இரவு – சிறுகதை

டி வந்து ரயிலில் ஏறி அமர்ந்து கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் கழிந்த பின்பும் நெஞ்சில் படபடப்பும் உடலில் பரவியிருந்த தகிப்பும் குறைந்த மாதிரித் தெரியவில்லை. இந்தப் படபடப்பும் தகிப்பும் உடல் சார்ந்து எழுந்ததல்ல, மனத்தின் போராட்டத்தினால் எழுந்தது. நேற்றிரவு காவேரியின் கரையில் நின்றுகொண்டு நானும் ராஜாவும் பேசிக்கொண்டிருந்தபோது இருந்த அமைதியான, போராட்டமற்ற மனநிலை இப்போதில்லை. ஒரே ஒரு இரவுக்குள் நான் புரட்டிப்போடப்பட்டேன்; இல்லை நான் என்னை புரட்டிப் போட்டுக்கொண்டேன். அதுவரை நானே என்னைப் பற்றி ஏற்றிக்கொண்டிருந்த பீடங்கள் அதன் அடியை இழந்து அதள பாதாளத்தில் வீழ்ந்து கிடந்தன. ஸ்டேஷனுக்கு வரும் வழியில் ஓஷோவின் புத்தகம் ஒன்றை வாங்கியிருந்தேன். அதைப் பிரித்து வம்படியாக வாசிக்கத் தொடங்கினேன். இப்படி நானாக ஏற்படுத்திக்கொள்ளும் லயிப்பிலிருந்து என்னை நான் காப்பாற்றிக்கொள்ளமுடியும் என்று நம்பி வாசித்தேன். இதுபோன்ற குழப்பமான நிலையில் புத்தகம் வாசித்தல் நல்லதொரு பழக்கம் என நினைத்துக்கொண்டேன். அப்போதுதான் புரிந்தது, இப்படியே நினைத்துக்கொண்டிருக்கிறேனே ஒழிய, இன்னும் வாசிக்கத் துவங்கவில்லை என்று. இந்த நினைப்பு எழுந்ததும் ஓஷோவின் மீதும் என் மீதும் இந்த உலகத்தின் மீதும் எல்லாவற்றின் மீதும் வெறுப்பு எழுந்தது. ஜன்னல் வழியே காறித் துப்பினேன். ப்ளாட்பாரத்தில் எனது எச்சில் உலக வரைபடத்தில் ஏதோ ஒரு நாடு போலச் சிதறி விழுந்தது. அப்போதுதான் என் ஜன்னலைக் கடந்தவன், என்னைத் திரும்பிப் பார்த்துச் சலித்துக்கொண்டான். எனக்குக் கொஞ்சம் சந்தோஷம் உண்டானது. இன்னும் ரயில் கிளம்பவில்லை. ப்ளாட்பாரத்தின் மனிதர்களைப் பார்த்துக்கொண்டிருந்தால் நான் கொஞ்சம் என் நினைவுகளைம் மறக்கலாமோ.

எதிரே இருந்த கடையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் ஒரு நடிகை இரண்டு கைகளையும் தலைக்கு மேலே குறுக்கக் கட்டித் தன் மார்பகத்தை எடுப்பாகக் காட்டிக்கொண்டிருந்தாள். எனக்குள் மீண்டும் நினைவுகள் தலைதூக்கத் தொடங்க, அதை மறுத்துப் பார்வையை ஆவின் பால் ஸ்டாலுக்கு மாற்றினேன். சிறுவன் ஒருவன் அவன் அருகில் நிற்கும் மனிதரிடம் ஏதோ வேண்டும் எனக் கேட்டு அடம்பிடித்துக்கொண்டிருந்தான். அவன் அடம் பிடித்தாலும் என்னளவில் அவன் சந்தோஷமாகத்தான் இருக்கிறான். வேணும் என்று கேட்டு அடம்பிடித்தல், வாழ்க்கையின் சுமைகளைப் பற்றிய சிந்தனையின்றி இருத்தல் போன்ற குழந்தைமை விஷயங்கள் ஒரு காலத்திற்குப் பின் மறுக்கப்படுகின்றன. அதை வைத்துப் பார்த்தால் அந்தச் சிறுவன் சந்தோஷமாய்த்தான் இருக்கிறான். ஓடிப்போய் அவனைப் பிடித்துத் தூக்கி முத்தம் கொடுத்து, நீ சந்தோஷமா இருக்கடா பயலே, நீ சந்தோஷமா இருக்கடா, அண்ணாவைப் பார், கெடந்து அலையறேன் எனச் சொல்லலாம் போலத் தோன்றியது. அந்தச் சிறுவன் பக்கத்தில் நின்றிருந்த அந்த ஆள் சிறுவனின் அப்பாவாக இருக்கவேண்டும். சிறுவன் கேட்பதை வாங்கித் தர மறுத்துக்கொண்டிருந்தார். அந்த ஆளைப் பிடித்து உலுக்கி, பசங்க கேட்கிறதையெல்லாம் வாங்கிக்கொடுங்க சார், இந்த வயசு போனால் வராது எனச் சொல்லலாம். மனதில் நினைக்கிறதையெல்லாம் செய்யமுடிகிறதா என்ன? ஆனால் நினைக்காததை செய்ய முடிந்தாகிவிட்டது. காவேரியில் அதிசயமாய் நீர் அதிகம் இருந்தது. நீர் சுழித்துக்கொண்டு ஓடும் அழகைப் பற்றியே சிந்திந்துக்கொண்டிருந்தபோது நேற்றாகிய அந்த நாள் நான் மறக்கமுடியாத நாளாகிப் போய்விடும் எனச் சற்றும் நினைக்கவில்லை. மணற்பரப்பில் நானும் ராஜாவும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோதுகூடக் கீதாவைப் பற்றிப் பேசவில்லை. நானும் ராஜாவும் பேசாத விஷயங்கள்தான் இருக்கிறதா என்ன? ஆனாலும் நேற்றிரவு என்னைக் கீதா அப்படிச் சுற்றிக்கொள்ளுவாள் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. கீதா, நீ என்னைப் புரட்டிப் போட்டுவிட்டாய். நேற்றும், இன்றும், இனி என்றுமா?

வண்டி கிளம்புவதற்கான ஆயத்தங்கள் ஏற்பட்டன. ஆவின் பால் ஸ்டாலில் இருந்த சிறுவனும் அவனது அப்பாவும் என் கம்பார்ட்மென்ட்க்கு எதிரே இருந்த கடையில் ஒரு புத்தகமும் ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் வாங்கிவிட்டு வேக வேகமாக எனது கம்பார்ட்மென்ட்க்குள் ஏறினார்கள். பக்கத்து கம்பார்ட்மென்ட் பிரயாணி ஒருவரை வழியனுப்ப வந்திருந்த ஒரு பெண் கைக்குட்டையை வைத்து வாயை மூடிக்கொண்டு, ரயிலின் ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு அழுதாள். அவள் அழுதது அவளது முகம் கோணிக்கொண்டு போவதிலிருந்து தெரிந்தது. நான் யாருக்கும் இப்படி அழுததாக நினைவில்லை. எனக்குள்ளே இந்தப் பாசம், அன்பு போன்ற சமாசாரங்கள் செய்யும் சேட்டைகள் குறைவு என்றே நான் என்னை நம்பி வந்திருக்கிறேன். இப்படித்தான் சொல்லவேண்டியிருக்கிறது. நான் இப்படித்தான் எனச் சொல்லமுடியாதபடிக்கு, நான் இப்படித்தான் எனச் சொல்லிவந்த ஒரு விஷயத்தில் ஒரு பெரிய இடி நேற்றிரவுதான் இறங்கியிருக்கிறது. அதனால் இனிமேல் கொஞ்சம் பொலிட்டிகல்லி கரெக்டாக, பிற்பாடு என்னிடமிருந்தே நான் தப்பிப்பதற்கு வசதியாக, ‘நான் நம்பி வந்திருக்கிறேன்; நான் இப்படித்தான் இருந்திருக்கவேண்டும் என நினைக்கிறேன்’ என்கிற மாதிரி சொல்லிக்கொள்வது நல்லது. காமம் என்கிற விஷயம் எனக்குள், என் கட்டுக்குள் இருக்கிறது என்று எத்தனை திடமாக என்னைப் பற்றி நானே யோசித்து வைத்திருந்தேன். அத்தனையையும் போட்டு உடைத்தாள் கீதா. எனது பத்தொன்பதாம் வயதில் ஒரு பெண்ணை நான் அனுபவிக்க நேர்ந்திருக்கிறது. அவள் நெருங்கிப் படுத்தபோது விலக்கியிருக்கலாம். அவளது கைகள் என் மேனியெங்கும் மேய்ந்தபோது விலகிப் போயிருந்திருக்கலாம். அவளது மென்மையான உதடுகள் என் உதடுகளைப் ஸ்பரிசித்தபோது விலக்கியிருக்கலாம் – எனக் கூடச் சொல்லமுடியாது. ஏனென்றால் அப்போதே நான் என் வசம் இழந்துவிட்டிருந்தேன். என் நினைவு என்னிடம் இருந்தால்தான் விலகலாம், விலக்கியிருக்கலாம் என்று சொல்வதில் அர்த்தம் இருக்கும். ரயிலின் ஒரு ஜெர்க்கில் கொஞ்சம் முன்னகர்ந்து பின்னகர்ந்தேன். கைக்குட்டையை மூடி அழுத பெண் என் ஜன்னல் வழியே மெல்ல கடந்தாள். பின்னோக்கி நகர்ந்து தலையைப் பின்னுக்குச் சாத்தி, ரிலாக்ஸ்டாகப் படுத்துக்கொண்டேன். அப்போதுதான் கவனித்தேன். எம் கம்பார்ட்மென்ட்டில் என்னைத் தவிர இன்னும் மூன்று பேர் இருந்தார்கள். ஒரு பெண் மருத்துவத் துறை தொடர்பான புத்தகம் ஒன்றைக் கையில் வைத்துப் படித்துக்கொண்டிருந்தாள். என்ட்ரன்ஸ் பாஸ் செய்து, மெடிக்கலில் சேரப் போகிறாளாயிருக்கும். கரிய நிறம், ரொம்பவும் மெல்லிசாக இருந்தாள். அவளது மேல் நெற்றியில் இருக்கும் கூந்தல் ஜடைக்குள் அடங்காமல் வெளியே பறந்து கொண்டிருந்தது. ஒரு காலை இன்னொரு கால் மீது தூக்கிப் போட்டுக்கொண்டு, வலது கையில் செல்·போனையும் இடது கையில் புத்தகத்தையும் வைத்திருந்தாள். அடிக்கொரு தடவை கம்பார்ட்மென்ட்டை விட்டு வெளியே நோக்கினாள். டிக்கெட் எடுக்காதவன் டி.டி.ஆர்.-இன் வரவை எதிர்பார்ப்பது போல. இவள் டிக்கெட் எடுக்காமல் ஏறியிருக்க வாய்ப்பில்லை. அவளது சுரிதார் கொஞ்சம் மேலேறி, ஹீல்ஸ் அணிந்திருந்த அவளது கால் என் முன் துருத்திக்கொண்டு தெரிந்தது. காலில் மிருதுவான ரோமங்கள் முளைத்திருந்தன. கீதாவின் உடலில் ரோமங்கள் இருந்ததாக நினைவில்லை. அவள் என்னை நெருக்க நெருக்க எல்லாம் சொல்லி வைத்தமாதிரி மிகக் கச்சிதமாக அவள் மீது பரவியது நினைத்து இப்போதும் அதிசயமாக இருந்தது. அந்த நினைவு கூட என்னை இன்னும் சூடேற்றியது. இனி காணும் பெண்களை கீதாவின் உடல் நினைவில்லாமல் பார்க்கமுடியுமா என்பது சந்தேகமாக இருந்தது. இப்போது என் முன்னே அமர்ந்திருக்கும் பெண்ணைக்கூட நான் எந்தவித மேலதிக எண்ணங்கள் இல்லாமல் பார்க்கிறேனா என்பதற்கான உத்தரவாதங்கள் இல்லை. இந்த நேரத்தில் வேறு எண்ணங்கள் எனக்கு இல்லை என்றாலும் அதை உறுதியாகச் சொல்லமுடியாது என்பதையும் உணர்கிறேன்.

பக்கத்து இருக்கையில் ஒரு மாமாவும் மாமியும் இருந்தார்கள். வண்டி கிளம்பிய பத்து நிமிடத்திற்கெல்லாம் தனது பர்த்தில் படுக்க ஆயத்தப்பட்டுக்கொண்டார்கள். எனக்கு அப்பர் பர்த். அவர்களுக்கு வழி விட்டு, நான் எனது பர்த்தில் மேலேறிப் படுத்துக்கொண்டேன். மாமி லோயர் பர்த்திலும் மாமா மிடில் பர்த்திலும் படுத்துக்கொண்டார்கள். அந்தப் பெண் எதிர் வரிசையில் உள்ள லோயர் பர்த்தில் அவள் ஏற்கனவே அமர்ந்திருந்த அதே நிலையில் அமர்ந்து அதே புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தாள். நான் என் கண்களை மூடித் தூக்கத்தை எதிர்நோக்கத் தொடங்கினேன். தூக்கத்தைத் தவிர மற்ற விஷயங்கள் எல்லாம் மனதுள் அலையாடின. மனதை இழுத்துப் பிடித்து நிறுத்துவது சிரமாமாயிருந்தது. இப்படிச் சிரமமாய் இல்லாமலிருந்திருந்தால் நேற்றே அதை நிறுத்திக் கொஞ்சம் தப்பித்திருக்கலாம். எதுவும் நம் கையில் இல்லை என்கிற சால்ஜாப்புகள் உதவாமல் போனது குறித்துத் துக்கம் தொண்டையை அடைத்தது. இந்தக் காமம் என்கிற பாம்பு எப்போதும் என்னைச் சுற்றியே இருந்திருக்கிறது. எட்டாம் வயதிலேயே காமத்திற்குட்ட காலங்கள் இருந்ததாக என் நினைவு சொல்லியது. எட்டு வயதில் காமம் இருந்திருக்க முடியுமா என்று ஏதேனும் டாக்டரிடம் கேட்கவேண்டும். பதிமூன்றாம் வயதில் சுந்தர் அவனது பள்ளியிலிருந்து கிழித்துக்கொண்டு வந்திருந்த இரண்டு பக்கங்களைக் காண்பித்தபோது உடம்பு சில்லிட்டது. உடம்பின் அத்தனை ரத்தமும் ஒரே இடத்தில் குவிய நான் நிலை கொள்ள இயலாமல் கால் தள்ளாடி அந்த மின் கம்பத்தின் கீழே நின்றிருந்த காட்சிப் படிமம் இப்போதும் என்னுள் அப்படியே அடங்கிக் கிடக்கிறது. அந்த மூன்று பக்கங்கள் மிகவும் கொச்சையான மொழியில் ஆண் பெண் உடலுறவைச் சொல்லிக்கொண்டே போனது. அதில் சொல்லப்படும் கதை போன்ற ஒன்று கூட இன்னும் நினைவிருக்கிறது. முதலிரவுக்குக் காத்திருக்கும் ஒரு கணவனின் எண்ணங்களும் அவனை ஏமாற்றி விட்டு அந்தப் பெண் இன்னொருவனும் உறவு கொள்ளப்போவதும்… இது இப்போது தேவையா? கண் விழித்துப் பார்த்தேன். அரைத் தூக்கத்தில் இருந்திருக்கிறேன். கண் எரிந்தது. கம்பார்ட்மென்ட்டின் விளக்கை யார் எப்போது அணைத்தார்கள் எனத் தெரியவில்லை. தலை கடுமையாக வலித்தது. நேற்றிரவும் தூக்கமில்லாமல் கழிந்தது. அந்த இரவின் சம்பவம் உடலுக்கும் மனதுக்கும் ஏற்றிய அசதியும் வெம்மையும் ஒரே போக்காகத் தலைக்குள் புகுந்துகொண்டது போல. ஒருக்களித்துப் படுத்தேன். கம்பார்ட்மென்ட்டின் இருக்கைகள் கண்ணுக்குப் புலப்படத் தொடங்கியது.

மருத்துவப் புத்தகத்தைக் கையில் வைத்துப் படித்துக்கொண்டிருந்த பெண் லோயர் பர்த்தில் படுத்திருந்தாள். அவளின் அருகில் அவளை ஒட்டினாற் போல் இன்னொரு பையன் படுத்திருந்தான். அவனுக்கு வயது இருபது அல்லது இருபத்தி ஒன்று இருக்கலாம். எனக்குப் பக்கென்று இருந்தது. அவன் எப்போது வந்தான், எப்படி வந்தான்? இருவரும் மெல்ல கிசு கிசுவெனப் பேசிக்கொண்டார்கள். அவன் கிசு கிசுவென பேசும் வாக்கில் அவன் உதட்டால் அவளின் செவியையும் அங்கு சூழ்ந்திருந்த அவளது கூந்தலையும் ஒதுக்கித் தள்ளினான். அவனது ஒவ்வொரு உசுப்பலுக்கும் அவள் இடங்கொடுத்து அவனை வெறி கொள்ளச் செய்தாள். எனக்குள் அடங்கிப் போயிருந்த காமம் மீண்டும் தலைதூக்குவதை உணர்ந்தேன். நேற்று இதே போல் ஒரு நிலையில் நான் இருந்தது நினைவுக்கு வந்தது. ஆனால் கீதாவை நான் உசுப்பேற்றத் தேவையில்லாமல் இருந்தது. மிகவும் தீர்க்கமான முடிவுடனேயே அவள் என்னை அணுகியிருக்கிறாள் என்பது எனக்கு இப்போது புரிந்தது. அப்படியானால் அவள் மனக்கண்ணில் இத்தனை நாள் நான் இப்படி ஒரு பிம்பத்தைப் பெற்றிருந்திருக்கிறேன் என நினைத்தபோது என்னுள் ஏதோ விட்டுப்போனது. கீதா எனக்கென ஒரு சுதாரிப்பு நேரத்தைக் கூடக் கொடுக்கவில்லை. பரபரவென என் மீது பரவினாள். தூக்கத்தில் இருந்த எனக்கு என்ன நடக்கிறது எனப் புரிவதற்குள் நிலைமை கட்டுக்குள் இல்லாமல் போயிருந்தது. இது ஒரு அத்துமீறல்தான். இதுவே வேறொரு விஷயத்தில் இருந்திருந்தால் எனது ஈகோ, எனது சுய கௌரவம் போன்ற விஷயங்களை எல்லாம் சம்பந்தப்படுத்தி ஏதேதோ யோசித்து, ராஜாவுடன் தர்க்கித்து ஒரு பெரிய இருப்பை ஏற்படுத்தியிருப்பேன். ஆனால் இந்த முறை காலையில் கிளம்பும்போது, போயிட்டு வர்றேன் கீதா என்றுதான் சொல்லிவிட்டு வரமுடிந்தது.

மருத்துவம் படிக்கும் பெண்ணும் அந்தப் பையனும் இன்னும் நெருக்கமாகப் படுத்துக்கொண்டார்கள். நான் அவர்களைக் கவனிக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ரயில் எதுவுமே நடக்காதது மாதிரி கருமமே கண்ணாகப் போய்க்கொண்டிருந்தது. இந்த ரயிலைப் போன்ற மனநிலை ஒரு மனிதனுக்கு வாய்த்திருந்தால் அவனே நிச்சயம் பெரிய ஞானியாக இருந்திருப்பான். ஒவ்வொரு நாளும் ரயிலுக்குள் நடக்கும் சம்பவங்கள், பேச்சுகள், சண்டைகள், கலவிகள் போன்றவற்றை யாரோ ஒருவன் தினமும் பார்த்து அதையெல்லாம் பதிந்து வைத்திருந்தால் அதுவே மனித குலத்தின் மகா காப்பியமாக இருந்திருக்கும். அந்தப் பெண் தன் இடையை அவனுக்கு ஏற்றவாறு அவன் அருகில் வைத்துப் படுத்துக்கொண்டாள். அவளின் காலின் மீது அவனது கால்களைப் போட்டுக்கொண்டு, இடது கையை அவளின் வயிற்றின் மீது போட்டுக்கொண்டு, அவளை அணைத்து ஒருக்களித்துப் படுத்துகொண்டான் அவன். அவள் கண்களைத் திறக்கவே இல்லை. அவனும் அவன் கண்களைத் திறக்கவே இல்லை. இரண்டு பேரும் ஏதேதோ முனகிக் கொண்டார்கள். மற்ற பர்த்களில் இருந்த மாமாவும் மாமியும் விட்ட குறட்டையை மீறி அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது கேட்கவே இல்லை. அவன் அவளைத் தன் கால் கொண்டு இறுக்கிக்கொண்டான். அவள் இலேசாக ஒருக்களித்துப் படுத்துக்கொண்டாள். அவன் அவளை மெல்ல முத்தமிட்டான். நான் பெற்ற முத்ததின் வெறியே இன்னும் அடங்காத நிலையில் இந்த முத்தம் இன்னும் என்னை வெறிகொள்ளச் செய்தது. அடுத்த நிறுத்ததில் இறங்கி மீண்டும் திருச்சி சென்று, கீதா அறியாதவாறு அவள் அருகில் படுத்துகொள்ளலாம் என்று தோன்றியது. இந்த எண்ணம் தோன்றவுமே கீதாவைப் பற்றி இப்படித்தான் இத்தனை நாள் நினைத்திருக்கிறேன் போல என்ற எண்ணமும் எழுந்தது. என் உள் மனதில் அடங்கிக் கிடந்த எண்ணம்தான் அவள் என் மீது பரவும்போது எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க வைத்ததோ. மீண்டும் மீண்டும் இந்தக் களியாட்டங்களில் என் மனம் சுழல்வதை நினைத்து வெறுத்து, இனி அவர்களைப் பார்க்கக்கூடாது என முடிவு கட்டி, கண்ணை இறுக்க மூடிக்கொண்டு படுத்தேன். ரயில் மதுரையைக் கடந்திருக்கும். இன்னும் மூன்று மணிநேரத்தில் திருநெல்வேலியில் இறங்கிக் காலையிலேயே அம்மாவின் முகத்தைப் பார்த்துவிடலாம். அம்மாவின் முகம்தான் எத்தனை சாந்தமானது. இதுவரை நான் பார்த்தது போல் அம்மாவின் முகத்தை என்னால் களங்கமில்லாமல் பார்க்கமுடியுமா? இந்தச் சந்தேகம் பரவவும் எனக்குள் ஒரு பீதி எழுந்தது. இனி அம்மாவின் மடியில் தலை வைத்து என்னால் தூங்க முடியுமா? மருத்துவம் படிக்கும் பெண்ணின் சிரிப்பொலி கேட்டது. நான் பார்த்தபோது அவள் அவன் கையை இரண்டு முறை செல்லமாகத் தட்டினாள்; பின்னர் மீண்டும் சிரித்தாள். கீதாவின் சிரிப்பொலி ஒரு மாதிரியாகக் கொணட்டிச் சிரிக்கும் சிரிப்பொலி. அவளைப் பலமுறை கொணட்டி என்று கேலி செய்திருக்கிறேன். காவேரியின் கரைகளில் பதினெட்டாம் பெருக்கு அன்று உணவு உண்ட ஒரு சமயத்தில் அவளைக் கொணட்டி எனச் சொல்லப்போக அவளின் அத்தை பையன் என்னைக் கடுமையாகத் திட்டினான். மறுநாள் கீதா என்னிடம் அவனைக் கண்டுக்காத, அவன் யாரு, நீ சொல்லு என்று சொன்னாள். அப்போது எனக்குச் சந்தோஷமாக இருந்தது. அந்தச் சந்தோஷம்தான் வித்தாகி மரமாகி அவளாலேயே வீழ்த்தப்பட்டிருக்கிறது. பேசாமல் கீதாவைத் திருமணம் செய்துகொண்டுவிட்டு இந்தக் குற்ற உணர்ச்சியில் இருந்து தப்பித்துவிடலாம் என்றாலும் அதற்கும் வழி இல்லை. அவளுக்கும் எனக்கும் ஒரே வயது. இதெல்லாம் சரிப்படாது என்று எனக்கே புரிந்தது. அதுமட்டுமில்லாமல் உண்மையிலேயே நான் குற்ற உணர்ச்சியில் இருக்கிறேனா என்பது பற்றி எனக்கே சந்தேகம் இருந்தது. இல்லையென்றால் மீண்டும் கீதா அருகில் சென்று படுத்துக்கொள்ளலாம் என எப்படித் தோன்றும்? அவளும் நானும் கலந்து கிடந்தபோது அடுத்த கட்டில் கீதாவின் அம்மா மடக் மடக்கென தண்ணீர் குடிக்கும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் என் தவறையும் என் நிலையையும் உணர்த்த அவளை விட்டு நான் விலக முற்பட்டபோது, அவள் என்னை விடவில்லை. விடவே இல்லை. இப்போது அந்தப் பெண் விடுபட நினைக்கிறாள். அவன் விடவில்லை. அவனின் ஆள்காட்டி விரல் அவளின் வயிற்றுக்கு மேலே வட்டங்களாக இட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வட்டங்கள் அவளை மெல்ல மெல்ல சூழ்கின்றன. அவளால் அந்த வட்டத்தை விட்டு வெளியே வர இயலாது என்பது எனக்கு அனுபவபூர்வமாய்த் தெரியும். கீதாவின் அம்மா போல யாரேனும் தண்ணீர் குடிக்கவேண்டும். யாரேனும் எதையேனும் மடார் என்று கீழே போடவேண்டும். அப்போதுதான் கொஞ்சம் தெளியும் அப்பெண்ணுக்கு. அந்த யாரோ நானேவாக இருக்கலாம். சத்தமாக இருமினேன். அந்த இருமல் அவர்களைக் கவனம் கொள்ளச் செய்தது. அதைவிட என் மேல் அப்பிக்கிடந்த கீதாவும் அவளின் எண்ணங்களும் கொஞ்சம் தெறித்து விழ எனக்கே உதவியது. இதை அறிந்ததும் மீண்டும் மீண்டும் இருமினேன். மாமாவின் குறட்டை நின்றது. நான் தட தடவெனச் சத்தம் வரும்படியாக அப்பர் பர்த்தில் எழுந்து உட்கார்ந்தேன். லோயர் பர்த்தைப் பார்த்தேன். அந்தப் பையனைக் காணவில்லை. எப்போது எப்படி ஓடினான் எனத் தெரியவில்லை. அந்தப் பெண் ஒன்றுமே நடக்காத மாதிரி போர்வையைப் போர்த்திக்கொண்டு ‘தூங்கிக்’கொண்டிருந்தாள். அவளின் சீரான குறட்டை ஒலி என்னைக் கலவரப்படுத்தியது. இப்படியும் பெண்கள் இருக்கிறார்கள் என்று. அடுத்த நொடியே ‘போயிட்டு வர்றேன் கீதா’ என்று சொன்ன என்னை மாதிரியே எனத் தோன்றியது.

பர்த்தில் இருந்து இறங்கி மூத்திரம் கழித்துவிட்டு மீண்டும் பர்த்தில் ஏறிப் படுத்தேன். தூக்கம் வருவது போன்று இருந்தது. இனி கீதா இல்லை, அந்தப் பெண்ணும் அந்தப் பையனும் இல்லை, கனவுலகம் என்னை மெல்ல மெல்ல இழுத்துக்கொண்டு செல்லும். கனவுலகம் நினைவுலகத்தை விட சுமாராக இருந்தது. அங்குச் சிவப்பு நிற மலர்கள் பூத்திருந்தன. தாமிரபரணி பெருக்கெடுத்து ஓடியது. வெயில் குறைவாக அடித்தது. மாரியம்மன் கோவிலில் கொடி ஏற்றியிருந்தார்கள். என் அம்மா வீட்டில் பாயாசம் செய்து வைத்திருந்தாள். பூனைக்குட்டி குதித்தாடியது. வேறோர் இடத்தில் பெரும் மழை பெய்தது. மழையில் கருப்புச் சேலை அணிந்த ஒரு பெண் வெற்றிச் சிரிப்புடன் வந்தாள். அவள் கீதாவாக இருக்குமோ? சட்டென கண் விழித்தேன். ரயில் சீரான ஜதியில் ஓடிக்கொண்டிருந்தது. மாமாவும் மாமியும் எழுந்து உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பெண் நிஜமாகவே தூங்கிவிட்டிருந்தாள். கங்கை கொண்டானை நெருங்கியிருக்கவேண்டும் என்று உள்மனது சொல்லியது. நானும் எழுந்து உட்கார்ந்தேன். என்னுடைய மொபைலை சுவிட்ச் ஆன் செய்தேன். வரிசையாக ஏழெட்டு மெசேஜ்கள் வந்து விழுந்தன. அத்தனையும் அம்மா அனுப்பியது. ஆறு மெசேஜ்கள் where are you? என்று இருந்தது. ஏழாவது மெசேஜ் Happy Birth Day என்று இருந்தது. இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தவை எல்லாம் ஒரு நாள் இரவில் மாறிப்போன ஞாபகம் வந்தது. அந்த மெசேஜைப் பார்த்துக்கொண்டிருந்தபோதே அம்மா அழைத்தாள்.

“சொல்லும்மா’

“ஹாப்பி பர்த்டேடா செல்லம்”

அம்மாவின் கொஞ்சல் என்றுமில்லாமல் அந்நியமாகப்பட்டது.

“தேங்க்ஸ்.”

“ஏண்டா டல்லா இருக்க? டயர்டா இருக்கா? எங்கே இருக்க? ஏன் மொபைலை ஆ·ப் பண்ண? எத்தனைத் தடவை சொல்லியிருக்கேன், மொபைலை ஆ·ப் பண்ணாதேன்னு. சரியான தூங்கு மூஞ்சி. சீக்கிரம் வாடா செல்லம். பார்த்து ரெண்டு நாளானதே என்னமோ மாதிரி இருக்கு”

“ம்”

“நா இவ்ளோ பேசறேன், வெறும் ம் தானா? சரி சீக்கிரம் வா, கோயிலுக்குப் போகணும், அப்பா காத்துக்கிட்டு இருக்கார்”

போனை வைத்துவிட்டாள். மணியைப் பார்த்தேன் ஐந்து காட்டியது. நான் வீட்டிற்குப் போகுமுன்பு அம்மா குளித்துவிட்டு தயாராகக் காத்திருப்பாள். அம்மாவின் குரலைக் கேட்டதும் என் கஷ்டங்கள் எல்லாம் கரைந்து போனது போலத் தோன்றியது. அம்மாவின் உற்சாகம் என்னையும் பற்றிக்கொண்டதோ. கனவில் வந்த பெண்ணை கனவோடு மறந்துவிடுகிற மாதிரி கீதாவைக் கனவாக மறந்துவிட வேண்டும் என உறுதி எடுத்துக்கொண்டேன். அம்மாவின் செல்லம் என்கிற வார்த்தை நான் எங்கோ ஓரிடத்தில் இன்னும் சின்னப் பையனாக இருக்கிறேன் என்று சொல்லியது. அந்த எண்ணம் என்னை ஒரு சிறு பையனாக மாற்றியது. சிறு பையனின் மூளைக்குள் ஏறிக்கிடந்த தேவையற்ற எண்ணங்களைத் தூக்கி எறிய நான் முயன்றேன். இப்படியே இன்னும் கொஞ்சம் முயன்றால், அம்மாவை நேரில் பார்க்கும்போது அவள் கண்ணில் தெரியும் அந்தச் சிறுவனில் இன்னும் கொஞ்சம் கரையலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.

ரயில் திருநெல்வேலியில் நின்றது. எனது பதின்ம வயதின் உச்ச நிகழ்ச்சியை, என் வாழ்நாள் முழுதும் நான் சுமக்கவேண்டிய அந்த நினைவை மட்டும் எடுத்துக்கொண்டு, என் குற்ற உணர்ச்சியை ரயிலிலேயே விட்டு விட்டுக் கீழிறிங்கினேன். ஜன்னல் வழியாக அந்தப் பெண் எட்டி என்னைப் பார்த்தாள். “பை பை” என்றேன். திடுக்கிட்டுத் தலையை உள்ளிழுத்துக்கொண்டாள். திருச்சி ரயில் நிலையத்தில் ஒட்டியிருந்த அதே போஸ்டர் திருநெல்வேலியிலும் படபடத்தது. கையைத் தலைக்கு மேலே குறுக்கே கட்டித் தன் மார்பை எடுப்பாகக் காட்டிக்கொண்டிருந்தாள் ஒரு நடிகை. ஒரு நிமிடம் நின்று இரசித்துவிட்டுத் தொடர்ந்து நடந்தேன்.

-oOo-

தமிழோவியம் – தேன் கூடு போட்டிக்கான (வளர்சிதை மாற்றம்) படைப்பு.

Share

Comments Closed