இம்சை அரசனும் இம்சையும்

மிகவும் பாதித்த மற்றும் பிடித்துப்போன படங்களுக்குத் தவிர வேறெப்படங்களுக்கும் விமர்சனம் எழுதக்கூடாது என நினைத்து அதைக் கடைபிடித்து வந்திருக்கிறேன். இம்சை அரசன் 23-ஆம் புலிகேசிக்கு இணையத்தில் நான் வாசித்த சில விமர்சனங்கள் அப்படத்தைப் பெரிதும் புகழ்ந்திருப்பதைக் கண்டேன். இம்சை அரசனை நான் பார்த்த போது ஏற்பட்ட இம்சை தாங்கமுடியாததாக இருந்தது. அதனால் சில வரிகள் தட்டிப்போடலாம் என நினைத்தேன்.

01. உத்தம புத்திரனின் கதையை அப்படியே உல்டா பண்ணியிருக்கிறார்கள். இதற்குக் கதை – சிம்புதேவன் என்று போட்டுக்கொள்வது தயாரிப்பாளரும் இயக்குநரும் செய்யும் முதல் இம்சை.

02. வடிவேலுக்கு நடிக்கவே வரவில்லை. சீரியஸான வடிவேலு பெரிய காமெடி. வடிவேலும் தமிழ் உச்சரிப்பும் மற்ற சக நடிகர்களின் தமிழ்ப் பேச்சும், தமிழ் மொழி இத்தனை கேவலமாக இருந்ததில்லையே என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

03. அரச காலத்துப் படங்களில் நடிக்கும் தகுதியும் திறமையும் ஒருவித மகுடித்தன்மையும் கேட்பவரைக் கிறங்கச் செய்யும் வசன வெளிப்பாடும் கொண்ட ஒரே நடிகர் நாசராகத்தான் இருக்கமுடியும். நொடிக்கு நொடி அவர் காட்டும் முகபாவங்களும் வசன உச்சரிப்பும் தெளிப்பும் அருமை. இதைத்தவிர நல்ல விஷயம் எதுவும் படத்தில் இல்லை.

04. வாய் விட்டுச் சிரிக்கும் காட்சிகளோ, புத்திசாலித்தனமான நகைச்சுவையோ படத்தில் ஒன்று கூட இல்லை.

05. இம்சை அரசனின் இம்சைகள் என்ற பெயரில் காட்டப்படும் நகைச்சுவை பெரிய இழுவையும் இம்சையுமாய் அமைகின்றன. ஓரிரண்டு காட்சிகள் லேசாக சிரிக்க வைத்தாலும் அவை படத்தைத் தூக்கி நிறுத்தப் பயன்படுவதில்லை.

06. வடிவேலுவின் காதல் காட்சிகளைப் பற்றித் தனியே சொல்லவேண்டும். மகா இம்சை அது.

07. அவ்வப்போது பாடல்கள் வந்து நம்மைப் பாடாய்ப் படுத்துகின்றன. திடீரென்று வடிவேலு காமெடிக்காரர்கள் கெட்டப்பில் ஆடுவதும் பாடுவதும் ரசனையற்று அமைகிறது. அவர் அரசர் கெட்டப்பில் ஆடினால் நமக்கு ரசனை விட்டுப் போய்விடுகிறது!

08. திரையரங்குகளில் நல்ல கூட்டம் அலைமோதுவதாகக் கேள்விப்பட்டேன். நீண்ட நாள்களுக்குப் பின் வரும் அரசர் காலத்துப் படம் என்பதாலும் வடிவேலும் புகழும் இதற்குக் காரணமாய் இருக்கலாம்.

08. இப்படத்தை நான் பார்த்ததற்குச் செய்யவேண்டிய ஒரே பிராயசித்தம் உத்தமபுத்திரன் படத்தை எப்படியாவது மீண்டும் ஒருமுறை பார்த்துவிடுவது மட்டுமே.

09. இம்சை அரசன் உண்மையிலேயே இம்சையில் அரசன்தான்.

35 மதிப்பெண்கள்.

Share

Comments Closed