அடிப்படையில் கமலின் ரசிகன்(னும்) என்பதால் முதல்நாள் இரண்டாம் ஆட்டத்திற்கு எங்கள் குடும்ப சகிதம் சென்று பெரும் தொல்லையில் மாட்டிக்கொண்டோம். படத்தைப் பற்றிப் பேசுவதை விட, முதலில் படத்துக்குச் சென்ற விஷயத்தைப் பற்றிப் பேசலாம். எது சுவாரஸ்யமோ அதைத்தான் பேசமுடியும்! சந்திரமுகிக்கு அலையாய் அலைந்து, இரண்டு மணி நேரம் காத்திருந்து அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்த கலைப்பு நீங்குவதற்குள், கமலின் இரசிகர்கள் நிறைந்த எங்கள் குடும்பத்திலிருந்த அனைத்து ஆண்களும் ஒரே மனதாக மும்பை எக்ஸ்பிரஸ் போகவேண்டும் என்றார்கள். தியேட்டருக்கு போன் செய்து “டிக்கெட் கிடைக்குமா” என்று கேட்டதற்கு, எங்கள் முகவரி எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டார்கள். எனக்கு அப்போதே எங்கேயோ இடித்தது! ஆனாலும் எல்லாரும் போனோம். மறுநாள் எங்கள் வீட்டின் மிக முக்கியமான ஒரு விழா இருந்தது. கிட்டத்தட்ட 40 வருடங்கள் கழித்து நடைபெறும் குடும்ப விழா அது. அதற்கான வேலைகள் எல்லாவற்றையும் முடித்துவிட்டு ஓடினோம். தியேட்டரில் கூட்டமே இல்லை. படம் போட்டுவிட்டார்கள் என்று நினைத்த கமலின் தீவிர இரசிகர்கள் எண்ணத்திலும் மண் விழுந்ததது. படம் வந்த முதல் தினம் இரவுக் காட்சி இப்படி கூட்டமில்லாமல் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்பதால் எனக்கே கொஞ்சம் வருத்தம்தான். விருமாண்டி போலவோ ஹே ராம் போலவே ஒரு படத்திற்கு இப்படி இருந்திருந்தால் அதை நான் எதிர்பார்த்தே இருந்திருப்பேன். நானறிந்த வரையில், மும்பை எக்ஸ்பிரஸ் என்பது நகைச்சுவைப் படம் என்பதே. திரையரங்கில் நிறைய நேரம் காத்திருந்தோம். படம் போடும் வழியைக் காணோம். கூட்டம் சேர்ந்தபின்பு படம் போடும் டூரிங் டாக்கீஸ் நிலையை நினைத்து விக்கித்துப் போயிருந்தார்கள் கமலின் தீவிர இரசிகர்கள். ஒரு வழியாகப் படம் ஆரம்பித்தது. ஆரம்பித்த சில காட்சிகளிலேயே, படம் ஆரம்பித்திருக்கவேண்டாமோ என்கிற எண்ணம் வந்தது.
கமலுக்கு நிஜமாகவே என்னதான் ஆச்சு? சாதாரண நகைச்சுவைப் படங்களைப் புறந்தள்ளி, நகைச்சுவைப் படங்களில் ஒரு தரத்தையும், நல்ல வெரைட்டிகளையும் கொண்டு வந்தவர் கமல். அதன் நீட்சியாக ஒரு கிளாசிக் காமெடி என்கிற முயற்சிதான் இந்த மும்பை எக்ஸ்பிரஸ். ஆனால் கிளாசிக்கும் இல்லை; காமெடியும் இல்லை படத்தில். காமெடி என்றாலே வசனத்தை மாற்றி மாற்றிப் பேசுவது மட்டுமே என்கிற ஒரு தட்டையான எண்ணத்தில் தள்ளப்பட்டிருக்கிறாரோ கமல் என்கிற சந்தேகத்தை அவரது சமீபத்திய காமெடிப் படங்கள் உண்டாக்கின. அந்தச் சந்தேகத்தை மெய்ப்பிப்பது போல அமைகிறது இந்தப் படமும். ஆளாளுக்கு மாற்றி மாற்றிப் பேசுகிறார்கள். அதுவும் அலுத்துப்போன மேனரிசத்தோடு. அதே ஆள்மாறாட்டத்தை வைத்துக்கொண்டு தலை காய வைக்கிறார்கள். ஆங்கில கிளாசிக் படத்தை மனதில் வைத்துக்கொண்டு படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பது காட்சியமைப்பில் தெளிவாகத் தெரிகிறது. கொஞ்சம் கூட சிரத்தையற்ற கதையும், அதைச் சுற்றி எழுப்பப்பட்ட திரைக்கதையும் கிளாசிக் காமெடி முயற்சியை படுகுழியில் தள்ளுகிறது. படத்தின் ஆரம்ப காட்சிகளில் ஒரு சிறுவனைக் கடத்துவது பற்றிப் பேசிக்கொள்கிறார்கள். ஏதோ காமெடி என்று நினைத்துக்கொண்டு (அப்போதும் சிரிப்பு வரவில்லை!) பார்த்தால், கடைசி வரை அதுவே படமாகச் செல்கிறது.
கமல் காது கேளாமல் வரும் காட்சிகள் எல்லாம் கொஞ்சம் கூட ஒட்டாமல் திரையில் ஓடுகின்றன. லேசாகப் புன்னகை வரவழைக்கக்கூடிய காட்சிகள் கூட ஒன்றோ இரண்டோதான். மற்ற காட்சிகள் எல்லாம் திரையில் வருகின்றன; போகின்றன. டிஜிடல் தொழில்நுட்பம் என்கிறார்கள். நான் பார்த்த திரையரங்கு சரியில்லையோ என்னவோ; படத்தின் ஒளிப்பதிவு சகிக்கவில்லை. நிறையக் காட்சிகள் கிராபிக்ஸில் ஒட்ட வைத்தது போன்ற தோற்றம். கமலுக்கு நகைச்சுவை நடிப்பு மறந்துவிட்டது என்று சந்தேகப்படும் அளவிற்கு உள்ளது அவரது நடிப்பு. சாதாரண காட்சியை, காட்சி அமைப்பின் மூலமும் நடிப்பின் மூலமும், கிளாசிக் ஆக்கிவிடலாம் என்று கமல் தன் மேல் நம்பிக்கை கொண்டிருப்பது புரிகிறது. கமல் போன்ற அசாதாரணக் கலைஞர்கள் அதைச் சாதிப்பவர்கள்தாம். ஆனால் “பழைய செருப்புக் கடிக்காது” என்பதை மறந்துவிட்டார்கள். அந்தச் சிறுவன் தற்கொலை செய்ய முயற்சி செய்யும்போது, கமல் காப்பாற்ற நினைக்கும் காட்சியின் நீளம் கொட்டாவி வரவைக்கிறது. அதைத் தொடர்ந்து கமல் அவரை மகனாக ஏற்றுக்கொள்வது, மணீஷாவை லவ் செய்வதும் நாம் அனுபவிக்கும் கொடுமைகளில் ஒன்று.
எத்தனை நாள்தான் அபத்தமான ஒரு கதாபாத்திரத்திற்கு “ஆளவந்தான் மணீஷா”வைச் சொல்வது? இனி “மும்பை எக்ஸ்பிரஸ் மணீஷா” எனச் சொல்லலாம். பாத்திரப்படைப்பில் பெரும் கோட்டை விட்டிருக்கிறார் என்று தனியே சொல்லவேண்டியதில்லை. படத்திலுள்ள பல குறைகளில் இதுவும் ஒன்று.
ஒரு காட்சியாவது வாய் விட்டுச் சிரித்தோம் என்றில்லை. சில காட்சிகள் சிரிப்பைத் தருவது போன்று அமைந்து, அடுத்த விநாடியே “இதுல என்ன இருக்கு?” என்கிற அலுப்பைத் தருகின்றன. இப்படிப்பட்ட காட்சிகள்தான் ஏராளம்.
இளையராஜா எதற்காகவும் அலட்டிக்கொள்ளவில்லை. அவருக்கு வேலை ஒரே ஒரு பாட்டு. தனியாகக் கேட்கும்போது மனதில் ஏதோ ஒரு சோகம் ஒட்டிக்கொள்கிறது. ஆனால் காட்சி அமைப்புடன் பார்க்கக்கூடாது.
கமல் கிரேனில் ஆபரேட் செய்யும் காட்சிகள், அங்கிருந்து கீழே இறங்கி ஒரு பையனைக் கடத்தும் காட்சிகள், கார் விபத்தில் சிக்கிய பின்பு போலீஸிடம் பேசும் காட்சிகள், அந்தப் பையன் தற்கொலை செய்ய முயல அவனைக் காப்பாற்ற முயலும் காட்சிகள் என்று நீளமாக நம்மைச் சோதனைக்குட்படுத்தும் காட்சிகள் நிறைய நிறைய. அள்ள அள்ளக் குறையாத அளவிற்கு.
கிளைமாக்ஸ் காட்சிகளில் ஆளாளுக்கு லாஜிக்கே இல்லாமல் மாற்றி மாற்றி நினைத்துக்கொள்கிறார்கள். சீக்கிரம் படம் முடிந்துவிடும் என்ற நினைப்பே பெரும் சுகம் தருவதாக அமைகிறது.
கமல் ஒரு பேட்டியில், எத்தனை நாள் காதலிக்க நேரமில்லை படமே கிளாசிக்கில் இருக்கும்?” என்று கேட்டு, அதை அந்தச் சிம்மாசனத்தில் இருந்து “மும்பை எக்ஸ்பிரஸ்” நீக்கும் என்று சொல்லியிருக்கிறார். ஆசை வெட்கம் அறியாது மற்றும் நல்ல விளம்பர உத்தி. நிஜம் என்னவோ, காதலிக்க நேரமில்லை இன்னும அதே சிம்மாசனத்தில்.
பம்மல் (உவ்வேக்) சம்பந்தம் வரிசையில் மும்பை (உவ்வேக்) எக்ஸ்பிரஸ்.
படத்தைப் பார்த்துவிட்டு வந்த இரசிகர்களைப் பார்க்க பாவமாக இருந்தது. ஒருவர் “இன்கம்டாக்ஸுக்காக எடுத்த படம்” என்றார். இன்னொருவர் “சந்திரமுகியில முதல் ஷாட்டே கமலுக்கு நன்றி சொல்றதுதான். மும்பை எக்ஸ்பிரஸ் படத்தைப் பார்த்துட்டு ரஜினி தேங்க்ஸ் சொல்லியிருக்காரு போல” என்றார். இன்னொருவர் “படம் இடைவேளை வரை செம ஃபாஸ்ட். ஆமா, நல்லாத் தூங்கிட்டேன்” என்றார். இதுபோன்ற கமலின் இரசிகர்களின் கமெண்ட்டுகள் எனக்குப் புதிதல்ல. குருதிப்புனல், குணா, ஹேராம் போன்ற படங்களை முதல் காட்சியில் பார்க்கும் “விசிலடிக்கும் இரசிகர்கள்” இப்படித்தான் எதிர்வினையாற்றுவார்கள். அதே எதிர்வினை ஒரு நகைச்சுவைப் படத்திற்கும் நிகழ்ந்திருக்கிறது. கமல் யோசிக்கவேண்டும்.
[01] கமலின் நகைச்சுவை, ஒரே மாதிரியான நடிப்பினால் அலுக்கத் தொடங்கிவிட்டது. ஆள்மாறாட்டம், வார்த்தையை மாற்றி மாற்றிப் போட்டுப் பேசுவது போன்ற அலுத்துப்போன விஷயங்களிலிருந்து கமல் வெளி வரவேண்டும்.
[02] கதையே வேண்டாம், காட்சியமைப்பில் வென்றுவிடலாம் என்கிற பரிசோதனைகளை விட, கொஞ்சமாவது கதையுடன் கூடிய பரிசோதனைகள் நல்லது.
[03] சந்தானபாரதி போன்ற முகபாவனைகளே வராத நடிகர்களைப் போடுவதைக் காட்டிலும், இயல்பாகவே நகைச்சுவையாய் நடிக்கத் தெரிந்த நடிகர்களையும் நகைச்சுவை நடிகர்களையும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
[04] என்னதான் கிளாசிக் காமெடி என்றும் காமெடிப் படங்களில் புதிய பரிசோதனை என்றும் சொல்லிக்கொண்டாலும், காமெடிப் படம் என்னும்போதே காமெடி என்கிற ஒன்று தேவைப்பட்டுவிடுகிறது. அப்படி காமெடி என்கிற சங்கதியே இல்லாமல் காமெடிப் படத்தில் பரிசோதனை எடுப்பதைப் பற்றிக் கமல் யோசிக்கவேண்டும்.
[05] கமலின் பரிசோதனைகள் எல்லாம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் மிகச்சிறந்த பெயரைப் பெற்றிருக்கின்றன. ஆனால் இந்த முறை இரண்டும் இல்லாமல் போயிருக்கிறது. கிட்டத்தட்ட இதே பிரச்சனை விருமாண்டியிலும் கமலுக்கு ஏற்பட்டது என்றே நான் நினைக்கிறேன். வணிக வெற்றியையும் தரமான படங்களையும் கமல், முன்பு போலவே குழப்பாமல் வைத்துக்கொள்ளவேண்டும்.
இவையெல்லாம் கமலுக்கு நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. சிறந்த சிந்தனையாளர் மற்றும் சுய பரிசோதனை செய்யும் கலைஞர் அவர். மும்பை எக்ஸ்பிரஸில் எனக்குத் தோன்றியதை மட்டும் சொல்லியிருக்கிறேன் என் கருத்து என்கிற வகையில்.
குமுதம் இந்தப் படத்தை ஆஹா ஓஹோ என்று பாராட்டியிருக்கிறது. பத்திரிகைகள் ஒரு தரமற்ற படத்தைத் தூக்கி நிறுத்திவிட முடியாது என்பதற்கு இந்தப் படம் மேலும் ஒரு சான்றாக அமையும்.
மும்பை எக்ஸ்பிரஸ் செம ஃபாஸ்டாக ஓடும் தியேட்டரை விட்டு.
மதிப்பெண்கள்-35