ஒரு அவசரப்பதிவு – மதி கந்தசாமிக்கு

தங்கமணியின் பதிவொன்றில் மதியின் பின்னூட்டமொன்றைக் கண்டேன். அவரது பாணியில், போகிற போக்கில் சொல்கிறார்போல் விஷமத்தனத்தைச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். மதியின் இந்த விஷமத்தனம் நான் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். இந்த முறை புதிய ஒன்றுடன் வந்துள்ளார். எனி இண்டியன்.காமை அவரது பல நண்பர்களுக்கு அவர் அறிமுகப்படுத்தினாராம். அதுவும் நான் கேட்டுக்கொண்டபடியாம். நான் எப்போதும் நட்பையும் எனது வேலையையும் ஒன்றாகக் கலக்கவிடாமல் பார்த்துக்கொள்வதில் கவனம் கொள்வேன். எனி இண்டியனில் சேர்ந்த பின்பு இதுநாள் வரையில், இணைய நண்பர்கள் யாரிடமும் -நேரில் பார்த்திரா விட்டாலும், இணையத்தின் மூலம் எனது மிக நெருக்கமான நண்பர்களாகிப் போன ஜெயஸ்ர், ஹரியண்ணா, ஆசீஃப் மீரான், ஆசாத் பாய், கே.வி.ராஜா, உஷா ராமசந்திரன், மரத்தடி ப்ரியா, பரிமேழலகர், ஹைகூ கணேஷ் மற்றும் பலர் உள்ளிட்ட யாரிடமும் – எனி இண்டியன் பற்றி நண்பர்களிடம் சொல்லுங்கள் என்று கேட்கவில்லை. இவ்வளவு ஏன்? இணையத்திற்கு முன்பே எனக்கு மிக நெருக்கமான நண்பரான எம்.கே. குமாரிடம் கூட இப்படிக் கேட்டதில்லை. உண்மை இப்படியிருக்க, தன்னைத் தற்காத்துக்கொள்ளவும் தனக்குப் பிடிக்காதவர்களின் மீது வெறுப்பை உமிழவும் மதி “நான் கேட்டுக்கொண்டபடி” என்று எழுதியிருக்கிறார். அவராகவே அவரது நண்பர்களிடம் சொன்னதாக அவர் ஒத்துக்கொண்டால், பெரும் இழுக்கு வந்துவிடும் என்று அவர் அஞ்சுகிறாரோ என்னவோ.

எனி இண்டியன்.காம் தொடங்கிய காலத்தில் என்னுடைய மெசெஞ்சரில் மதியிடமிருந்து ஒரு ஆஃப்லைனர் வந்திருந்தது. அதில், எனி இண்டியன்.காமில் ஹரன்பிரசன்னா என்ற பெயரைக் கண்டதாகவும் அது ஒன்றே அவருக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருப்பதாகவும், அதனால் அவர் தன் நண்பர்களிடம் சொல்லப்போவதாகவும் சொல்லியிருந்தார். நானும் “அந்த ஹரன் பிரசன்னா நாந்தான். சந்தேகப்படவேண்டாம்” என்ற பதிலை அனுப்பியிருந்தேன். அடுத்த முறை வந்த ஆஃப் லைனரில், அவரது இலங்கைத் தோழி ஒருவர், புலிநகக்கொன்றையின் ஆங்கிலப் பதிப்பை வாங்க விரும்புவதாகவும், அது கிடைக்குமா என்றும் கேட்டிருந்தார். அப்போது பதில் அளிக்கும்போது, அதைப் பற்றி விசாரிக்கிறேன் என்றும் பல இலங்கைத் தமிழர்கள் தொலைபேசி மூலமும், இணையத்தின் மூலமும் எங்களிடம் வாங்குகிறார்கள் என்று சொல்லியிருந்தேன். அடுத்த ஆஃப்லைரில் மதி, அந்த இலங்கைத் தோழி வேறொரு மூலத்தின் வழியே அப்புத்தகத்தை வாங்கிவிட்டதாகச் சொன்னார். இவ்வளவுதான் நடந்தது.

நான் யாருடன் சாட் செய்யும்போதும் அதை சேமிப்பதில்லை. அதனால் மதியுடனான சாட்டையும் சேமிக்கவில்லை. மேலும் இது ஆஃப்லைனரில் நடந்தவை. சாட் என்று கூடச் சொல்லமுடியாது. முதன்முதலில் என் பெயரைக் கண்டுவிட்டு நம்பிக்கை வந்ததாகவும் அதனால் தன் நண்பர்களிடம் சொல்லப்போவதாகவும் சொன்னவர் மதிதாம். ஆனால் இப்போதோ, போகிற போக்கில், நான் கேட்டுக்கொண்டபடி என்று எழுதுகிறார். மிக நுணுக்கமான வேறுபாட்டின் மூலம் தன்னை உயர்வாக்கிக்கொள்ள விரும்புகிறார். மதியின் இக்குணம் நான் முன்னமே அறிந்ததுதான்.

நான் இப்போது சொன்னவற்றை, நான் ஏற்கனவே எழுதுவதை தொடர்ந்து வாசிப்பவர்கள் நிச்சயம் நம்புவார்கள். மதியுடன் நட்பு வைத்திருக்கிறவர்களும் நம்புவார்கள். மதியிடம் சென்று “மற்ற நண்பர்களிடம் சொல்லுங்கள்” என்று நான் கேட்டுக்கொள்ளவில்லை. மதி அதற்கான ஆதாரம் இருந்தால் வெளியிடவேண்டும். இல்லை என்றால் இதற்கான விளக்கம் அளிக்கவேண்டும்.

தங்கணி, மதி இது பற்றி உங்கள் பதிவில் பேசியதால் நான் இங்கு பதிலிட வேண்டியதாயிற்று. உங்கள் பதிவை இதற்குப் பயன்படுத்தியதற்கு மன்னிக்கவும்.

நன்றி,
ஹரன்பிரசன்னா

Share

Comments Closed