மிக நீண்டிருந்த அந்தக் குறிப்புகளை வாசிக்க ஆரம்பித்தேன். கடந்த இருநூற்றம்பைது ஆண்டுகளில் எனக்குத் தேவையான சில முக்கியக் குறிப்புகளைத் தருமாறு ஸ்நெல்லிடம் கேட்டபோது அவன் முகம் விநோதமாக மாறியதைக் கவனித்தேன். அதை நான் விரும்பவில்லை என்பதையும் ஸ்நெல் உடனே கண்டுகொண்டான். வழக்கமாக அனுப்பும் மின்னஞ்சல் முகவரிக்கு அதை அனுப்பாமல், அதனைப் பிரதி எடுத்துக் கையில் தருமாறு சொன்னபோது அவன் கொஞ்சம் வெளிறியதாகவே தோன்றியது. மிக முக்கியமான அரசு விஷயங்கள் எக்காரணம் கொண்டும் பிரதமரின் மின்னஞ்சல் முகவரியைத் தவிர வேறெந்த முகவரிக்கும் அனுப்பப்படக்கூடாது என்பது சட்டம். என் சட்டம். மேதகு கஹானி வதேராவின் சட்டம். அதுவும் ஸ்நெல் போன்ற உயர் அரசுப் பதவியில் இருப்பவரது மடல்கள் வேறெங்கும் அனுப்பப்படவே கூடாது. பிரமதராகிய நானே கேட்டபோது ஸ்நெல்லால் அதை மறுக்கமுடியவில்லை. மீறி மறுத்தால் இந்த அறிவியல் யுகத்தில் அவன் பிறந்ததற்கான அடையாளங்களே இல்லாமல் போகச் செய்துவிடமுடியும். இதைப் போல அரசாங்க எதிரிகள் பலரை ஸ்நெல்லே முன்னின்று கொன்றிருக்கிறான். அதனால் அவன் மறு பேச்செதுவும் பேசாமல் ஒத்துக்கொண்டான்.
அந்தக் குறிப்புகளை வாசிக்கத் தொடங்கினேன். அது ஸ்நெல்லின் முன்னுரையுடன் ஆரம்பித்தது.
* மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் திரு. கஹானி வதேராவுக்கு என் மரியாதையான வணக்கங்கள். வேறு வழியில்லாமலேயே இந்தப் பிரதியை உங்கள் கைகளில் தருகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். இதன் ரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் வரையில்தான் என்னுயிருக்குப் பாதுகாப்பு இருக்கும். இதை உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை என்றாலும் உங்களின் மேதகு கவனத்திற்குக் கொண்டுவருவது என் கடமையாகிறது.
* நீங்கள் சில குறிப்புகள் கொடுத்து அதன் அடிப்படையில் இக்கட்டுரையைத் தயார் செய்யச் சொல்லியிருந்தீர்கள். நீங்கள் கேட்டிருந்த விவரங்கள் அனைத்துமே நீங்கள் முன்னரே அறிந்தவைதான். மேதகு பிரதமரின் கட்டளைக்கிணங்கி அவற்றைத் தந்திருக்கிறேன்.
* ஒரு வசதிக்காக 2100-ஆம் வருடத்திலிருந்து ஆரம்பிக்கிறேன். அதற்கு முன்னரே நமது நாடு அறிவியலின் அதிகப் பயன்பெறு நாடாக மாறிவிட்டபோதும், 2100-ஆம் ஆண்டிலிருந்து தொடரும் ஆண்டுகளையே நமது நாட்டின் அதி வேக வளர்ச்சி ஆண்டுகளாக உலக நாடுகள் அங்கீகரித்தன. அதனால் 2100-ஆம் ஆண்டிலிருந்தே தொடங்குகிறேன்.
* 2100-ஆம் ஆண்டில் யாரும் எதிர்பார்க்காத ஓர் அறிக்கையை, அன்றையப் பிரதமராக இருந்த திரு.சஞ்சீவ் சிங் வெளியிட்டார். திரு. சஞ்சீவ் சிங் வெளியிட்ட அறிக்கை நமது பாரதத்தையே ஸ்தம்பிக்க வைத்தது எனலாம். எதிர்க்கட்சிகள் மற்றும் அரசு ரகசியக் குழுக்களின் முடிவை மீறி, அவர் அந்த அறிக்கையை வெளியிட்டார். நாட்டில் நடக்கும் விஷயங்கள் ஒரு வெளிப்பாடான தன்மை கொண்டிருக்கவேண்டும் என்ற அவரது கொள்கை அவ்வறிக்கையை வெளியிடச் செய்தது. அதன்படி 1930 ஆண்டு தொடக்கத்திலிருந்து, முக்கியமான ஆளுமைகளின் மரபணுக்கள் சேமிக்கப்படுகின்றன என்றும் அவற்றின் க்ளோன்களை நாம் நினைத்த மாத்திரத்தில் உருவாக்கிவிட முடியும் என்றும் அதற்கான முயற்சிகள் பரிசீலனைக் கட்டத்தைத் தாண்டி, வெற்றி பெற்றிருக்கிறது என்று அரசின் சார்பாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பினால் அவரது ஆட்சி பறிபோனது. அதைத் தொடர்ந்து வந்த அரசுகள் க்ளோனிங் முறைப்படி புதிய படி-உயிரிகள் தயாரிக்கும் திட்டத்தைத் தடை செய்தன.
* 2220-ஆம் ஆண்டைப் பற்றிய சில குறிப்புகளைக் கேட்டிருந்தீர்கள். அப்போது பாரதப் பிரதமராக இருந்தவர் தற்போதைய எதிர்க்கட்சியின் ஸ்தாபகரான திருமதி.ரேணுகா பிஸ்வால். அவர் க்ளோனிங் உருவாக்கத் தேவையான மரபணுக்களைச் சேகரித்து வைத்திருக்கும் மையம் [Clone and Bio-Technology Institute of Pune] புனேவில் இருந்தது என்றும் அது அழிக்கப்பட்டுவிட்டது என்றும் அறிவித்தார். மேலும், மரபணுக்களைச் சேகரித்து வைப்பதுவோ, க்ளோனிங் முறையில் படி-உயிரி தயாரிப்பதுவோ, மரண தண்டனைக்குரிய குற்றம் என்றும் அறிவித்தார்.
* 2276-ஆம் ஆண்டில் ஏற்பட்ட உலகப்போரில் உலகம் பெரும் நாசங்களைச் சந்தித்தது. அப்போது உங்கள் தந்தையார் பிரதமராக இருந்தார். உலக வல்லரசுகளாக இருந்த பெரும் நாடுகள் தங்கள் சாவுமணியைத் தாமே அடித்துக்கொண்டன. சுமார் ஏழரை ஆண்டுகள் நீடித்த அப்போர், அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டதால் ஒரு முடிவுக்கு வந்தது. உலகின் ஜனத்தொகையில் 36% மடிந்ததாக ஐ.நா.வின் ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் லேசான சேதத்துடன் தப்பித்துக்கொண்டன.
* 2285- ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் உங்கள் தந்தையார் மேதகு ரஜதேவ் வதேரா பெரும் வெற்றி பெற்றார். அவரது ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் அறிவியல் துறை அசுர வளர்ச்சி கண்டது.
* 2289-ஆம் ஆண்டு, கத்தாரில் நடந்த ஒரு மாநாட்டில் பங்கேற்க உங்கள் தந்தை மேதகு ரஜதேவ் வதேரா சென்றிருந்தபோது, அவரைப் போன்ற மனிதர் ஒருவரை டில்லியில் பார்த்ததாக எதிர்க்கட்சிகள் புரளியைக் கிளப்பின. அதைத் தொடர்ந்து க்ளோனிங் விவகாரம் மீண்டும் சூடு பிடித்தது. தன்னைப் போல க்ளோனிங் உருவாக்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் பரப்பிய குற்றச்சாட்டை மேதகு ரஜதேவ் வதேரா வன்மையாக மறுத்தார்.
* 2290-ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மேதகு ரஜதேவ் வதேரா பெரும் தோல்வி அடைந்தார். க்ளோனிங் விஷயத்தை எதிர்க்கட்சிகள் திறமையாகப் பயன்படுத்திக்கொண்டன. தோல்வியினால் துவண்ட மேதகு ரஜதேவ் வதேரா, அதே ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்குப் பின்னரும் அவரது க்ளோனிங் பற்றிய புரளிகள் தொடர்ந்துகொண்டே இருந்தன. ஆனாலும் அவரது அறிவியல் மற்றும் உயிரியல் துறைகளின் மீதான தீர்க்க தரிசனத்தை முன்னிறுத்தி, உலக நாடுகள் அனைத்தும் அவரை “நவீன பாரதத்தின் தந்தை” என்று அங்கீகரித்தன.
* 2298-ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் உங்கள் தலைமையில் நமது கட்சி பெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து 22 ஆண்டுகள் நீங்கள் தொடர்ந்து பாரதத்தின் பிரதமராக, யாராலும் அசைக்க முடியாத நிரந்தரத் தலைவராக நீடித்து வருகிறீர்கள். நீங்கள் அறிவியல் துறையில் செய்த சாதனைகள் மகத்தானவை.
* நமது அறிவியல் யுகத்தில் உலகமே நம்மைத் திரும்பி நோக்கியது 2303-ஆம் ஆண்டில்தான். அந்த ஆண்டுதான் க்ளோனிங் முறைப்படி படி-உயிரி செய்வது தவறல்ல என்ற கொள்கை முடிவை நமது அரசு அறிவித்தது. அதை அறிவித்த நாளே உங்கள் வாழ்க்கையின் சிறந்த நாளாக நீங்கள் பிரஸ்தாபித்துக்கொண்டீர்கள். உலகில் முதன்முதலாக, க்ளோன் உயிரி உருவாக்கப்படுவது தவறல்ல எனக் கொள்கை முடிவெடுத்த நாடு நமதே. மேலும் 1930-ஆம் ஆண்டுமுதல் முக்கிய ஆளுமைகளின் மரபணுக்கள் சேமிக்கப்படுகின்றன என்றும் அவை சேமித்து வைக்கப்பட்டிருக்கும் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் [CBTI of Pune] அவற்றை இன்னும் பாதுகாத்து வருகிறது என்றும் அறிவித்தீர்கள். முன்னாள் பிரதமர் திருமதி. ரேணுகா பிஸ்வால் 2220-ஆம் ஆண்டு அறிவித்தது போல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் அழிக்கப்படவில்லை என்றும் அறிவித்தீர்கள். இதுவரை ஆண்ட எல்லாக் கட்சிகளும் இத்திட்டத்திற்கு மறைமுக ஆதரவைக் கொடுத்தன என்றும் இனியும் மரபணு சேமிப்புத் தொடரும் என்றும் அறிவித்தீர்கள். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களை அறிவியல் வன்கரம் கொண்டு அடக்கியது நமது அரசு. க்ளோன் முறைப்படி படி-உயிரி தயாரிக்கப்படுவதை எதிர்த்த அனைத்து மனிதர்களும் தடம் தெரியாமல் அழிக்கப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து க்ளோன் எதிர்ப்புக் கலவரம் மெல்ல அடங்கியது. நமது நாடும் அறிவியல் யுகத்தில் ஆழமாகத் தன்னைப் பதித்துக்கொண்டது.
* பல முற்காலத் தலைவர்களை ஒத்த க்ளோனிங் மாதிரிகளைப் பற்றிய கட்டுக்கதைகளும் புரளிகளும், திரைப்படங்களும் இப்போதும் நம் நாட்டில் உலவி வருகின்றன. ஆனால் நம்முடைய அரசு கொள்கை முடிவாக ஏற்றுக்கொண்டதே ஒழிய, எந்தத் தலைவரின் உயிர் மாதிரியையும் உருவாக்கவில்லை என்பதே உண்மை.
இன்னும் நீண்டு கொண்டு செல்லும் அறிக்கை எனக்கு அயர்ச்சியைத் தந்தது. ஸ்நெல் என்னைச் சந்தோஷப்படுத்தும் குறிப்புகளை மட்டும் தந்திருக்கிறான் போல. அவனைத் தொலைபேசியில் அழைத்தேன்.
“மேதகு பிரதமருக்கு என் வந்தனங்கள்”
“நான் கேட்பதற்குச் சுருக்கமாய்ப் பதில் சொல். க்ளோனிங் முறைப்படி உயிரிகள் நமது அரசில் உருவாக்கப்படவே இல்லை என்கிறாயா? உண்மையச் சொல்.”
“மேதகு பிரதமர் அறியாததல்ல…”
“எனக்குத் தேவையற்ற விளக்கங்கள் வேண்டாம். நேரடியான பதிலை எதிர்பார்க்கிறேன்.”
“நான் நேரில் வருகிறேன்” என்றான் ஸ்நெல்.
ஐந்து நிமிடங்களுக்குள் ஸ்நெல் வந்தான். யாராலும் வேவு பார்க்கமுடியாத என் ரகசிய அறைக்குள் சென்றோம்.
“ஸ்நெல், எத்தனை க்ளோன்களை இதுவரை நாம் உருவாக்கியிருக்கிறோம்?”
“நீங்கள் மீண்டும் மீண்டும் என்னிடம் கேட்பது ஆச்சரியமாக இருக்கிறது. உங்களுக்குத் தெரியாததல்ல…”
“சரி விஷயத்திற்கு வருகிறேன். நீ நினைப்பது போல நான் கஹானி வதேரா அல்ல”
ஸ்நெல் அதிந்து, “க்ளோன்?” என்றான். நான் தலையசைத்தேன். ஸ்நெல்லுக்கு வேர்த்தது. அவனது கவனமெல்லாம், நான் எப்படித் தப்பினேன், எப்படி இங்கு வந்தேன், நிஜமான கஹானி வதேரா என்ன ஆனான் என்பது பற்றியே இருந்தது.
“இந்த நாட்டின் நன்மையைக் கருதி, கஹானி வதேரா இனியும் பிரதமராகத் தொடர்ந்தால், நாட்டில் ஜனநாயகம் என்பதே ஒழிந்துவிடும் என்று யூகித்து, இந்தத் திட்டத்தை நாங்கள் ஒரு குழுவாகச் செயல்படுத்தினோம்”
“நாங்கள் என்றால்…?”
பெயர்களைச் சொன்னேன். ஸ்நெல்லால் நம்பவே முடியவில்லை.
“நீங்கள் சொல்பவர்கள் எல்லாம் மேதகு கஹானி வதேராவின் அரசின் அதி ரகசியக் குழுவின் அங்கத்தினர்கள். அவர்களா?!”
“அதனால்தான் இந்தத் திட்டம் சாத்தியமாயிற்று. அரசின் அதி ரகசியக் குழுவின் அங்கத்தினர்கள் வேவு பார்க்கப்படுவதில்லை என்பதை நீ அறிவாயே…!”
நான் தொடர்ந்தேன்.
“அந்தக் காலத்தில் மகன் தகப்பனுக்குக் கொள்ளி வைப்பானாம். கஹானி வதேராவுக்கு அவன் தகப்பன் ரஜதேவ் வதேராவே கொள்ளி வைத்தான். பாரதத்தின் முதல் க்ளோன் யாரென்று தெரியுமா? நான் தான். கஹானி வதேரா பிறந்த உடனேயே நானும் உண்டாக்கப்பட்டேன். இருவருக்கும் ஒரே வயது, ஒரே உருவம். ஆனால் எண்ணங்கள் மட்டும் வெவ்வேறு. கஹானி வதேராவின் பல திட்டங்கள் நாட்டைச் சீரழிப்பதாயும் அவனைத் தவிர வேறு யாரும் நாட்டின் தலைவனாக முடியாது என்பதைச் செய்யும் நோக்கம் உடையதாயும் அமைந்ததை நீ அறிந்திருப்பாய். இந்தியாவில் கிராமங்களே இருக்கக்கூடாது என்பதற்கு அவன் மேற்கொண்ட ஆபரேஷனில் எத்தனைக் கிராமங்களும் கிராமத்தைச் சேர்ந்த மக்களும் அழிந்தார்கள் என்பது நீ அறிந்ததுதானே? ஒரு புள்ளி விவரக் கணக்கு 22 கோடி மக்கள் இறந்ததாகத் தெரிவிக்கிறது. அவர்கள் பிறந்து உயிர் வாழ்ந்ததற்கான தடயங்கள் கூட இல்லை.”
இதைச் சொல்லும்போதே எனக்குப் பதறியது.
“நீ அவனை எதிர்த்துப் பேசினால், நீ இம்மண்ணில் பிறந்ததற்கான அடையாளமே தெரியாமல் போகச் செய்யும் அளவிற்கு இந்நாட்டில் அறிவியல் மற்றும் உயிரியல் துறைகள் அவனுக்கு ஒத்துழைக்கத் தயாராய் இருக்கின்றன. அதற்குப் பயந்துதானே என்னிடம் இந்தப் பிரதிகளை மின்னஞ்சலுக்கு அனுப்பாமல் என்னிடம் தந்தாய்?”
ஸ்நெல் தலையாட்டினான்.
“இப்படி நேரும் என்று முன்னரே உணர்ந்த எங்கள் குழு என்னைப் பயிற்றுவிக்கத் தொடங்கியது. எனக்கு இருந்த சில மனத் தடைகள் மெல்ல மெல்ல நீங்கத் தொடங்கின. நானே என் மன அளவில் கஹானி வதேராவாக மாறத் தொடங்கினேன்.”
“திரைப்படம் பார்ப்பது போல இருக்கிறது”
“எனக்கும் அப்படித்தான். ஆனால் எனக்கு இப்போது தெரியவேண்டியது ஒரே ஒரு விஷயம். ரஜதேவ் வதேரா எத்தனை க்ளோன்களை உருவாக்கினான்? மூன்று க்ளோன்களை உருவாக்கியதாகச் சில வாய்மொழிக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்கான விவரங்களோ தடயங்களோ இல்லந. முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் மூன்று க்ளோன்கள் உருவாக்கப்பட்டதாக நான் யூகிக்கிறேன். ஒன்று நான். மற்ற இருவர் யாரென்று தெரியுமா? எங்கள் குழுவால் அதைக் கண்டறிய முடியவில்லை.”
“அது மேதகு கஹானி வதேராவுக்குத்தான் தெரியும்.”
“நீ என்னை நம்பவில்லை என்று நினைக்கிறேன். நிஜமாக நான் கஹானி வதேரா இல்லை. நான் அவரது க்ளோன். கஹானி வதேராவை உனக்குக் காட்டுகிறேன் வா” என்று அருகில் இருக்கும் ஒரு ப்ளாஸ்மா திரையின் சுவிட்சை அழுத்தினேன். திரை ஒளிர்ந்தது. ஒரு கண்ணாடிப் பேழையில் குழந்தை போல கஹானி வதேரா உறங்கிக்கொண்டிருந்தான்.
“இந்த விவரம் போதுமா, இல்லை என் குழுவைச் சேர்ந்த மற்றவர்களையும் உன்னிடம் பேசச் சொல்லட்டுமா”
“வேண்டாம். நான் சொல்கிறேன். மூன்று க்ளோன்கள் என்பது தவறு. மொத்தமே இரண்டு க்ளோன்கள்தான் உருவாக்கப்பட்டன. ஒன்று நீங்கள். இன்னொன்று காந்தி.”
“காந்தி?”
“இன்றுவரை மஹாத்மா என்று போற்றப்பட்டுக் கொண்டிருக்கும் காந்தி. மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி. 1948-இல் சுட்டுக்கொல்லப்பட்ட காந்தி. நம் கட்சியின் ஸ்தாபகராக நாம் அங்கீகரித்திருக்கும் காந்தி. மக்கள் மனத்தில் இன்னும் நீக்கமற நிறைந்திருக்கும் காந்தி.”
எனக்குத் தலை சுற்றியது.
“அவரை ஏன் உருவாக்கினான் ரஜதேவ் வதேரா?”
“நீங்கள் சொன்ன விஷயங்களில் நிறையத் தகவல் பிழைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் விளக்குகிறேன். இவை கஹானி வதேராவின் சட்ட இலக்கணப்படி ராஜதுரோகமாகும். இருந்தாலும் சொல்கிறேன். நம் நாட்டின் நன்மையைக் கருதி”
ஸ்நெல் சொல்லத் தொடங்கினான்.
“முதல் க்ளோன் நீங்கள். அதை உருவாக்கியது ரஜதேவ் வதேரா. காந்தியின் க்ளோன் வைக்கப்பட்ட இடத்தில் நீங்கள் இல்லை. உங்களை ரகசியமான இடத்தில் வைத்திருந்தார் ரஜதேவ் வதேரா. அது எந்த இடம் என்று எனக்குத் தெரியாது. இரண்டாவது க்ளோன் மஹான் காந்தி. அதை உருவாக்கியது கஹானி வதேராதான். ரஜதேவ் வதேரா அல்ல. அதற்கான காரணம் விநோதமானது. என்னதான் சர்வாதிகார ஆட்சி செய்தாலும், ஏதேனும் ஒரு காலத்தில் மக்கள் பெரும் புரட்சியில் ஈடுபடுவார்கள் என்றே எதிர்பார்த்தான் கஹானி வதேரா. அப்போது இந்தக் காந்தி க்ளோனை வைத்து ஒரு நாடகம் நடத்தி மக்களை அமைதிப்படுத்த முடியும் என்று நம்பினான். அதற்குக் காரணம், கடந்த ஆயிரம் ஆண்டில் உலகின் மிகச்சிறந்த தலைவர் காந்திதான் என்று தனிப்பட்ட அளவில் தீவிரமாக நம்பியதே. அதனால் காந்தியால் பெரும் கலகத்தைக் கட்டுக்குக் கொண்டுவரமுடியும் என்பதில் உறுதியாக இருந்தான் கஹானி வதேரா. இப்படி ஒரு எண்ணத்தை அவனுக்குத் தந்தவர்கள் அவன் மிக நம்பும் அறிவியல் மற்றும் உயிரியல் தொழிநுட்பப் பிரிவைச் சேர்ந்த கஹானி வதேராவின் தீவிர விசுவாசிகள். மக்கள் காந்தியின் மீது வைத்திருக்கும் அன்பும் பிம்பமும் அபரிமிதமானது. இன்னும் எங்கேனும் ஒரு மூலையில் காந்தியைப் பற்றிய மக்களின் ஏக்கக் குரலைக் கேட்கமுடியும். அவரைப் போன்ற ஒரு பிம்பம் பாரதத்தில் தோன்றாதா என்று ஏங்குவதைக் காணமுடியும். ஆனால் காந்தியின் க்ளோன் வளர வளர கஹானி வதேராவின் எண்ணம் வலுவிழந்தது. காந்தியின் க்ளோன் தான் ஒரு மஹானின் க்ளோன் என்பதை அறிந்த பிறகு, காந்தியைப் பற்றிய வரலாற்றையும் சாகசங்களையும் படித்த பிறகு, அன்பு, ஆன்மிகம், அஹிம்சை என்று பேச ஆரம்பித்துவிட்டான். கஹானி வதேராவுக்கு எதிரான தனது கருத்துகளையும் கூற ஆரம்பித்துவிட்டான். உயிரியல் தொழிநுட்பப் பூங்காவில் கஹானி வதேராவின் அறிவியல் மய வேகத்தை எதிர்த்து ஒருமுறை உண்ணாவிரதம் கூட இருந்தான். இவன் வெளியில் வருவது ஆபத்து என்பதை உணர்ந்த கஹானி வதேரா காந்தியின் க்ளோனை ஆழ் மயக்கத்தில் ஆழ்த்திவிட்டான். காந்தியின் க்ளோனை கஹானி வதேரா கொன்றுவிடுவான் என்றே நான் எதிர்பார்த்தேன்.”
“ஸ்நெல் நன்றி. இனி நான் பார்த்துக்கொள்கிறேன்”
“என்ன செய்யப் போகிறீர்கள்?”
“பொறுத்திருந்து பாருங்கள்”
இரண்டு நாள்களில் எங்கள் குழு ஒரு திட்டத்தைத் தயாரித்தது. அதற்கு ஆபரேஷன் – அஹிம்சா என்று பெயரிட்டோ ம். அதன்படி, காந்தியின் க்ளோனை விடுவிப்பது என்றும், கஹானி வதேராவாகிய நானே அவரை எங்கள் கட்சியின் தலைவராக்குவது என்றும், அவரது தலைமையின் கீழ் பாரதம், அறிவியல் மயத்திலிருந்து குறைந்து மீண்டும் பசுமைக்கும் அன்புக்கும் அஹிம்சைக்கும் திரும்ப வேண்டும் என்று முடிவு செய்தோம். மேலும் காந்தியின் க்ளோன் பதவி ஏற்றதும் யாரும் அறியாதவாறு கஹானி வதேராவைக் கொல்லவும் முடிவு செய்தோம். அனைவரும் கைகுலுக்கிக் கொண்டோ ம். ஆபரேஷன் – அஹிம்சா ஆரம்பமானது.
ஆனால் விஷயம் நாங்கள் நினைத்தவாறு எளிதாக இருக்கவில்லை. காந்தியின் க்ளோனை எளிதில் விடுவித்துவிட்டோ ம். கஹானி வதேராவே சொல்வதாக எண்ணி, உயிரியல் தொழில் நுட்பப் பூங்காவின் இரகசிய அதிகாரிகள் மிக ஒத்துழைத்து, காந்தியின் க்ளோனை வெளிவிட்டார்கள். கஹானி வதேராவின் ஒவ்வொரு அசைவிற்கும் அறிவியல் நிழலுலகம் எப்படி அசைகிறது என்பதைப் பரிபூர்ணமாக உணர்ந்தேன். நம் நாட்டைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்கிற என் எண்ணம் வலுத்தது. ஆனால் காந்தியின் க்ளோன், காந்தி போலவே இருந்தான், மனத்தளவிலும். இந்த யுகத்திலும் இப்படி ஒருவன் இருக்கமுடியுமா என்று அதிசயக்க வைத்தான் காந்தியின் க்ளோன். தனக்குப் பதவி மோகம் இல்லை என்றும் தான் பதவியில் அமரப்போவதில்லை என்றும் மிக உறுதியாகக் கூறத் தொடங்கினான். எங்கள் குழு அவனுக்குப் பெரும் விளக்கம் அளித்தது. ஒருவழியாக அவன் எங்கள் ஆபரேஷன் – அஹிம்சாவிற்குச் சம்மதித்தான்.
நாடே அல்லோகோலப்பட்டது. உலகின் முதல் மனித க்ளோனாக காந்தியின் க்ளோன் அறிவிக்கப்பட்டது. தங்கள் ஆதர்ச நாயகனை நேரில் பார்த்த அனைத்து மக்களும் உணர்ச்சிவசப்பட ஆரம்பித்தார்கள். “மஹான் காந்தீ மஹான்” என்ற பழம் பிராந்தியப் பாடல் பல இடங்களிலும் ஒலித்தது. காந்தியின் க்ளோனைக் காண [இனி காந்திஜி, எங்கள் பாரதத்தின் பிரமராகப் போகும் மாண்புமிகு காந்தியின் க்ளோனை இனி அப்படித்தான் என்னால் அழைக்கமுடியும்] நாடெங்கும் ஜனத்திரள் திரண்டது. அறிவியல் மயத்திலிருந்து, எந்திரத் தனத்திலிருந்து நாட்டைப் பசுமைக்கும் சுபிக்ஷத்திற்கும் கூட்டிச் செல்ல காந்திஜியினாலே மட்டுமே முடியும் என்று அனைவரும் பிரஸ்தாபித்தார்கள். பழம் படங்களிலிருந்து கண்டுகொண்ட சில மனிதர்கள் குல்லா கூட வைத்திருந்தார்கள். நாடே மிக நீண்ட நாள்களுக்குப் பின்னர் நிஜமான சந்தோஷத்தில் திளைத்திருந்தது.
அதிகாரப்பூர்வமாக எங்கள் கட்சியின் தலைவராகக் காந்திஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் எங்களைப் பாராட்டின. எங்கள் இந்த முடிவு, நாட்டில் நிஜமான ஜனநாயகத்தை மீண்டும் கொண்டு வரும் என்றும் பாராட்டினார்கள். மீண்டும் க்ளோன் முறையில் படி-உயிரி தயாரிப்பதைத் தடை செய்யவும் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காந்திஜியும் நானும் இதை வெகுவாக ஆதரித்தோம். மேலும் இனிமுதல் தனிமனிதனைத் தொடரும் அறிவியல் நிழலுலகம் செயலிழக்கப்படுகிறது என்றும் தனிமனிதனின் தனிப்பட்ட செயல்கள் கண்காணிப்பு உள்ளிட்ட ஜனநாயகத்திற்கு விரோதமான எதையும் அரசு செய்யாது; ஊக்குவிக்காது என்றும் அறிவிக்கப்பட்டது. அது அன்று முதலே நடைமுறைக்கு வரவேண்டும் என்று காந்திஜி விரும்பினார். ஏகமனதாக எல்லாக் கட்சிகளும் அதை ஆதரிக்க, நான் கையெழுத்திட [நான் கையெழுத்திடும் முதலும் கடைசியுமான சட்டம் இதுதான் என்பதை எண்ணிக்கொண்டேன்] கஹானி வதேராவின் கடைசிச்சட்டம் இதுவெனப் பத்திரிகைகள் எழுதின. மேலும் கஹானி வதேராவுக்கு ஞானோதயம் வர காந்திஜி வேண்டியிருக்கிறது என்றும் எழுதின. காந்திஜியும் நானும் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துக்கொண்டோ ம். நான் மெல்ல அவர் காதில், “க்ளோன்களின் யுகம் க்ளோன்களால் முடிவுக்கு வருகிறது” என்றேன். அவர் தலையசைத்தார்.
வரும் ஞாயிறன்று காந்திஜி நம் பாரதத்தின் பிரதமராகப் பதவி ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.
எங்கள் ஆபரேசன் அஹிம்சாவின் அடுத்த கட்டத்தைச் செயல்படுத்த ஆயத்தமானோம். காந்திஜிக்கும் தெரியாத திட்டம் இது. எங்கள் திட்டப்படி சனி அன்று இரவு நிஜமான கஹானி வதேராவை வதம் செய்யத் திட்டமிட்டிருந்தோம். உண்மையில் எங்கள் குழு அதற்கான நிமிடங்களுக்காகக் காத்திருந்தது. சரியாக அன்றிரவு எட்டு மணிக்கு நாங்கள் கஹானி வதேராவை மறைத்து வைத்திருந்த இடத்திற்குச் சென்றோம். அவன் ஆழ் நித்திரையில் இருந்தான். ஒரு ஊசி மூலம் கொல்ல ஏற்பாடாகியிருந்தது. அதற்கு முன்னர் அவனை உயிர்ப்பித்து, அவனிடம் நடந்த விஷயங்களைச் சொல்லி, அவனைக் கொல்லவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. கஹானி வதேரா ஆழ் நித்திரையிலிருந்து எழுப்பப்பட்டான். எங்களைப் பார்த்ததும் உயிரில்லாமல் சிரித்தான். என்னைப் பார்த்து “ஹாய்” என்றான். எனக்குப் பாவமாக இருந்தது. “உன்னைக் கொல்லப் போகிறோம்” என்றேன். “நீயே உன்னைக் கொல்வது, எனது அரசின் சாதனை” என்றான் முனங்கியவாறே. அருகிலிருந்த எங்கள் குழுவைச் சேர்ந்த உயிரியல் அதிகாரிகள், அவன் உயிர்ப்பித்த காந்தியின் க்ளோனை வைத்தே நாட்டைச் சுபிக்ஷமாக்கப் போவதாகச் சொன்னார்கள். மெல்லப் புன்னகை செய்தான். சரியாக 8.06க்கு அவனுக்கு மரண ஊசி ஏற்றப்பட்டது.
“என்னை இந்நாடு மறக்கவே முடியாது” என்றான் கஹானி வதேரா.
சில விநாடிகளில் அவன் சப்த நாடியும் ஒடுங்கிப் போனான். என் உருவம் என் கண் முன்னே இறக்கும் அதிசய நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஞாயிற்றுக்கிழமை.
நாடே கோலாகலத்தில் மூழ்கியிருந்தது. இடுப்பில் வேட்டி மட்டும் கட்டி, மூக்குக் கண்ணாடி அணிந்த அரைக்கிழவர் பாரதப் பிரதமராகப் போகும் அந்தக் கனவு நிமிடங்களுக்காக இந்தியாவே காத்திருந்தது. உலகின் அனைத்து நேச நாடுகளும் தத்தம் பிரதிநிதிகளுடன் பாராளுமன்ற அரங்கில் காத்திருந்தார்கள். எதிர்க்கட்சிகள் கூட அத்தனை உற்சாகமாய் இருந்தன.
காந்திஜி வாய் நிறையப் புன்னகையுடன் பாராளுமன்றக் கட்டிடத்தை நோக்கி நடந்துவந்தார். வழியெங்கும் அவருக்கு மலர்கள் தூவப்பட்டன. சிரித்த முகத்துடன் காந்திஜி அதை ஏற்றுக்கொண்டார். சிறிது நாளில் காந்தியின் க்ளோன் காந்திஜியாகவே மாறிவிட்டதை நினைத்து எனக்குச் சந்தோஷமாகவும் பெருமிதமாகவும் இருந்தது.
இன்னிசை கீதங்கள் முழக்கப்பட்டன. யானைகள் அணிவகுத்து நின்று மலர் தூவின.
அமைதியான கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. ஏதோ ஒரு யானைக்கு மதம் பிடித்திருக்கவேண்டும் என்றே நினைத்தேன் நான்.
திடீரென்று கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஒரு மனிதன் எந்திரத்துப்பாக்கியுடன் காந்திஜியை நோக்கி முன்னேறி வந்தான்.
“ஐ’ம் ஸாரி காந்திஜி” என்று சொல்லி அவரை நோக்கிச் சுட்டான்.
காந்திஜி அதே இடத்தில் இரத்த வெள்ளத்தில் பிணமாக மிதந்தார்.
அனைவரும் அவனைச் சூழ்ந்துகொண்டார்கள். நான் அவனை நோக்கி ஓடினேன். அனைவரும் அவனைப் பிடித்து உலுக்கி யாரென்று கேட்டார்கள்.
அவன், “நாதுராம் கோட்ஸே” என்றான்.
சிதறியிருந்த ரத்தத் துளிகளில் கஹானி வதேராவின் முகம் தோன்றி, “என்னை இந்நாடு மறக்கவே முடியாது” என்றது.