மூன்று கவிதைகள்

1.இன்றைய பொழுது

அணிலை வரைய தேடியெடுத்த
வெள்ளைக் காகிதங்களில்
மிச்சமிருக்கின்றன சில கோடுகள் மட்டும்

என் விருப்பப் பாட்டு
அறையெங்கும்
வெறும் சொல்லாக மிஞ்சிக் கிடக்கிறது

என் கையிலிருந்து விடுதலை பெற்றுச் செல்கிறது
நான் பிடித்து வைத்திருந்த ஒளி
அதற்கான உலகுக்குள்

கடிகாரத்தின் நொடிச் சபதம்
பெரும் ஒலியாகி என் காதுள்
பிரளயத்தை எறிகிறது

ஒரு நொடிக்கும் அடுத்த நொடிக்கும்
இடையேயான சிறுபொழுது
விஸ்வரூபமெடுக்கிறதென்றால் நீங்கள் நம்புவீர்களா?

எரியும் மெழுகுவர்த்தியில் லயித்திருக்கும்
என் கண்களில்
ஆழப் பரவுகிறது அதன் வெளிச்சம்

காற்றிற்கேற்ப அசையும் சுடரின் நிழலில்
தெரிந்தும் மறைந்தும் சுவர்ப்பல்லி

(இடைச்செருகல்: இரவுகளில் உறங்குவன் இவற்றைக் காண்பதில்லை
                              இவற்றைக் காணவென்றே
                              விழித்திருப்பவன் அடையப்போவதுமில்லை
                              அதனதன் போக்கில் அதது)

என்றேனும் ஒரு நாளில்
அணில் கண்டடையும் அதற்கான தாளை
என் கைவந்து சேரும் என் ஒளி
சொற்கூட்டங்கள் ஒன்று சேர உருவெடுக்கும் இசை
இன்று ஏன் இப்படி ஆகிவிட்டது என்பதல்ல
நான் சொல்ல வருவது,
‘சில சமயம்
இப்படியும் ஆகலாம்.’

2.நிமிடங்களிலிருந்து விடுதலை

எனக்கு முன்னே எழுந்துவிடுகிறது என் கடிகாரம்

கனவுகளில்கூட அதன் வீரிடல்
அதன் முட்களை ஏன் ஈட்டியாகக் கண்டேன்?
அதன் பால்கள்
சதா உண்டாக்கிக்கொண்டே இருக்கின்றன
எனக்கான நிமித்தங்களை
கழுத்தில் கயிற்றைக் கட்டி
தூக்கமுடியாத பாரத்தில்
கடிகாரத்தையும் கட்டிவிட்டவனைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
உங்களைப் போலவே
மூன்று முட்களையும் சேர்த்துக் கட்டிவிட்டு
நிறுத்தவேண்டும் உலகின் கடிகாரத்தை.

3.Stamp கவிதை

நான் சொன்னது சாதாரணமாகத்தான்
அவனாய் ஒரு விளக்கம் சொல்லி
அதைத்தான் நான் சொன்னதாகச் சொன்னான்
so what என்றேன்.
நான் சொல்லாதவொன்றைச் சொல்லி
அதுதான் என் கருத்தாக இருக்கமுடியும் என்றான்
நான் ஏதும் சொல்லாதபோதும் கூட.
இருக்கலாம் என்றவுடன்
அவனெழுப்பிய
உத்தேவகக் குரலில்
அமுங்கிப் போயிற்று
என் அடுத்த வாக்கியம், ‘இல்லாமலும் இருக்கலாம்.’
எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன்,
Who bothers him.
இன்னொரு சந்தர்ப்பத்தில்
என்னால் வேறெப்படி யோசிக்கமுடியுமென்றான்
அதன் தொடர்ச்சியாக
என் சிந்தனையை எனக்கு விளக்கினான்
இப்படியாக
எனக்கு அவனை நன்கு விளங்கியது;
என்னைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

Share

Comments Closed