தமிழ்த்திரைப்படப்பெயரும் தமிழக அரசியலும்

படங்களுக்குத் தமிழ்ப்பெயர் வைக்கும் சர்ச்சை மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. தமிழகத்தில் எப்போதும் தமிழுணர்வு சார்ந்த பிரச்சனைகளில் உணர்வு பின்னுக்குத் தள்ளப்பட்டு அரசியலே பிரதானமாக்கப்பட்டிருக்கிறது. இந்த முறையும் நம் வழக்கத்திற்கு எந்தப் பங்கமும் இல்லை. தமிழில் பெயர் வைக்கும் படலத்தில் முழுக்க முழுக்க அரசியல் விளையாட்டு நடந்துகொண்டிருக்கிறது.

தமிழ்ப்படங்களுக்குத் தமிழிலிலேயே பெயர் வைப்பது வரவேற்கப்படவேண்டிய ஒன்றுதான். அதில் எந்த மாற்றமுமில்லை. ஆனால் அது நிகழ்த்தப்பட, தமிழ் பாதுகாப்பு அமைப்பு மூலம் ராமதாஸ¤ம் திருமாவளவனும் மேற்கொள்ளும் வழிகள் மிகவும் கண்டத்திற்குரியதாக இருக்கிறது. படங்களில் சிகரெட், மது அருந்தும் காட்சிகள் வந்தால் அந்தப்படத்தைத் தடை செய்வோம் என்கிறார்கள். படத்திற்குத் தமிழில் பெயர் வைக்கவில்லை என்றால் அப்படத்தைத் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்கிறார்கள். இவர்கள் இப்படிச் சொல்லிவிட்டால், இவர்களில் தொண்டர்கள் எந்தவிதத்தில் இந்தப் பிரச்சனையைக் கையாளுவார்கள் என்று நாம் அறிந்ததே. தமிழுக்குப் பெயர் வைக்கவேண்டும் என்கிற நிஜமான எண்ணம் பின்னுக்குத் தள்ளப்பட்டு வன்முறை உணர்வே முன்னுக்கு வரும். படம் திரையிட்ட திரையரங்குகளைக் கொளுத்தவும், திரையைக் கிழிக்கவும் இவர்கள் தொடங்குவார்கள். பாபாவுக்கு நேர்ந்தது நாம் அறிந்த ஒன்றுதான். அன்றே பிரச்சனையை நடிகர்கள் ஒற்றுமையாகச் சந்தித்திருந்தால் ராமதாஸ் கொஞ்சம் அடங்கியிருப்பார். அன்று நேர்ந்தது ரஜினிக்குத்தானே என்கிற மனப்பான்மை நடிகர்களிடம் இருந்தது. அதுவே இப்போது வளர்ந்து அனைவரையும் தாக்கும்போது எல்லாரும் உணர்கிறார்கள். விஜயகாந்திடம் ராமதாஸ் மோதியபோதுதான் விஜயகாந்திற்குக் கோபம் வருகிறது. ரஜினியுடன் ராமதாஸ் மோதியபோதே நடிகர்கள் ஒரே அணியில் இருந்து எதிர்த்திருந்தால் நிலைமை இத்தனைத்தூரம் வந்திருக்காது.

தமிழைக் காக்கிறோம் என்று அறிவித்துக்கொண்டு இவர்கள் செய்யும் அறிவிப்புகள் பெரும்பாலும் பொதுமக்களில் ஒரு பிரிவினரிடையே அச்சத்தையும் (திரைப்பட உலகினரும் பொதுமக்கள்தாம்!) அதனால் பெருத்த நஷ்டத்தையும் ஏற்படுத்துகின்றன. இவர்கள் முன்பு இப்படி அறிவிப்பு வெளியிடும்போதெல்லாம் எப்படி ஓர் அரசு அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறது என்கிற கேள்வி எழும். எல்லாம் தமிழ்ப்பேச்சு தருகிற ஓட்டு என்று நினைத்துக்கொள்வேன்.

ராமதாஸ் இன்று தி.மு.க. அணியில் இருக்கிறார். அதனால் கருணாநிதியால் வெளிப்படையாகக் கண்டிக்க இயலவில்லை. அவர் நடிகர்களைப் பகைத்துக்கொள்ளவும் தயாரில்லை. அவரால் திரைமறைவில் மட்டுமே ராமதாஸை அமைதியாக இருக்கச் சொல்லமுடியும். பாபா பிரச்சனையில் திரைமறைவில் செயல்பட்டது போல இப்போதும் செயல்படமுடியும். திறந்து ராமதாஸைக் கண்டிக்கமுடியாது. இதனால் கூட்டணி உடையும் சாத்தியக்கூறு உள்ளது. இன்னொரு ஐந்து வருடம் ஆட்சிக்கட்டில் இல்லாமல் இருக்க அவர் தயாராக இருக்கமாட்டார் என்பது நாம் அறிந்ததே. மேலும் தமிழுணர்வை ஆதாயமாக வைத்து அரசியல் இலாபம் பெற தி.மு.க.விற்கு மட்டும்தான் உரிமையா என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டால் அதற்கும் கருணாநிதியிடம் பதிலில்லை.

ஜெயலலிதா ராமதாஸின் அறிவிப்பை மிக வன்மையாகக் கண்டித்திருக்கிறார். தமிழ்ப்படங்களுக்குத் தமிழ்ப்பெயர் வைக்கும் விஷயத்தில் தமிழ்த்தேசியவாத அமைப்பு வன்முறையைத் தூண்டும் விதத்தில் நடந்துகொண்டால் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்று சொல்லியிருக்கிறார். இந்த அறிவிப்பு வரவேற்கப்படவேண்டியது. தமிழுணர்வை எதிர்த்து என்ன சொன்னாலும் அவர் தமிழ்த்துரோகியாக்கப்படுவது நமக்குப் புதியதல்ல. ஜெயலலிதா அதைப் பற்றி எப்போதுமே கவலைப்பட்ட அரசியல்வாதி இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். சென்ற முறை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அரசு, இந்த முறையாவது இதைக் கண்டித்தது ஆறுதல் அளிக்கிறது. தமிழ்ப்படங்களுக்குத் தமிழ்ப்பெயர் வைப்பது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் இஷ்டம். அவர்களைத் தமிழில் பெயர் வைக்க சிபாரிசு செய்யலாம். தமிழைக் காக்கவேண்டிய பொறுப்பு இருப்பதை வலியுறுத்தலாம். ஆனால் படத்தைத் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு கட்சி அறிவிக்குமானால் அதை அரசு பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது. இன்று அறிக்கையில் காட்டம் காட்டியிருக்கிறது ஜெயலலிதா, நாளை தேர்தலில் பா.ம.க.வுடனான கூட்டணிக்குச் சமிஞ்கை கிடைக்கும் பட்சத்தில் இந்த அறிக்கையை அப்படியே மறப்பார் என்று நாம் அறியாததல்ல. அவரது அரசியல் மற்றும் அணுகுமுறை நமக்கு அத்துப்பிடிதான். அப்படி ஒன்று நிகழ்ந்தால் திரைப்படத்துறையினரை யாரும் காக்கமுடியாது. (….என்றும் சொல்லமுடியாது. இப்போது திரைப்படத் துறையினரின் சேவியராக ஜெயலலிதா தன்னைக் காண்பித்துக்கொண்டபடி, கருணாநிதி வருவார்!.)

ஒரு படத்திற்குத் தமிழில் பெயர்வைக்க நிர்பந்திப்பதற்கு அரசியல்வாதிகள் யார்? இப்படி நேரடியாகக் கேள்வி எழுப்புகிற அளவிற்கு நடிகர்களிடையே ஒற்றுமையில்லை. நல்லவேளை, தன் படத்திற்கு B(est) F(riend) என்று பெயர் வைத்திருக்கிற சூர்யா, அவர் படத்திற்குப் பெயர் மாற்றப்படவேண்டும் என்ற பேச்சு எழுந்தபோது, அதற்குச் சம்மதிக்க அறவே மறுத்துவிட்டார். அடுத்துச் சிக்கியது கமலின் “மும்பை எக்ஸ்பிரஸ்.” அவர் எப்படித் தமிழில் பெயர் வைக்காமல் ஆங்கிலத்தில் பெயர் வைக்கலாம்? அவர் மட்டும் தமிழில் பெயர் வைத்திருந்தால் தமிழ்நாட்டில் “எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்” என்று தமிழாறு ஓடியிருக்கும். கெடுத்தார்கள் சூர்யாவும் கமலும். தமிழைக்காக்க வந்திருக்கிற ராமதாஸ் சும்மா இருப்பாரா? இந்த இரண்டு படங்களுக்குப் பெயர் மாற்றாவிட்டால் அந்தத் திரைப்படங்களைத் திரையிடுவதை எதிர்ப்போம் என்று அறிவித்திருக்கிறார். ஏற்கனவே சண்டியர் விஷயத்தில் சூடு பட்ட கமல், இந்த முறை ஜெயலலிதாவின் அறிக்கையால் கொஞ்சம் சந்தோஷத்துடன் இருக்கிறார். அவர், “முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி. இதைத்தவிர நான் எது சொன்னாலும் அது அரசியலாகிவிடும்” என்று சொல்லி தன் வேலையைச் சுருக்கிக்கொண்டுவிட்டார். இவர்கள் எடுக்கும் வணிகப்படத்திற்கு தலைப்பை எப்படி வைத்தால் என்ன? இன்னும் சொல்லப்போனால் BF படத்துக்குத் தமிழில் பெயர் வைக்கக்கூடாது என்றல்லவா போராட்டம் நடத்தவேண்டும்?!

வைகோ தன் பங்கிற்கு, “திரைப்படங்களுக்குத் தமிழ்ப்பெயர் வைக்கும் விஷயத்தில் வன்முறைக்கு ம.தி.மு.க. துணை போகாது” என்று அறிவித்திருக்கிறார். பின்னர் அவருக்கே என்ன தோன்றியதோ,”எங்கள் கூட்டணிக்கு எந்தவிதப் பங்கமும் இல்லை. வரும் தேர்தலில் வெற்றிபெற்றி கருணாநிதி ஆட்சி அமைப்பார்” என்றும் சொல்லியிருக்கிறார். இந்த விஷயம் பற்றி இதுவரை கருணாநிதியிடமிருந்து பதிலில்லை. இந்தவாரம் ஆனந்தவிகடனில் பேட்டி கொடுத்திருக்கிற திருமாவளவன், ‘சில நல்ல விஷயங்களை அழுத்தமாகச் சொன்னால்தான் புரிகிறது சிலருக்கு” என்று சொல்லியிருக்கிறது. அவர் சொல்கிற “அழுத்தம்” நமக்குப் புரியாதது அன்று.

இதற்கெல்லாம் மூலகாரணமாகச் சொல்லவேண்டியது திரையுலகினரின் ஒற்றுமையின்மையை. தமிழின் பழைய எழுத்துகளான கொம்பு எழுத்துகளைத் தவிர்த்துவிட்டு அனைவரும் புதிய எழுத்துகளுக்கு மாறியபோது (கொம்பு த=தை), அப்படி மாறாதவர்கள் எல்லாம் தமிழுணர்வுக்கு எதிரானவர்கள் என்ற பிரசாரம் செய்யப்பட்டது. அதை எதிர்க்கும் வண்ணம் வீம்புக்காக சோ துக்ளக் பத்திரிகையில் பழைய கொம்பு எழுத்துகளையே பயன்படுத்தினார். அதே வீம்புதான் இப்போதைக்குத் தேவையானது. இனி வரும் ஐம்பது படங்களுக்கு அனைத்துப் பெயர்களையும் ஆங்கிலத்திலேயே வைப்பது என்று எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்து அதன்படி நடந்தால் தமிழ் பாதுகாப்பு அமைப்பு என்ன செய்யும்? ஐம்பது படங்களையும் தடுப்பார்களா? நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இதை எதிர்த்தால் இந்த ஒன்றுமில்லாத பிரச்சனையை முறியடிக்கமுடியாதா?

வாட் டூ யூ திங்க் ·பிரண்ட்ஸ்?

Share

Comments Closed