பிரதிமைகள் – சிறுகதை

சிறிய திறப்பொன்றில் விழுவதாகவே தோன்றியது. ஆனால் அத்திறப்பு நீண்டு பெரும்பள்ளமாகி கீழே வெகு கீழே செல்ல நான் அலறத்தொடங்கினேன். கண் விழித்துப்பார்த்தபோது அறையெங்கும் பரவியிருந்த வெளிர் நீலநிறப் படர்வில் என் மகன் எவ்விதக் குழப்பமும் இன்றி இரண்டு கைகளையும் தலைக்குக் கொடுத்து ஒருக்களித்துப் படுத்திருந்தான். மனதை முட்டிக்கொண்டு வரும் பேரழுகை கூட அவனைப் பார்த்துக்கொண்டிருந்தால் வடிந்துவிடும் என்று நினைத்துக்கொண்ட காலங்கள் இப்போது ஏன் திரும்ப வருவதில்லை எனத் தெரியவில்லை. இன்னொரு மூலையில் மனைவி படுத்துக்கொண்டிருந்தாள். தூக்கத்தில் அவளது உதடுகள் லேசாகப் பிரிந்து பல் வெளியில் தெரிந்துகொண்டிருந்தது. எல்லா முகத்திற்குள்ளும் விகாரம் மறைந்துகொண்டிருக்கிறது. மூத்திரம் முட்ட, சத்தமின்றி எழுந்து சென்று மூத்திரம் கழித்துவிட்டு வந்தேன். பெரும்பள்ளத்தில் விழுந்த உணர்வு இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை. என்னை எப்போதும் இம்சிக்கும் நிழல் என்னைச் சுற்றி இருக்கிறதா என்று பார்த்தேன். வெளிர் நீலப் படர்வில் தொலைந்து போயிருந்த நிழல் கொஞ்சம் ஆசுவாசம் தந்தது. குளிர்ந்த நீரைக் கொஞ்சம் பருக அடி வயிற்றில் பரவிருந்த திகிலும் வெம்மையும் மேலும் தணிந்தது. படுக்கையில் கிடந்தபோது என்னைச் சுற்றிச் சலனங்கள் பேயாட்டம் போடுவதாக எழுந்த கற்பனையைப் புறந்தள்ளத் தள்ள அது மீண்டும் என்னைச் சுழன்று முடிவில் என் மேலேயே படர்ந்தது. இப்படி இன்று நேற்றில்லை, பல காலமாக நடந்துகொண்டே இருக்கிறது. இரவில் பெரும்பள்ளத்தில் வீழ்வதும், திடுக்கிட்டு எழுவதும் பின்னர் சலனங்கள் குதியாட்டம் போட்டு என்னைச் சூழ்வதும் என் மீது படர்வதும் எனக்கு அலுப்புதரும் விஷயங்களாகிவிட்டிருந்தன. ஒரு கட்டத்தில் அவ்வேதனைப்போதைக்கு அடிமையாகிவிட்டிருந்தேன். முதலில் நிழல் என்கிற பிரமையின் மீது எனக்கிருந்த பேரச்சம் பற்றியும் சொல்லவேண்டும். எப்போதும் என்னைத் தொடரும் நிழலில் நான் நிம்மதி இழந்துவிட்டிருந்தேன். இருளில் கூட என்னைத் தொடரும் நிழல் என்பதாக நான் செய்துகொண்ட கற்பனைகளிலிருந்து கொஞ்சம் வெளிவந்தபோது மீண்டும் திறந்துகொண்டது பள்ளம். நினைவுகளில் அழற்சியில் கண்ணுறங்கியபோது அப்பள்ளம் என்னை உள்வாங்கிக்கொண்டது.

இந்த முறை திடுக்கிட்டு எழவில்லை. மீண்டும் மீண்டும் பார்த்தேன், நிச்சயமாகத் தெரிந்தது நான் எழவில்லை என்று. ஆனால் நடந்துகொண்டிருப்பது கனவு என்றும் என்னால் நம்ப இயலவில்லை. ஏதோ ஒரு நிலையில் அகப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் தெளிவாகத் தெரிய, என் வீழிச்சியை, பெரும்பள்ளத்தை நோக்கிய என பயணத்தை, பல நாள் எதிர்நோக்கிய ஒரு நிகழ்வாக அனுமதித்தேன். அப்பள்ளம் அறையை ஒத்த ஓரிடத்தில் சட்டனெ முடிந்துகொண்டது. அடர்ந்த இருளும் நான் வந்த பாதை வழி கசியும் சிறிய வெளிர் நீலக்கதிரும் அன்றி அங்கு வேறொன்றுமில்லை. கண் அவ்விருளுக்குப் பழக்கப்பட சில நொடிகள் எடுத்தது. தட்டுத் தடுமாறி எழுந்து நின்றபோது ஒரு பொம்மையை ஒத்த உருவத்தின் கையின் மீது முட்டிக்க்கொள்ள, பின்னகர்ந்தேன். பெரும்பீதி ஒன்று என்னுள் எழுந்தடங்க யார் என்று கூவினேன். கசியும் விளக்கொளி மெல்ல பாதாளத்துள் பரவ – நான் அதைப் பாதாளமென்றே நம்பினேன் – என் கண்ணில் அலையும் திரையின் பின்னே சலனமற்றிருக்கும் ஒரு பொம்மையைக் கண்டேன். அதன் கையில்தான் மோதியிருக்கிறேன். அறையில் வெளிச்சம் கூடிக்கொண்டே வந்தது. கசியும் கதிரின் திறனைத் தாண்டியும் வெளிச்சம் பரவுவது எனக்குள் ஒருவித அச்சத்தைத் தோற்றுவித்திருந்தாலும் என்னால் விடுபடமுடியாத வசீகரமொன்றுள் அமிழ்வதைப் போல அக்கணமும் ஆகிக்கொண்டிருந்தது.

பொம்மையின் முகத்தை உற்று நோக்கினேன். அது பதிலுக்கு என்னை உற்று நோக்கியது போலிருந்தது. சில விநாடிகள் அப்படியே கழிய, சிறிய திடுக்கிடலில் கண்ணிமை மூடித் திறந்தேன். என் உணர்வுகள் அந்தப் பொம்மையினுள் கடத்தப்படுவதை உணர்ந்தேன். இந்த விசித்திரம் பற்றி நான் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, ஒரு அவசர கதியில் பொம்மை என்னை முழுவதுமாக எடுத்துக்கொண்டுவிட்டிருந்தது. நானசைய அசைய பொம்மை அசைந்தது. சலனமற்றிருந்த பொம்மை என்கிற எண்ணத்தைப் பொய்யாக்கியது பொம்மையின் கடுமை நிறைந்துவிட்ட முகம். அடிக்கடி என் மனைவி என் முகத்தில் குடியேறிக்கொண்டிருக்கும் கடுமையைப் பற்றிச் சொல்லிய வார்த்தைகள் நினைவுக்கு வர, என்னைப் பற்றிய பயம் என்னுள் எழுந்தது. இந்நிலையிலிருந்து விடுபடமுடியாதென்று மிகத் தெளிவாகவே தெரிந்தது. விடுபடமுடியாத வசீகரம். சந்தேகமேயில்லை. மௌனத்தின் வெளியில் பரவிக்கிடக்கும், பல்வேறு அர்த்தங்களைப் பிரதிபலிக்கும் வார்த்தைகளின் மீது நடந்தேன். பொம்மை தானிருந்த இடத்திலேயே இருந்து நடந்தது.

அது மிகச்சிறிய வயது. எல்லாரும் சிறிய வயதென்றே சொன்னார்கள். ஆனால் எனக்குள் அப்போதே கிளைபரப்பி விட்டிருந்த காமத்தின் சுவடுகள் பற்றி நினைக்கும்போது மிகவும் வெறுப்பாயிருக்கும். பொம்மையின் கண்களைக் கண்டேன். அதன் முகவிகாரம் மறைந்து மழலையை ஒத்த முகத்திற்கு மாறிக்கொண்டிருந்தது. அதன் கண்கள், எவ்விதக் களங்கமும் அற்ற, என் சிறுவயதின் கண்கள். பொம்மை என் சிறு வயதுப் பிரதிமையாக மாறிவிட்டிருந்தது. அதன் கைகள் பக்கத்திலிருக்கும் வேறொரு பொம்மையின் மார்பகங்களைத் தடவிக்கொண்டிருந்தது. பக்கத்திலிருந்த பொம்மை அதுவரை என் கண்ணுக்குத் தட்டுப்படாத மர்மம் விளங்கவில்லை. அது விமலாவின் பிரதிமையாகத்தான் இருக்கவேண்டும். விமலாவைப் பார்க்கும் துணிவு எனக்கில்லை. அவள் வயது அதிகமில்லை. ஆனால் என்னைவிட அதிகம்தான். விமலா ஏதேதோ முனகினாள். என் கைகளை அவளிஷ்டத்திற்கு அலைக்கழித்தாள். உச்சநிலை என்று இப்போது புரிகிற ஒரு வலிநிலையை அப்போது அடைந்தேன். இரண்டு நிமிடங்களில் விமலா என்னைப் புரட்டித் தள்ளிவிட்டு ஒன்றும் நடக்காத மாதிரி, அவள் வீட்டிற்குப் போய்விட்டாள். என் பிரதிமையின் முகம் விகாரம் கொள்ளத் தொடங்கியது. உண்மையில் அன்றிலிருந்தே எனக்குள் மெல்லப் பரவத் தொடங்கவிட்ட விகாரம் இப்போது கடும் வேகத்துடன் தனது பெருக்கத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. அது இன்னும் உச்சமடையுமே ஒழிய சிறுத்துப்போகாது. விகாரங்கள் குறைந்த நிலையிலேயே ஒரு குழந்தை பெற்றுக்கொண்டதை நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டேன். என் மகனை நினைத்ததும் பிரதிமையின் முகம் இளகத் தொடங்கியது. மீண்டும் மீண்டும் வம்படியாக என் மகனையே நினைத்தேன். உருகிக் கீழே விழுந்துவிடும் என்று எதிர்பார்த்த நேரத்தில், பிரதிமை தன்னிச்சையான எண்ணங்களை உள்ளெடுத்துக்கொண்டு, எனக்குள் அதன் நினைவுகளைக் கடத்தத் தொடங்கியது. இந்தத் தாக்குதலை நான் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் அந்த வசீகரச் சுழலில் நான் சிக்கிக்கொள்ள, என் எண்ணங்கள் கடும் சீற்றத்துடன் பாயத்தொடங்கின.

மதுரகாளியம்மனின் பெயரைக் கேட்டாலே உடலெங்கும் ஒரு உதறல் எடுத்து அலைந்த தினங்கள் நினைவுக்கு வந்தன. ஊரெங்கும் மதுரகாளியின் கோபமும் உக்கிரமும் பேச்சாக இருந்த நேரத்தில், அவளின் பெயரைக்கொண்ட ஒரு பெண்ணை எனக்குச் சம்மதம் பேச வந்தார்கள். அப்போது நான் வளர்ந்திருந்தேன். அப்படித்தான் எல்லாரும் சொன்னார்கள். ஆனால் என் கட்டுக்கடங்காத காமம் நான் வளர்ந்து பல நாளாகிவிட்டதை எனக்கு உணர்த்திக்கொண்டே இருந்தது. இரவுகளின் நீட்சி, பெண்ணின் நினைவு, ஏற்கனவே சில பெண்களுடன் எதிர்பாராமல் ஏற்பட்ட உடல் நெருக்கங்கள் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வர, நான் மதுரகாளியின் சிவப்பிலும் திளைத்துச் செழித்திருந்த உடல் மதர்ப்பிலும் கிறங்கிவிட்டிருந்தேன். எந்த யோசனைக்கும் இடமின்றி வேலைகள் மளமளவென நடக்க, நானும் மதுரகாளியும் மதுரகாளியம்மன் முன்னிலையில் மாலை மாற்றிக்கொள்ள, என் உடலெங்கும் அனல் பரவிக்கொண்டிருந்தது. மதுரகாளி சதா சிரித்துக்கொண்டிருந்தாள். அவள் உதடுகள் சிரிப்பில் அடையும் நெளிவுகள் என்னை இரவை எதிர்நோக்க வைத்தன. மதுரகாளி அலட்டிக்கொள்ளவே இல்லை. சதா சிரித்தாள். எனக்கு கொஞ்சம் கலவரமாகவும் சந்தேகமாகவும் இருந்தது. ஆனாள் அவளின் நிர்வாணத்தில் நிலைகுலைந்துபோனேன் என்றே சொல்லவேண்டும். அவள் உடலின் தினவும் என் கைக்கடங்காத மார்பகங்களும் செக்கச்செவேல் என்றிருக்கும் உடலும் என்னை வேறெதைப் பற்றியும் சிந்திக்கவே விடவில்லை. மீண்டும் மீண்டும் மீண்டும் அவளுடன் கடுமையான வேகத்தில் உடலுறவு கொண்டேன். அவள் அப்போதும் சிரித்தாள். இரண்டு நாள்களில் தெரிந்துவிட்டது. என் வீட்டுக்காரர்கள் அவள் வீட்டுக்குச் சென்று பெரும் யுத்தம் செய்துவிட்டு வந்தார்கள். மதுரகாளி சித்தம் கலங்கிப்போனவள் என்றார்கள். அவள் இந்த வீட்டில் இருக்கக்கூடாது, ஒரு முடிவு கட்டவேண்டும் என்றார்கள். கிடைத்த இரவுகளில் நான் சும்மா இருக்கவில்லை.

திடீரென பெரும் ஓலம் கேட்டு நான் பதறிக் கண்விழித்தேன். இப்போதும் அந்த ஓலம் என் காதுள் கேட்கிறது. என் பிரதிமையின் நெஞ்சு துடிக்கும் வேகம் கூடியிருந்தது. பிரதிமைக்கும் கேட்டிருக்கவேண்டும் அக்குரல். மதுரகாளியின் அம்மா என் வீட்டு வாசல் முன் நின்று அடிக்குரலிலிருந்து பெருங்குரல் எடுத்துக் கத்தினாள். “எம் பொண்ணு போயிட்டா. அவ சாமிடா. ஒனக்கு மதுரகாளியே கூலி கொடுப்பா,” என்று கூக்குரலிட்டாள். என் அடிமனம் சில்லிட்டது. சில நாள் முன்பு வரை நான் விடாமல் அனுபவித்த அந்த உடல் இன்று இல்லை. அவளைத் தூக்கிக்கொண்டு போகும்போது கணுக்கால் வரை விலகியிருந்த சேலையில் அவளது செக்கச்செவேல் என்கிற தேகம் முகத்தில் அடித்தது. சில இரவுகளில் இன்னும் அக்கால்கள் என் கனவில் வருவதுண்டு. அன்றே என் முகம் கடுமையான விகாரத்தைக் கொண்டிருக்கத் தொடங்கியிருக்கவேண்டும்.

ஊரெங்கும் என்னைக் குறை சொன்னார்கள். மதுரகாளியை நானே செய்வினை வைத்துக்கொன்று விட்டதாகச் சொன்னார்கள். அவள் நான்கு மாதம் கர்ப்பிணி, நிச்சயம் மதுரகாளி என்னைச் சும்மாவிடமாட்டாள் என்றார்கள். எந்த மதுரகாளியோ. தினுசு தினுசான கதைகள் பரவின. என் கையில் விஷத்தை வைத்துக்கொண்டு, நான் அதைச் சாப்பிடப் போவதாக நடித்ததாகவும் மதுரகாளி என்னைக் காப்பாற்றப்போவதாக நினைத்துக்கொண்டு அதைக் குடித்துவிட்டதாகவும் பரவிய கதை ஊரின் ஒவ்வொரு தெருவிலும் ஒலித்தது.

என் பிரதிமை கையில் விஷத்தை ஏந்திக்கொண்டிருப்பது போல் கையை நீட்டிக்கொண்டிருந்தது. வேகமாக ஓடிச்சென்று பிரதிமையின் கையைத் தட்டினேன். பிரதிமையின் முகம் மாறத்தொடங்கியது. பெண்மையின் சாயலில் அது மாற, ஒரு நிலையில் மதுரகாளியின் முகத்தை அடைந்தது. இரவின் கருமையையும் பரவியிருக்கும் கதிரின் போர்வையையும் மீறி மதுரகாளியின் செக்கச்செவேல் நிறம் பொம்மையைச் சுற்றித் தகிக்கத் தொடங்கியிருந்தது. எனக்குள் காமம் என்னை மீறிக் கிளர்ந்தெழுந்தது. இப்போது மதுரகாளியின் முகம் கடும் கருப்பு நிறத்திற்கு மாற, அவள் உடலெங்கும் கருமை பரவத் தொடங்கியது. என் கிராமத்தின் மதுரகாளியம்மனின் முகத்தை பொம்மை அடைந்துவிட்டிருந்தது. மதுரகாளியின் தாயின் குரல் எங்கிருந்தோ ஒலிக்க, என் நினைவுகள் என்னுள் ஈட்டியைப் பாய்ச்சின. நான் அலறினேன், ஒரு பைத்தியத்துடன் வாழமுடியாது என. பொம்மை சட்டென நிறம் மாறி, மதுரகாளியாக மாறி, ஏளனப் புன்னகை சிந்தியது. மதுரகாளி உடல் சரியில்லாமல் அவள் வீட்டிற்குச் செல்லும் நாள் வரையில் அவளுடன் தினம் உறவுகொண்டிருந்தேன். மீண்டும் கூவினேன், உடலுறவுக்கும் அன்புக்கும் சம்பந்தமில்லையென. பொம்மை எனது பிரதிமையாக மாறியது. இப்போது என்னால் அதனுடன் பேசமுடியவில்லை. என் பிரதிமை என்னைப் பார்த்துச் சிரித்தது.

இவற்றை விட்டு வெளியேற என் உடல் வெகுவாக முயன்றது. என் உடல் படும் வேதனையும் பிரதிமைக்கும் பொம்மைக்குமிடையே அலைக்கழிப்படும் என் நினைவும் வெகு தெளிவாக எனக்குத் தெரிந்தன. இரண்டின் மனநிலைக்குள்ளூம் நான் கடுமையாக மூழ்கினேன். என் கையில் மதுரகாளியின் மார்பு அழுந்திருப்பதாகத் தோன்றவே, கையை மீண்டும் மீண்டும் உதறினேன். என் மனைவி என்னை உலுப்பினாள். என் மகன் தூக்கத்திலிருந்து பயந்து எழுந்து அழுதான். என்னால் கண்ணைத் திறக்கவே முடியவில்லை. என்னைச் சுற்றி பொம்மைகள் அமர்ந்திருப்பதாகவே நம்பினேன். மிகுந்த பிரயாசைக்குப்பின் கண்ணைத் திறந்தேன். அங்கு மதுரகாளி இல்லை. பிரதிமை இல்லை. நான் மட்டும் இருந்தேன். என் மனைவி இருந்தாள். மகன் இருந்தான். நாளையோ நாளை மறுநாளோ மீண்டும் வருவார்களாயிருக்கும். பிரதிமையாக இல்லை என்றால் நிழலாக. அதுவும் இல்லையென்றால் குரலாக. அனிச்சையாகக் கையைக் கையை உதறினேன். கடும் காய்ச்சல் அடித்தது. என் மனைவி பாராசிட்டமால் மாத்திரையும் வெந்நீரும் தந்தாள். அடிக்கடி கனவு கண்டு புலம்புவதாக மனைவி மொபைலில் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தாள். பிரதிமையைக் கனவென்று நானும் நினைக்கத் தொடங்கினால் அன்றே எனக்கு மரணம் சம்பவிக்கும். லேசாக விடியத் தொடங்கியிருந்தது.

ராமநாதன் பொறுமையாகக் கேட்டான். நாடகத்தில் வரும் மிகைநடிப்புப் பாத்திரமொன்றின் மெனக்கெடலுடன் பேசத் தொடங்கினான்.

– நம்ம ஆத்துக்குப் போற வழி இருக்கு பாத்தியா? முதல்ல ஒரு சின்ன பாலம் வருமே, அங்கனதான். என் தாத்தா என்கிட்ட நெறய தடவ சொல்லியிருக்றாரு. அந்த பாலத்துலேர்ந்து வலது கைப்பக்கமா மூணாவது மரம். ஞாபகம் வெச்சிக்கோ.

நாடகம் தொடங்குவதற்கு முன்பாக அந்நாடகத்தோடு தொடர்புடைய சில விஷயங்களைச் சொல்லிவிட்டு, பின் அதை இணைத்துக் கதை சொல்லுவான் போல. நான் சொல்லுவதைக் கேட்க ஒரு ஆள் தேவையாக இருக்கிறது. வேறு வழியில்லை.

– எங்க தாத்தாவுக்கானா சரியான வுவுத்து வலி. வலின்னா உங்க வீட்டு வலி எங்க வீட்டு வலி இல்ல. நெறய நாள் எந்திரிச்சி உட்கார்ந்து வவுத்தப் புடிச்சிக்கிட்டு அழுதுக்கிட்டு இருப்பாராம். என்னடா இது நிம்மதியில்லாத வாழ்வுன்னு சாகலாம்னு தோணியிருக்கு. துண்ட ஒதறித் தோள்ல போட்டுக்கிட்டு (இந்த ராமநாதன் அவன் தாத்தாவைப் பார்த்ததே இல்லை, ஆனால் அவர் அருகில் இருந்து பார்த்தது போலக் கதை சொல்கிறான்.) விறுவிறுன்னு நாலு எட்டு வெச்சி நடந்தாரு. நான் சொன்னேனே அந்த மரம், பாலத்துப் பக்கத்துல வலது கைப்பக்கமா மூணாவது மரம்… நீ கேக்றியா?

– சொல்லு, கேட்டுக்கிட்டுத்தான இருக்றேன்.

– அங்க போயி நின்னுகிட்டு வவுத்த புடிச்சிட்டு ஓன்னு அழுதுக்கிட்டிருந்திருக்றாரு. மணி ஒரு ஆறு இருக்கும். இன்னும் நாலு எட்டு வெச்சா காவேரி. இந்த வவுத்து வலியோட உசிரோட இருந்தா தாங்காதுன்னு முடிவு பண்ணிக்கிட்டு வவுத்தப் புடிச்சிக்கிட்டு அங்கயே நிக்றாரு. மரத்துப் பின்னாடிலேர்ந்து ஒரு சாமி. அதுவரைக்கும் அந்த சாமிய இந்த ஊர்ல யாரும் பாத்ததே இல்லியாம். சாமின்னா அப்படி ஒரு சாமி. சுண்டினா ரத்தம் வரும். அப்டி ஒரு செவப்பு. முடியெல்லாம் சடை விழுந்து தாடியோட அவர் முன்னாடி வந்து நிக்றாரு. தூக்கி வாரி போட்டுச்சாம் தாத்தாவுக்கு.

எனக்குள்ளும் ஒரு திடுக்கிடல் படர்ந்து அடங்கியது. இந்த ராமநாதன் இப்படியெல்லாம் இதுவரை பேசினதில்லை. முடிவே இல்லாத பெரு நாடகமொன்றின் ஓரங்கத்தை மட்டுமே என்றும் சொல்லுவான். இன்று அவன் நாடகம் வேறொரு திக்கில் திறந்துகொண்டு விட்டது புரிந்தது.

– என்ன சாகப்போறியான்னுச்சாம் சாமி. தாத்தாவுக்கு ஒண்ணுமே ஓடல. சட்டுன்னு பொறி தட்டியிருக்கு, ஆகா இவர்தாண்டா நாம தேடிக்கிட்டிருந்த சாமின்னு சாஷ்டாங்கமா கால்ல வுழுந்திருக்றாரு. சரி எந்திருன்னுச்சாம் சாமி. இடுப்புலேர்ந்து சுருக்குப் பையை எடுத்துப் பிரிச்சி அதுலேர்ந்து வூபுதி எடுத்துக் கொடுத்திச்சாம். வவுத்துல பூசுன்னுச்சாம். பூசியிருக்றாரு தாத்தா. கொஞ்சம் வாயில போட்டுக்கோன்னுச்சாம். வாயில போட்ட நிமிஷத்துல போயிடுச்சு வவுத்த வலி. நம்புவியா நீ? அன்னைலேந்து வவுத்த வலி வல்ல தாத்தாவுக்கு. நீ ரொம்ப கஷ்டப்பட்டுக்காத. ஒனக்கும் ஒரு சாமி வரும். மதுரகாளியே வருவா. நீ தெரிஞ்சு ஒண்ணும் தப்பு செய்யல. விடு.

மதுரகாளியின் பெயர் கொஞ்சம் பதற்றத்தைக் கொடுத்தது. ராமநாதன் வேறு ஏதோ சொல்ல வாயெடுத்தான். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. சிறிதுநேரம் இருவரும் அமைதியாக இருந்தோம். ஊர் உறங்கிவிட்டிருந்தது.

ந்தக் கடிதம் ராமநாதன் எழுதியது என்று அறிந்தபோது என்னைப் பதற்றம் பீடித்தது. அவன் என்னுடன் பேசிக்கொண்டிருந்த தினம் இரவில் தற்கொலை செய்துகொண்டு செத்துவிட்டான். எல்லாரும் என்னைத் தோண்டித் துருவிக் கேட்டார்கள். அவன் என்னிடம் எதுவும் சொல்லவில்லை என்று நான் சொன்னதை யாருமே நம்பவில்லை. அன்று நான்தான் அவனிடம் நிறையச் சொல்லிக்கொண்டிருந்தேன். அவன் சொன்னதெல்லாம் அவனது தாத்தாவைப் பற்றித்தான். யாருமே நம்பவில்லை. எனக்கே கொஞ்சம் சந்தேகம் வந்தது, அவன் ஏதும் சொல்லி நாம்தான் கவனிக்காமல் விட்டுவிட்டோமோ என்று. நாங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு பிரிந்து சென்ற மூன்று மணி நேரத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறான். கோரமான சாவு. சேலையை ·பேனில் மாட்டிக்கொண்டு தொங்கிவிட்டான். அப்படி என்ன அவனுக்குள் இருந்திருக்கும் என்று யோசித்து யோசித்தே நான் சோர்ந்துவிட்டிருந்தேன்.

ராமநாதனின் கடிதம் என்றதும் திடுக்கிடல், பயம், ஆர்வம் என எல்லாம் ஒன்று சேர, கடிதத்தைப் பிரித்தேன்.

– இந்த லெட்டர் நீ படிக்கும்போது எவ்ளோ பயந்துட்ருப்பேன்னு எனக்கு தெரியுது. இன்னும் ஒரு மணிநேரத்துல சாகப்போறேன். இவ்ளோ பிரச்சினை, கனவு, பொம்மை, பிரதிமைன்னு நீ என்னென்னவோ உளர்ற. ஆனா உனக்கு எப்படி தற்கொலை செஞ்சிக்கணும்னு எண்ணமே வரலேன்னு தெர்யலை. என்னால முடியலைடா. உனக்கு மதுரகாளின்னா எனக்கு இன்னொருத்தி. பேரு வேண்டாம். என்னோடவே இருக்கட்டும். உன்னய மாதிரிதான் என்னயும் ஏமாத்திக்கிட்டு, ஊரயும் ஏமாத்திக்கிட்டு. பிரதிமை கை நீட்டி விஷம் வெச்சிக்கிட்டு இருந்தாமாதிரி காமிச்சதுன்னு சொன்னியா, பிரதிமை பொய் சொல்லுமாடா? நாமதான் பொய் சொல்லணும். எல்லார்கிட்டயும். நீ என்கிட்டயும் நான் உன்கிட்டயும். அவ்ளோதான்.

நான் திக்பிரமை பிடித்து நின்றிருந்தேன். மதுரகாளியம்மன் என்னைக் காப்பாற்றுவாள் என்று அவன் சொன்னதெல்லாம் நாடகத்தின் ஒரு வசனம்போல.

அன்றிரவும் பள்ளம் திறந்தது. இந்தமுறை எனக்காக ராமநாதனின் பிரதிமை கையில் கடிதத்துடன் நிற்பது போல நின்றுகொண்டிருந்தது.

[முற்றும்]

Share

Comments Closed