சில கவிதைகள்

1.

நதியின் படிக்கட்டில்
நீரில் எழுதிய கோடுகள்
விரிந்து விரிந்து
ஒன்றோடு ஒன்றிணைய
இடையில் கிடக்கின்றன
நீரால் நனைக்கப்படாத
கட்டங்கள்
என் கவன ஈர்ப்பாக.

-oOo-

2.

அவன் புன்னகைப்பதற்குள்
நகர்ந்துவிடத்தான் நினைத்தேன்
அதற்குள் சிரித்துவிட்டான்
நானும் சிரித்துவைத்தேன்
இப்படியே நான்கைந்து முறை ஆகிவிட்டது
எவ்வளவு யோசித்தும்
யாரென்றே சிக்கவில்லை
அவனிடமே கேட்டபோது
‘அடிக்கடி பார்க்கிறோம்ல அதான்’ என்றான்,
எங்களிடையே ஒரு பூ மலர.

-oOo-

3.

கடும் மழையிலும்
பூ விற்கிறாள் கிழவி
ஐந்து முழம் வாங்கினேன்
தலையை சுற்றியிருக்கும்
கோணிப்பை அகற்றி
மலர்ச்சியுடன் தந்தாள்
மொட்டு மல்லிகைகளை
எனக்கும் அவளுக்கும் மட்டுமான
மழை பெய்துகொண்டிருக்கிறது
நிறைவான இசையின் தாளத்தோடு.

-oOo-

4.

பூட்டிய வீட்டுக்குள்
செத்துக்கிடந்தது
தெரு நாயொன்று
எப்படி உள்ள போச்சு என
எல்லாரும் கேட்டுக்கொண்டிருக்க
என் நினைவை அழுத்துகிறது
தனிமையைக் கண்டுவிட்ட
தெரு நாயின் சாபம்.

-oOo-

5.

நேற்றிரவு இறந்துவிட்டதாகச் சொன்னார்கள்
உறுதியாகத் தெரியவில்லை என்றார்கள்
அவன் செல்·போன் எண் என்னிடம் இருக்கிறது
ஆனாலும் அவனை அழைக்கவில்லை.

-oOo-

Share

Comments Closed