மீன்காரத் தெரு – புத்தகப் பார்வை

Thanks:AnyIndian.comமீன் விற்று வறுமையில் வாழும் இஸ்லாமியர்களின் வாழ்க்கைக்குள் நிகழும் போராட்டங்களை, ஜாதிய அடக்குமுறைகளை, வறுமையை முன்வைத்து பெண்கள் போகப்பொருளாக்கப்படும் விஷயத்தை மீன்காரத்தெருவின் மணத்தோடும் பாசாங்கில்லா மக்களின் வாழ்க்கை முறையோடும் முன்வைக்கிறது மீன்காரத் தெரு நாவல்.

வங்கப் பிரிவினை காலகட்டத்தில் நடக்கிறது நாவலின் களம். இது காலத்தைச் சொல்ல மட்டுமே பயன்படுகிறது. மற்றபடி வங்கப் பிரிவினை கதையில் நேரடிப் பங்கைச் செலுத்தவில்லை. கதை சொல்லல் எந்தவிதக் கட்டுக்கும் உட்படாமல் நினைத்தவாறு அங்கும் இங்கும் முன்னுக்கும் பின்னுக்கும் பாய்ந்து, தொடர்ச்சியின்மையின் மூலம் ஏற்படும் எதிர்பார்ப்பையும் கூட எடுத்துக்கொண்டு, முன் செல்கிறது. கதை மாந்தர்கள் அப்படியே ரத்தமும் சதையுமாக எந்த வித ஆபரணங்களுமின்றி யதார்த்தமாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள். நாவலில் யாரும் நாயகனும் இல்லை, நாயகியும் இல்லை. எந்த நேரத்தில் கதை யாரைப் பிடித்துக்கொண்டு செல்கிறது என்று வரையறுக்கமுடியாதபடி மீன்காரத்தெருவின் ஒவ்வொரு நபரையும் தொற்றிக்கொண்டு செல்கிறது.

வறுமையும் தொழிலும் அதன் ஜாதியும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய, கொஞ்சம் கூடப் பிரிக்கமுடியாத ஒன்று என்பது நாவல் நெடுகிலும் வலியுறுத்தப்படுகிறது. பங்களாத் தெருவில் வாழும் மனிதர்கள் மேட்டிமை வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வாழ்வு தங்கத்தாலும் பன்னீராலும் அத்தராலும் மணக்கும் திரவியங்களாலும் தினம் ஒரு பெண்களாலும் ஆனது. மீன்காரத் தெருவில் இருக்கும் பெண்கள் வயதுக்கு வரும்போது பங்களாத் தெருவில் இருக்கும் பெரியவர் வீட்டுக்கு வேலைக்கு வருகிறார்கள். அந்தப் பெண்களுக்கு சில நாள்களிலெல்லாம் பெரியவர் செலவிலேயே, பணமும் பொருளும் கொடுக்கப்பட்டு, திருமணமும் செய்துவைக்கப்படுகிறது. இடைப்பட்ட காலங்களில் என்ன நடக்கிறது என்பது குறித்து உலவும் புனைவுகள் பங்களாத் தெருவின் வாழ்க்கையை நமக்கு விவரித்துவிடுகிறது. பெரியவரின் அதே வாழ்க்கை முறையை அவரது மகன் சலீமும் தேர்ந்தெடுத்துக்கொள்கிறான். வைப்ப்பாட்டியாக இருந்தால் கூட அவன் மேற்கொள்ளும் காதல் லீலைகள், வைப்பாட்டியாக அனுப்பப்பட்டிருக்கும் பெண்களின் மனதில் பெரிய சந்தோஷத்தையும் நிம்மதியையும் தந்துவிடுகின்றன. சலீமின் தோற்றத்திலும் அவன் பேசும் மலையாளத்திலும் வைப்பாட்டியாக இருக்கக்கூட பெண்கள் பெரும் ஆர்வம் கொள்ளுகிறார்கள்.

ஆமினாவை முக்கியமான கதாபாத்திரமாகக் கொள்ளலாம். அவளும் சலீமின் மேல் அளவு கடந்த அன்பு வைத்து நெக்குருகுகிறாள். அப்படி அவனுடன் ஏற்படும் வாழ்வு நிலையில்லாதது என்று தெரிந்தும் அவளால் அவன் மேல் ஏற்படும் அளவு கடந்த ஈர்ப்பைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. சிறுவயதில் உடன் படிக்கும்போதிருந்தே அவளுக்கு அவன் மீது அளவில்லா ஈர்ப்பு. வாழ்க்கை தரும் ஏகப்பட்ட நெருக்கடிகளையும் மீறி அவள் அவன் நினைவிலிருந்து மாறுவதேயில்லை. பின்னர் ஒரு நேரத்தில் அவனும் அப்படிச் சொல்கிறான். அப்படிப்பட்ட ஒரு வேளையில் அம்பன் குதிரைவண்டி மீன்காரத்தெருவிற்கு வரும்போது முகமலர்ச்சியுடன் பெரியவர் வீட்டிற்குச் செல்கிறாள். இத்தனைக்கும் ஆமினா எட்டாவது வரையில் படித்தவள். மோக வேளையில் சலீம் சொன்ன வார்த்தைகள், பாங்கு ஓசை கேட்கும் நேரம் தவிர மற்ற நேரங்களிலெல்லாம் தழுவிக் கிடந்த தீவிரமான காம நிமிடங்கள் எல்லாமே பொய் என்பதை உணர்கிறாள், அவளுக்கும் பெரியவர் திருமணம் நிச்சயம் செய்யும்போது. மீன்காரத் தெருவில் வயசுக்கு வரும் பெண்களை தேடிப்பிடித்து பங்களாவிற்குக் கூட்டிச் செல்லும் ரமீஜா, பங்களாவில் இதெல்லாம் சகஜம் என்று ஆமினாவுக்கு அறிவுறுத்துகிறாள். அதுமட்டுமின்றி சலீமிற்கு ஏற்கனவே திருமணம் நடந்து அவனுக்கென ஒரு குடும்பம் இருப்பதையும் கூறுகிறாள். ஆமினாவால் இதையெல்லாம் அத்தனை எளிதில் ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை.

நைனா ஆமினாவின் அண்ணன். சமூகத்தின் ஏற்ற இறக்கங்களில் கடும் கோபம் உள்ளவன். எல்லாரும் இஸ்லாமியர்கள் என்னும்போது ஏன் இத்தனை வேறுபாடு என்பதில் பங்களாத் தெருவின் மீதில் அதீத வெறுப்பில் இருப்பவன். எப்போதும் குடியும் கேள்வியுமாகத் திரியும் நைனாவிற்கு வேற்று மதப் பெண் வள்ளியோடு தொடுப்பு உண்டு. ராவுத்தர் நல்ல நிலையிலிருந்து வறுமையில் விழுந்து நாதியற்று மீன்காரத் தெருவிற்கு வாழ வரும்போது அங்கு சென்று வம்பு செய்யும் நைனா அவரிடம் அவர் பெண் ஆயிஷாவைத் தனக்குத் திருமணம் செய்துவைக்கவும் கேட்கிறான். அதற்கு அவன் சொல்லும் காரணம், மீன்காரத் தெரு பெண்கள் பங்களாவுக்கு போனால், அங்கிருந்து ஒருத்தி ஏன் மீன்காரத் தெருவுக்கு வாக்கப்பட்டு வரக்கூடாது என்பது. மிக எளிமையான நேரடியான ஆனால் சமூகம் பதிலிறுக்கமுடியாத கேள்வி. நைனாவோடும் ஆமினாவோடும் சேர்த்து ஹிந்து மதத்தில் இருக்கும் ஜாதி வேறுபாடுகளும் காட்டப்படுகிறது. நாவிதன் துருத்தியின் மகன் சண்முகம் பெருமாள் கோவில் அர்ச்சருக்கு ‘சவரம்’ செய்யும்போது அவரது ஆண்குறியை அறுத்துவிட்டுத் தலைமறைவாகிறான். ஆமினாவுக்கு பாடம் சொல்லித் தரும் மருதமுத்து அய்யா, பள்ளியில் நிலவும் தீவிரமான ஜாதி வேறுபாட்டைக் கண்டித்து மாற்றல் வாங்கிக்கொண்டு போகிறார். ஒருதடவை ஆமினா பேருந்து நிலையத்தில் கலப்புத் திருமணம் செய்துகொண்ட, அவளுடன் படித்த, இரண்டு ஹிந்து மத நண்பர்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறாள்.

ஹனீபா ராவுத்தரின் சொத்தையெல்லாம் லெபைக்காரர்கள் வேண்டுமென்றே கேஸ் போட்டுப் பிடுங்கிக்கொண்டார்கள் என்கிற கோபம் ஹனீபா ராவுத்தருக்கு இருக்கிறது. அவரது மகள் ஆயிஷாவும் தாங்கள் லெபைக்காரர்களால் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்றே தீவிரமாக நம்புகிறாள். பங்களாத் தெரு சீக்கிரமே லெபைக்காரர்களின் தெருவாகப் போகிறது என்று நினைக்கிறார் அவருக்கு வீடு பார்த்துத் தரும் ஷேக்காத்தா.

நைனாவின் மனைவி மும்தாஜ் நைனாவின் முரட்டுத்தனம் தாங்காமல் அவனை விட்டுப் பிரிந்து சென்று வேறு கல்யாணம் செய்துகொள்கிறாள். இத்தனைக்கும் அவள் நைனாவிற்கும் வள்ளிக்கும் பிறக்க இருந்த குழந்தையை ஏற்றுக்கொள்ள சம்மத்தித்தவள். நைனா கருகமணி கட்டி வள்ளியை கட்டிக்கொள்கிறான். வள்ளி இறக்கும்போது அவளை நைனாவின் மனைவியாக ஏற்க மறுக்கிறார் முத்தவல்லி. ஆனால் மீன்காரத் தெருவே சேர்ந்து நின்று அவளை அடக்கம் செய்து, அவளை வள்ளி பீவியாக்கி, ‘அவளுக்கு ஜியாரத் செய்யக்கூட’ தயாராக இருக்கும் அளவிற்குப் போகிறது.

மீன்காரத் தெரு பெண்கள் எப்படி பங்களாவிற்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பதை மையமாகக் கொண்டு இயங்கும் கதை, அதற்கு முக்கியக் காரணமாக ஜாதியையும் வறுமையையும் முன்வைக்கிறது. ஜாதியும் வறுமையும் ஒன்றோடு ஒன்று இயைந்தது என்பதை சேக்காத்தா ஒரு கட்டத்தில் சொல்கிறாள். அதே வேளையில் எப்படி லெபைக்காரர்கள் ராவுத்தர்களின் இடத்தை எடுத்துக்கொள்கிறார்கள் என்பதையும் சொல்கிறாள். ஆனால் மீன்காரத் தெரு காரர்களுக்கு அந்த விடிவே இல்லை என்கிற ஆதங்கமும் ஏக்கமும் அவள் பேச்சில் தெறிக்கிறது. அவளுக்கு மட்டுமல்ல, நைனா, காசிம், ஆமினா என எல்லாருக்கும் அதே எண்ணமும் கையலாகாத் தனமும் இருக்கின்றன. “கலிமா சொல்லி குரான் வழி நடக்குற எல்லாமே முஸல்மானுங்கதே. அவுங்களுக்குள்ள ஜாதியோ பிரிவோ கிடையாதுண்டு சொல்லியிருந்தாலும் ஏதோ ரூபத்துல ஜாதி இருக்கத்தாஞ் செய்யிது” என்கிறாள் சேக்காத்தா.

மீன்காரத் தெரு பெண்கள் இரவில் கணவன்மார்கள் தூங்கியபின்பு பேசும் பேச்சுகள் மிகுந்த சுவாரஸ்யம் உள்ளவை. அசிங்கமான, விரசமான பேச்சாக அவை வெளிப்பட்டாலும், அதனூடே அந்த மக்களின் வெகுளித்தனத்தை அவை முன்வைக்கின்றன. ஆமினாவும் சலீமும் கொள்ளும் காதல் விளையாட்டுக்களின் விவரணையில் ஆமினா எவ்வளவு தூரம் சலீமை விரும்புகிறாள் என்று நமக்கு உணர்த்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இத்தனைக்கும் இந்த வாழ்வு நிரந்தரமானதல்ல என்று தெரிந்தும் அவள் கொள்ளும் அன்பு அவள் மேல் ஒரு பச்சாதபத்தைக் கொண்டு வந்துவிடுகிறது. அதேபோல் காசிம் தன் மனைவியின் அருமை தெரிந்தவனாகச் சித்தரிக்கப்படுவது, நமக்கு பெரிய ஆசுவாசத்தைக் கொடுக்கிறது. ஜாதி, ஏமாற்றங்கள், சாவு எனச் செல்லும் கதையில் இப்படி ஒரு தெளிந்த நீரோடை போன்ற அன்பைப் பார்க்கும்போது சில்லிப்பு ஏற்படுகிறது.

இஸ்லாமியர்களின் வட்டார வழக்கு அத்தமிழின் இனிமையை நமக்குச் சொல்கிறது. வட்டார வழக்கில் அதிகமான இஸ்லாமிய வார்த்தைகள் சேர்த்துக் குழப்பாமல், அதே சமயம் யதார்த்த வட்டார வழக்கும் சிதைவுபடாமல் எழுதியிருக்கிறார் கீரனூர் ஜாகிர் ராஜா.

நாவலை பெரிய நாவலாக 400 பக்கங்களுக்கு மேல் எழுத முடியுமென்றாலும், தமிழ் நாவலின் தடித்த கட்டமைப்பை உடைத்து, சொல்லாமல் விடப்பட்டவற்றின் மூலம் வாசகனின் தவிப்பை அதிகப்படுத்துவதே குறுகிய பக்கங்களில் (104 பக்கங்கள்) நாவல் வந்ததன் காரணம் என்கிறார் ஆசிரியர் கீரனூர் ஜாகிர் ராஜா. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். எந்த வித தொடக்கம் முடிவு என்பன போன்ற சடங்குகளையும் தகர்த்தெறியும் இந்நாவல் 400 பக்கங்களில் இன்னும் விஸ்தாரமாகவே எழுதப்பட்டிருக்கலாம் என்ற நினைப்பைத் தவிர்க்கமுடியவில்லை.

ஜாதிகளை கடக்க மீன்காரத் தெருவையும் கடந்தே தீரவேண்டும்.

மதங்களின் மீதான விமர்சனமாக, அம்மதங்களின் மீது பற்றுள்ளவர்கள், அம்மதங்களுக்குள்ளிருந்தே செய்யும் தீவிர எதிர்ப்புகள் புறக்கணிக்கப்பட முடியாதவை. மதத்திலிருந்து வெளியேறி அதன் மீது விமர்சனம் வைப்பதற்கும் உள்ளிருந்துகொண்டு, மதத்தை ஏற்றுக்கொண்டு, அதில் நிலவும் பாகுபாடுகளின் மீது விமர்சனம் வைப்பதற்கும் உள்ள வித்தியாசம் மிக முக்கியமானது. முதலாவதை எளிதில் மதத்தின் நம்பிக்கையாளர்கள் புறக்கணிப்பதைப் போல இரண்டாவதை புறக்கணிக்கமுடியாது. மேலும் மதத்துக்குள்ளிருந்தே வரும் எதிர்ப்புகளே மதத்தை காலத்திற்கு ஏற்றார்போல் மாற்றும் தன்மையுடையதும் மேலும் முன்னகரச் செய்வதும் ஆகும். இதற்கு வழிவிடாத எம்மதமும் அதன் நம்பிக்கையாளர்களை தன் கொடிய கரத்தோடு துரத்துவதாகவே என்னால் கற்பனை செய்யமுடியும். மதத்தை மீறியது தனிமனித சுதந்திரமும் தனிமனித மரியாதையும். இதை நிலைநிறுத்த மறுக்கும் எம்மதமும் கேள்விக்குட்பட்டாக வேண்டிய ஒன்றே. அந்த வகையில் இந்நாவல் மிக முக்கியமான பிரதியாக காலப்பிரதியாக மாறுகிறது.

மீன்காரத் தெரு, கீரனூர் ஜாகிர் ராஜா, விலை: 60.00 ரூபாய், 144 பக்கங்கள், மருதா பதிப்பகம்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: AnyIndian.com

Share

Comments Closed