ரோஸ் (நாவல்) – ஒரு பார்வை

அந்திமழையில் ரோஸ் (நாவல்) ஒரு பார்வை வெளியாகியுள்ளது. வாசிக்க இங்கே சுட்டவும்.

குழந்தைகளின் ஏக்கங்கள் பற்றி மிக எளிமையாகவும் ஆழமாகவும் பேசும் நாவல். இரா.நடராசனின் ‘பாலீதீன் பைகள்’ நாவலை ஏறக்குறைய பத்து வருடங்கள் முன்பு வாசித்தேன். சன்னமான அதிர்வுகளுக்கு என்னை உள்ளாக்கிய நாவலது. அதன்பிறகு இப்போதுதான் இரா.நடராசனின் இன்னொரு நாவலை வாசிக்கிறேன்.

ரோஸ், இரண்டாம் வகுப்புப் படிக்கும் ஒரு சிறுவனின் வாழ்க்கை வெளியை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. இதில் அதிசயம் என்னவென்றால் எந்தவொரு இடத்திலும் ஆசிரியரோ கதாபாத்திரமோ விவரணைகள் எதையும் சொல்வதில்லை. ஆனால் கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளும் ஒவ்வொரு வரியும் சிறுவன் இழக்கும் உலகத்தைத் தொடர்ந்து காட்டிக்கொண்டே வருகிறது. நாவல் முழுக்க விவரணைகள் ஏதுமின்றி, வெறும் உரையாடல்கள் மட்டுமே காணக்கிடைக்கின்றன. அவற்றின் மூலமாக ஒரு சிறுவனின் உலகம் எவ்வளவு சுமை நிறைந்ததாக இருக்கிறது என்பதையும் இன்றையக் கல்விமுறை எவ்வளவு தூரம் சிறாரிடமிருந்து அந்நியப்பட்டுக் கிடக்கிறது என்பதையும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தாங்கள் அறியாமலேயே ஒதுங்கி இருக்கிறார்கள் என்பதையும் சித்தரிப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இரா.நடராசன். உண்மையில் இந்நாவலில் வரும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மேல் அன்பற்றவர்களாகவோ அக்கறை அற்றவர்களாகவோ சித்தரிக்கப்படவில்லை. யதார்த்த பெற்றோர்கள் போல தன் மகனைச் சீக்கிரம் எழுப்பி, குளிப்பாட்டி, உணவளித்து, பள்ளிக்குச் செல்லும் வழியில் அவனுக்கு சிப்ஸ் வாங்கிக் கொடுத்து எனத் தன் மகனின் தேவையை மிகக் கவனத்தோடும் பாசத்தோடும் செய்கிறார்கள். ஆனால் யதார்த்தம் போலவே மகனின் உலகமும் பெற்றோர்களின் உலகமும் இருவேறு மையங்களில் சுற்றும் கோளங்கள் போல ஒன்றுக்கொன்று தொடர்பின்றி சுழல்கின்றன. அவை எந்தப் புள்ளியிலும் சந்தித்துக்கொள்ளவே இல்லை.

காலையில் எழும்போதே பள்ளிக்குச் செல்லவேண்டும், வீட்டுப்பாடங்கள் முடிக்கவேண்டும் என்ற சுமையையும் அலுப்பையும் சேர்த்தெடுத்துக்கொண்டு எழுந்திருக்கும் சிறுவனின் வீட்டு ரோஜா பூத்திருக்கிறது. அதைப் பார்க்க அவனுக்கு அனுமதியில்லை. காரணம், காலை நேரப் பரபரப்பு; நேரமின்மை. அவன் இரவு வந்து பார்த்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறான். அன்று வரும் பள்ளிக் காட்சிகள் அனைத்திலும் எப்படியோ, ரோஜாவோ ரோஜா நிறமோ ரோஜா வளரும் மண்ணோ, ரோஜாவின் பெயர் அடிபடுகிறது. அவன் மீண்டும் மீண்டும் தன் வீட்டில் பூத்திருக்கும், தான் பார்க்காது வந்துவிட்ட ரோஜாவை நினைக்கிறான். பெற்றோர்களின் தனித்து இயங்கும் உலகம் போலக் கல்விக்கூடத்தின் உலகம் இன்னொரு மையத்தில் தனித்து இயங்குகிறது. அங்கு ஸ்பெல்லிங்கும் மனனமும் வீட்டுப்பாடமும் முன்னிறுத்தப்படுகிறதே அன்றி அச்சிறுவனின் உலகத்தின் மீது எந்தவொரு கவனமும் விழுவதில்லை. அச்சிறுவனுடன் படிக்கும் மற்றச் சிறுவர்கள் மட்டுமே அவனது ரோஜாவின் மீது கவனம் கொள்கின்றனர். அதுவும் கூட ஆசிரியரால் கண்டிக்கப்படுகிறது.

எல்லா வகுப்பு ஆசிரியர்களூம் இயல்பாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். தங்கள் பணி பாடம் போதிப்பது, வீட்டுப்பாடம் கொடுப்பது, ஸ்பெல்லிங் சொல்லச் சொல்வது என அவர்கள் வேலையை அவர்கள் செய்கிறார்கள். அதில் குற்றம் காண ஏதுமில்லை. சிறுவனின் ரோஜா பற்றிய ஏக்கம் நமக்குள்ளும் இருக்கும்போது நமக்குச் சிறுவனின் மீது ஒரு பரிதாபத்தை ஏற்படுத்திவிடுகிறது. தொடர்ந்த உரையாடல்களின் மூலமாக மட்டும், சுஜாதாவின் நாடகங்களில் கதாபாத்திரங்கள் தொடர்ந்த உரையாடல்கள் மூலம் தம்மை ஸ்திரப்படுத்திக்கொள்வதுபோல, இது நேர்ந்துவிடுகிறது என்பது ஆச்சரியம்தான்.

சிறுவர்களின் பள்ளி உரையாடல்கள் வெகு எளிமையாகவும் யதார்த்தமாகவும் இருக்கின்றன. அவர்களை நோக்கி ஆசிரியர்களின் கூச்சலும் சத்தமும் கோபமும் இதேபோலப் படைக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகளுக்கான புத்தகங்கள் பல இருக்க, குழந்தைகள் உலகம் பற்றிய நாவல் வெகு சிலவே உள்ளதால் (சட்டென சுஜாதாவின் ‘பூக்குட்டி’ நினைவுக்கு வருகிறது. ரோஸ் நாவலுக்கு முன்னுரை எழுதியிருக்கும் வே.சபாநாயகம் கி.ராஜநாராயணின் ‘பிஞ்சுகள்’ நாவலை நினைவுகூர்கிறார்.) இதுபோன்ற நாவல்களில் தேவை அதிகமாகிறது.

66 பக்கங்களே கொண்ட, அரை மணி நேரத்தில் படித்து முடிக்கப்பட்டுவிடக்கூடிய சிறிய நாவல் மனதில் ஏற்படுத்தும் எண்ணங்கள் ஏராளம். உண்மையில் இன்றைய பெற்றோர்களின் நிலையையும் ஆசிரியர்களின் நிலையையும் அது தெளிவாகவே கூறுகிறது. ஆசிரியர் அதை விமர்சிக்கும் நோக்கத்தோடுதான் அணுகியிருக்கிறார். ஆனால் அவர்களின் செய்கைகள் தவிர்க்கமுடியாதவை என்றே நான் கருதுகிறேன். இந்த நாவலில் காலையில் சிறுவன் ரோஜாச்செடி பக்கம் சென்று நிற்கும்போது, அவனது பெற்றோர்கள் அந்த ரோஜாவை மாலையில் பார்த்துக்கொள்ளலாம் என்கிறார்கள். இது எல்லார் வீட்டிலும் நேரக்கூடியதே. இது போலவே ஆசிரியர்களின் கூற்றும் எங்கேயும் நேரக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. இதிலிருந்தெல்லாம் விடுபட முடியுமா எனத் தெரியவில்லை. காலங்காலமாகக் கல்வி என்பதே மிக முக்கியம் என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்தப்பட்டிருக்கிறது. அதற்கேற்றாற்போலவே நமது சமூக அமைப்பும் அமைந்திருக்கிறது. அதையே இக்கதையின் பெற்றோர்களும் செய்கிறார்கள். நம்மைப் போலவே. உண்மையில் தங்கள் மகனின் ஆசையைப் புறக்கணித்திருக்கிறோம் என்கிற சுவடு கூட அவர்களிடம் இல்லை. அதுவும் நம்மைப் போலவே. ஓரளவிற்கு மேல் அல்லது தினசரி வாடிக்கையாகிப் போகும் நிகழ்வுகளில் தோய்ந்து தோய்ந்து இதுபோன்ற சிறிய சிறிய நிராகரிப்புகள், அதனால் குழந்தைகளின் உலகில் ஏற்படுத்தப்படும் ஏக்கங்கள் நம்மை எந்த அளவிலும் பாதிப்பதில்லை என்றே தோன்றுகிறது. அதுமட்டுமில்லாமல், அந்தச் சின்ன வயதில் குழந்தைகளுக்கான அளவுக்கு மீறிய சுதந்திரம் அவர்களின் வாழ்க்கைக்கே ஊறாகிப் போகும் அபாயமுமிருக்கிறது. அதனால் ஒரேடியாகப் பெற்றோர்களையோ ஆசிரியர்களையோ குறைகூறிவிட முடியாது. அவர்கள் சமூக அமைப்பிற்கேற்பச் செயல்படுகிறார்கள். ஆனால், நமது அணுகுமுறையில் மாற்றம் தேவையோ, குறைந்தபட்சம் மாற்றத்தைப் பற்றி யோசிக்கவாவது வேண்டுமோ என்கிற கேள்வியை வெகு நிச்சயம் எழுப்புகிறது இந்நாவல். அந்த அளவில் இந்த நாவல் சிறந்த வெற்றி பெறுகிறது.

காவ்யா பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் இந்நாவலோடு, மூன்று சிறுகதைகளும் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

ரோஸ், இரா.நடராசன், காவ்யா வெளியீடு, விலை: 40.00 ரூபாய். [முதல் பதிப்பு: 2001]

Share

Comments Closed