பல்வேறு பிரிவுகள் கவனிக்கப்படவில்லை.
இவ்வளவு யதர்த்தமான படத்தில் வரும் சில நாடகத்தனமான காட்சிகள். முதலில் எல்லா நண்பர்களின் வீட்டைப் பற்றிக் காண்பிக்கும்போது வெளிப்படுத்தப்படும் வறுமை. இதில் உண்மையிருக்கும் அளவிற்கு காட்சிகள் அமைத்த விதத்தில் ஈர்ப்பு இல்லை. தகவல்கள் போல இவர்களின் நிலைமை சொல்லப்படுகிறது. இதனால் அவர்களின் வறுமை பார்வையாளர்களின் வறுமையாக மாறாமல் போகிறது. அடுத்தது, நட்பு அன்பு என்கிற அடிப்படையில் நடக்கும் பாசமிகு காட்சிகள். அதில் முக்கியமானவை இரண்டு. சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது ஒரு பெண் சாப்பிடாமல் போனதும் அனைவரும் வருந்துவதும் சாப்பிடாமல் போவதும் நாடகத்தன்மை உள்ள காட்சி. இன்னொரு காட்சி, அவர்கள் அனைவரும் திருச்சிக்கு சென்று முத்துவை வெற்றி பெறச் செய்தார்கள் என்று சொன்னதும், எல்லாத்துக்கும் காரணம் ஷோபனா என்று சொல்லப்படுவதும் தொடர்ந்து முத்து நெகிழ்ச்சி அடைவதுமான காட்சிகள். இவையெல்லாம் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஏனென்றால், காதல் படத்தில் வரும் செயற்கையான காட்சிகள் வெகு குறைவு. அதேபோல் கல்லூரி முதல்வர் வெகு செயற்கை.
படத்தின் நெடுகில் வரும் இளையராஜாவின் பாடல்கள். வாவ், என்ன ஒரு அற்புதம். உண்மையில் இளையராஜாவை திரையுலகம் எவ்வளவு இழந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. பாடல்களில் வரும் வெறுமையை உறுதிப்படுத்துகிறது அங்கங்கு தெறித்து விழும் இளையராஜாவின் பாடல்கள். ஜோஷ்வர் ஸ்ரீதரின் இசையில் ஜூன்மாதம் என்று வரும் பாடல் கொஞ்சம் தரமானதாகத் தோன்றியது. மற்ற பாடல்களைப் பற்றி இன்னும் நிறைய முறை கேட்டால்தான் மேலும் சொல்ல முடியும். பின்னணி இசையில், மௌனம் காத்திருக்கவேண்டிய இடங்களில் நெகிழ்ச்சியை அள்ளி இறைக்கும் இசையை அமைத்துவிட்டார். இதை தவிர்த்திருந்திருக்கலாம்.
படம் கல்லூரியின் மீது படியும், கல்லூரி மாணவர்கள் கொஞ்சமும் நினைத்தே இராத, அரசியலின் கொடுமையைப் பற்றிப் பேசுகிறது. நம்மை யோசிக்க வைக்கிறது. மிரள வைக்கிறது. இந்த வகையில் இது முக்கியமான படமே. ஆனால், மணிரத்தினத்தின் பாணி போல, களத்தை மட்டும் பயன்படுத்திக்கொண்டு, அக்களத்தின் மீதான சமூக, அரசியல் காரணங்களைப் பற்றி ஆராயாமல், எல்லாவற்றையும் பார்வையாளன் மீதே சுமத்திவிடுகிறது இப்படமும். அந்த வகையில் இதை ஒரு குறையாகவும் சொல்லமுடியும். (உள்ளிருந்து பார்ப்பவர்களுக்கு நான் சொல்வதன் இயலாமை புரியக்கூடும். அப்படி அரசியல் சமூகக் காரணங்களை தெளிவாகச் சொல்லிப் படமெடுக்கும் சூழல் இல்லை என்பதை அவர்கள் முன்வைக்கலாம். எரிப்புக்களம் ஆந்திராவுக்குப் போவதும் வெள்ளைக் கொடிகள் மங்கலாக அசைவதும் இதை உறுதி செய்கின்றன. இயக்குநரின் எல்லையைப் பற்றியும் புரிந்துகொள்கிறேன். விசுவின் அரங்கத்திற்கு விவாத அரங்கம் என்று பெயர் வைக்குமளவிற்கு மட்டுமே இங்கு இயக்குநரின் சுதந்திரம் இருக்கிறது என்பதும் புரிகிறது.)
காதல் படத்தில் வரும் சிறு சிறு பிழைகள் இப்படத்திலும் தொடர்கின்றன. கதாநாயகி ஒரு தடவை ‘ஓகே’ என்கிறார். பின்குரல் சரி என்கிறது. உதட்டசைவும் குரலும் ஒன்றுபடவில்லை. மழையில் வரும் பாடலொன்றில் ஒரேமாதிரியான முகபாவங்கள் இரண்டு முறை வருகிறது. இந்த இரண்டும் சிறு விஷயங்களே. படத்தின் கடைசி காட்சியில், முத்துவின் பையிலிருந்து கீழே விழும் கர்சீஃபைத் தொடர்ந்து கதாநாயகியின் ரீயாக்ஷனும் இரண்டு முறை வருகிறது. இதை நிச்சயம் எடிட்டிங்கில் தவிர்த்திருந்திருக்கவேண்டும். மிக முக்கியமான காட்சி அது.
இரண்டு நண்பர்கள் ‘நீங்க சொல்லுங்க நீங்க சொல்லுங்க’ என்று சொல்லும் காட்சிகள் பயன்படுத்தப்படும் விதம் வெகு அருமை. உண்மையிலேயே பல சந்தர்ப்பங்களில் இவை நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன. இன்னொருவகையில், இக்கதாபாத்திரங்கள் காடு நாவலில் வரும் இரண்டு ஆண் நண்பர்களை எனக்கு நினைவுக்குக் கொண்டு வந்து, தேவையில்லாமல் நிறைய யோசிக்க வைத்துவிட்டது!
இவ்வளவு அறிமுக நடிகர்களை வைத்துக்கொண்டு, யதார்த்தமான படம் எடுப்பது என்பது பெரிய சவால். அதை வெகு கச்சிதமாக நிறைவு செய்திருக்கிறார் பாலாஜி சக்திவேல். எனக்குத் தெரிந்த நடிகர் யார்தான் வந்தார் என்று யோசித்து யோசித்து பார்க்கிறேன், விசு தவிர ஒருவர் பெயரும் நினைவுக்கு வரவில்லை! அப்படியென்றால் இயக்குநரின் உழைப்பு எத்தகையது என்று புரியலாம்.
காதல் தந்த மயக்கம் தீராத நிலையில், இந்தப் படத்தை காதலோடு ஒப்பீடு செய்வதை நிறுத்தவே முடியாமல் போனால், இப்படம் கொஞ்சம் சுணக்கம் பெறும். ஆனால் பாலாஜி சக்திவேல் முக்கியமான இயக்குநராக அறியப்படுவார்.
மதிப்பெண்: 45/100