அவர் எழுதிக்கொடுத்த பன்னிரண்டு பக்கங்களுக்கு மேலான சுதந்திர தின எழுச்சி உரையை மனப்பாடம் செய்தேன். மனப்பாடம் செய்யும் சக்தி எனக்கு அந்தக் காலத்தில் அதிகமாக இருந்தது. அதனால் எளிதில் மனப்பாடம் செய்துவிட்டேன். குரல் வேறு கணீரென்று இருக்கும். அதனால் எல்லாரும் என்னை உசுப்பேத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
நான் மனப்பாடம் செய்த பகுதிகளை வீட்டில் சொல்லிப் பார்த்துக்கொண்டிருந்தேன். வீர உரை வேறு. நானே கப்பலோட்டிய தமிழனாக மாறிவிட்டதுபோன்ற வேகத்தில், ‘சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்’ என்று ஒப்பித்துக்கொண்டிருந்தேன். பக்கத்து அறையில் இருந்து பாஸ்கர் அண்ணா வந்தார். முதல் கேள்வி, ‘ஏண்டா, தங்கராமு எழுதிக்கொடுத்தானா?’ என்றார். அவர் எப்படி கண்டுபிடித்தார் என நான் யோசித்துக்கொண்டிருந்தபோதே, ‘இந்த ஒரு வரியை வெச்சே பத்துவருஷம் ஓட்டுறானப்பா’ என்றார். அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்த நாராயணன் என்கிற அவரது நண்பனைக் கூப்பிட்டார். ‘நாராயணா, இவன் சொல்றதக் கேளு’ என்று சொல்லி, என்னைப் பார்த்து, ‘சொல்லுடா!’ என்றார். நான், ‘சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்.’ அடுத்த நொடி நாராயணன் சத்தமான சிரிப்புடன், ‘தங்கராமு எழுதிக்கொடுத்தானா?’ என்றார். என் ஒட்டுமொத்த உற்சாகமும் வடிந்துவிட்டது. இந்த சுதந்திரம் சும்மாவே கிடைத்துத் தொலைந்திருக்கலாம் என்றுதான் தோன்றியது. மடமடவென ஒப்பிக்கும்போது, அந்த வரி வரும்போது ஒரு துணுக்குறலுடன் மெல்லத்தான் சொல்லுவேன்.
ஆகஸ்ட் 15. வகுப்பில் எல்லார் முன்னிலும் தங்கராமு ஐயா என்னைப் பேசச் சொன்னார். சும்மா வீரவசனம் பொங்கி ஓடியது. ‘சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்’ என்ற வரி வரும்போது லேசாகச் சிரித்துவிட்டு, முழுதும் பேசி முடித்தேன். தங்கராமு ஐயா, ‘என்ன எடையில பல்லக் காமிக்கிறவன்? ஒழுங்கா பேசமுடியாதா? சுதந்திரம்னா நக்கலா ஒனக்கு?’ என்றார்.
நான் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த ஆர்ட்டு (ஓவிய ஆசிரியர்) என்னைக் கூப்பிட்டு, ‘நல்லா பேசறியேப்பா… இதுக்கு முன்னாடி நிறையப் பேசிரிக்கியோ?’ என்று கேட்டார். ‘இல்லை, இதுதான் முதல்ல பேசப்போறேன்’ என்றவுடன், கையில் இருந்த பத்து பைசாவைக் கொடுத்து (1987இல்) ‘வெச்சிக்கோ’ என்றார். உடனடியாக ஓடிப்போய் குச்சி ஐஸ் வாங்கித் தின்றேன். என்னுடன் படித்த நரசிம்மன் என்னையே பொறாமையாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.
எல்லாரும் வரிசையாக கலையரங்கத்திற்குச் சென்றோம். பேசப்போகிறவர்களெல்லாம் மேடைக்கு அருகில் அமர வைக்கப்பட்டார்கள். நான் ஓரமாக அமர்ந்துகொண்டேன். லேசாக பயம் வரத் தொடங்கியிருந்தது. ஏன் பயப்படுகிறேன் எனவும் கேட்டுக்கொண்டேன். என் பெயரைச் சொல்லி அழைத்தார்கள். மேடை ஏறினேன். கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமப் பள்ளியின் ஒட்டுமொத்த மாணவர் கூட்டமும் என் பார்வையில் பட்டது. எங்கு திரும்பினாலும் வெள்ளை வேட்டியும் நீல அரை டிரவுசரும் பச்சை தாவணியும் கண்ணில் பட, என் நாக்கு எழவே இல்லை. யாராவது ஓடிவந்து ஒரு டம்ளர் தண்ணி தரமாட்டாங்களா என்பது போலப் பார்த்தேன். கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, ஒப்பிக்கத் தொடங்கினேன்.
வகுப்பில், வீட்டில் பேசிய வீர வசனம், உச்ச ஸ்தாதி எதையும் காணோம். கடகடவென ஒப்பித்தேன். ‘சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்’ என்கிற வரி வந்தது. அடுத்த வரி வரவில்லை. அந்த வரியிலேயே நின்றுகொண்டிருந்தேன். பால்ராஜ் ஐயா, ‘சரிப்பா, சும்மா கிடைக்கலை. அதுக்கு இப்ப என்ன செய்யச் சொல்ற? அதச் சொல்லு மொதல்ல’ என்றார். அவ்வளவுதான். அதைச் சொல்வதையும் நிறுத்திவிட்டேன். கூட்டத்தில் கலகலவென பேச ஆரம்பித்துவிட்டார்கள். பின்னாலிருந்து யாரோ, ‘சரி போ போ’ என்று சொன்னார்கள். கீழிறங்கிவிட்டேன். ஆர்ட்டு தூரத்தில் இருந்து முறைத்தார். நரசிம்மன், ‘இதெல்லாம் தேவையா ஒனக்கு’ என்றான்.
இன்று யோசித்துப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. [தங்கராமு ஐயா அந்த வருடமே, நான் அவருக்கு பேப்பர் திருத்த கொடுத்த பேனாவைத் திரும்பத் தராமலேயே, மேலே போய்ச்சேர்ந்தார். நரசிம்மன் எங்கிருக்கிறான் எனத் தெரியவில்லை. பால்ராஜ் ஐயா ரிட்டயர் ஆகி பல மாணவர்களுக்கு நன்மை செய்தார்.]
சில தினங்களுக்கு முன்பு சடகோபனின் ‘சிறை அனுபவம்’ என்கிற நூலைப் படித்துக்கொண்டிருந்தேன். (அகல் வெளியீடு.) அப்போது மீண்டும் இந்த சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம் நினைவுக்கு வந்தது. சத்யாகிரஹியான சடகோபன் அவரது அஹிம்சைப் போராட்டத்தின் ஒருபகுதியாகச் சிறைக்குச் சென்றபோது அங்கு அவர் சந்தித்த அனுபவங்களை தொகுத்திருக்கிறார். எவ்வளவு கஷ்டப்பட்டு சத்யாகிரஹிகள் நமக்குச் சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார்கள் என்று யோசித்தபோது, ஒரு நெகிழ்வான மனநிலையில் விழுந்தேன்.
சிறையில் அவருக்குத் தரப்பட்ட உணவின் தரம், வேலையின் கடுமை, பட்ட கஷ்டங்கள், சத்யாகிரஹிகள் அல்லாத பிற கைதிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் எல்லாவற்றையும் தெளிவாக விளக்குகிறது இந்த சிறிய நூல். ஆங்கிலேயர் காலத்தில் இருந்த சிறையை எமலோகத்தில் இருக்கும் நரகத்துடன் ஒப்பிடுகிறார் சடகோபன். இன்று சிறை எந்த நிலையில் இருக்கும்? நிச்சயம் மேம்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. சுதந்திர இந்தியாவின் நிலைமைகள் பல இடங்களில் கேள்வி கேட்கப்பட்டாலும், சுதந்திரம் என்கிற ஒன்றை அனுபவிக்கும்போது அதன் மேன்மை புரிகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.இன்றைய நிலையில் யாரையும் எதையும் கேள்வி கேட்க முடிகிறது. பதில் கிடைக்கிறது, கிடைக்கவில்லை, ஆனால் கேள்வி கேட்கும் சுதந்திரம் இருக்கிறது. யாரையும் விமர்சனம் செய்யும் சுதந்திரம் இருக்கிறது. இந்த சுதந்திரத்தை பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன வலைப்பூக்கள். ஒருவகையில் வலைப்பூக்களின் வழியே சுதந்திர தின வாழ்த்துச் சொல்வது பொருந்திப் போகிறது.
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்
.