காற்தடம் – கவிதை

நிலவொளியில்
இரவின் நிலமெங்கும்
விரிந்து கிடக்கும்
காற்தடங்கள்
இம்மழையில் அழிகின்றன

ஒரு காற்தடத்தையும்
மழையின் துளிகளையும்
உற்று நோக்கிக்கொண்டிருக்கிறேன்

முதல் துளி விழ வெகு நேரமாகியது
புண்ணியம் செய்தவனின் காற்தடம்
வெகு விரைவில் அழிவதில்லை என்கிற
என் தத்துவப் பின்னணி விரியுமுன்
இரண்டாவது மூன்றாவது துளிகள் விழுந்துவிட்டன
அவற்றின் வரிசையை இனங்காணுமுன்
அடுத்தடுத்து விழுந்த துளிகள்
புதிய ரேகையை அமைத்தன
அது ஒரு கவிதையின் கணமென தெளிந்தேன்

பக்கத்தில் தேங்கிக் கிடந்த நீரிலிருந்து
ஒரு தவளை
அக் காற்தடத்தில் குதித்தோடியது
இப்போது அது தவளையின் காற்தடமாக மாறியிருந்தது
மழை வலுத்தது
அக்காற்தடம் முற்றிலும் சேதப்பட்டுப் போனது
அல்லது நிலமெங்கும் வியாபித்துவிட்டது
யாரோவொருவனின் காற்தடத்தைப் பற்றிய
என் எண்ணங்கள்
அதை முற்றிலும் அழிக்க விடுவதில்லை என உணர்ந்தேன்

வேறொரு காற்தடம் தேடத் துவங்கியபோது
தவளையின் காற்தடமாக மாறிவிட்டிருந்த அக்காற்தடம்
இம் மண்ணிலிருந்து நீங்கிவிட்டிருக்கவேண்டும்

நிலவொளியில்
இரவின் நிலமெங்கும்
விரிந்து கிடக்கும்
காற்தடங்கள்
இம்மழையில் அழிகின்றன
நான் அடுத்தடுத்த
காற்தடங்களைப் பற்றி
எண்ணத் துவங்கும்போதும்

Share

Comments Closed