பெரியார் திரைப்படம் – ஓர் அபத்த செய்தித் தொகுப்பு

95 ஆண்டுகள் வாழ்ந்த ஒரு மனிதரின், தமிழகம் பல்வேறு வகைகளில் இன்னும் நினைவு வைத்திருக்கும், இன்னும் விவாதித்துக்கொண்டிருக்கும், இன்னும் விமர்சனம் செய்துகொண்டிருக்கும் ஒரு மனிதரின் வாழ்க்கையைப் படமாக எடுப்பதில் உள்ள சிக்கல் புரிந்துகொள்ளக்கூடியதே. இந்த சலுகையையும் மீறி மிக மோசமாக எடுக்கப்பட்டிருக்கிறது பெரியார் திரைப்படம். ஞானசேகரனுக்கு ஒரு படத்தின் அடைப்படைக்கூறுகள் கூடத் தெரியாதோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்திவிடுகிறது படத்தின் வடிவம். துணுக்குத் தோரணங்களால் அமையும் ஒரு சராசரி தமிழ் நகைச்சுவைப் படம் போல, துணுக்குக் காட்சிகளில் ரொப்பப்பட்ட படமாக பெரியார் திரைப்படம் அமைந்துவிட்டது மிகப்பெரிய துரதிர்ஷ்டம்.

Thanks: movies.sulekha.com

படத்தில் எந்தவொரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் தொடர்பே இல்லை. வானொலி நாடகங்கள் போல எல்லாவற்றையும் வசனத்தில் சொல்கிறார்கள். அதோ சுப்ரமணியே வந்துட்டாரே, தங்கச்சி செத்துப்போனாலும் தங்கச்சி பொண்ணுக்கு நல்லா கல்யாணம் பண்ணனும்னு, ராமாம்ருதம்மா வாங்க என்று கதாபாத்திரங்கள் வசனங்கள் பேசி படத்தை நாடகமாக்கியிருக்கிறார்கள். சத்யராஜ் ஜோதிர்மயி தவிர மற்ற எல்லா நடிகர்களும் படம் நெடுக எதையோ யோசித்துக்கொண்டே நடிக்கிறார்கள். அதிலும் அண்ணாவும் வீரமணியும் மணியம்மையும் சதா எதையோ யோசித்துக்கொண்டே இருக்கிறார்கள். மணியம்மையின் கதாபாத்திரம் தாய் போன்ற கதாபாத்திரம் என்று சொல்லப்பட்டிருக்கும் போல. எப்போதும் கனிவை கண்வழியே கொண்டு வந்து கொட்டிக் கொட்டி அன்பையும் நெகிழ்ச்சியையும் ஒழுக விடுகிறேன் என்று பயமுறுத்திவிடுகிறார். ஜோதிர்மயியின் திறமைக்கு காட்சிகள் மிகக்குறைவு.

தேவையற்ற விஷயங்கள் அளவுக்கு அதிகமாக வலியுறுத்தப்படுகின்றன. பெரியாரை முன்னிறுத்த வேண்டிய விஷயங்கள் பல இருக்க, அவர் குளிக்க விரும்பாத விஷயம் நான்கு முறை குறிப்பிடப்படுகிறது. பெரியார் பாட்டுப்பாடி ஆட்டம் ஆடுகிறார். கடவுள் உலகத்தைப் படைச்சான் பாடலுக்கே நான் அதிர்ந்துபோனபோது, ஜோ ஜோ சந்தா என்று ஜேசுதாஸ் பாட பெரியார் நடிகர் சிவாஜி கணக்கில் நடந்துபோகும்போது, ஞானசேகரன் பெரியாரைத் தாக்கப் படம் எடுத்தாரோ என்கிற சந்தேகம் வந்துவிடுகிறது. கருணாநிதி, அண்ணா, எம்.ஜி.ஆர். வருகிறார்கள் போகிறார்கள். அண்ணா ஏன் அவ்வளவு யோசித்து யோசித்துப் பேசுகிறார் எனத் தெரியவில்லை. கருணாநிதி அண்ணாவையே முறைத்துப் பார்ப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுவிட்டது எனக்கு. ஏனென்று தெரியவில்லை. அண்ணா, கருணாநிதியைக் காண்பித்துவிட்டு எம்.ஜி.ஆரைக் காண்பிக்காமல் விட்டால் அரசியல்வாதிகளுக்கு யார் பதில் சொல்வது. எம்.ஜி.ஆர் வரும் காமெடிக் காட்சியும் உண்டு. 95 லட்ச ரூபாய் கொடுத்ததற்காக, கடைசியில் கருணாநிதியுடன் படத்தை முடித்துவிட்டார்கள் போல.

எல்லாரும் தமிழ் பேசுகிறார்கள். காந்திக்குக் கூட தமிழ்ப்பற்று அதிகம். அவரும் தமிழ்தான் பேசுகிறார். அவர் தமிழ், ஹிந்தி, ஆங்கில எனக் கலந்து எல்லாமும் பேசுகிறார். நல்ல காமெடியாக இருக்கிறது. ஆங்கிலேயர்கள் தமிழ் பேசுகிறார்கள் ஒரு பேரல்லல் படமாக வந்திருக்கவேண்டிய முயற்சி என்கிற எண்ணம் இயக்குநருக்குச் சிறிதும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. திடீரென்று ரஷ்யப் பயணம். திடீரென்று பர்மா பயணம். அங்கு ஒரு நடிகர். அதுவும் யாருடைய கதாபாத்திரம். அம்பேத்கர். சும்மா பெரியார் வாழ்க்கையில் அவரும் உண்டு என்று சொல்வதற்கு ஒரு காட்சி. ஒரு கருத்து. இன்னொரு காட்சியில் பெரியார் செல்லும் வழியில் குயவர்கள், உழவர்கள், தாழ்த்தப்பட்ட சாதியினர். அனைவருக்கும் சேர்ந்து ஒரு கருத்து. ஒரே கருத்து. விவேக் சொல்வது போலத்தான் இருக்கிறது. பெரியாரைக் காணோம். ஸ்ர் ராகவேந்திரர் படத்தில் ரஜினி ஊர் ஊராகச் சென்று உபதேச மழையாகப் பொழிவார். இந்த விஷயத்தில் ஞானசேகரனுக்கும் எஸ்.பி.முத்துராமனுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை.

பிராமண எதிர்ப்பாகவே சொல்கிறேமே என்று இயக்குநர் நினைத்தாரோ என்னவோ. தீடீரென்று மழை, பிராமணப் பெண், பிரசவம், பெரியாரின் மனித நேயம், பிரமாணர் மனம் நெகிழ்ந்து பெரியாரைப் பாராட்டும் இடம். மீண்டும் ஒரு நாடகத்தன்மை கொண்ட காட்சி. இப்படி ஒட்டுமொத்த படத்தையும் ஐந்து ஐந்து நிமிடக் காட்சிகளாகப் பிரித்துவிடலாம்.

ராஜாஜியைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். படத்தின் நகைச்சுவை மற்றும் வில்லன் கேரக்டர் கலந்த ரோல் அவருக்கு. என்றைக்கும் இளமையாக இருக்கிறார். வயதாகிப் பெரியார் படுக்கையில் கிடக்கும்போது பார்க்க வருகிறார் ராஜாஜி. எப்படி? மான்போலத் தாவி வருகிறார். பார்த்துவிட்டுப் போகும்போது வயதாகிவிடுகிறது போல. மெல்ல, நிதானித்து, நொண்டி நொண்டி நடக்கிறார். இப்படி இவர் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல காமெடிக் காட்சிகள் பல உள்ளன. ரயிலில் சந்திக்கும் பெரியார் அங்கிருந்து சென்றவுடன், இது வரலாறு படைக்கும் நிகழ்ச்சியாக இருக்கும் என்கிறார். இதன் மீது ஏற்றப்படும் கவனம் அடுத்த ஒரு காட்சியில் ஒரு நிமிடம் மட்டுமே வருகிறது. அண்ணா மேடையில் இந்த சந்திப்பைப் பற்றிக் கேள்வி எழுப்புகிறார். அத்துடன் அதன் தொடர்ச்சி அறுந்துபோகிறது. இப்படியே எல்லாக் காட்சிகளும் அமைந்து இருக்கின்றன.

தேவதாசி ஒழிப்பு முறையும் வைக்கம் போராட்டமும் படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கும் முறை, அது மிக எளிமையான ஒன்று என்கிற தோற்றத்தையே ஏற்படுத்துகிறது. இப்படி ஒரு இயக்குநரால் குழந்தைத்தனமாக இயக்கமுடியுமா என வியக்கவைக்கின்றன இக்காட்சிகள். அத்தனை மோசமான இயக்கம்.

ஆரம்பக் காட்சிகள் சத்யராஜுடன் இணைவதில் சிரமங்கள் இருந்தாலும், போகப் போக நாம் சத்யராஜை சுத்தமாக மறந்துவிடுகிறோம். ஒவ்வொரு காலகட்டத்திலும் சத்யராஜ் காட்டியிருக்கும் குரல் வேறுபாடுகள், உடலசைவின் நுணுக்கங்கள் பாராட்டத்தக்கவை. விருது வெல்ல வாய்ப்பிருக்கிறது. படத்தின் ஒரே ஆசுவாசமும் அவர்தான்.

இசையும் கேமராவும், சரியாகச் சொல்வதானால், தண்டம். ரஜினி படத்திற்கும் விஜய் படத்திற்கும் இசை அமைப்பதுதான் எளிது என்று வித்யாசாகர் புரிந்துகொண்டிருப்பார். ஆனால், அவரைச் சொல்லியும் குற்றமில்லை. எல்லாக் காட்சிகளுமே ‘முக்கியமான காட்சிகள்’ போல படமாக்கப்பட்டிருப்பதால், எல்லாக் காட்சியிலும் வயலினும் கையுமாக இசையமைக்க உட்கார்ந்துவிட்டார் போல. கேமரா எவ்வித வித்தியாசங்களையும் காட்ட முயற்சிக்காமல் சும்மா அப்படியே இருக்கிறது. கிணற்றிலிருந்து ஜோதிர்மயியைத் தூக்கிக்கொண்டு வரும் காட்சி மட்டுமே கொஞ்சம் கவனிக்கும் விதமாக இருந்தது.

பெரியாரின் அனைத்து விஷயங்களையும், அனைத்து நண்பர்களையும் ஒரு படத்திற்குள் நுழைத்துவிட வேண்டும் என்று இயக்குநர் முயற்சிக்கும்போதே படம் அதள பாதாளத்துள் வீழ்ந்துவிடுகிறது. ஒரு நல்ல கலைப்படத்திற்குத் தேவையான பொறுமையும் யதார்த்தமும் இல்லை. வசனங்களைப் பேச வைப்பதில் இருக்கும் சிரத்தை, காட்சியமைப்பிலும் நடிப்பிலும் காட்டப்படவில்லை. படம் என்பது காட்சி ரீதியானது என்கிற எண்ணத்தையெல்லாம் கைவிட்டுவிட்டு பேசிப் பேசியே கொல்கிறார்கள். எல்லாவற்றையும் வசனம் மூலமே சொல்கிறார்கள். ஒரு வரியில் சொல்லி, மற்றவற்றைக் காட்சியில் காண்பிக்கவேண்டிவற்றை, சுலபமாக வாயால் சொல்ல வைத்து விடுகிறார்கள். இது படத்தை மிகச் சாதாரணமாக்கிவிடுகிறது.

பெரியார் படத்தில் எதைச் சொல்லவேண்டும் என்பதை முதலிலேயே தீர்மானித்து, சிறப்பான திரைக்கதை மூலம் ஒரு நல்ல படத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் இயக்குநருக்கு கவனம் எல்லாம் பெரியாரின் விசுவாசிகளைத் திருப்திபடுத்துவதிலேயே இருப்பது புரிகிறது. இதுவே படத்தின் தோல்விக்கு முக்கியக் காரணம். நிஜமான பெரியார் படத்தை யாராவது இனிமேல் எடுத்தால்தான் உண்டு.

Share

Comments Closed